மோடி கதையின் நாயகனும் அவரே, வில்லனும் அவரே. யாரை யார் வெல்வது என்பதை மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு செய்யப்படும் உண்மையான நியாயமே தீர்மானிக்கும்.
டெல்லியிலிருந்து ரயில் கிளம்பிவிட்டது. வரலாற்றில் இடம்பெற்றுவிட்ட டெல்லி தேர்தல் முடிவு தொடர்பாக பிரதமர் மோடி இன்னும் வாய் திறக்கவில்லை. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில், மன்மோகன் சிங் மௌனம் காக்க, ப.சிதம்பரம் உதிர்க்கும் அதே வார்த்தைகள் தேசிய ஜனநாயகக் கூட்டணியிலும் மறுஒலிபரப்பாகின்றன. அரசின் வியூகவாதியும் நிதியமைச்சருமான அருண் ஜேட்லி, "டெல்லி தேர்தல் முடிவுகள் அரசின் 'பொருளாதாரச் சீர்திருத்த' வேகத்தில் எந்த மாற்றத்தையும் உருவாக்காது" என்று தெரிவித்திருக்கிறார். அதாவது, அரசு பெரிதாக அலட்டிக்கொள்ள ஏதுமில்லை என்பது அவர் சொல்லும் செய்தி. வெளியே இப்படி வீறாப்பாகப் பேசிக்கொள்வதில் சிக்கல் இல்லை. உள்ளுக்குள்ளும் அப்படியொரு நினைப்பிருந் தால் அது பெரும் ஆபத்து. டெல்லி முடிவுகள் அரசுக்குத் தெளிவாக சில சமிக்ஞைகளை அனுப்புகிறது.
*
பொதுத்தேர்தல் சமயத்தில் நாடு தழுவிய ஒரு பயணம் சென்றிருந்தேன். அப்போதெல்லாம் அது விமானமோ, படகோ, ரயிலோ, பஸ்ஸோ... எதில் பயணித்தாலும், சகபயணிகளுடனான உரையாடல் கொஞ்ச நேரத்தில் தேர்தலில் போய் நிற்கும்.
திருவனந்தபுரம் சென்றிருந்தபோது ஜார்ஜ் குட்டியுடன் உரையாடும் வாய்ப்புக் கிடைத்தது. ஜார்ஜ் குட்டி ஆட்டோ ஓட்டுநர். சவாரி முடிந்து ரூ. 250 கொடுத்தபோது, மீட்டர் காட்டிய ரூ. 242-ஐ எடுத்துக்கொண்டு ரூ. 8-ஐத் திரும்பத் தந்துவிட்ட கண்ணியவான். அச்சுதானந்தனைப் பற்றி சுவாரஸ்யமாகப் பேசிக்கொண்டு வந்தார். பேச்சு மெல்ல அடுத்த பிரதமர் யார் என்பதை நோக்கித் திரும்பியது. மோடி அவரை ஈர்த்திருந்தார். "யாருக்கு ஓட்டுப் போடுவீர்கள்?" என்றபோது, அவர் சொன்னார், "என்னுடைய ஓட்டை என் கட்சிக்குத்தான் போடுவேன். ஆனால், என் தொகுதியில் காங்கிரஸ் ஜெயிக்கும். ஏனென்றால், சசிதரூர் வசீகரன். மேலே மோடி வருவார்." இப்படிச் சொல்லிவிட்டு எப்படி என் கணக்கு என்பதைப் போல ஒரு சிரிப்பு சிரித்தார். "எப்படி மோடி வருவார் என்று சொல்கிறீர்கள்?" என்று கேட்டபோது, "எங்கு பார்த்தாலும் மோடியைப் பற்றிப் பேசுகிறார்கள். அவர் நிறையச் செய்வாராமே... என் கட்சி ஆட்சிக்கு வரப்போவதில்லை. மோடி என்னதான் செய்கிறார் என்று பார்ப்போமே!"
குவாஹாட்டியில் மொஹிம் போரோவைச் சந்தித்தேன். கால் டாக்ஸி ஓட்டுநர். 25 வயது இருக்கும். மாதம் ரூ.15 ஆயிரம் சம்பாதிப்பதாகச் சொன்னார். அங்கு அது ஓரளவுக்குக் கட்டுப்படியாகக்கூடிய தொகை, அவருடைய வயதுக்கும் சூழலுக்கும். அவருக்கு அரசியல் சார்பு ஏதும் இல்லை. ஆனால், காங்கிரஸ் மீது மகா கோபம் அவருக்கு இருந்தது. முதல்வர் தருண் கோகோயையும் அவருடைய மகன் கௌரவ் கோகோயையும் திட்டிக்கொண்டேயிருந்தார். குடும்ப அரசியல் அசாமைக் குட்டிச்சுவர் ஆக்கிவிட்டது என்று புலம்பினார். "யாருக்கு ஓட்டு போடுவீர்கள்?" என்று கேட்டபோது, அப்போதைய அவருடைய கணிப்பின்படி, "பாஜக இங்கே ஜெயிக்காது, ஆனால் பாஜகவுக்குத்தான் போடுவேன், மோடிக்காகப் போடுவேன்" என்றார். "குஜராத்தை அப்படியே மோடி மாற்றிவிட்டாராமே, அங்கு ஏகப்பட்ட தொழில் வளர்ச்சியாமே, எல்லோருக்கும் நல்ல வேலை, நல்ல சம்பளம், நல்ல வசதியாமே" என்று அடுக்கிக்கொண்டே போனார்.
ஆச்சரியம் என்னவென்றால், அவருக்கு உள்ளூர் பாஜகவினர் யாரையும் தெரியவில்லை; மோடி தொடர்பாகவும் அதிக விஷயங்கள் தெரியவில்லை. ஆனால், மோடி பிரதமரானால், குவாஹாட்டி, அசாம், இந்தியா எல்லாமும் அப்படியே தலைகீழாக மாறிவிடும் என்று அவர் நம்பினார். தன்னுடைய வாழ்க்கை மாறிவிடும் என்று அவர் நம்பினார். அநேகமாக, எல்லா ஊர்களிலும் இப்படியான கதைகள் காதில் விழுந்துகொண்டே இருந்தன. அப்போது நான் புரிந்துகொண்ட முக்கியமான உண்மை இது: மோடி எதிர்கொள்ளவிருக்கும் மிகப் பெரிய சவால் / எதிரி அவர் உருவாக்கிக்கொண்டிருக்கும் மோடி. அதாவது அவர் உருவாக்கும் 'வளர்ச்சி நாயகன் மோடி' பிம்பம்.
*
ஒரு விஷயத்தை நாம் ஒப்புக்கொண்டுதான் ஆக வேண்டும். தேசிய அரசியலில் இன்றைக்கு மோடிக்கு ஈடுகொடுக்க யாருக்குமே திராணி இல்லை. ராகுல் காந்திபோல, அவர் திடீரென்று தோன்றி திடீரென்று காணாமல் போகும் 'கௌரவ அரசியல்வாதி' அல்ல. எவ்வளவு அடி வாங்கினாலும், தாங்கள் எந்த யுகத்தில் இருக்கிறோம்; யாருக்கு மத்தியில் பேசுகிறோம் என்பதையே உணராமல் அரசியல் நடத்தும் பிரகாஷ் காரத்தோ, ஏ.பி.பரதனோவும் அல்ல. அவர் கடுமையாக உழைக்கிறார். நவீன யுகத்துக்கேற்ப தன் பாணியை மாற்றிக்கொண்டே இருக்கிறார். வெளிச்சத்துக்கு வரும் ஒவ்வொரு நிகழ்வையும் தனதாக்கிக் கொள்ளும் ஆற்றல் அவருக்கு இருக்கிறது. பாருங்கள், இன்றைக்கு உலகக் கோப்பையைப் பற்றி உலகம் பேசுகிறதா, அதிலும் தனக்கொரு இடத்தை அவரால் உருவாக்கிக் கொள்ள முடிகிறது.
அடி ஆளுக்கொரு வாழ்த்து என்று தோனியில் ஆரம்பித்து அக்ஸர் படேல் வரைக்கும் இந்திய வீரர்கள் அத்தனை பேருக்கும் பிரத்யேக வாழ்த்து அனுப்பியிருக்கிறார். ஏனைய தலைவர்களுக்கு, செய்தியில் இடம் பிடிப்பதே அரிபரியாக இருக்க, மோடிக்கு முதல் பக்கச் செய்தியை உருவாக்கும் கலை அத்துபடியாக இருக்கிறது. அவருடைய சித்தாந்தங்கள், கொள்கைகள், போக்குகள் எல்லாவற்றையும் தாண்டி அவர் தன்னை ஒரு பிம்பமாக உருவாக்க மெனக்கெடும் உழைப்புக்கு நாம் அதற்குரிய அங்கீகாரத்தை அளித்துதான் ஆக வேண்டும். ஒரே சிக்கல், அவர் இவ்வளவு கஷ்டப்பட்டு உருவாக்கும் பிம்பம் அவரால் மட்டும் அல்ல; யாராலும் ஈடுகொடுக்க முடியாத அளவுக்கு ஊதிப் பெருக்கப்பட்டிருப்பதும் பெருத்துக்கொண்டேயிருப்பதும்.
*
பிரதமர் நேருவைப் பற்றிப் பேசும்போது கொடிக்கால் ஷேக் அப்துல்லா ஒரு விஷயத்தைக் குறிப்பிடுவார். "நேரு எதிர்கொண்ட பெரிய எதிரி / துயரம் சுதந்திரத்துக்கு முன்பு இந்தியர்கள் மத்தியில் எழுந்த எதிர்பார்ப்பு. இத்தனைக்கும் நேரு அப்படியெல்லாம் எதுவும் பேசவில்லை. ஆனால், மக்கள் சுதந்திரத்துக்குப் பின் அப்படியே தேனாறும் பாலாறும் ஓடும் என்கிற அளவுக்கு எதிர்பார்த்தோம்" என்பார் ஷேக். நவீன இந்தியாவை உருவாக்க நேரு எவ்வளவோ உழைத்தார், கஷ்டப்பட்டார், மக்கள் மனம் ஆறவில்லை. அப்படியோரு எதிர்பார்ப்பு, அப்படியொரு ஏமாற்றம்! மோடி வளர்த்தெடுக்கும் 'வளர்ச்சி நாயகன் மோடி' பிம்பத்தின் மீதான மக்களின் எதிர்பார்ப்பு குறைத்து மதிப் பிடக் கூடியது அல்ல. இந்த எதிர்பார்ப்புதான் 30 ஆண்டு காலத்தில் இல்லாத வெற்றியை அவருக்குப் பரிசளித்தது.
*
நாடு அப்படியே மௌனமாக ஓடிக்கொண்டிருக்கிறது. மக்கள் ஓடிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களிடம் யாரும் எதுவும் ஞாபகப்படுத்தாத வரை பிரச்சினை இல்லை. கேள்விகளைக் உருவாக்கிவிட்டால் சிக்கல். "ஏனப்பா, மோடி பிரதமராகி எட்டு மாதம் ஆகிறதே, நீ எவ்வளவு வளர்ந்திருக்கிறாய், உன் சம்பளம் எவ்வளவு வளர்ந்திருக்கிறது? காய்கறி விலையும் மளிகைச் சாமான் களும் எவ்வளவு விலை குறைந்திருக்கிறது? விலைவாசி உயரும்போதெல்லாம் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலையைக் காரணம் காட்டுவார்களே, மோடி பதவியேற்ற பின் கச்சா எண்ணெய் விலை அடியோடு விழுந்திருக்கிறதே, விலைவாசி ஏன் குறையவில்லை?" என்றெல்லாம் யாராவது மக்களிடம் கேட்டுவிட்டால் சிக்கல்தான். நாட்டின் ஏனைய பகுதிகளில் யாரும் இப்படி இன்னும் கேட்கவில்லை. டெல்லியில் ஆஆக கேட்டுவிட்டது.
முக்கியமாக, நாட்டின் ஏனைய பகுதி மக்களுக்கு ஒரு சுற்று ஆட்சிக்குப் பின் தாமதமாகக் கிடைக்கும் வாய்ப்பு டெல்லிவாசிகளுக்குச் சீக்கிரமே கிடைத்துவிட்டது. நம் எல்லோரையும்போல, எட்டு மாதங்களுக்கு முன்பு வரை டெல்லிக்கு அந்நியரான 'குஜராத் மாதிரி வளர்ச்சி நாயகன் நரேந்திர மோடி' பிம்பத்தையே அவர்கள் பார்த்திருந்தார்கள். இப்போது டெல்லிவாசியாகிவிட்ட பிரதமர் மோடியை அவர்கள் அன்றாடம் நேரில் பார்க்கிறார்கள். எட்டு மாதங்களுக்கு அவர்கள் முன் பேசிய 'வளர்ச்சி நாயகன் மோடி' பிம்பம், "நான் சாதாரணன், டீ விற்றவன், உங்களில் ஒருவன்" என்றெல்லாம் பேசியது. இன்றைக்கு அவர்கள் நேரில் பார்க்கும் மோடியோ, ஒரு நாளைக்கு மூன்று உடைகள் மாற்றுகிறார், ரூ.10 லட்சத்தில் சுயபெயர் நெய்யப்பட்ட கோட்டை உடுத்துகிறார், ரேஸ்கோர்ஸில் இருக்கும் அவருடைய வீட்டிலிருந்து வெறும் 20 கி.மீ. தொலைவில் இருக்கும் கர்கர்டோமா செல்ல 'எம்ஐ17 வி5' ஹெலிகாப்டர்களைப் பயன்படுத்துகிறார்... எல்லாவற்றையும் டெல்லிவாசிகள் பார்க்கின்றனர்.
அமீத் ஷா டெல்லிவாசியாக மாறுவதற்கு 20 ஆண்டுகள் முன்னரே டெல்லியில் பாஜக ஆழ ஊன்றிய கட்சி. டெல்லி மாநிலமாக அறிவிக்கப்பட்டு, 1993-ல் நடைபெற்ற முதல் தேர்தலிலேயே அங்கு அது ஆளும்கட்சி. அந்த ஆட்சியிலேயே அமைச்சரானவர் ஹர்ஷ்வர்த்தன். 1993-ல் தொடங்கி 1998, 2003, 2013 என்று தொடர்ந்து சட்டப்பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு, கடந்த தேர்தலில் கட்சியின் முதல்வர் வேட்பாளராக / முகமாக பார்க்கப்பட்டவர். திடீரென்று ஒரு நாள் ஊருக்குள் புகுந்த மோடி - ஷா கூட்டணி, கட்சி - ஆட்சி இரண்டையும் கைக்குள் அடக்கியது; ஹர்ஷ்வர்த்தன் உட்பட பலரை செல்லாக்காசாக்கியது. தேர்தலில் எங்கும் மோடி மயம். அவர்கள் ஞானக்கண்ணில் தெரியும் பாக்கியம் பெற்றவர்களுக்கே தேர்தல் வாய்ப்பு. ஒண்ட வந்த பிடாரிகள் ஊர்ப் பிடாரிகளை ஓட ஓட விரட்டுகின்றன. எல்லாவற்றையும் டெல்லிவாசிகள் பார்க்கின்றனர்.
எல்லாவற்றிலும் உச்சம் அகங்காரம். அர்விந்த் கேஜ்ரிவால் வெற்றி பெற்றதும் தம் கட்சியினரைப் பார்த்து, "தேர்தல் வெற்றி அகங்காரத்தைத் தந்துவிடக் கூடாது" என்று சொன்னது யதேச்சையானது அல்ல. மோடியின் கனவு 10 ஆண்டுகள் பிரதமர் பதவி. அவருடைய சகாக்களுக்கோ, அந்தக் கனவு இப்போதே நிறைவேறிவிட்ட நனவு. "மோடியில் தொடங்கி அவரைச் சுற்றியிருக்கும் ஒவ்வொருவரிடமும் அகங்காரம் குடிகொண்டிருக்கிறது; யாரையும் நெருங்க முடியவில்லை" என்பது டெல்லி பாஜகவினரே ஒப்புக்கொள்ளும் அளவுக்கு வெளிப்படையாகியிருந்தது. பிரச்சாரத்தில் ஆஆக இதை மக்களிடத்தில் சுட்டிக்காட்டத் தவற வில்லை. எல்லாவற்றையும் டெல்லிவாசிகள் பார்க்கின்றனர்.
மக்களுக்கு இப்போது ஒரேயொரு கேள்வி: ஓட்டு மோடிக்கும் கிடையாது, ராகுலுக்கும் கிடையாது; ஆனால், மாற்றிப்போட்டால், ஜெயிக்கும் திராணி வேண்டும். யார் இருக்கிறார்கள்? நாடு முழுக்க மோடி அலை வீசியபோதும், 'நீ எங்கோ நான் அங்கே' என்று தோல்வியை உணர்ந்திருந்தும் வாரணாசி தேடிச் சென்று மோடியோடு போட்டியிட்ட அர்விந்த் கேஜ்ரிவாலுக்கு அந்தத் திராணி இருந்தது. ஓட்டு போட்டார்கள்.
*
இந்தப் படத்தின் கதை இப்படித்தான்போல. டெல்லி வாசிகள் ஓட்டியிருக்கும் முன்னோட்டம் அதைதான் உறுதிபடுத்துகிறது.. மோடி கதையின் நாயகனும் அவரே, வில்லனும் அவரே. யாரை யார் வெல்வது என்பதை மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு செய்யப்படும் உண்மையான நியாயமே தீர்மானிக்கும். டெல்லியிலிருந்து ரயில் கிளம்பிவிட்டது.
- சமஸ், தொடர்புக்கு: samas@thehindutamil.co.in
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
22 hours ago
கருத்துப் பேழை
18 hours ago
கருத்துப் பேழை
21 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago