போடோ தாக்குதலின் பின்கதைகள்!

By சரா

அசாமில் பூதாகாரமாக உருவாகியிருக்கும் பிரச்சினைகள்குறித்து நேரடி நிலவரம்

பாகிஸ்தானில் 140-க்கும் மேற்பட்டோர் பயங்கரவாதிகளால் கொடூரமாகச் சுட்டுக் கொல்லப்பட்டதற்குக் கிடைத்த மவுன அஞ்சலிகளும் எதிர்வினைகளும் அசாதாரணமானவை. ஆனால், இந்தியாவில் நெடுங்காலமாகத் தொடரும் மிக முக்கியப் பிரச்சினைகளில் ஒன்றான போடோ ‘மாகாண’ப் பகுதிகளில் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட பழங்குடிகளுக்கு அதுபோன்ற அஞ்சலிகள் செலுத்தப்படவில்லை. இதைப் பற்றிய செய்திகள்கூட இரண்டு நாட்களுக்குப் பின்னரே பெரும்பாலும் வெளிவந்தன. ஓரிரு ஆங்கில தேசியச் செய்தி நிறுவனங்கள் தவிர்த்து, யாரும் பெரிதாகப் பொருட்படுத்தியதாகவும் தெரியவில்லை. அங்கும் சரியான விவாதங்கள் எதுவும் நடைபெறவில்லை.

போடோ ‘மாகாணம்’ என்பது அசாமின் நான்கு மாவட்டங்களை உள்ளடக்கியது - கோக்ரஜார், சிராங், உதால்குரி மற்றும் பக்சா. இம்மாவட்டங்கள் போடோ ‘மாகாண’ ஆலோசனை சபைக்கு உட்பட்டது. நெடுங்காலமாகத் தொடர்ந்த தனிமாநிலப் போராட்டங்களுக்கு இணங்கி இந்தச் செயற்குழு இந்திய அரசியல் சாசனத்தின் ஆறாவது அட்டவணையில் வழங்கப்பட்டுள்ள முறையின் கீழ் 2003-ம் ஆண்டு அமைக்கப்பட்டது. போடோ மக்கள் அசாமின் பூர்வகுடிகள். தற்போதிருக்கும் அசாமின் குடிகள் பெரும்பாலும் 12-ம் நூற்றாண்டுக்குப் பின்பு புலம்பெயர்ந்தவர்கள்.

ஆனால், போடோ, கச்சாரி, கூச், மிசிங் மற்றும் சில இனத்தவர்கள் இந்த நிலப் பகுதியின் பூர்வகுடியினர். போடோ மக்கள் மேலே கூறப்பட்டுள்ள இந்த நான்கு மாவட்டங்களில் பெரும்பாலும் உள்ளனர். அவர்கள் மட்டுமின்றி தேயிலைத் தோட்டங்களில் வேலை செய்ய மத்திய இந்தியப் பகுதியிலிருந்து அழைத்துவரப்பட்ட பழங்குடிகளும் உள்ளனர். இவர்கள் 1827-1957 வரையிலான காலகட்டத்துக்குள் தேயிலைத் தோட்ட முதலாளிகளால் அழைத்துவரப்பட்டவர்கள்.

இவர்கள் அசாமின் 8-10 சதவீதத்துக்குக் குறையாமல் உள்ளனர். போடோ பகுதியில் இவர்கள் 10 சதவீதத்துக்கும் குறையாமல் உள்ளனர். மேலும், பிற பகுதிகளிலிருந்து புலம்பெயர்ந்த வங்காள இந்துக் களும் உள்ளனர். போடோ அல்லாதவர்களே இந்தப் பகுதியின் பெரும்பான்மை என்பது உண்மை.

தேயிலைத் தோட்டங்களால் கைவிடப்பட்டவர்கள்

போடோ பகுதியில் வாழும் பெரும்பான்மையான மக்கள் புலம்பெயர்ந்தவர்கள். கிட்டத்தட்ட தேயிலைத் தோட்டப் பழங்குடிகள். மிகமிகப் பின்தங்கிய நிலையில் இங்கு வாழ்கிறவர்கள். தேயிலைத் தோட்டங்கள் பெரும்பாலும் இவர்களின் பணி ஒப்பந்தம் முடிந்தவுடன் தோட்டங்களுக்கு வெளியே இவர்களை அனுப்பினார்கள். அப்படி அனுப்பப்பட்ட குடிகள் தங்கள் மத்திய இந்தியப் பகுதி எங்கு இருக்கிறது என்றே அறியாதவர்கள். ஆகவே, இந்தப் பகுதியிலேயே குடியேறினார்கள்.

இந்தப் பழங்குடிகளுக்கு விவசாய முறைகள் எதுவும் தெரியாமலேயே இருந்தது. எனவே, இவர்கள் காடுகளுக்குள் சிறு வேட்டையாடியும் பிற உணவு வகைகளைப் பறித்தும் உண்டே வாழ்ந்தனர். இன்று வரை இவர்களுக்கு விவசாயம் நன்கு பரிச்சயமான ஒரு விஷயமல்ல.

விவசாயம் என்பது ஒரு கலை. அது தலைமுறை தலைமுறையாகக் கூடி வாழ்ந்தும் பகிர்ந்து செய்தும் கற்றும் செய்ய வேண்டியது. மிக அண்மையாகவே சில பழங்குடிகள் விவசாயத்தை மேற்கொள்ள ஆரம்பித்தனர். இவர்கள் விவசாயம் செய்யத் தொடங்கிய பகுதிகள் யாவும், அசாமின் வரைபடத்தின்படி காடுகளாக இருந்தவை. பெரும்பாலும் இவை இந்திய-பூடான் எல்லைப் பகுதியில் உள்ளவை. அங்கு மட்டுமே நிலம் கேட்பாரற்றுக் கிடப்பதால் அதை இவர்கள் பயன்படுத்துகிறார்கள். மேலும், இந்தப் பகுதிகளுக்கு இன்னும் அரசாங்கம் முழுமையாகச் சென்றடையவில்லை.

சிறு பள்ளிகளும் ஓரிரு கட்டுமானங்களைத் தவிர, வேறு எதையும் உங்களால் இந்தப் பகுதியில் காண இயலாது. அரசாங்கம் செல்லாத இடத்தில் அரசாங்கத் திட்டங்களும் செல்வதில்லை. இந்த நிலையில், இம்மக்களுக்குச் சமூகப் பாதுகாப்பு என்று எந்த ஓர் அமைப்பும் உறுதியாக இல்லை. தங்கள் இனம் தொடர்ந்து முன்னேறிவருவதற்கான அரசியல் பலம் அவர்களிடம் இல்லாதபோது, வன்முறைகளுக்கு எளிதான இலக்காகிறார்கள்.

இந்தப் பழங்குடிகளுக்கு பழங்குடிகள் என்ற எந்தச் சலுகையும் கிடையாது. இவர்கள் ‘பிற்படுத்தப்பட்டவர்கள்' என்றே வகைப்படுத்தப்பட்டிருக்கிறார்கள்.

பேச்சுவார்த்தையும் பயங்கரவாதமும்

தனி மாநிலம் கேட்டுப் போராடிய அனைத்துக் குழுக்களும் ‘போடோ மாகாண ஆலோசனை சபை' அமைக்கப்பட்டதைத் தொடர்ந்து போராட்டங்களை விடவில்லை. சில குழுக்கள் ஆயுதமில்லாமல் அரசுடன் பேச்சுவார்த்தையில் உள்ளன. தேசிய முற்போக்கு போடோ அணி - (சோனப்ஜிட் குழு) ஆயுதமேந்தி பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்டுள்ளது.

இதன் தலைவர் சோனப்ஜிட் மியான்மரில் பதுங்கி யுள்ளார். கடந்த டிசம்பர் மாதம் 21-ம் தேதி இந்தக் குழுவின் மூன்று பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். அதற்கு எதிர்த் தாக்குதலாக விளிம்புகளில் வாழும், எளிதான இலக்காகியுள்ள தேயிலைத் தோட்டப் பழங்குடிகளின் மேல் கண் மூடித்தனமான தாக்குதலை நடத்தியுள்ளார்கள். இந்த நிலையில், தங்கள் பாதுகாப்புக்காகப் பழங்குடிகள் முகாம்களில் தங்கியுள்ளார்கள். அவர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்புவதற்குப் பாதுகாப்புப் படைகளை நிரந்தரமாகத் தங்கள் பகுதியில் நிறுத்த வேண்டும் என்று விரும்புகிறார்கள்.

அரசும் இதைத் தயங்காமல் செய்யும் என்றால், இந்தப் படைகளை இங்கிருந்து திரும்பப்பெறுதலும் சிக்கலானதாகிவிடும். ராணுவம் இந்தப் பயங்கரவாதிகளுக்கு எதிரான தாக்குதல்களைத் தொடங்கிவிட்டிருந்தாலும், அதன் முடிவைக் காலம் மட்டுமே சொல்லும். இங்கு வேறு இனத்தவர்களுக்கும் போடோக்களுக்கும் இதே சிக்கலால் 2012-ம் ஆண்டு பெரும் கலவரம் ஏற்பட்டதையும் குறிப்பிட்டாக வேண்டும்.

நிலம்தான் அடிப்படை

இந்த எல்லாப் போராட்டங்களுக்கும் கலவரங் களுக்கும் அடிப்படை நிலம் மட்டுமே. இந்தியாவின் பல குடிகள் நிலத்துடன் நெருங்கிய உறவு கொண்டவை. அவர்களால் நிலத்தை விட்டுக்கொடுக்க இயலாது. இது இயல்பும்கூட. ஆனால், மக்களாட்சிக் காலத்தில் நிலத்துக்கென சட்ட வரைமுறைகள் வகுக்கப்பட்டு அதன்படி நாம் வாழ வேண்டியிருக்கிறது. இந்தியாவின் சட்டப்படி, ஆறாவது சட்ட அட்டவணையில் இல்லாத எல்லாப் பகுதிகளும் அரசுக்கே சொந்தமானவை.

எனவே, நிலத்தை முறையாக வரைமுறைப்படுத்துவது அரசின் கடமை. அந்தப் பணியை அரசு சரிவரச் செய்தாலே இந்தச் சிக்கல்கள் பலவும் எளிதாகத் தீர்க்கப்பட்டுவிடும். அதனைத் தீர்க்காமல் இந்தியாவின் எந்த ஓர் இனம் சார்ந்த சிக்கல்களும் தீராது. நிலம் சார்ந்த சட்டங்கள் இந்தியாவில் பல வண்ணங்களிலும் வடிவிலும் உள்ளன. ஆங்கிலேயரின் ஆட்சியின் நேரடிக் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகள் இந்தச் சிக்கல்களைச் சந்திக்கவில்லை.

அவர்களால் தேவையில்லை என்று விடப்பட்ட பகுதிகள் விடுதலைக்குப் பின் இத்தனை ஆண்டுகள் ஆகியும் முறைப்படுத்தாமல் உள்ளன. சில மாநிலங்கள் மட்டும் அதை நோக்கிய செயல்திட்டத்தில் இறங்கியுள்ளன. குறிப்பாக கர்நாடகம், ஹரியாணா மற்றும் மேற்கு வங்கம். இவற்றை முறைப்படுத்த மிகத் திறமையான அதிகாரிகளும் நேர்மையான அரசியலும் தேவை. அதுமட்டுமின்றி, ஒரு கூட்டுக் கருத்து உருவாகிவர வேண்டும். இவையெல்லாம் நடக்கவில்லையென்றால், நெடுங்காலம் இந்தச் சிக்கல்கள் தொடர்ந்துகொண்டே இருக்கும்.

- சாரா,
வடகிழக்கு மாநிலங்களில் களப்பணியாற்றிவருபவர்,
தொடர்புக்கு: writersara123@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

1 hour ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்