மார்கழி: இயற்கையின் அதிகாலை

By தங்க.ஜெயராமன்

இயற்கை பிறப்பித்த மார்கழிப் பண்பாடு குறித்த கீழத் தஞ்சை நினைவுகள்.

மனிதர்கள் உடம்பெடுத்துப் பிறந்ததன் பயனைத் தங்கள் மேனியில் உணரும் மாதம் மார்கழி. வெயிலும் பனிக்காற்றும் ஒன்றையொன்று இதமாக்கிக் கொண்டிருக்கும். நிலம் தெளியாத காலையில் குளிக்கச் செல்பவர்கள் குளிருக்கு அஞ்சி கரையிலேயே நிற்பார்கள். குளத்தில் இறங்கிவிட்டாலோ நீரின் கதகதப்பு கரையேற விடாது. பனி மூட்டத்தை ஊடறுத்து வரும் ஆதவனின் கதிர்களில் சிறுவர்கள் வெயில் காய்வார்கள். விடிவதற்கு முன் வீட்டுக்கூடத்தில் கிடைப்பதைக் கொளுத்திக் கை கால்களைக் காய்ச்சிக்கொள்வார்கள். உடம்பில் உணரும் இந்த உணக்கைதான் மார்கழியை மாதங்களில் சிறந்ததாக ஆக்குகிறதோ!

இயற்கையிலும் கலாச்சாரக் களத்திலும் மார்கழி விட்டுச்செல்லும் தடயங்கள் நமது கண்களுக்குத் தெரிவதில்லை. கிராமங்களில் வெள்ளி முளைப்பதற்கு முன்பே தாதர் சேமக்கலம் வாசித்து சங்கு ஊதுவார். அப்போது அருணாச்சல கவிராயரின் ராம நாடகக் கீர்த்தனைகள் சிலவும் அவர் பாடுவது உண்டு. தாதர்கள் குறைந்துவிட்டதால், இருக்கும் இடங்களில் ஒருவரே இரண்டு மூன்று கிராமங்களுக்கு ஊதி நெல் வரும்படி பெறுகிறார். கோயில்களிலும் பஜனை மடங்களிலும் கம்பசேவை மடங்களிலும், தெருவுக்கு ஒன்றிரண்டு இடங்களிலும் இப்படி ஊதுவார்கள்.

மவுனம் காக்கும் மார்கழி

நீர்ப் பரப்பிலிருந்து பனிப் புகை துணிப் படலமாக எழும்பிக்கொண்டிருக்கும் சலனமில்லாத அமைதி. வெள்ளையும் சிகப்புமாக அல்லி பூத்துக் கிடக்கும் குளம், குட்டை, ஓடை, வாய்க்கால் எல்லாம் நிறைகுடமாக மவுனம் காக்கும். ‘ஓ’வென்று ஓடிக்கொண்டிருந்த தண்ணீர் மெலிந்து ஓசையில்லாமல் இறங்கித் தவழும். வயல்களிலிருந்து வடியும் நீரை வாங்கி வாய்க்கால் மெதுவாகக் கடத்திக்கொண்டிருக்கும். அங்கொன்றும் இங்கொன்றுமாக மீன் துள்ளுவதுதான் சலனம். இந்தச் சலனங்களும் மவுனத்தின் ஆழத்தைத்தான் காட்டும். பேசிப் பகிர்ந்துகொள்ளாத இலக்கை நோக்கிப் பயணிக்கும் நிறைபாரமான வண்டியாக இயற்கை நகரும். ஓசை தனது இருப்பை அமைதியிலிருந்து பெறுவது அப்போதுதான் நமக்கும் புலனாகும். தைப் பொங்கலை இலக்காகக் கொண்டு காலத்தை பத்தாம் நாள், ஒன்பதாம் நாள் என்று இறங்கு வரிசையில் கணக் கிட்டுவருவார்கள். வேலையின் தீவிரத்தில் விளையும் மவுனத்தில் ஒரு பெரும் எதிர்பார்ப்பு.

பூப்போடும் மடையான்

ஏறத்தாழ மார்கழி நடுவில் கர்ப்போட்ட காலம் துவங்கும். ஈசானியத்திலிருந்து பொதிப் பொதியாக வெண் மேகங்களின் பயணம் மாத இறுதிவரை ஓயாது. நாணல் பூத்து வாய்க்கால்களுக்குப் புருவங் கட்டியிருக்கும். பால்கட்டாக, பாளை உடைந்ததாக, வில்வளைவாக, இப்படிப் பல கட்டங்களில் நெல்லைக் காணலாம். மரகதப் போர்வைக்குள் முகம் புதைத்த பொன்மணிச் சரங்களாக இருக்கும். மாலை வெயிலில் மஞ்சள் பட்டாகவும் விரிந்திருக்கும். வாய்க்கால்களில் கண்ணாடியாகத் தெளிந்திருக்கும் தண்ணீர். பளிச்சென்ற வெண்மையில் கொக்கும் மடையானும். இவை பத்தி பிடித்து தோரணமாக வானில் பறக்கும். அப்போது இரண்டு கைகளிலும் விரல்களை மடக்கி, நகத்தோடு நகம் உரசி, “மடையான் மடையான் பூப்போடு” என்று கூவிக்கொண்டே ஓடும் சிறுவர்களின் ஆர்வம். மூங்கில் வெடித்து, குருத்தாகி, நெடுநெடுவென பூஞ்சாம்பல் பூசி போத்தாக வானத்தை அளைந்துகொண்டிருக்கும். மஞ்சள் பூக்களை வாரி இறைத்துக்கொண்டு பனையிலும் மூங்கிலிலும் படர்ந்திருக்கும் காட்டுப் பீர்க்கு. வீட்டுக் கூரைகளில் விண்மீனாகப் பூத்திருக்கும் பரங்கி, சுரை, கோவைக் கொடி. படிக மணிகளாகப் பனித்துளிகள் திரண்டு மின்னிக்கொண்டிருக்கும் சேம்பை இலை.

தண்ணீர் கண்ட இடமெல்லாம் செருமிக் கிடக்கும் மீன்கள். அவற்றை வாரியிலும் ஓடையிலும் சார் குத்தி தடுத்திருப்பார்கள். இங்கே தேங்கியிருக்கும் சார்முட்டிப்பொடி என்ற சிறிய மீன்கள். வார்த்தெடுத்த வெள்ளியாகத் துள்ளிக்கொண்டிருக்கும் பஞ்சலைக் கெண்டை. ஓடும் நீரில் ஊத்தாவைக் குத்தித் துழாவிப் பிடிக்கும் மீன். தூண்டிலால் பிடித்து, கோரையைச் சிலால் வழியே நுழைத்து சடைப் பின்னலாகக் கோத்துக் கொண்டுவரும் மீன். அறுத்துக் காயவைத்துக் கட்டு களாகத் தலைச் சுமையாகவே சந்தைக்கு வரும் பாய்க்கோரை. வரப்பு, வாய்க்கால்களில் சீந்து வாரில்லாமல் நிற்கும் முண்டாசுக் கோரை. இவை யெல்லாம் இயற்கையில் நிகழும் சலனங்கள்.

வயல் வரப்பில் உழவர்கள் வாங்களை (ஒரு வகைக் களை) அரிந்து, காலில் படாமல் நெற்கதிரை ஒதுக்கிவிடுவார்கள். அறுவடைக்கு முன் சில்லறை வேலைகளாகக் கொல்லையில் மரங்களைக் கழித்து வேலி கட்டுவார்கள். தென்னங்கொல்லையைக் கொத்தி மரங்களுக்கு அசடு களைவார்கள்.

தீத்தாங்கல்

அறிவிக்காத போட்டியாக மாதம் முழுவதும் பெண்கள் வாசலில் கோலம் போடுவார்கள். வெள்ளிக் கோடுகளாகத் தீட்டியிருக்கும் கோலத்தில் பரங்கியின் மஞ்சள் பூக்களையும் சாண உருண்டையில் செருகிவைப்பார்கள். நிலைப்படி அருகில் அகல் விளக்கு ஏற்றியிருக்கும். வைக்கோலைக் கருக்கி, சாணமும் வண்டலும் கலந்து வீட்டில் தரையை மெழுகித் தீத்துவார்கள். தரையை வழவழப்பாகத் தீத்துவதற்குத் தீத்தாங்கல் என்ற கை கொள்ளும் அளவில் ஒரு கல் புழங்கியது. தீத்திய தரையின் கருப்புப் பின்னணியில் மாக்கோலம் கண்ணைப் பறிக்கும்.

காலையில் கேட்கும் ஓசைகளில் குயவர்கள் மண் பாண்டங்களைத் தட்டித் தயாரிக்கும் ஓசையும் ஒன்று. அப்போது நெய்த கோரைப்பாய், புதிதாகக் கோத்த அகப்பை, பிரிமணை, மூங்கில் கூடைகள் சந்தைக்கு வரும். தெருத்தெருவாக ஒட்டடைக் குச்சி விற்பார்கள். மாடுகளுக்குக் கொம்பு சீவி விடுவார்கள். தலைக் கயிறு, கழுத்துக் கயிறு, நூல் கயிறாகவே மூக்குக் கயிறு, கழுத்துச் சலங்கை, நெட்டி மாலை எல்லாம் மும்முரமாக விற்கும். பொங்கல் நெருங்கி வரும்போது கரும்புக் கட்டும், வாழைத் தாரும் கடைத்தெருவில் குவிந்துவிடும். அப்போது நாமக் கரும்பு என்று ஒரு வகைக் கரும்பு கருநீலத்தில் இளம் பச்சைக் கோடுகளோடு வரும்.

மேலச் சீமைக்கு வலசை

தஞ்சையின் கிழக்குப் பகுதி விவசாயத் தொழி லாளர்கள் மார்கழி முதல் வாரத்தில் மேலச் சீமை என்று அவர்கள் அழைக்கும் மேற்குப் பகுதிக்கு வலசை போகும் பறவைகள் போன்று இடம்பெயர்வார்கள். வளமான கீழத் தஞ்சையிலிருந்து தொழிலாளர்கள் வேலைதேடி இடம்பெயர்வதும் உண்டா என்று நீங்கள் ஐயப்படலாம்.

அங்கு கடலை விதைப்புக்குத் தோதாக நெல் அறுவடை முன்கூட்டியே நடக்கும். இருபது நாட்களுக்கு மேல் அங்கேயே தங்கி அறுவடையை முடித்துவிட்டுத் தங்களுடைய கீழ்ப் பகுதிக்குப் பொங்கலுக்கு முன் திரும்புவார்கள்.

கோயில்களில் காலையில் திருப்பாவை, திருவெம் பாவை பாடுவது வழக்கம். பெருமாள் கோவிலில் வெண்பொங்கலோடு சுக்குவெல்லமும்கூட நிவேதனமாக இருக்கும். எங்கள் ஊரில் வைகுண்ட ஏகாதசிக்கு முன்பு பத்து நாட்களும், அதற்குப் பின்பு பத்து நாட்களும் பெருமாளும் ஆழ்வார்களும் கேட்க திவ்யப் பிரபந்த சாற்றுமுறை நடக்கும். முதல் பத்து நாட்களான பகல் பத்தில் வல்லாள ராஜா மண்டபத்திலும், இராப்பத்தில் ஆயிரங்கால் மண்டபத்திலும் பெருமாள் ஒவ்வொரு நாளும் ஒரு வேடத்தில், ஆடையில், கிரீடத்தில் எழுந்தருளுவார். இருபத்தோராம் நாளில் இயற்பா சாற்றுமுறை. மார்கழியில் திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி பாடுவதுதான் அப்போது குழந்தைகளுக்குப் பள்ளிக்கு வெளியிலான நல்ல தமிழ்ப் பயிற்சியாக இருந்தது. சிவன் கோவில்களில் மார்கழி திருவாதிரை நிகழ்ச்சி. ஆதிரைநாள் இரவில் நடராஜருக்கு அபிஷேகம் நடந்து விடிந்தவுடன் புறப்பாடு இருக்கும். திருவாரூரில் நடராஜர் அபிஷேகத்துக்குப் பின் தியாகராஜாவின் வலதுபாத தரிசனம் என்ற நிகழ்ச்சியும் உண்டு.

பருவங்களின் சுழற்சியை ஒட்டிய பொருளாதாரக் காரணிகளும் அவற்றால் விளையும் பண்பாட்டு வழக்கங்களும் மார்கழியில் தெளிவாகத் தெரியும். அவ்வாறே, பண்பாட்டு வழக்கங்களால் பிறக்கும் பொருளாதார நிகழ்வுகளும் இம்மாதத்தின் மற்றொரு பக்கம்.

- தங்க. ஜெயராமன்,

ஆங்கிலப் பேராசிரியர், ஒமர் கய்யாமின் ‘ருபாயியத்’ நூலை ஆங்கிலம் வழியாகத் தமிழில் மொழிபெயர்த்தவர். தொடர்புக்கு: profjayaraman@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

11 hours ago

கருத்துப் பேழை

12 hours ago

கருத்துப் பேழை

12 hours ago

கருத்துப் பேழை

15 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்