இந்தத் தேர்தல் அறிக்கை குறித்து நாம் பேசியாக வேண்டும்

By என்.ராம்

இந்த 16-வது மக்களவைப் பொதுத்தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு தொடங்கும்வரை, பாரதிய ஜனதா கட்சி தனது தேர்தல் அறிக்கையை வெளியிடவில்லை. இந்தியத் தேர்தல் ஆணையம் தன்னுடைய அதிருப்தியை வெளிப்படுத்தியபோதிலும் எந்த விளக்கமும் அளிக்காத கட்சி முதல் கட்ட வாக்குப்பதிவு தொடங்கிய பின் அறிக்கையை வெளியிட்டிருக்கிறது.

தேர்தல் அறிக்கை என்பது பெரிய விஷயமல்ல என்று பா.ஜ.க. நினைப்பதுபோலத் தெரிகிறது. ‘வளர்ச்சி நாயகன்' என்று அழைக்கப்படும் குஜராத் முதல்வர் நரேந்திர மோடியின் பிரச்சார இயந்திரம், 2002-ல் நடந்ததைப் பற்றி விவாதிக்க விடாமல் - அல்லது அதிலிருந்து கவனத்தை வேறு திசைகளில் இழுத்துச்செல்லும் வேலையை - தனது வரம்புக்கு உட்பட்ட வகையில் ஏற்கெனவே கச்சிதமாகச் செய்துமுடித்துவிட்டது. ‘மோடி மந்திரம்' கையில் இருக்கும்போது தேர்தல் அறிக்கைக்கு என்ன தேவை என்று கட்சி நினைத்திருக்கலாம்.

தாமதத்தின் உண்மையான பின்னணி

ஏனைய தேசியக் கட்சிகளும் மாநிலக் கட்சிகளும் தங்களுடைய தேர்தல் அறிக்கையை வெளியிட்ட பிறகும், முதல் கட்ட வாக்குப் பதிவு தொடங்கும் வரை பா.ஜ.க-வால் தேர்தல் அறிக்கையைக் கொண்டுவர முடியவில்லை என்பது சாதாரண விஷயமல்ல. யாருக்கு வாக்களிப்பது என்பதைத் தீர்மானிக்க வேண்டிய வாக்காளர்களுக்கு அவசியமான தேர்தல் அறிக்கையை வெளியிடுவதில் இவ்வளவு தாமதம் ஏற்பட உண்மையான காரணம் என்ன?

இது தொடர்பாக பா.ஜ.க. தலைமையிடமிருந்து விளக்கம் ஏதும் வருவதற்கு முன்பாகவே, ஊடகங்களில் ‘பா.ஜ.க. சார்புள்ளவர்கள்' முந்திக்கொண்டு பதில் அளிக்கிறார்கள். அவர்களில் ஒருவரான ‘நெட்வொர்க் 18' குழு வெளியீடுகளின் தலைமை ஆசிரியர் ஆர். ஜெகந்நாதன், “மோடியே தேர்தல் அறிக்கைதான்; கனமான இன்னொரு அறிக்கை பா.ஜ.க-வுக்குத் தேவையா என்ன?” என்று கட்டுரையில் வினவுகிறார். கட்டுரையின் கடைசிப் பகுதியை அவர் இப்படி முடிக்கிறார்: “தேர்தல் அறிக்கைகள் என்பவை கால்கட்டு மாதிரி, தேர்தலில் நிச்சயம் வெற்றிபெற்று ஆட்சியமைக்கப்போகும் கட்சிக்கு இம்மாதிரியான தளைகள் தேவையில்லை.”

இதை வேறு வார்த்தைகளில் சொல்வதானால், ‘நிச்சயம் வெற்றிபெறக்கூடிய கட்சிக்கு இந்தத் தேர்தல் அறிக்கை என்பதெல்லாம் எதிர்காலத்தில் பெரிய பிரச்சினையாக மாறிவிடக்கூடும்' என்று தெரிகிறது. தேர்தல் அறிக்கை என்பது ‘தெரிவிப்பது குறைவாகவும் மறைப்பது அதிகமாகவும்' இருப்பது. அப்படி மறைக்கப்பட வேண்டியவற்றில் கட்சியின் சித்தாந்தம், குணவிசேஷம் ஆகியவை முக்கியமானவை.

பா.ஜ.க-வைப் பொறுத்தவரை கவனத்துக்குரியவை அதன் சங்கப் பரிவாரங்களின் முக்கியமான செயல்திட்டங்கள், நோக்கங்கள், சித்தாந்தங்கள், ‘இந்துத்துவா' என்று அது கருதும் விஷயங்கள் - அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் ராமருக்குக் கோயில் கட்டுவது, காஷ்மீருக்குத் தனி அந்தஸ்து வழங்கும் அரசியல் சட்டத்தின் 370-வது பிரிவை ரத்துசெய்வது, அனைவருக்கும் பொதுவான குடியுரிமைச் சட்டம் இயற்றுவது, மதமாற்றங்களைத் தடை செய்வது, பசுவதைத் தடை – உள்பட பல.

இதில் வேடிக்கை என்னவென்றால், இந்த அம்சங்களெல்லாம் பெரும்பாலான மக்களுடைய கவனத்திலிருந்து தப்பிவிடுவதுதான். பா.ஜ.க. என்பது தன்னுடைய கொள்கைகளில் பிடிப்பு உள்ள கட்சி. எந்தக் காரணத்துக்காகவும் எப்போது வேண்டுமானாலும் வெடிக்கக்கூடிய உணர்ச்சிப் பிழம்பான அமைப்புகளைக் கொண்டதுதான் சங்கப் பரிவாரம். இவற்றையெல்லாம் ஊட்டி வளர்ப்பது ‘ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக் சங்' என்ற தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ். இந்த அமைப்புகளுக்குள்ள உறவு எப்படிப்பட்டது, அவை எப்படிச் செயல்படுகின்றன என்று அறிய வேறெங்கும் போக வேண்டாம் அவற்றின் இணையதளங்களைக் கவனித்தாலே போதும்.

ஒரு இணையதளம் சொல்கிறது: “சங்கப் பரிவாரத்தின் மிகவும் பிரபலமான அங்கம் பாரதிய ஜனதா கட்சி… இந்திய வரலாறு எது என்பதில் சங்கப் பரிவாரங்கள் தெளிவாக இருக்கின்றன. இந்திய நாட்டுக்கும் சமூகத்துக் கும் இந்து மதம்தான் அடையாளம், இந்துத்துவம்தான் கலாச்சாரம்.”

அடிநாதம் இந்துத்துவமே

பா.ஜ.க. 1980-86 காலகட்டத்தில் அதன் ‘சாதாரணமான' வலதுசாரிக் கருத்துகளுக்குக் கிடைத்த தேர்தல் வெற்றிகளால் துணிச்சல் பெற்று, 1989-ல் ‘தீவிரமான' இந்துத்துவக் கருத்து களை முன்வைத்துச் செயல்படத் தொடங்கியது. 1996 தொடங்கி பா.ஜ.க-வின் தேர்தல் அறிக்கைகளை ஊன்றிக் கவனித்தால், 1999 தவிர பிற தேர்தல்களிலெல்லாம் இந்துத்துவக் கருத்துகளை மையமாக வைத்தே அது தேர்தல் அறிக்கையைத் தயாரித்துவந்துள்ளது தெரியவரும். கொள்கைகளைச் சொல்லப் பயன்படுத்தும் மொழி, தொனி, பாணி வேறுபட்டாலும் பிரதான அம்சங்கள் அப்படியே தொடர்கின்றன.

பா.ஜ.க-வின் 1998 தேர்தல் அறிக்கை அதனுடைய முக்கியக் கொள்கைகளை வெளிப்படையாகப் பேசுகிறது. “சனாதன தர்மம்தான் இந்திய தேசியத்துவம்” என்கிறது. “ஒரே நாடு, ஒரே மக்கள், ஒரே தேசம்” என்ற லட்சியத்தை முழங்குகிறது. “அரசியலில் இந்துத்துவம் உருவாவது, சமுதாயத்தின் சிலருக்கு சலுகைகள் காட்டி திருப்திப்படுத்துவதற்கும், சிலரை வாக்கு வங்கிகளாக நடத்துவதற்கும் நல்ல முறிவு மருந்தாக இருக்கும்” என்கிறது. “இந்தியாவின் மனசாட்சியாக பகவான் ராமர் இருக்கிறார்” என்கிறது.

“அயோத்தியில் ராமர் பிறந்த இடத்தில் அழகிய, பெரிய ஆலயத்தை எழுப்ப வேண்டும்” என்கிறது. “இதைச் செய்ய சட்டபூர்வமாகவும் கருத்தொற்றுமை அடிப்படையிலும், அரசியல் சட்டம் மூலமாகவும் முயற்சிகளை மேற்கொள்வோம்” என்கிறது. மேலும், காஷ்மீர் மாநிலத்துக்குச் சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல் சட்டப் பிரிவு 370 ரத்துசெய்யப்படும் என்று எச்சரிக்கும் அந்த அறிக்கை அனைத்து மக்களுக்கும் பொதுவான சிவில் சட்டம் வகுக்கப்படும் வகையில் அனைத்து மரபுகளிலும் உள்ள முற்போக்கான அம்சங்கள் சேர்க்கப்பட வேண்டும் என்ற பொறுப்பு சட்ட ஆணையத்துக்கு அளிக்கப்படும் என்கிறது.

அடுத்த பொதுத்தேர்தலில் – அதாவது 1999 தேர்தலில் பா.ஜ.க. தேர்தல் அறிக்கை வெளியிடாமல் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்காக, ‘நிர்வாகத்துக்கான தேசிய செயல்திட்டம்' வகுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டது. அதில் இந்துத்துவத்தின் அடிப்படை அம்சங்கள் விலக்கி வைக்கப்பட்டிருந்தன.

அடுத்த பொதுத்தேர்தலில் பல கட்சிகளையும் உள்ளடக்கி விரிவான கூட்டணியை ஏற்படுத்திக்கொண்டபோதிலும் இந்துத்துவக் கொள்கைகள், ‘2004-க்கான தீர்க்கதரிசனத் திட்டங்கள்' என்ற பெயரில் அப்படியே இடம்பிடித்தன. இந்த அறிக்கையின் முக்கிய அம்சம், அயோத்தியில் ராமருக்குக் கோயில் கட்ட வேண்டும் என்ற தங்களுடைய நீண்ட நாள் கோரிக்கையை பா.ஜ.க. மீண்டும் கையில் எடுத்ததுதான். அரசியல் சட்டத்தின் 370-வது பிரிவை ரத்துசெய்ய வேண்டும் என்ற கோரிக்கைக்குப் பதிலாக, “ஜம்மு, லடாக் ஆகிய பகுதிகளுக்கும் போதிய நிதி, நிர்வாக அதிகாரங்களுடன் கூடிய சுயாட்சி பிரதேச ஆணையங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும்” என்ற கோரிக்கை இதில் இடம்பெற்றிருந்தது.

மீண்டும் இறுகிய இந்துத்துவா

மீண்டும் இந்துத்துவக் கொள்கைகள் தீவிரமாக வலியுறுத்தப்பட்டன 2009 தேர்தல் அறிக்கையில். “அத்வானி தலைமையிலான அயோத்தி இயக்கம்தான் சுதந்திர இந்தியாவில் மக்களிடையே எழுச்சியைப் பெற்ற பெரிய நிகழ்வு” என்று வாழ்த்துப் பாடிய அந்த அறிக்கையில், “காஷ்மீருக்குத் தனி அந்தஸ்து வழங்கும் அரசியல் சட்டத்தின் 370-வது பிரிவை ரத்துசெய்ய வேண்டும்” என்ற பழைய பல்லவி மீண்டும் ஒலித்தது. அனைத்து மதத்தவருக்கும் பொதுவான குடியுரிமைச் சட்டத்தை உருவாக்க உறுதிபூண்டிருப்பதாகவும் எல்லா மதங்களிலும் கடைப்பிடிக்கப்படும் உயர்ந்த அம்சங்களை ஒன்றுசேர்த்து நவீன சமூகத்துக்கு ஏற்ற வகையில் குடி யுரிமைச் சட்டம் தயாரிக்கப்படும் என்றும் அது கூறியது.

முன்தயாரிப்புகள்

இந்த 2014 தேர்தல் அறிக்கைக்கான பூர்வாங்க வேலைகளை 2013 அக்டோபரிலேயே பா.ஜ.க. தொடங்கி விட்டது. வாக்காளர்களிடமிருந்தே யோசனைகளை வரவேற்கிறோம் என்றெல்லாம், தனி இணையதளம் தொடங்கப்பட்டாலும் கட்சியின் அடிப்படை என்னவோ இந்துத்துவக் கொள்கைகள்தான். உத்தரப் பிரதேசத்தில் பா.ஜ.க-வினர் நடத்தும் மதவாதம் தெறிக்கும் பிரச்சாரங்களும், அமித் ஷாவின் அனல் கக்கும் பேச்சுகளும் எதைக் காட்டுகின்றன? பா.ஜ.க-வின் குணம் மாறவே மாறாது என்பதைத்தான் வெளிப்படுத்துகின்றன.

- என். ராம், மூத்த பத்திரிகையாளர்,
தொடர்புக்கு: nram@thehindu.co.in

© ‘தி ஹிந்து' (ஆங்கிலம்), தமிழில்: சாரி

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

2 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்