“தீர்வே இல்லையா?”- மதுவின் பிடியிலிருந்து விடுபடுவதற்காக ஏராளமானோர் எழுப்பும் கேள்வி இது. தீர்வு இல்லாத பிரச்சினை என்று எதுவுமே கிடையாது. மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட குடிநோயாளியும் மதுவிலிருந்து முழுமையாக விடுபட முடியும் என்பதை அறிவியல்பூர்வமாக நிரூபித்துவருகிறது ‘ஆல்கஹாலிக் அனானிமஸ்’ அமைப்பு. அதேசமயம், அறிவியலுக்கு அப்பாற்பட்டும் ஆச்சரியங்கள் நிறைந்திருக் கின்றன. உணர்வுபூர்வமாக, குறிப்பாக குழந்தைகளால் நிச்சயம் மாற்றத்தை ஏற்படுத்த முடியும். கவலையின் குறியீடுகள் நாம் எனில், மகிழ்ச்சியின் குறியீடு குழந்தைகள். அழிப்பின் குறியீடு நாம் எனில், உயிர்ப்பின் குறியீடு குழந்தைகள். நாம் கோபத்தையும் வன்மத்தையும் பொத்திக் காக்கிறோம் எனில், குழந்தைகள் அன்பை மட்டுமே அடைகாக்கிறார்கள். அவர்களால் மட்டுமே எதிர்மறை எண்ணங்களை எளிதில் கடந்து ஏகாந்த நிலையை அடைய முடிகிறது. நம்மிடமிருந்து அவர்கள் கற்பதைவிட, அவர்களிடமிருந்து நாம் கற்க வேண்டியதே அதிகம், அவசியம். இந்தக் கட்டுரைகளைப் படியுங்கள், உணர்வீர்கள்!
அக்கினிக் குஞ்சுகளின் கதை!
தருமபுரிக்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை என்பதுபோல ஒடுங்கியிருக்கிறது அந்த மலைக் கிராமம். பேபினமருதஅள்ளி. திக்குக்கு ஒன்றாய்த் திட்டுகள் போன்று சிறு குன்றுகள். குன்றுக்கு ஒன்றாய்க் குடிசைகள். அதிகம் போனால் அறுபது தேறும். பக்கத்திலேயே படுத்திருக்கிறது நாகாவதி அணை. பெயருக்குத்தான் அணை. ஆத்திர அவசரத்துக்கு ஒரு சொட்டு நீர் கிடைக்காது அணையிலிருந்து. அது ஒரு துயர வரலாறு. அணை இப்போதிருக்கும் பள்ளத்தாக்கில் வசித்தவர்கள்தான் இந்த மக்கள். அணைக்காக அரசுக்கு நிலத்தைக் கொடுத்தவர்கள், காசை வாங்கிக்கொண்டு உயரமான பகுதிக்கு இடம்பெயர்ந்துவிட்டார்கள். அதனால், அணையே உடைந்தாலும் இவர்களுக்குத் தண்ணீர் கிடைக்காது!
தலைமுறையை அழித்த மது
கொஞ்சம் பின்னோக்கிச் செல்வோம். சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு பேபினமருதஅள்ளி என்றால், சாராயம் என்று அர்த்தம். அது அவர்களின் குலத்தொழில். காய்ச்சுவது, விற்பது, குடிப்பது மட்டுமே தெரியும். பக்கத்து மாநிலங்களில் இருந்தெல்லாம் வந்து வாங்கிப்போவார்கள். ஒருகட்டத்தில் சாராயம் ஒழிக்கப்பட்டது. மக்கள் விவசாயத்துக்கு மாறினார்கள். அப்போது வணிகமயமான மது இவர்களை ஆட்கொண்டது. மது ஒருபக்கம் மக்களை ஆக்கிரமித்தது என்றால், இன்னொரு பக்கம் அணைக்காக வளமான ஊரையும் இழந்தார்கள். இப்படியாக மது ஒரு கிராமத்தையே, ஒரு தலைமுறையையே அழித்துவிட்டது. மிகைப்படுத்திச் சொல்லவில்லை. ஊருக்குள் 45 வயதைத் தாண்டிய ஆண்கள் நான்கு பேர்கூட இல்லை. ஒரு தலைமுறை அழிந்த பிறகே, கடந்த இரண்டு ஆண்டுகளாகப் புதிய விடியல் பிறந்திருக்கிறது - குழந்தைகளின் வடிவில்!
மாற்றத்தின் ஊற்றுக்கண் கல்வித் துறை. அப்போது நல்லம்பள்ளி ஒன்றியத்தின் உதவி தொடக்கக் கல்வி அலுவலராக இருந்தவர் தங்கவேல். மதுப் பழக்கத்துக்கு எதிராகப் பிரச்சாரம் செய்பவர். இந்த கிராமத்தைக் கண்டு அதிர்ச்சியுற்றவர், அரசிடம் பேசி முதலில் இங்கே ஒரு தொடக்கப் பள்ளியைக் கொண்டுவந்தார். அங்கிருந்து தொடங்கியது மாற்றம்.
துளிர்கள் செய்த புரட்சி
முதல் தலைமுறையாகப் பள்ளிக்கு வந்த குழந்தைகள், தாங்கள் கற்றதுடன், பெற்றோருக்கும் மதுவின் தீமைகளைக் கற்றுக்கொடுத்தார்கள். ஒரு தலைமுறை அழிந்த சோகத்தை - அழிவுக்கான அரக்கன் எது என்பதைத் தகப்பன்களுக்கு உணர்த்தினார்கள். “இன்றைக்கு நீங்கள் மது அருந்தினால் வீட்டுக்கு வர மாட்டோம்” என்று பள்ளியின் வாசலில் இரவுகளைக் கழித்தார்கள். பல நாட்கள் உண்ணாவிரதம் இருந்தார்கள். தினமும் சிலேட்டில், துண்டுச் சீட்டில், வீட்டுப்பாட நோட்டில் அப்பன்களுக்கு வகுப்பெடுத்தார்கள். பல சமயங்கள் குடிநோயாளித் தகப்பன்களால் தாக்குதலுக்கும் ஆளானார்கள். ஆனாலும், அசரவில்லை பிள்ளைகள். குழந்தைகள் நடத்திய சத்தியாகிரகப் போராட்டம் அது. குழந்தைகளின் இந்தப் போராட்டம், ஊரின் பதின்ம வயது இளைஞர்களை முதலில் பாதித்தது. அவர்கள் மதுவைக் கைவிட்டார்கள். கூடவே, குடித்துவிட்டு ஊருக்குள் வரக் கூடாது என்று கட்டுப்பாடு போட்டார்கள். ஓரிரு மாதங்களிலேயே மாற்றங்கள் தொடங்கின. இன்று சுத்தமாக மதுவே இல்லாத கிராமம் அது.
பள்ளியின் தலைமை ஆசிரியர் சிவப்பிரகாசத்திடம் பேசினேன். “இரு ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்த மக்கள் மதுவின் பிடியில் இருந்தாலும், தாங்கள் படிக்கவில்லையே என்கிற ஏக்கம் அவர்களுக்கு அதிகமாக இருந்தது. பள்ளி தொடங்க அரசு அனுமதி அளித்துவிட்டபோதும் இந்த மலைக் கிராமத்தில் பள்ளியைக் கட்டிக்கொடுக்க ஒப்பந்ததாரர் யாரும் முன்வரவில்லை. லாபம் கிடைக்காது என்று ஒதுங்கிக்கொண்டார்கள். அப்போது கடப்பாரை, மண்வெட்டிகளுடன் தாங்களாக முன்வந்து இந்தப் பள்ளியைக் கட்டிக்கொடுத்தவர்கள் ஊரின் இளைஞர்கள். தங்களின் அடுத்த தலைமுறையாவது கல்வி கற்க வேண்டும் என்று அவர்களுக்குள் தீயாக எழுந்த ஆர்வத்தை நாங்கள் புரிந்துகொண்டோம். குழந்தைகள் மூலமாக அதே தீயைப் பயன்படுத்திக்கொண்டுதான் மது என்னும் அரக்கனையும் அழித்தோம்” என்கிறார்.
எழுதப் படிக்கத் தெரியாதுங்க!
ஊரின் இளைஞர்களிடம் பேசினேன். “எங்க அப்பன்களை யும் மொத்தமா தப்பு சொல்ல முடியாதுங்க. ஊருக்குள்ள தண்ணி இல்ல, கரட்டு மேட்டுல விவசாயமும் செய்ய முடியாது. விரக்தியில பெரியவங்களுக்கு முன்னேறணும்ங்கிற எண்ணமே இல்லாமப் போச்சு. கிடைக்குற வேலையைச் செஞ்சு எல்லாத்தையும் குடிச்சே அழிச்சாங்க. அவங்களும் செத்துப்போனாங்க. இதோ உங்க முன்னாடி இருக்கிற இந்த ஆறு பேருல அஞ்சு பேருக்குத் தகப்பன் கிடையாது. ஆசையா ஜீன்ஸ், டீ - ஷர்ட் போட்டுக்கிறோமே தவிர, எங்களுக்கு ஒருத்தனுக்குக்கூட எழுதப் படிக்கத் தெரியாதுங்க. சினிமா போஸ்டர்ல விஜய்யோட முகத்தைப் பார்த்துதான் அது ‘கத்தி’ படம்னு தெரிஞ்சு போய்ப் பார்த்தோம்” என்று கண் கலங்குகிறார் காசி என்கிற இளைஞர்.
மதுவிலிருந்து விடுபட்டாலும் வருவாய்க்கு வழி தெரியாமல் தவிக்கிறார்கள் மக்கள். கணவன், மனைவி சகிதம் கேரளம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் கட்டட வேலை பார்க்கிறார்கள். நான்கு மாதங்களுக்கு ஒரு முறை வந்து பிள்ளை முகம் பார்த்துச் செல்கிறார் கள். மாற்றத்தை நிகழ்த்திய குழந்தைகள் ஊருக்குள் வயதான பாட்டிகளிடம் வளர்கிறார்கள். பிள்ளைகளின் கண்கள் பெற்றோர் பாசத்துக்காக ஏங்கித் தவிக்கின்றன!
ஆனாலும், மதுவெனும் முள்வனத்தை அக்கினிக் குஞ்சு கள் எரித்தழித்த மகிழ்ச்சி அவர்கள் முகத்தில் தெரிகிறது.
'அம்மா'வுக்கு ஒரு கடிதம்
குன்னூர் அருகே இருக்கிறது அழகான மலைக் கிராமம் பெட்டட்டி. ஊரெங்கும் பனியும் பசுமையும் போர்த்திக் கிடக்கிறது. கூடவே, பட்டினியும், வறுமையும். காரணம் மது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவங்கள் இவை.
சம்பவம் 1: பெட்டட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக் குத் தடுமாறியபடி வருகிறார் தந்தை ஒருவர். வகுப்பறைக்குள் புகுந்தவர், எட்டாவது படிக்கும் தனது மகளை இழுத்துப் போட்டு அடிக்கிறார். போதையில் அங்கேயே சரிகிறார்.
சம்பவம் 2: மூன்றாவது படிக்கும் குழந்தை அவன். ஒருநாள் வகுப்பறைக்கு வரும்போதே தடுமாறியபடி வருகிறான். சிறிது நேரத்தில் வகுப்பிலேயே மயங்கிச் சரிகிறான். பதறிய ஆசிரியர்கள் அவனைச் சோதித்துப்பார்க்கிறார்கள். அவனிடமும் மதுவின் நெடி.
சம்பவம் 3: ஐந்தாவது படிக்கும் பெண் குழந்தை அவள். பெற்றோர் இருவருமே குடிநோயாளிகள். தினமும் வீட்டில் சண்டை. ஒருநாள் தந்தை தீக்குளித்துவிட்டார்.
சம்பவம் 4: 4, 5-வது படிக்கும் சகோதரர்கள் அவர்கள். குடிபோதையில் தாயை அடித்துக் கொலை செய்துவிட்டுத் தலைமறைவாகிவிட்டார் தந்தை. அநாதையாகத் தத்தளித்தவர்களைத் தத்தெடுத்துள்ளார், காந்திய மக்கள் இயக்கத்தின் நிறுவனர் தமிழருவி மணியன்.
அன்புள்ள அம்மா
இப்படியாகச் சம்பவங்கள் தொடர, ஒருகட்டத்தில் மது வுக்கு எதிராகப் பொங்கியெழுந்துவிட்டார்கள் குழந்தைகள். ஆதரவாகக் கரம் கொடுத்தார்கள் பள்ளியின் தலைமை ஆசிரியராக இருந்த மனோகரனும் ஆங்கில ஆசிரியையான புஷ்பாவும். வகுப்பில் கல்வியுடன் சேர்த்து மதுவின் தீமைகளைப் பற்றியும் கற்பித்தார்கள். குழந்தைகள் அதனை அப்படியே வீட்டில் ஒப்பித்தார்கள். கூடவே, கடிதம் எழுதும் போராட்டத்தைத் தொடங்கினார்கள். தங்களது பெற்றோர், அக்கம்பக்கத்தினர், டாஸ்மாக் கடையினர் என எல்லோருக்கும் கைப்படக் கடிதம் எழுதினார்கள்.
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு இவர்கள் எழுதிய கடிதம் அத்தனை உருக்கமாக இருக்கிறது.
“அன்புள்ள அம்மா, வணக்கம். எங்களைப் போன்ற ஏழைக் குழந்தைகள் கல்வி கற்கத் தங்கள் அரசு மேற்கொண்டுவரும் திட்டங்கள் பயனுள்ளவையாக இருக்கின்றன. என்றாலும், அரசின் மதுபான விற்பனையால் குடம் பாலில் துளி நஞ்சு கலந்ததுபோல அனைத்தும் வீணாகிவிடுமோ என்று அஞ்சுகிறோம். நாங்கள் நிம்மதியாகப் படிக்க முடியவில்லை. நாளுக்கு நாள் எங்கள் அப்பாக்களின் உடல் நலம் குன்றிவருவதால், தாலியை இழந்துவிடுவோமோ என்று எங்கள் அம்மாக்கள் அஞ்சுகின்றனர். எங்கள் சகோதரர்களும் குடிப் பழக்கத்துக்கு ஆளாகிவிடுவார்களோ என்று பயமாக இருக்கிறது. நீங்கள் கொடநாடு வரும்போது, அருகிலிருக்கும் எங்கள் பகுதிக்கும் வந்தால் உண்மை நிலையை அறிவீர்கள்” என்று நீள்கின்றன கண்ணீர் வரிகள்.
குழந்தைகள் மீது சத்தியம்
ஒருகட்டத்தில் அப்பாக்கள் செவிசாய்த்தார்கள். கூடவே, பள்ளியில் வாரந்தோறும் ‘ஆல்கஹால் அனானிமஸ்’ அமைப்பின் கூட்டங்களை ஏற்பாடு செய்தார்கள். கூட்டத்துக்குப் பெற்றோரை வற்புறுத்தி அழைத்துவந்தார்கள். தொடர்ந்து நடந்த அந்தக் கூட்டங்களும் மழலைகளின் அன்பும் குடிநோயாளிகளின் மனதை மாற்றின. சாரை சாரையாகப் பள்ளிக்கு வந்து ‘இனிமேல் நாங்கள் மது அருந்த மாட்டோம். எங்கள் குழந்தைகள் மீது சத்தியம்’ என்று எழுதிக்கொடுத்துவிட்டுச் சென்றார்கள். தற்போது பள்ளியில் படிக்கும் குழந்தைகளின் பெற்றோர் யாரும் மது அருந்துவதில்லை. பெட்டட்டி கிராமமும் படிப்படியாக மதுவிலிருந்து விடுபட்டுக்கொண்டிருக்கிறது. மாற்றத்தை சாத்தியமாக்கியிருக்கிறார்கள் குழந்தைகள்.
பள்ளியின் தலைமை ஆசிரியர் மனோகரன் ஓய்வு பெற்றுவிட்டாலும் தனது சேவையைத் தொடர்கிறார். பள்ளிகளிலும் கிராமங்களிலும் மது ஒழிப்புப் பிரச்சாரம் செய்கிறார். மனோகரன் மற்றும் புஷ்பாவிடம் பேசினோம். “இன்று நாடு இருக்கும் நிலையில், மற்ற இடங்களைவிடப் பள்ளி, கல்லூரிகளில்தான் மதுவின் தீமைகள்குறித்துப் பாடம் எடுக்க வேண்டும். கடந்த தலைமுறையின் பாதியை மது அழித்துவருகிறது. எனவே, வரும் தலைமுறையையாவது காப்பது அவசியம். அந்தப் பணி பள்ளி, கல்லூரிகளில் தொடங்க வேண்டும். அரசு அதற்கான நடவடிக்கைகளை, பாடத் திட்டங்களைக் கொண்டுவர வேண்டும். அதற்கு முன்னதாக அனைத்து அரசுப் பள்ளி ஆசிரியர்களும் இதற்கான சிறு முயற்சியையாவது தங்கள் பள்ளிகளில் மேற்கொள்ள வேண்டும்.
எங்கள் குழந்தைகள் நடத்திய மாற்றத்தைக் கேள்விப்பட்ட குஜராத்தின் ‘ரிவர்சைட் ஸ்கூல்’ அமைப்பு இந்த ஆண்டு எங்கள் பள்ளியை நாட்டின் 100 சிறந்த பள்ளிகளுள் ஒன்றாகத் தேர்வுசெய்து கவுரவித்திருக்கிறது. குழந்தைகளை குஜராத்துக்கு அழைத்துச்சென்று பரிசுகள் வழங்கியது. கிரிக்கெட் வீரர் திராவிட் கையில் விருது வாங்கினோம்” என்கிறார்கள் பெருமையுடன்!
அக்கினிக் குஞ்சொன்று கண்டேன் - அதை / அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்; / வெந்து தணிந்தது காடு; - தழல் வீரத்தில் குஞ்சென்று மூப்பென்று முண்டோ? / தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்…
- மகாகவி பாரதியார்
- டி.எல். சஞ்சீவிகுமார்,
தொடர்புக்கு: sanjeevikumar.tl@thehindutamil.co.in
மதுவுக்கு எதிரான ‘தி இந்து’வின் பயணம் தொடரும்…
‘மெல்லத் தமிழன் இனி..!’ தொடரைத் தொடங்கியபோது, மது இல்லாத சமூக மாற்றத்தை விரும்பினோம். தொடரைத் தொடங்கியதும் இதற்காகவே காத்திருந்ததுபோலக் கைகோத்து அழைத்துச் சென்றார்கள் மக்கள், சமூக சேவகர்கள், சமூக அமைப்புகள். ஒவ்வோர் அத்தியாயமும் சங்கிலித் தொடர்போல மக்களை ஒருங்கிணைத்தன. பல்வேறு பள்ளிகளில், மருத்துவமனைகளில், கோயில்களில், தேவாலயங்களில் தொடரின் அத்தியாயங்களை நல்லோர் சிலர் நகலெடுத்து விநியோகித்தார்கள். ஓர் இயக்கமாக இயங்கத் தொடங்கினார்கள் மக்கள். மதுவிலக்கு கோரிக்கைகள் வலுத்தன. அறப் போராட்டங்கள் அரங்கேறின. சிறு அமைப்புகள் முதல் கட்சிகள் வரை மதுவை ஒழிக்க நடைப் பயணங்கள் மேற்கொண்டன. தொடர் நிறைவுபெறும் இந்த நேரத்தில் முதல்முறையாக உயர் நீதிமன்றம், “மதுவிடமிருந்து மக்களைக் காப்பாற்ற பூரண மதுவிலக்கு பற்றி ஏன் பரிசீலிக்கக் கூடாது” என்று பொட்டில் அடித்தாற்போல் அரசுகளிடம் கேள்வி எழுப்பியுள்ளது. ஒரு தொடரால் மட்டுமே இத்தனை சமூக மாற்றங்களை மொத்தமாகக் கொண்டுவர முடியாதுதான். அதேசமயம், மதுவுக்கு எதிராகச் சமூகத்தில் கொஞ்சமேனும் ஏற்பட்டிருக்கும் சலசலப்பை உணர்கிறோம். ‘தெளிவோம்’என்ற நம்பிக்கையுடன் தொடரை நிறைவுசெய்கிறோம். ஆனாலும், மதுவுக்கு எதிரான ‘தி இந்து’வின் பயணம் தொடரும்.
தொடர் ஏற்படுத்திய தாக்கங்களை பகிர்ந்துகொள்ள: sanjeevikumar.tl@thehindutamil.co.in
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
19 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago