சென்னையில் - சென்னையைத் தலைநகரமாகக் கொண்ட தமிழ்நாட்டிலும்தான் - 2014 மக்களவைப் பொதுத் தேர்தல் வாக்குப்பதிவு சுமுகமாக நடந்துமுடிந்துவிட்டது. இனி, மே 16-ம் தேதிதான் தமிழ்நாட்டுத் தேர்தல் முடிவும் தெரியும். அதுவரை கடந்தகால நினைவுகளைச் சற்றே அசைபோடுவோம்.
மதராஸிகளின் முதல் ஓட்டு
1937-ல்தான் முதல் முறையாகப் பெருமளவில், மக்கள் பங்கேற்ற பொதுத் தேர்தல் நடந்தது. பிரிட்டிஷ் ஆட்சியில் இந்தியா காலனியாக இருந்த அந்தக் காலத்தில் எல்லா மாகாணங்களிலும் தேர்தல் நடத்தப்பட்டது. வயது வந்தோருக்கான வாக்குரிமை திட்டத்தின்கீழ் நாட்டின் மொத்த மக்கள்தொகையில் சுமார் 25% ஆக இருந்த 3.5 கோடிப் பேர் வாக்களிக்க உரிமை பெற்றிருந்தார்கள். அப்போதுதான் புதிதாக உருவாக்கப்பட்டிருந்த சென்னை மாகாண சட்டப் பேரவைக்குத் தேர்தல் நடந்தது.
ஆந்திரத்திலிருந்து கன்னியாகுமரி வரையில் அன்றைய சென்னை மாகாணம் விரிந்து பரவியிருந்தது. கர்நாடகத்தின் ஒரு பகுதியும், கேரளத்தின் ஒரு பகுதியும் அன்றைய சென்னை மாகாணத்தில் இணைந்திருந்தன. முதல்முறையாக காங்கிரஸ் கட்சி தேர்தலில் போட்டியிட்டதால், மக்களிடையே உற்சாகம் அதிகமாக இருந்தது.
முதுபெரும் சுதந்திரப் போராட்ட வீரரும், வழக்கறிஞரும், நாடகக் கதாசிரியரும், இசைப் புரவலருமான எஸ். சத்தியமூர்த்திதான் பிரச்சாரத்துக் குத் தலைமை வகித்தார். அவரைத் தீரர் என்றே அழைப்பார்கள். சத்தியமூர்த்தியின் தலைமையின் கீழ் அன்றைய காங்கிரஸ் பிரச்சாரம் மக்களை மிகவும் கவர்ந்தது.
1931 முதலே தன்னுடைய பொதுக்கூட்டங்களுக்கு நாடகக் கலைஞர்களை சத்தியமூர்த்தி பயன்படுத்திவந்தார். 1937-ல் அவர்களைப் பிரச்சாரக் களத்தில் அதிக எண்ணிக்கையில் இறக்கிவிட்டார். கே.பி. சுந்தராம்பாள், அவ்வை டி.கே. சண்முகம் அவர்களில் முக்கியமானவர்கள்.
அந்தக் காலத்தில் சின்னம் இல்லை!
அப்போதெல்லாம் தேர்தலில் சின்னங்களைப் பயன்படுத் தும் நடைமுறை வரவில்லை. அதற்குப் பதிலாக ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு வண்ணத்தில் வாக்குப்பெட்டி ஒதுக்கப்பட்டிருக்கும். வாக்காளர் வாக்குச் சீட்டை எந்தப் பெட்டியில் போடுகிறாரோ அதுவே அவர் தேர்வு செய்த கட்சியாகக் கருதப்படும். எழுதப் படிக்கத் தெரியாத மக்களால் வேட்பாளர்களின் பெயர்களையோ, சின்னங்களையோ புரிந்துகொள்ள முடியாது என்பதால் இந்த ஏற்பாடு.
காங்கிரஸ் கட்சிக்கு மஞ்சள் நிறப் பெட்டி ஒதுக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்திலும் கே.பி. சுந்தராம்பாளும் அவ்வை சண்முகமும் தங்களுடைய நாடகங்களில் பாடப்பட்ட பிரபலமான பாடல்களைப் பாடுவார்கள். கூட்டம் சேர்ந்ததும் காங்கிரஸ் கட்சியைப் பற்றிப் பேசுவார்கள். சுந்தராம்பாள், மஞ்சளின் மருத்துவ குணங்களையும் அதன் மங்களகரமான அம்சங்களையும் விரிவாக விளக்கிப் பேசுவார்.
‘அப்படிப்பட்ட மஞ்சளின் நிறம்தான் காங்கிரஸின் மஞ்சள்’ என்று முடிப்பார். வாக்காளர்கள் மறக்காமல், மஞ்சள் பெட்டிக்கே தங்களுடைய வாக்குகளைத் தர வேண்டும் என்பது அவர்களுடைய மனங்களில் பதியவைக்கப்படும். மஞ்சள் பெட்டிக்கே வாக்களிக்க வேண்டும் என்ற வேண்டுகோளுடன் தங்களுடைய பேச்சை முடித்துக்கொள்வார்கள்.
தஞ்சாவூர் காமுகண்ணம்மாள் என்ற பிரச்சாரகர் அதே மஞ்சள் நிறத்தை வேறொருவகையில் நெஞ்சில் பதியவைப்பார். மூக்குப்பொடியின் நிறமும் மஞ்சள்தான் என்பதை அவர் வேடிக்கையாகக் கையாள்வார். மூக்குப்பொடியின் மகிமையைக் குறித்து எல்லோரும் சிரிக்கும் வகையில் சிறிதுநேரம் பேசுவார். பிறகு, வாக்கு களை மறக்காமல் ‘மூக்குப்பொடி பெட்டி'யில் போடுமாறு கோருவார்.
கே.பி. சுந்தராம்பாள், முசிறி சுப்பிரமணிய ஐயர் பாடிய பாடல்களும் காங்கிரஸ் கட்சியின் வேண்டுகோள்களும் தொகுக்கப்பட்டு, கிராமபோன் ரெகார்டாக தமிழ்நாடெங்கும் அக் காலத்தில் வலம் வந்தன. காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கு இப்படிக் கொடிகட்டிப் பறந்ததால் மாற்றுக் கட்சியினர், தேர்தலில் போட்டியிடுவதற்குப் பதிலாகக் களத்திலிருந்தே விலகிவிடுவார்கள்.
காமராஜர் எனும் நாயகர்
தேர்தலுக்கு ஒரு மாதத்துக்கு முன்னதாகவே ஒரு வேட்பாளர் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டார். அவர்தான் கே. காமராஜ் நாடார்! சாத்தூர் – அருப்புக்கோட்டை ஊரகத் தொகுதியிலிருந்து காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட காமராஜ், போட்டியின்றி வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டார். அந்தக் காலத்தில் செய்தித்தாள்கள் ஒரு சார்பாக தேர்தல் பிரச்சாரம் செய்தாலும் கூட, தேர்தல் ஆணையத்தின் கண்டனத்துக்கு உள்ளாகாமல் தப்பின.
காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாகச் செய்திகளையும், பேட்டிகளையும், கட்டுரைகளையும் வெளியிட்டதை அந்த நாளில் யாரும் ஒரு சார்பான நடவடிக்கை என்று கருதாமல், தேச பக்தியின் வெளிப்பாடாகவே கருதி மகிழ்ந்தனர். ‘மஞ்சள் பெட்டியை நிரப்புங்கள்' என்று அன்றை ‘தி இந்து' ஆங்கிலப் பத்திரிகை துணிச்சலாக அறிவுறுத்தவே செய்தது.
‘காங்கிரஸுக்கு வாக்களியுங்கள் என்று வாக்காளர்களை வலியுறுத்தவே தேவையில்லை' என்றே ‘தி இந்து' வெளிப்படையாகத் தெரிவித்தது. வாக்குப்பதிவுக்கு முன்னதாக, பிப்ரவரி 14-ம் தேதி, என்.எஸ். வரதாச்சாரி என்ற காங்கிரஸ் வேட்பாளரை, திருவல்லிக்கேணியில் சில குண்டர்கள் அடித்துவிட்டார்கள். தலையில் கட்டுடன் என்.எஸ். வரதாச்சாரியார் காங்கிரஸ் ஊர்வலத்துக்குத் தலைமை தாங்கிச் சென்ற செய்தியை ‘தி இந்து' படத்துடன் வெளியிட்டது.
பிப்ரவரி 24-ம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட நாளில், என்.எஸ். வரதாச்சாரி பட்ட அடி வீண் போகவில்லை என்பதை உணர்த்தின. சென்னை மாகாணத்தில் அன்றிருந்த சட்டப் பேரவைத் தொகுதிகளில் 74%-ஐ காங்கிரஸ் கைப்பற்றியது. இந்தியாவின் எந்த மாகாணத்திலும் காங்கிரஸ் கட்சிக்கு அப்படியொரு மகத்தான வெற்றி கிட்டவேயில்லை!
தமிழில்: சாரி © தி இந்து.
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
17 hours ago
கருத்துப் பேழை
17 hours ago
கருத்துப் பேழை
17 hours ago
கருத்துப் பேழை
21 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago