செய்வீர்களா சகாயம்?

By கே.சந்துரு

கிரானைட் கொள்ளையர்களுக்கு எதிரான போரில் சகாயம் செல்ல வேண்டிய திசை எது?

மலையை அப்புறப்படுத்த முயன்ற முட்டாள் கிழவனின் கதையை சீனத் தலைவர் மா சே துங் சொல்லி, அந்தக் கதை சீனப் பள்ளிகளில் பாடமாகக்கூட வைக்கப்பட்டுள்ளது. தன்னுடைய சொந்த ஊரிலிருந்து அடுத்த ஊருக்கு மலையைச் சுற்றிக்கொண்டு வெகுதூரம் செல்ல நேர்ந்ததால், ஒரு கிழவன் தினசரி அந்த மலையைத் தன்னுடைய சிறிய உளியைக் கொண்டு வெட்ட முயன்றான். அதைப் பார்த்தவர்களெல்லாம் அவனைக் கேலி செய்தார்கள். ஆனாலும், அவனது விடாமுயற்சியைப் பார்த்த கடவுள் ஒரு நாள் அந்த மலையை அங்கிருந்து அகற்றிவிட்டதாகச் சொல்லப்பட்ட பழைய சீனக் கதையைச் சிறிது மாற்றி, மா சே துங் அங்கே கடவுளுக்குப் பதிலாக மக்கள் சக்தியால் வென்றதாகப் புதிய கதையை எழுதியிருந்தார்.

மதுரையில் நடைபெற்ற கிரானைட் கொள்ளையை விசாரிக்க நியமிக்கப்பட்ட சகாயம், தினசரி மெய்வருத்தம் பாராது களப்பணி ஆற்றிவருவதையும், அங்குள்ள மக்கள் தினசரி அவரிடம் கிரானைட் கொள்ளையர்களின் அட்டகாசங்களைப் பற்றி முறையிட்டுவருவதையும் ஊடகங்கள் வெளியிட்டுவருகின்றன. பல இடங்களில் மலைகள் காணாமல் போனதுடன், ரொட்டித் துண்டை வெட்டி வெண்ணெய் வைத்து சாப்பிட எடுத்துச்சென்றதுபோல் தோற்றமளித்த சக்கரை பீர்மலையைப் பார்த்த எல்லோருக்கும் அதிர்ச்சியே மிஞ்சியது. அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் கூட்டணி போட்டுக்கொண்டு கடந்த 40 வருடங்களாக கிரானைட் கற்களைக் கொள்ளையடித்ததால் அங்குள்ள குன்றுகள் காணாமல் போயின. கண்மாய்கள் இடந்தெரியாமல் அழிக்கப்பட்டன. தொல்லியல் சான்றுகள் போன இடம் தெரியவில்லை. இவற்றையெல்லாம் சகாயம் உயர் நீதிமன்றத்துக்கு அளிக்கப்போகும் அறிக்கையில் குறிப்பிடுவார் என நம்பலாம்.

கூடவே, ஒரு விஷயத்தையும் சகாயம் தெரிந்துகொள்ள வேண்டும். இக்காரியங்களைக் கச்சிதமாகச் செய்து முடிப்பதற்கு கிரானைட் கொள்ளையர்கள் எத்தனை முறை நீதிமன்றத்தை அணுகி உத்தரவு பெற்றிருப்பார்கள்? நீதிமன்றங்கள் எத்தகைய உத்தரவுகளை வழங்கியிருந்தன என்பதுதான் அது. ஏனென்றால், கிரானைட் சம்பந்தமான பல வழக்குகள் உயர் நீதிமன்றத்தில் (சென்னை மற்றும் மதுரை கிளைகளில்) தொடர்ந்து போடப்பட்டன. கிரானைட் கொள்ளையர்களுக்குச் சிறிய எதிர்ப்புகள் அரசு அதிகாரிகளிடமிருந்து வரும்போதெல்லாம், அவர்கள் உடனடியாக நீதிமன்றத்தை அணுகி, இடைக்கால மற்றும் இறுதி உத்தரவுகளைப் பெற்றுத் தங்கள் காரியங் களைச் சட்டபூர்வமாகவே நடத்திக்கொண்டதைப் பதிவு செய்யவில்லையென்றால், சகாயத்தின் அறிக்கை ஒருதலைப்பட்சமாகவே இருக்கும். ஒருசில சந்தர்ப்பங்க ளில் உயர் நீதிமன்றத் தலையீட்டால் மாபெரும் மோசடி களும் பாதிப்புகளும் தவிர்க்கப்பட்டன. எனினும், இவையெல்லாம் கடலில் கரைத்த பெருங்காயங்களே.

திருவாதவூரில் திருவிளையாடல்

மாணிக்கவாசகர் பிறந்த திருவாதவூர் மேலூர் தாலுக்காவில் உள்ளது. பழமையான சிவன் கோயில், மாணிக்கவாசகர் பிறந்த ஊர் என்ற சிறப்புகள் தவிர, அவ்வூரில் பல வண்ண கிரானைட் கற்கள் புதைந்தி ருக்கின்றன. அங்கு தமிழ்-பிராமி எழுத்துகள் கொண்ட கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன. திருவாதவூர் கல்வெட்டுகள் மிகவும் தொன்மையானவை என்றும், அவை சங்க காலத்துக்கும் முற்பட்டவை என்றும் கல்வெட்டியல் அறிஞர் ஐராவதம் மகாதேவன் குறிப்பிடுகிறார்.

பெருங்கற்காலப் புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்ட வைகை பள்ளத்தாக்கில், பழைய வரலாற்றுக் கால வாழ்க்கை முறைகள்பற்றித் தெரிந்துகொள்ள அரிய வாய்ப் பிருக்கிறது. ஆனால், தமிழ்-பிராமி கல்வெட்டுகள் பத்து ஆண்டுகளில் அழிந்துவிடக் கூடும் என்று ஐராவதம் மகா தேவன் அபாயச் சங்கு ஊதியுள்ளார். கலை வரலாற்று நிபு ணர் கே.டி. காந்திராஜனும் திருவாதவூரில் உள்ள தமிழ் - பிராமி கல்வெட்டுகளைப் பற்றி சிலாகித்து எழுதியுள்ளார்.

திருவாதவூரிலுள்ள தமிழ் - பிராமி கல்வெட்டுகளுக்கு வைக்கப்பட்டது வேட்டு. மதுரை மாவட்ட ஆட்சியர் தடைபோட்டும் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டார்கள். தமிழ் - பிராமி கல்வெட்டுகளுக்குக் குந்தகமின்றி வெடி வைத்துக் கொள்வதாக நீதிமன்றத்தில் உறுதி அளித்தார்கள். உயர் நீதிமன்றமும் அவர்களின் பேச்சை நம்பி கிரானைட் கற்களை வெட்டி எடுக்க உத்தரவிட்டது. அதை எதிர்த்து மாவட்ட ஆட்சியர் மேல்முறையீடு செய்யவில்லை. எப்படிச் செய்வார்? சம்பந்தப்பட்ட கிரானைட் கொள்ளையர்களைப் பார்த்தாலே அஞ்சும் நெஞ்சத்தை உடையவராயிற்றே?

தொல்லியல் துறை மேற்பார்வையாளர் சத்தியபாமா பத்ரிநாத், மாவட்ட நிர்வாகத்தின் மீது தனது அதிருப்தி யைத் தெரிவித்தார். திருவாதவூர் தமிழ்-பிராமி கல்வெட்டு களுக்கு ஏற்படும் ஆபத்தைப் பற்றி தொல்லியல் துறை தலைமை அதிகாரியிடம் ‘ஃபிரண்ட்லைன்’ இதழ் ‘இந்தக் கலைப் பொக்கிஷங்களைப் பாதுகாக்க தொல்லி யல் துறையால் முடியாதா?’ என்று கேட்ட கேள்விக்கு மனம் வெதும்பி, தொல்லியல் துறையிடம் அத்தகைய மனித ஆற்றல் இல்லையென்றும், ‘சிவில் சமுதாயமும்’ இப்பொக்கிஷங்களைப் பாதுகாப்பதில் தனது பொறுப்பையாற்ற வேண்டுமென்றும் குறிப்பிட்டார். அதுமட்டுமல்லாமல், நீதிமன்றங்களிடமிருந்தும் போதிய பாதுகாப்பு கிடைக்கவில்லையென்றும் தனது ஆதங்கத்தை அவர் வெளிப்படுத்தினார்.

பொதுநல வழக்குக்கு அபராதம்!

கிரானைட் கற்களைச் சட்டவிரோதமாக வெட்டி எடுத்துவிட்டு, அதற்குரிய கட்டணங்களையும், விற்பனை வரியையும் செலுத்தாமல் பகல்கொள்ளையடிக்கும் கிரானைட் நிறுவனங்கள் மீது முழு விசாரணை கோரி பொதுநல வழக்கொன்று முருகேசன் என்பவரால் போடப் பட்டது. அவ்வழக்கில் கிரானைட் கம்பெனிகளுக்கு ஆதரவாகவே மாவட்ட நிர்வாகம் செயல்பட்டதை உயர் நீதிமன்றம் கண்டித்தது. உயர் நீதிமன்ற விசாரணையில் விற்பனை வரித் துறைக்கு மாவட்ட ஆட்சியர் அனுப்பிய அறிவிக்கைளைக்கூட கிரானைட் கம்பெனிகளின் ஊழியர்கள் கையெழுத்திட்டுப் பெற்றுக்கொண்டது அம்பல மானது. கிரானைட் கம்பெனிகள் முறையாக விற்பனை வரிகளையும், சீனியரேஜ் கட்டணத்தையும் செலுத்தி விட்டதாக மாவட்ட ஆட்சியர் கூறியபோதும், பின்னர் தூத்துக்குடி துறைமுகப் பொறுப்புக் கழகத்திலிருந்து வரவழைக்கப்பட்ட ஆவணங்களிலிருந்து ஒப்பீடு செய்தபோது, மிகப் பெரும் கிரானைட் கொள்ளை நடைபெற்றதை உயர் நீதிமன்றம் கண்டுபிடித்து, முழு விசாரணைக்கு உத்தரவிட்டது. உத்தரவிட்ட சில வாரங்களிலேயே அவ்வுத்தரவின் மீது மேல்முறையீடு செய்யப்பட்டு, விசாரணைக்குத் தடையுத்தரவு பெறப்பட்டது. அந்த மேல்முறையீடு இன்னும் நிலுவையில் உள்ளது வெட்கக்கேடான விஷயம். இன்றைய முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், அன்றைய முதல்வர் கருணாநிதி அரசின் நடவடிக்கைகளைத் தோலுரித்துக் காட்டியதாகக் குறிப்பிட்டு அறிக்கை விட அந்த உத்தரவைப் பயன்படுத்திக் கொண்டார். இரு கழகங்கள் தலைமையேற்ற அரசுகளும் அந்த மேல்முறையீட்டை பைசல் செய்ய இன்று வரை நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை.

மதுரையில் அரசு சார்பில் கிரானைட் வழக்குகளை நடத்திவந்த தலைமை வழக்கறிஞர் திடீரென்று பதவி நீக்கம் செய்யப்பட்டதிலும் மர்மம் உண்டு. முதல்கட்டமாக மதுரை மாவட்டத்தில் கிரானைட் கொள்ளைபற்றி விசாரிக்க உத்தரவிட்ட உயர் நீதிமன்றம், மற்ற பகுதிகளிலும் விசாரணைபற்றிப் பின்னர் யோசிப்போம் என்று கூறிய அதே வேளையில், மதுரையைத் தவிர்த்து, மீதிப் பகுதிகளில் கிரானைட் ஏற்றுமதி வியாபாரம் செய்யத் தடை ஏதுமில்லை என்று வேறொரு உத்தரவை உயர் நீதிமன்றம் பிறப்பித்தது ஆச்சரியத்தை அளிக்கிறது.

தடை விலக்கிய நீதிமன்றம்

உரிமம் இல்லாத நிலங்களில் கிரானைட் கற்களை வெட்டியெடுப்பதும், உரிமம் முடிந்த பிறகும் கிரானைட் கற்களை எடுத்துச் செல்வதும் மதுரையில் தொடர்ந்து நடைபெற்றது. எங்கெல்லாம் அதற்குத் தடை எழுப்பப்பட்டதோ, அங்கெல்லாம் உடனடியாக நீதிமன்ற உத்தரவுகள் பெறப்பட்டு, ‘சட்டபூர்வமாகவே’ தங்கள் வேலைகளை கிரானைட் நிறுவனங்கள் சாதித்துக்கொண்டன. மேலூரில் கிரானைட் கழிவுகளைப் பொதுவெளியில் கொட்டி, சுற்றுச்சூழலுக்குக் கேடு விளைவித்து, சாலைகளை ஆக்கிரமித்ததை எதிர்த்துப் போடப்பட்ட பொதுநல வழக்கைத் தள்ளுபடி செய்ததோடு, வழக்கு தொடுத்தவருக்கு அபராதத்தையும் உயர் நீதிமன்றம் விதித்தது துரதிர்ஷ்டமே.

சகாயம் தன்னுடைய விசாரணையில், இப்படி கிரானைட் கற்களைச் சட்டவிரோதமாக எடுத்துச் செல்ல கிரானைட் நிறுவனங்கள் பெற்ற நூற்றுக் கணக்கான நீதிமன்ற உத்தரவுகள் பற்றியும் பரிசீலித்துத் தனது அறிக்கையில் குறிப்பிட்டாலொழிய, மக்களுக்கும் நீதிமன்றத்துக்கும் இந்தப் பிரச்சினை பற்றிய முழுப் புரிதலும் கிட்டாது.

- கே. சந்துரு, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி (ஓய்வு).

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

16 hours ago

கருத்துப் பேழை

16 hours ago

கருத்துப் பேழை

15 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்