தமிழகத்தில்தான் இருக்கிறதா திருச்செங்கோடு?

By சமஸ்

தமிழ் அறிவுலகின் வருடாந்திரக் கொண்டாட்டம் சென்னையில் தொடங்கிய அதே நாளில், தமிழ் அறிவுலகில் அந்தக் கொடுமை நிகழ்ந்திருக்கிறது: தான் நேசித்த சொந்த ஊரான திருச்செங்கோட்டிலிருந்து தொடர் நிர்ப்பந்தங்களின் விளைவாக வெளியேற்றப்பட்டிருக்கிறார் எழுத்தாளர் பெருமாள்முருகன்.

திருச்செங்கோட்டில் நேற்று முழுக் கடையடைப்பு நடத்தப்பட்டிருக்கிறது. நீதிமன்றப் புறக்கணிப்பும் நடந்திருக்கிறது. ஆனால், இவற்றுக்கெல்லாம் காவல் துறையினரின் அனுமதி அல்ல; அவர்களுக்குத் தகவல் அளிக்கப்பட்டதாகக்கூடத் தெரியவில்லை. இன்னும் ஆச்சரியம் என்னவென்றால், இதை முன்னின்று ‘வெற்றி கரமாக’ நடத்திய அமைப்பு எதுவென்றுகூட ‘யாருக்கும்’ தெரியாது. ஆனால், ‘அந்த அமைப்பு’ ஒவ்வொரு நாளும் கூடுகிறது. மண்டபங்களில் பகிரங்கமாகக் கூடி ஆலோசனைக் கூட்டம் நடத்துகிறது.

பொது இடங்களில் சுவரொட்டிகள் அடித்து ஒட்டுகிறது. வீதி வீதியாக வீடுகளில், கடைகளில், அலுவலகங்களில் துண்டுப் பிரசுரங்களை விநியோகிக்கிறது. சமூக வலைதளங்களில் ‘பெருமாள்முருகன் எதிர்ப்பு இயக்கம்’ ( >https://www.facebook.com/protestperumalmugan) நடத்துகிறது. எந்தக் கோரிக்கையையும் முன்வைக்காமல், ஓர் எழுத்தாளரை அவருடைய எழுத்துகளை முன்வைத்து ஓட ஓடத் துரத்துகிறது. வெறுப்பைக் கக்கி வேட்டையாடத் துடிக்கிறது.

எங்கே இருக்கிறோம்?

நாம் தமிழ்நாட்டில்தான் இருக்கிறோமா? ஆம், தமிழ்நாட்டில்தான் இருக்கிறோம். இதெல்லாம் திருச்செங் கோட்டில்தான் நடக்கிறதா? ஆம். திருச்செங்கோட்டில்தான் நடக்கிறது. ஈரோட்டிலிருந்து கூப்பிடு தொலைவில் உள்ள திருச்செங்கோட்டில்தான் நடக்கிறது. இந்தியாவின் பெருமைக்குரிய சுதந்திரக் கருத்தாளர்களில் ஒருவரான பெரியாரின் களங்களில் ஒன்றான திருச்செங்கோட்டில்தான் நடக்கிறது. திராவிட இயக்கத் தளகர்த்தர்கள்

என்.பி. நடேசனும் சங்கரலிங்கமும் ‘பெரியார் நகர்’ அமைத்த தி.ரா.சு. மணியனும் இருந்த திருச்செங்கோட்டில்தான் நடக்கிறது. இந்தி ஆதிக்கத்தை எதிர்த்து, தாய்மொழி காக்க மொழிப் போராட்டத்தில் மாணவர்களை உயிர் பலி கொடுத்த திருச்செங்கோட்டில்தான் நடக்கிறது. ஆம், இன்றைக்குத் தமிழகத்தில் பாசிஸத்தின் பரிசோதனைக் களமாகியிருக்கிறது திருச்செங்கோடு.

முகமற்றவர்களின் அதிகாரம்

யார் இந்தப் பரிசோதனையை நடத்துகிறார்கள்? வெளியே பெயரை அறிவித்துக்கொள்ளத் துணிவில்லாத ‘அடிப்படை வாத சக்திகள்’ இதன் பின்னே கைகோத்திருப்பதாகச் சொல்கிறார்கள் திருச்செங்கோடு மக்கள். இதைத் தாண்டி கவனிக்க வேண்டிய இன்னொரு அபாயகரமான விஷயத்தையும் அவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்: இங்கே ‘அடிப்படைவாத சக்தி’யாக உருவெடுத்திருப்பது இந்துத்துவ-சாதிய சக்திகளின் கலவை. மிக நுட்பமாக, முதலில் ஒவ்வொருவரிடமும் இயல்பாக சொந்த ஊர் மீது இருக்கும் நேசத்தைக் குறிவைத்துப் பேச ஆரம்பிக்கிறார்கள். பிறகு, மத உணர்வைத் தூண்டுகிறார்கள். கடைசியாக, சாதிய உணர்வைக் கைப்பற்றுகிறார்கள் என்கிறார்கள் திருச்செங்கோட்டு மக்கள்.

ஒரு படைப்பாளியின் வேலை சமூகம் நம்பிக் கொண்டிருக்கும்/ மெச்சிக்கொண்டிருக்கும் ஆகிவந்த பெருமிதங்களுக்கும் நம்பிக்கைகளுக்கும் சந்தனம் பூசுவது அல்ல. அடிப்படையிலேயே, இயல்பிலேயே படைப்பாளி என்பவர் ஒரு கலகக்காரர். ஒரு சமூகம் எழுப்பி யிருக்கும் அதிகார / புனிதப் பிம்பங்கள் மீது அவர் தன் கருத்துகள் மூலம் உருவாக்கும் மோதல்களினாலேயே அவர் படைப்பாளி ஆகிறார். அந்தச் சமூகத்தை அவர் அடுத்த தளத்துக்குத் தள்ளுகிறார். அதனால்தான் அவரைப் படைப்பாளி என்று கொண்டாடுகிறோம்.

இதுதான் நம் எதிர்வினையா?

பெருமாள்முருகனின் சர்ச்சைக்குரிய ‘மாதொருபாகன்’ நாவல் ஒரு சிறந்த இலக்கியப் படைப்பா, இல்லையா; அதில் அவர் வரலாற்றையும் புனைவையும் கையாண்டிருக்கும் விதம் சரியானதா, தவறானதா எனும் விவாதங்களெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும். தமிழகத்தில் ஒரு எழுத்தாளர் ஒரு நாவல் எழுதுகிறார்; அவர் எழுதியிருக்கும் சில விஷயங்கள் நமக்கு உடன்பாடானதாக இல்லை; அதற்கு நாம் வெளிப்படுத்தும் எதிர்வினை என்ன? அந்தப் புத்தகத்தை எரித்து, அந்த எழுத்தாளருக்கு எதிராக வெறுப்பை உமிழ்ந்து, துவேஷப் பிரச்சாரங்களில் ஈடுபட்டு, மிரட்டி ஊரை விட்டுத் துரத்துவதா?

இங்கே கவனிக்க வேண்டிய மிக நுட்பமான விஷயம், எதிர்ப்பாளர்கள் தங்கள் நோக்கம்/ கோரிக்கை என்ன வென்று இதுவரை எங்கும் வெளிப்படுத்தவில்லை என்பது தான். “பேச்சுவார்த்தைக்கு அழைத்தோம், அவர்கள் வரவில்லை” என்று கூறுகிறார் நாமக்கல் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர்.

ஒரு தவறான முன்னுதாரணம் என்றாலும்கூட, எழுத்தாளர் பெருமாள்முருகன் தானாக முன்வந்து, செய்யாத தவறுக்கு வருத்தம் தெரிவித்திருப்பதோடு, அடுத்த பதிப்பில் எதிர்ப்பாளர்களுக்குச் சங்கடம் தரும் விஷயங்களைத் தவிர்ப்பதாகத் தெரிவித்திருக்கிறார். அப்படியும் ஆத்திரம் அடங்கவில்லை என்றால், அவர்களுடைய நோக்கம்தான் என்ன?

தமிழக வரலாற்றிலேயே இதுவரை நடந்திராத ஒரு அக்கிரமம் இப்போது நடக்கிறது. ஒரு வாரம் தாண்டி இந்த விவகாரம் தீப்பற்றி எரிகிறது. ஊடகங்கள் தொடர்ந்து எழுதுகின்றன. ஆனால், தமிழகத்தின் அரசியல் இயக்கங்கள் இதுபற்றி அணுவளவும் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. நாம் இருப்பது தமிழகத்தில். இந்த தேசத்தின் மதிப்புமிக்க ஜனநாயகக் களமான தமிழகத்தில்... உணர்கிறோமா?

- சமஸ், தொடர்புக்கு: samas@thehindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

22 hours ago

கருத்துப் பேழை

18 hours ago

கருத்துப் பேழை

21 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்