அந்தச் சாலையில் போய்க்கொண்டிருந்த போது எங்கிருந்தோ அந்தக் குரல் வந்தது.
“சார் உங்களைத்தான், கொஞ்சம் நில்லுங்க, போலீஸ் ஸ்டேஷன் வரை போகணும். கொஞ்சம் கூட வாங்க” என்று கெஞ்சலாகவும் கொஞ்சலாகவும் அந்த நண்பர் வேண்டினார். ‘துணையோடு அன்றேல் போலீஸ் ஸ்டேஷன் போகேல்’ என்பது நம்மைப் போன்ற நடுத்தர வர்க்கத்தினருக்குப் பெரியவர்கள் கூறியுள்ள அறிவுரை. அதே சமயம், போலீஸ் ஸ்டேஷன் என்றதும் எனக்கும் உள்ளூர உதறல்தான். “நான் அவசரமா ஆபீஸ் போறேன் சார், வேற யாரையாவது கூப்பிட்டுக்கங்களேன்” என்று கெஞ்சிப் பார்த்தேன்.
“போலீஸ் ஸ்டேஷன்ல உங்களுக்கு நல்ல செல் வாக்காமே?” என்று நான் போயே இராத ஓரிடத்தைப் பற்றிச் சொன்னார். ஊருக்குள்தான் எனக்கு எத்தனை எதிரிகள்? என்னை மாட்ட வைக்க வேண்டும் என்றே எப்படியெல்லாம் திட்டமிட்டு வதந்தியைப் பரப்பியிருக்கிறார்கள். நான் என்ன மணல் மாஃபியாவா, பார் நடத்தும் தாதாவா, திருட்டு வீடியோ விற்பனையிலாவது அனுபவம் உண்டா? எனக்கென்ன செல்வாக்கு இருக்கிறது என்ற குழப்பத்துடன், ஏதும் பேசாமல் அவரையே பார்த்து நின்றேன்.
பம்பு போச்சே!
அவர் உடனே தன்னுடைய காரை வெளியே எடுத்தார். “இங்க இருக்க ஸ்டேஷனுக்கு கார் எதுக்கு சார்?” என்று தடுத்தேன். (போலீஸ் நிலையத்தில் ‘எதிர்பார்ப்பு’ அதிகமாகிவிடுமே என்று அச்சப்பட்டேன்). “கார்ல போனா தான் கெத்துனு நாராயணன் சொன்னார்” என்றார். “நாராயணனையே கூட்டிட்டுப் போயிருக்கலாமே…” என்று இழுத்தேன்.
“அவர் கமிஷனர் ஆபீஸுக்குப் போறாராம்” என்று பதில் அளித்தார். கமிஷனர் ஆபீஸுக்கு நாராயணன், லோக்கல் ஸ்டேஷனுக்கு நானா என்று தமிழனுக்கே உரிய சுய மரியாதை என்னுள் கோபமாகப் பொங்கியது.
“என்ன பிரச்சினை?” என்று கேட்டேன்.
“தண்ணி இறைக்கற பம்பு திருடுபோச்சு” என்றார்.
“எங்கே வச்சிருந்தீங்க”ன்னு போலீஸ் மாதிரியே கேட்டேன்.
“கிணற்றடியிலே, சின்னதா ரூம் கட்டி அதுல வெச்சிருந்தேன் சார்” என்றார். மீதிக் கேள்விகளை நிஜ போலீஸே கேட்கட்டும் என்று அமைதியானேன்.
3 வகை வந்தவர்கள்
போலீஸ் நிலைய வீதியில் நுழைய முடியவில்லை. போலீஸ்காரர்களின் ‘டூ வீலர்’, அவர்களால் அழைக்கப்பட்டு வந்தவர்கள், இழுத்துவரப்பட்டவர்கள், தாங்களாகவே கப்பம் கட்ட வந்தவர்கள், இந்த ‘3 வகை வந்தவர்களுக்கு’ துணையாக வந்தவர்கள் என்று எல்லோருடைய ‘டூ வீலர்’களும் சாலையை நிறைத்திருந்தன. போலீஸ் நிலைய காம்பவுண்டுக்குள்ளேயே, ஏதேதோ வழக்குகளில் ‘பிடிபட்டு’, விடுதலையாகாமல் காவல் கைதிகளாக இருந்த ‘டூ வீலர்கள்’ வேறு. சீதைக்குக் காவலாக இருந்த அரக்கிகளைப் போல மூக்கு இல்லாமல், காது இல்லாமல், வயிறு இல்லாமல், கால் இல்லாமல் - கிட்டத்தட்ட ‘எல்லாமே உருவப்பட்ட’ நிலையில் துருப்பிடித்தும் புழுதி படிந்தும் காட்டுக்கொடி படர இடம் கொடுத்தும் வானப்பிரஸ்தத்துக்குத் தயாராக இருந்தன.
உள்ளே போனதும் முதலில் கண்ணில் பட்ட போலீஸ் காரருக்கு வணக்கம் சொன்னோம். போலீஸ் அதிகாரிகளைத் தவிர, இதர ‘மானிடப் பதர்களுக்கு’ மரியாதை காட்டாதே என்ற போலீஸ் ‘மானுவ’லின் முதல் விதிப்படி, அவர் சலனம் ஏதும் இல்லாமல் எங்களைக் கடந்தார்.
“என்ன விஷயம்?” என்று ஒரு இளைஞர் கேட்டார். உடனே என் நண்பர், நீண்ட நாள் பழகியவர்போலப் பாசத்துடன் அவரை அணுகி “வீட்டு பம்புசெட்டு திருட்டு போயிடுச் சுப்பா” என்றார் கலங்கிய குரலில்.
“இப்ப ரைட்டர் வருவாரு, புகாரை அவர்கிட்ட கொடுங்க” என்றார் அந்த இளைஞர். லிங்கி (லுங்கிதான் சார்) கட்டி யிருந்த அவரிடம் பணிவு, கனிவு எல்லாமே இருப்பதாக நினைத்தேன்.
“இவரு போலீஸ் நண்பர்கள் குழு போல” என்றார் நண்பர். (அவர் ஒரு ‘விசாரணைக் கைதி’ என்று ‘சூழ்நிலைக் கைதி’ ஒருவர் பின்னர் என்னிடம் தெரிவித்தார்).
ஜெயமோகனா, எஸ். ராமகிருஷ்ணனா?
‘ரைட்டர்’ வருவாருன்னு சொன்னாரே யாரு வருவா, ஜெயமோகனா, எஸ். ராமகிருஷ்ணனா, மனுஷ்யபுத்திரனா என்று நான் ‘ரைட்டர்’களை நினைவுகூர்ந்தேன். பம்புசெட் திருட்டு போனதை ‘ரைட்டர்கள்’ கேட்டு என்ன செய்யப்போகிறார்கள்? ஏதாவது புது கதைக்கு ‘நாட்’ தேடறாங்களோ என்றும் சந்தேகம் வந்தது. அப்போது 2 போலீஸ்காரர்கள் உள்ளே வந்தனர். ஒருவர் டீ-ஷர்ட்டும் கென்னடி கிராப்புமாக இருந்தார். “ரைட்டர் வந்துட்டாரு” என்று அந்த இளைஞன் உள்ளேயிருந்து மீண்டும் தலையை நீட்டி எங்களிடம் சொன்னார். அப்போதுதான் பள்ளிக்கூடம், போலீஸ் நிலையம் போன்றவற்றிலும் ‘ரைட்டர்கள்’ உண்டு என்பது நினைவுக்கு வந்தது. இருந்தாலும் இவர்களில் யார் ‘ரைட்டர்’ என்று மண்டையை உடைத்து யோசித்துக் கொண்டிருந்தபோது, “ஒரு குயர் பேப்பர் வாங்கிட்டு வாங்க” என்று அந்த ‘ரைட்டர்’ தன்னுடைய அவதாரத்தை வெளிப்படுத்தினார்.
பில் எங்கேய்யா?
பேப்பர் வாங்கிவந்து நண்பர் விஷயத்தைச் சொன்னதும், ‘ரைட்டர்’ முகத்தில் ஏமாற்றமும் கோபமும் ஒருசேரத் தோன்றின. “ஏங்க, இதெல்லாம் ஒரு கம்ப்ளெயிண்டா, எப்ப வாங்கினீங்க, என்ன மேக், என்னா ஹார்ஸ் பவர்னெல்லாம் எழுதணும், பழைய பில் இருக்கா, உங்களதுதான் அந்த பம்புசெட்டுன்றதுக்கு என்ன ஆதாரம்?” என்று கேள்விகளாய்க் கேட்டு நண்பரைத் திணற அடித்துவிட்டார். எனக்கு உள்ளூர மகிழ்ச்சி. ‘லிங்கா’ படம் (ஓசியில்) பார்க்கப்போகிறவனை இழுத்து வந்துவிட்டாரே என்று எனக்குள் கோபம்.
எந்த வீட்டுல சாமான் வாங்கற பில்லெல்லாம் சேர்த்து, கேக்கறபோது காட்டற மாதிரி பத்திரப்படுத்தற வழக்கம் இருக்கு? தமிழர்களுடைய வரலாற்றிலேயே இந்த மாதிரி ஒழுங்கீனங்கள் கிடையாதே! நண்பரால் உடனே தேடித்தர முடியாது என்பதால் லிங்காவுக்கு ‘மீண்டும் தடை நீங்கிய’ மகிழ்ச்சி எனக்கு.
நள்ளிரவில், ‘பேயோட பைக்குல லிஃப்ட் கேட்டு ஏறியவர்’ மாதிரி நண்பர் முகம் வெளிறி வெளியே வந்தார். “சரி சார், பில் கெடைச்சதும் நாராயணனோட நாளைக்கு வர்றேன்” என்றார்.
அட நாராயணா!
நாராயணன் யார், அவருக்கு எப்படி போலீஸ் நிலையத்தில் செல்வாக்கு என்று உங்களில் சிலருக்குத் தோன்றலாம். நாராயணன்தான் போலீஸ் நிலையத்துக்குப் பக்கத்திலேயே டீக்கடை வைத்திருக்கிறார். எஸ்.ஐ. எப்போ வருவாரு, அவரை ‘எப்படி’ பாக்கணும், பாஸ்போர்ட் வெரிஃபிகேஷனுக்கு ‘என்ன’ செய்யணும் என்றெல்லாம் ஆலோசனை சொல்லுவார்.
அமெரிக்கா மாதிரி இப்பல்லாம் நம் நாட்டிலும் எதுவும் இலவசம் கிடையாதே! அவரு கடையிலே போடற பஜ்ஜி, போண்டா இதில் ஏதாவது ஒரு வகையறாவை ஆளுக்கு 2 வாங்கிச் சாப்பிட வேண்டும். டீ அல்லது காபியை நாமே வாங்குவோம், அப்பதான் அதையெல்லாம் உள்ளே தள்ள முடியும். காலை நேரத்தில் மெதுவடை, கீரை வடை. மதிய நேரத்தில் சமோசா. பிற்பகல் 3 மணியிலிருந்து பஜ்ஜி, போண்டா. இந்தக் கடையில் ஒரு முக்கியமான அம்சம் அவரும் நல்லா ‘பழகுவாரு’, கடை எண்ணெயும் ‘பழகிய’ எண்ணெய். ஆமாம், பக்கத்து ஹோட்டலிலிருந்து ‘மறு பயன்பாட்டுக்காக’ வாங்கிவந்துவிடுவார்.
உள்ளூர் காவல் நிலைய மகாத்மியங்களை எழுதுவதென்றால் எவ்வளவோ எழுதலாம். எப்போதாவது ஜன்னல் வழியாக மட்டுமே ஓரளவுக்குப் பார்த்தவன் என்பதால் இவ்வளவுதான் முடிந்தது. சுபம்!
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
18 hours ago
கருத்துப் பேழை
18 hours ago
கருத்துப் பேழை
18 hours ago
கருத்துப் பேழை
19 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago