வாசகரும் படைப்பாளியே

By அரவிந்தன்

பிறர் எழுதியதை நாம் ஏன் வாசிக்க வேண்டும்? வாசிப்பு எதைத் தருகிறது?

படைப்பு எதைத் தருகிறது என்பதிலிருந்து மேற்கண்ட கேள்விகளுக்கான விடையை அணுகலாம். படைப்பு என்பது புதிதாக ஒன்றை உருவாக்குதல். போலி செய்தல் அல்ல. படைப்பூக்கம் கொண்ட ஒரு நபர், தன் அனுபவங்களையும் பார்வையையும் தனக்கே உரிய கோணத்தில் வெளிப்படுத்துவதைப் படைப்பு என்று சொல்லலாம்.

படைப்பு ஏற்படுத்தும் தாக்கங்கள் அளப்பரியவை. அரிச்சந்திரன் கதை காந்திக்குக் கொடுக்கும் பொருள் அவர் வாழ்க்கைப் பார்வையையே மாற்றியது. ஷேக்ஸ்பியரின் ஆண்டனி ஆற்றும் உரை ஒரு தருணத்தின் மாயத் தன்மையை உணரவைத்து ஒவ்வொருவரது பின்புலத்துக்கும் ஏற்பப் பலவாறாக உருக்கொள்கிறது. ‘நான்கு தம்பிகளில் யார் உயிர் பிழைக்க வேண்டும் என விரும்புகிறாய்?’ என்னும் யட்சனின் கேள்விக்குத் தருமன் சொன்ன பதில், சமநீதியின் நிரந்தரச் செய்தியாக மனித ஆன்மாவில் தங்கியிருக்கிறது. குருதட்சணையாகக் கட்டை விரலைக் கேட்ட துரோணரின் குரல் சமத்துவ மறுப்பின் சாட்சியாகத் தங்கியிருக்கிறது.

காஃப்காவின் ‘க’ கதாபாத்திரம் எதிர்கொள்ளும் நெருக்கடிகள், அவற்றின் பின்புலங்களைத் தாண்டி உலகம் முழுவதிலும் நுண்ணுணர்வு கொண்ட ஒவ்வொருவரும் எதிர்கொள்ளும் நெருக்கடிகளாகத் தோற்றம் கொள்கின்றன.

‘நீரின்றி இருப்பது நதியின் பிழை அல்ல’ என லட்சுமணனிடம் ராமன் சொல்வது உலகின் எல்லா நதிகளுக்கும் எல்லா விதிகளுக்கும் பொருந்துகிறது. அரசனைப் பார்த்து கண்ணகி கேட்கும் கேள்வி, கண்ணகியின் கேள்வி மட்டுமல்ல. அன்றைய கேள்வி மட்டும் அல்ல. “இதுக்குத்தானா?” என்று மோகமுள் நாவலில், யமுனா பாபுவைப் பார்த்துக் கேட்ட கேள்வியின் எதிரொலி அதை வாசிக்கும் ஒவ்வொருவரின் மனதிலும் வெவ்வேறு அதிர்வுகளை எழுப்பிக்கொண்டே இருக்கும். குற்றமும் தண்டனையும்குறித்து தாஸ்தாயெவ்ஸ்கியின் நாயகன் ரஸ்கோல்நிகோவுக்கு எழும் மன நெருக்கடி காலம், இடம் தாண்டி அனைவரது மனங்களிலும் எழும். இதுதான் படைப்பின் மாயம்.

இந்த மாயத்தை நிகழ்த்துவது படைப்பாளி மட்டுமல்ல. வாசகரும் சேர்ந்துதான் இதைச் சாத்தியப்படுத்துகிறார். ஒரு படைப்பு பல தரிசனங்களாக, பல பிரதிகளாகப் பல்வேறு படைப்புகளாக மாறும் மாயத்தை, அதிசயத்தை நிகழ்த்து பவர்கள் வாசகர்கள்.

படைப்பூக்கம் கொண்ட எழுத்து வாசிக்கப்படும்போது, அது தரும் பொருள் பல்கிப் பெருகுகிறது. கற்பனைக்கும் எட்டாத வகையில் விரிவுகொள்கிறது. ஒரு பிரதி பல பிரதிகளாக மாறுகின்றன. படைப்பில் ஒரு உரையாடல், ஒரு நிகழ்வு, ஒரு தருணம், சிந்தனைத் தெறிப்பு ஆகியவை ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பொருளைத் தரக்கூடியவையாக உள்ளன. ஒரே நபருக்கு வெவ்வேறு தருணங்களில் வெவ்வேறு பொருள் களையும் தருகின்றன. ஒரு கதை ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாகப் பொருள் தரும் என்றால், அந்தக் கதையை ‘ஒரு’ கதை என்று எப்படிச் சொல்ல முடியும்? எழுதப்பட்ட கதை ஒன்றுதான் என்றாலும், வாசிக்கப்படும் கதை ஒன்று அல்ல. ஏனென்றால், அந்தக் கதை உள்வாங்கப்படும் விதம் ஒரே விதமானதல்ல. ஒரு கதை பல கதைகளாகப் பெருகுகிறது. சொல்லப்போனால், ஒவ்வொரு வாசிப்புக்கும் ஒவ்வொரு கதை. ஆக, ஒரு கதை எண்ணற்ற கதைகளாக விரிந்துகொண்டே போகிறது. முடிவற்ற இந்த வளர்ச்சியைச் சாத்தியப்படுத்துவது வாசிப்பு. வாசிப்பு பெருகப் பெருகக் கதைகளும் பிரதிகளும் பெருகிக்கொண்டே இருக்கின்றன.

உயிர் கொடுப்பதே வாசிப்பு

இப்படிப் பார்க்கும்போது வாசிப்பின், வாசகரின் முக்கியத் துவத்தைப் புரிந்துகொள்ள முடியும். படைப்பு வாசிப்பின் எண்ணிக்கைக்கும் வாசிப்பவரின் ஆளுமைக்கும் ஏற்ப விரிந்துகொண்டே போவதால், படைப்புக்கு உயிர் கொடுப்பதே வாசிப்பு என்று சொல்லிவிடலாம்.

படைப்பு என்பது தட்டையான செயல்பாடு அல்ல என்பதைப் போலவே வாசிப்பும் தட்டையான செயல்பாடு அல்ல. படைப்பைப் போலவே அது பன்முகப் பரிமாணங்கள் கொண்டது. ஒரே வாசகர் ஒரு படைப்பில் உணரும் ஓர் அம்சத்தை, பெறும் தரிசனத்தை இன்னொரு வாசகர் உணரவோ பெறவோ வேண்டிய அவசியம் இல்லை. ஒரே விதமான தரிசனத்தை இருவர் பெறுவதும் சாத்தியம் இல்லை. பல வித வாசிப்புகள், பல விதமான தரிசனங்கள்!

இரும்புக் கையின் உயிர்

‘இரும்புக் கை மாயாவி’என்னும் காமிக்ஸ் கதாபாத்திரத்தைப் பலர் அறிந்திருப்பார்கள். அந்த இரும்புக் கை பல ஆற்றல்கள் கொண்டது. ஒரு விரல் தோட்டாவைச் சுடும் திறன் கொண்டது. இன்னொரு விரல் விஷ வாயுவைப் பீய்ச்சும் ஆற்றல் கொண்டது. மின்சாரத்தைப் பாய்ச்சுதல், மரண அடி கொடுத்தல், தன்னைத் தாங்கியவரின் உருவத்தை மறைய வைத்தல் என மேலும் பல விதமான திறமைகள் கொண்டது அந்த இரும்புக் கை. அதைக் கழற்றித் தனியாகவும் இயங்க வைக்க முடியும். ஆனால், அதன் சொந்தக்காரர் நினைவிழந்து, செயலிழந்துவிட்டால் அதன் ஆற்றல்கள் எதுவும் பயன்படாது. இரும்புக் கை வெறும் கையாக இருக்கும். அதற்கு உயிர் கொடுக்கும் சாவி அதன் உரிமையாளரிடம் இருக்கிறது. அவரது பிரக்ஞையில் இருக்கிறது.

படைப்பும் அப்படித்தான். வாசிப்பின் ஸ்பரிசமே அதன் படைப்பின் வல்லமையை விகசிக்கவைக்கிறது. படைப்பைப் படைப்பாக உயிர்பெறச் செய்யும் சாவி வாசகர்களிடம்தான் இருக்கிறது. அவ்வகையில் வாசகர்களும் படைப்பாளர்களே.

ஒவ்வொருவரும் தனக்குள்ள படைப்பாற்றலை இனம்கண்டு வெளிப்படுத்துவதன் மூலம் தனது வாழ்வையும் ஒட்டுமொத்த மனித இனத்தின் வாழ்வையும் மேம்படுத்த முடியும். எழுத் தாளர்கள் செறிவானவற்றைப் படைப்பதன் மூலமாகவும் வாசகர்கள் தங்களது ஆழமான வாசிப்பின் மூலமும் படைப்புச் செயல்பாட்டில் ஈடுபடுகிறார்கள். காத்திரமான வாசிப்பு பெருகப் பெருக ஒரு சூழலின் படைப்பாற்றலும் பெருகுவது சாத்தியமாகிறது.

- அரவிந்தன், தொடர்புக்கு: aravindan.di@thehindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

1 hour ago

கருத்துப் பேழை

1 hour ago

கருத்துப் பேழை

1 hour ago

கருத்துப் பேழை

2 hours ago

கருத்துப் பேழை

23 hours ago

கருத்துப் பேழை

23 hours ago

கருத்துப் பேழை

23 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

மேலும்