சிகை திருத்தம் செய்துகொள்வதுபோல மரபணுத் திருத்தம் செய்துகொள்ளலாமா?
யானையின் கன்று யானை மாதிரியே பிறக்கிறது. பூனையின் குட்டி பூனை மாதிரியே பிறக்கிறது. ஆனாலும், கருத்தரித்த சில வாரங்களுக்குள் கருப்பையில் உருவாகியிருக்கிற கருவைப் பார்த்தால், மனிதன் முதல் மீன் வரை எல்லா உயிரினங்களிலும் அதன் வடிவம் ஒரே மாதிரியாக இருக்கிறது. நாளாக நாளாகத்தான் கரு, அதன் பெற்றோரின் வடிவத்தைப் படிப்படியாக அடைகிறது. இவ்வாறு பெற்றோரின் வடிவமைப்பு பிள்ளைகளுக்கும் அமைவதற்குப் பாரம்பரியம் என்ற பண்பு காரணமாகிறது.
பொதுவான அம்சங்களில் பெற்றோருக்கும் பிள்ளை
களுக்கும் இடையில் வடிவ ஒற்றுமை காணப்படுகிற போதிலும், சின்னச் சின்ன விஷயங்களில் வித்தியாசங் களும் இருக்கும். அதன் காரணமாகவே ஒரே ஈற்றில் ஒட்டிப் பிறக்கிற பிள்ளைகளைக்கூட நம்மால் அடை யாளம் காண முடிகிறது. இதற்குத் தனித்துவம் என்று பெயர்.
மரபணுக்களின் மாய உலகம்
பாரம்பரியத்துக்கும் தனித்துவத்துக்கும் காரணமாவது மரபணு (ஜீன்) எனப்படுகிற அடிப்படைக்கூறு. இயற்பி யலிலும் வேதியியலிலும் அணு என்பது அடிப்படைக் கூறாக இருப்பதைப் போல உயிரியலில் மரபணு ஓர் அடிப்படைக் கூறாக விளங்குகிறது. தலைமயிர் கருப்பா, சிவப்பா, பொன்னிறமா, சுருட்டையா, நீளமா, மூக்கு சப்பையா, கிளி மூக்கா என்பன போன்ற அம்சங்களை நிர்ணயிப்பது மரபணுதான்.
தலை வழுக்கை, பார்வைக் கோளாறுகள், நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், மனநோய் போன்ற பல வேண்டாத விஷயங்களும் பெற்றோரிடமிருந்து பிதுரார்ஜிதமாகப் பிள்ளைகளுக்கு மரபணுக்கள் மூலமாகவே வந்து சேருகின்றன.
மேற்சொன்ன ஒவ்வொரு குணாம்சத்துக்கும் ஒரு மரபணு பொறுப்பு வகிக்கிறது. இவ்வாறான 25 ஆயிரம் குணாம்சங்கள் அடையாளம் காணப்பட்டிருக்கின்றன. அதாவது, 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரபணு வகைகள் உள்ளதாகப் பொருளாகிறது.
மரபணுக்கள் சரம்போல வரிசையாக அமைந்து ‘டியாக்சிரிபோ நியூக்ளிக் அமிலம்’ (டி.என்.ஏ.) என்ற அமைப்பாக அணிவகுத்திருக்கும். அந்த அமைப்பு ‘குரோமோசோம்’ எனப்படும் புரத உறைக்குள் பொதிந் திருக்கும். ஏராளமான குரோமோசோம்கள் செல் கரு என்ற உருண்டையாகத் திரண்டிருக்கும். அது செல் எனப்படும் நுண்ணறையில் குடியிருக்கும்.
செல்களில் எத்தனை ரகங்கள்
செல் என்பது ஓர் அதிசய, அற்புதப் படைப்பு. வைரஸ் எனப்படும் நுண்ணுயிரியைத் தவிர, மற்றெல்லா ஜீவராசிகளுக்கும் செல்தான் கட்டுமான அலகு. செல் அமைப்பு இல்லாத ஒரே உயிரி வைரஸ்தான்.
உயிர் உள்ளது என நிர்ணயிப்பதற்கு செல்களின் இனப்பெருக்கம்தான் சாட்சி. ஜெராக்ஸ் நகலெடுப்பதைப் போல ஒரு செல் இரண்டாகி, இரண்டு நாலாகி கணத்துக்குக் கணம் இரட்டித்துக்கொண்டே போகிற நிகழ்வுதான் உயிர். அது நின்றுபோவது மரணம்.
செல் மிக நுண்ணியது. அதன் உறையாக பிளாஸ்மா சவ்வு அமைந்துள்ளது. செல்களில் உடல் செல்கள், பாலின செல்கள் என இரு வகையுண்டு. பாலின செல்கள் ஆண்களின் விந்தகத்திலும் பெண்களின் முட்டையகத்திலும் மட்டுமே காணப்படும். உடல் செல்களில் 46 குரோமோசோம்களும் பாலின செல்களில் 23 குரோமோசோம்களும் இருக்கும்.
ஆண் பாலின செல், விந்து மூலம் பெண்ணின் கருப்பையில் நுழைந்து பெண் பாலின முட்டையைச் சந்திக்கிறபோது விந்து செல்லின் கரு முட்டைக்குள் நுழைந்து, அங்குள்ள கருவில் ஒட்டிக்கொள்ளும். தன் கருவுக்குள் 46 குரோமோசோம்கள் வந்துவிட்டன என்பதை உணர்ந்ததும் பெண் முட்டை வியப்பூட்டும் மாற்றங்களை அடைகிறது. அதனுள் பல பொருட்கள் உருவாகின்றன. அதன் பருமன் அதிகரிக்கிறது. ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் அது இரண்டிரண்டாகப் பிரிந்து, எல்லா வகையிலும் ஒத்த நகல் செல்களாகப் பெருகுகிறது.
சினையுற்ற கரு சிசுவாகப் பரிணமிக்கிறபோது உருவாகிற உடல், மயிர், எலும்புகள் போன்ற எல்லா உறுப்புகளுமே அந்த ஆதியாரம்ப முட்டையின் சந்ததி களால்தான் கட்டமைக்கப்படுகின்றன. ஆனாலும், ஒவ்வொரு செல்லும் தான் இருக்கும் இடத்துக்குத் தக்கபடி குறிப்பிட்ட பணியை மட்டுமே செய்கிறது. இதயத் திசுவிலுள்ள செல்கள் சுருங்கியும் விரிந்தும் இதயத்தைத் துடிக்கச் செய்கின்றன. எலும்பில் உள்ள செல்கள் அசைவின்றிப் பொருந்தியிருக்கின்றன. தசைகளில் உள்ள செல்கள் மூளையின் ஆணைகளுக்கு இணங்கி அசைவுகளை உண்டாக்குகின்றன. மூளையில் உள்ள செல்கள் மிகப்பெரும் சிக்கலமைப்பு கொண்ட மின் வேதியியல் சுற்றுக்களடங்கிய கணினியாகச் செயலாற்றுகின்றன.
கல்லீரல், மண்ணீரல், கணையம் போன்ற உறுப்பு
களிலுள்ள செல்கள் திறன் மிக்க வேதித் தொழிலகங் களாகச் செயல்பட்டு, விசேஷ வகை நொதிகளையும் இன்சுலின் போன்ற வேதிகளையும் உற்பத்தி செய்கின்றன.
குரோமோசோம்கள் பல தலைமுறைகளை இணைக் கிற பாலங்கள். அவற்றிலுள்ள டி.என்.ஏ-க்கள் பல நூற்றாண்டுகள் வரை மாறாமல் இருக்கின்றன. உதாரணமாக, மனித குலத்தில் இதுவரை சுமார் 2,500 தலைமுறைகள் கழிந்திருக்கும். எனினும், சில மேலோட்டமான மாற்றங்களைத் தவிர, மனித உடலின் அமைப்பில் பெரிதாக ஒன்றும் மாறிவிடவில்லை. குறிப்பாக, மனித மூளையின் பரிமாணம் கூடவோ குறையவோ இல்லை.
டி.என்.ஏ. சங்கிலி
டி.என்.ஏ. என்பது ஒரு சங்கிலி. நியூக்ளியோடைடு என்னும் மூலக்கூறு அதன் கண்ணிகள். அது பாஸ்பேட், ரிபோஸ் சர்க்கரை, நைட்ரஜன் காரம் ஆகிய பகுதிகளைக் கொண்டது. டி.என்.ஏ. ஒரு ஏணியை முறுக்கியது போன்ற வடிவத்தில் இருக்கும் என்று கண்டுபிடித்து வாட்சன், கிரிக் என்ற இரண்டு விஞ்ஞானிகள் நோபல் பரிசைப் பெற்றுவிட்டார்கள். அந்த ஏணியின் கால்களாக பாஸ்பேட் சர்க்கரை இழைகளும் படிகளாக நைட்ரஜன் காரங்களும் அமைந் துள்ளன.
பாட்டி, தாத்தா, அப்பா, அம்மா எல்லோரும் வெள்ளை நிறமுள்ளவர்களாக இருக்கிறபோது, குழந்தை கருப்பாகப் பிறந்திருக்குமானால், அதற்கு டி.என்.ஏ-வில் ஏற்பட்ட திடீர் மாற்றம் ஏதாவது காரணமாயிருக்கலாம். மயில், புலி போன்றவற்றில் வெள்ளை உடல் கொண்டவை தோன்றவும் இதுவே காரணம். மரபணு மாற்றத்தால் ஏற்படுவதுதான் புற்றுநோய். செல்லில் உள்ள குரோமோசோம்களின் அமைப்பு அல்லது எண்ணிக்கை செல் இரட்டிப்பின்போது மாறிவிடுவது, மரபணு மூலக்கூறில் வேறுபாடுகள் ஏற்படுவது போன்றவை மரபணு மாற்றங்களுக்கு உதாரணங்கள். டி.என்.ஏ-வில் ஒரே ஒரு நியூக்ளியோடைடு இடம் மாறி அமர்ந்தாலும் வெளிப்படையான மாற்றங்கள் தென்படும். அணுக்கதிர் வீச்சு, வெப்பம், வேதிகள் போன்ற காரணிகள் டி.என்.ஏ-வின் கட்டமைப்பை மாற்றி மரபணு மாற்றங்களை ஏற்படுத்தும்.
மரபணுக் கலப்பு
மரபணுவில் மாற்றங்களைச் செயற்கையாகவும் உண்டாக்கி கலப்பின உயிரினங்களை உருவாக்க முடியும். மாடுகள் முதல் நெல், கோதுமை வரை யான உயிரினங்களில் மரபணுக் கலப்புசெய்து சிறப்பான பண்புகளைக் கொண்ட கலப்பினங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. கத்தரி, பருத்தி போன்ற செடிகளில் கிருமிகளின் மரபணுக்களைப் புகுத்தி அதிக விளைச்சல் தரும் ரகங்களை உருவாக்கியுள்ளனர். மரபணுத் திருத்தங்களின் மூலம் சில குறிப்பிட்ட நோய்களைக் குணப்படுத்த முடிந்திருக்கிறது.
மனிதர்களின் 46 குரோமோசோம்களையும் சோதித்து ஒவ்வொரு குரோமோசோமிலுள்ள குறைகளால் இன்னன்ன உடல் நலக்கோளாறுகள் வர முடியுமென்று பட்டியலிடப்பட்டுள்ளது. புதிதாகப் பிறந்த சிசுவின் குரோமோசோம்களைப் பரிசோதித்து எதிர்காலத்தில் அதற்கு எந்தவிதமான உடல்நலப் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது என்பதை ஊகித்துக்கொள்வதன் மூலம், ஏற்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து எதிர்காலப் பாதிப்புகளைத் தடுக்க இயலும்.
மரபணுக்களை இஷ்டப்படி மாற்றியமைத்து மன்மதனைப் போன்ற அழகுள்ள ஆண்களையும் ரதியைப் போன்ற பெண்களையும் கொண்ட ஒரு மனித சமூகத்தை உருவாக்கிவிடலாம் என்று அறிவியல் புனைகதை ஆசிரியர்கள் கற்பனைக் கதைகளை எழுதியிருக்கிறார்கள். ஆனால், மரபணுக்களைத் திருத்தியமைப்பதன் மூலமாகச் சமூகத்தில் பெரிதாக எதையும் மாற்றிவிட முடியாது. இதுவரை மனித உடல் செல்களில் மட்டுமே மரபணுத் திருத்தம் செய்ய முடிந்திருக்கிறது. அதன் மூலம் தனிநபர்களின் சில குறைகளை நிவர்த்தி செய்தாலும் பாலின செல்களிலுள்ள மரபணுக்களைச் சரிப்படுத்தாதவரை அவர்களுடைய சந்ததிகளுக்கு மரபுப்பிழை மூலமான கோளாறுகள் வந்துகொண்டேதான் இருக்கும். பாலின செல்களில் உள்ள கோளாறுகளைச் சரிப்படுத்தாமல், உடல் செல்களை மட்டும் சரி செய்தால் ஓர் ஆபத்து வர வாய்ப்பு உண்டு. உதாரணமாக, ஒருவரது வலிப்பு நோயை மரபணுத் திருத்தம் செய்து குணப்படுத்தி விட்டால், அவர் ஊக்கமும் வலுவும் பெற்றுத் திருமணம் செய்துகொண்டு அதே மரபணுக் கோளாறுள்ள பிள்ளைகளைப் பெற்றுத்தள்ளி விடலாம். அவர்களில் பலருக்கு வலிப்பு நோய் வரும்.
ஆணும் பெண்ணும் மணம் செய்துகொள்ளும் முன் தமது மரபணுக்களைப் பரிசோதிப்பதன் மூலம் மரபுக் கோளாறுள்ள சந்ததிகளைப் பெறுவதைத் தவிர்க்க முடியும்.
- கே.என். ராமசந்திரன், பேராசிரியர் (ஓய்வு).
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
5 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago