துவண்டுகிடந்த பா.ஜ.க. மறுபடியும் எழுந்து நிற்க இரண்டு பேரைக் காரணமாகச் சொல்வார்கள். ஒருவரைப் பற்றி ஊருக்கே தெரியும். இன்னொருவர், ராஜ்நாத் சிங். ஆர்ப்பாட்டமே இல்லாமல் காரியம் ஆற்றக்கூடியவர் ராஜ்நாத் சிங். டெல்லியில் ஒரு பகல் வேளையில் அவருடன் பேசியபோது...
தேர்தல் நெருங்க நெருங்கக் கருத்துக்கணிப்புகள், பா.ஜ.க. தனிப் பெரும்பான்மையை நோக்கி நகர்வதாகச் சொல்கின்றனவே?
எங்களுக்கு இதில் புதிய செய்தி எதுவும் இல்லை. மக்கள் முடிவெடுத்துவிட்டார்கள். மோடிதான் அடுத்த பிரதமர்.
கடந்த 2009 தேர்தலில் 18 மாநிலங்களில் ஒரு இடத்தில் கூட ஜெயிக்காத கட்சி பா.ஜ.க. உண்மையாகவே, தனிப் பெரும்பான்மை பெற முடியும் என்று நம்புகிறீர்களா?
அதனால்தான் பல்வேறு கட்சிகளுடன் தேர்தல் கூட்டணி அமைக்கப் பேசிவருகிறோம். இந்த முறை தென் மாநிலங்கள் அனைத்திலும் ஒரு நல்ல எண்ணிக்கையைப் பெறுவோம்.
மூன்றாவது அணி யாருடைய வாக்கு வங்கியைப் பாதிக்கும்?
மூன்றாவது அணிக்கு வாய்ப்பே இருக்காது. பா.ஜ.க. ஆட்சியை நிறுவ எல்லோருமே முடிவெடுத்துவிட்டனர்.
ஒருவேளை, பா.ஜ.க-வுக்குத் தனிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை எனில், அது மூன்றாவது அணியின் ‘பி- டீம்' என, சந்திரபாபு நாயுடுவைப் பிரதமராக முன்னிறுத்தும் என ஒரு பேச்சு உள்ளதே?
பா.ஜ.க-வுக்குப் பெரும்பான்மை கிடைக்காது என்ற பேச்சுக்கே இடமில்லை. உங்களுடைய யூகத்தின் அடிப்படையிலான கேள்விகளுக்கு என்னால் பதில் அளிக்க முடியாது.
மோடியை மட்டுமே பா.ஜ.க. நம்பியிருப்பதாக ஒரு பிம்பம் உள்ளதே? உண்மையா?
அப்படி இல்லை. எமது கட்சியில் பாரம்பரியப்படி யாராவது ஒருவரைப் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்து வோம். அதன்படி, வாஜ்பாயை, அத்வானியைச் செய்தோம். இப்போது மோடியை அறிவித்துள்ளோம்.
மோடி எந்தத் தொகுதியில் போட்டியிடுவார்? அதை முடிவெடுக்க வேண்டியது மோடியா? கட்சியா?
கட்சிதான் முடிவெடுக்கும். பா.ஜ.க. இன்னும் வென்றுவிடவில்லை.
அதற்குள்ளேயே டோனிகர் எழுதிய புத்தகத்தைத் திரும்பப் பெறும் சூழல் உருவாகியிருக்கிறது. இது கருத்துச் சுதந்திரத்துக்கு ஆபத்து அல்லவா? பா.ஜ.க-வின் நிலைப்பாடுதான் என்ன?
எந்த நூல்களையும் பா.ஜ.க. தடை செய்யவில்லை. கருத்துச் சுதந்திரம் கண்டிப்பாக இருக்க வேண்டும். டோனிகர் எழுதிய நூல்குறித்து பா.ஜ.க. எதுவுமே கூறவில்லை. அவர்களாகவே ஒன்றை நினைத்துக் கொண்டால் அதற்கு பா.ஜ.க. பொறுப்பேற்க முடியாது.
சத்தீஸ்கர், ஜார்கண்ட் மற்றும் உத்தராகண்ட் மாநிலங்களைப் பிரச்சினை இன்றிப் பிரித்த நீங்கள், வெகுகாலமாக எழுந்துவரும் கோரிக்கையான தெலங்கானாவை மட்டும் விட்டுவிட்டது ஏன்?
2001-ல் பிரித்த மூன்று மாநிலங்களுக்கு ஒருமித்த கருத்தும் ஆதரவும் இருந்தது. ஆனால், தெலங்கானா விவகாரத்தில் ஒத்த கருத்து ஏற்படவில்லை. அனைத்துத் தரப்பிலான மக்களை அமரவைத்துப் பேசி, ஏற்பட்ட ஒருமித்த கருத்தின் அடிப்படையில்தான் நாம் மாநிலங்களைப் பிரித்தோம். ஆனால், காங்கிரஸ் இதைச் செய்யவில்லை. வாக்குவங்கி அரசியலுக்காக காங்கிரஸ் இந்தத் தவறைச் செய்தது.
டெல்லி தேர்தலின்போது நீங்கள் கேஜ்ரிவாலை ஒரு பொருட்டாக மதிக்கவில்லை. ஆனால், நாடாளுமன்றத் தேர்தலில் அவரை எப்படி எடை போடுவீர்கள்?
காங்கிரஸுக்கு எதிராக டெல்லியில் இருந்த எதிர்ப்பு அலையில் உருவான ஒரு நம்பிக்கையில் அந்தக் கட்சிக்குச் சில தொகுதிகள் கிடைத்தன. ஆம் ஆத்மி கட்சியை நாம் நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு ஆபத்தாகக் கருதவில்லை. ஏனெனில், இப்போது நாட்டு மக்களும் அவர்களைப் பற்றி அறிந்துகொண்டாயிற்று.
கேஜ்ரிவால், அம்பானி மீது வழக்குப் பதிவுசெய்ய உத்தரவிட்டதில், பா.ஜ.க. இன்னும் கருத்து சொல்லாமல் இருப்பது ஏன்? இதுகுறித்து கேஜ்ரிவால் சவால் விடுத்துள்ளாரே?
யாரவது ஒருவர், யார் மீதாவது வழக்கு போடட்டுமே? அதை விசாரிக்க நீதிமன்றம் உள்ளது. இதில், நாம் கருத்துச் சொல்ல என்ன இருக்கிறது?
லஞ்சம், ஊழல் மிகப் பெரிய பிரச்சினையாகி விட்ட நிலையில், பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் அதை எப்படிச் சமாளிக்கும்?
பா.ஜ.க. ஆட்சியில் லஞ்சம் மற்றும் ஊழலை ஒழிக்க, கேஜ்ரிவால் கூறுவதைவிட மிகவும் உறுதியான சட்டம் கொண்டுவருவோம். வெளிப்படையான நிர்வாகத்தைக் கொண்டுவருவோம்.
தமிழகப் பிரச்சினைகளைக் கொஞ்சம் பேசலாம் என்று நினைக்கிறேன். சேது சமுத்திரத் திட்டத்தில் உங்கள் தெளிவான முடிவுதான் என்ன? இந்தத் திட்டத்தில் உங்களுக்கு விருப்பம் இல்லை எனில், அதன் ஆய்வுக்காக வாஜ்பாய் காலத்தில் நிதி ஒதுக்கியது ஏன்? அப்போதே இதை முடித்திருக்கலாமே?
அன்றிலிருந்து ராம்சேதுவில் ஒரே முடிவுதான் உள்ளது. ராமர் கட்டிய பாலத்தை இடிக்கவோ, சேதம் விளைவிக்கவோ கூடாது என்பது பா.ஜ.க-வின் நிலை. அது ஒரு தொல்லியல் ஆதாரமாகப் பாதுகாக்கப்பட வேண்டும். இந்தத் திட்டத்தை அமலாக்க வேறு இடத்தில் வாய்ப்பிருக்கும்போது, ராமர் பாலத்தை இடிக்க வேண்டிய அவசியம் இல்லை.
தேவயானி விவகாரம் போன்ற விஷயங்களில் பொங்கியெழும் பா.ஜ.க., தமிழக மீனவர்கள் தாக்கப்படும்போது மட்டும் கண்டுகொள்ளாமல் இருப்பது ஏன்?
தேவயானி விவகாரமோ, இத்தாலிய மாலுமிகள் விவகாரமோ, தமிழக மீனவர்கள் விவகாரமோ நாம் அக்கறையோடுதான் பார்க்கிறோம். மீன் பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்கள், இலங்கைக் கடற்படையால் தாக்கப்படுவது போன்ற விஷயத்தில் பேசுவதற்காகத்தான் நாம் சுஷ்மா ஸ்வராஜை இலங்கைக்கு அனுப்பினோம். அடுத்து நாம் ஆட்சிக்கு வந்தால், இதில் ஏதாவது செய்வோம்.
இந்த விஷயத்தில் பா.ஜ.க-வின் முடிவான தீர்வு என்ன?
இந்த விஷயத்தில், இருதரப்பு மீனவர்கள் பேச்சுவார்த்தை பயன் தராது. இந்திய அரசும் இலங்கை அரசும் பேசினால், தாக்குதலைத் தடுப்பதற்காக ஒரு நல்ல முடிவு எடுக்க முடியும்.
இறுதிப் போரில் இலங்கை ராணுவம் நடத்திய படுகொலையைக் கண்டிக்காத நீங்கள், இப்போது காங்கிரஸ் மீது மட்டும் குற்றம் சுமத்துவது ஏன்?
2009-ல் பா.ஜ.க. என்ன செய்தது என்பதுபற்றி எனக்கு நினைவில்லை! ஆனால், மிகவும் உணர்வுபூர்வமான இந்த விஷயத்தை, இலங்கை அரசு இன்னும் நல்ல முறையில் கையாண்டிருந்தால், பல உயிர்களைக் காப்பாற்றியிருக்கலாம். அங்கு நடந்த படுகொலைகளை யாரும் நியாயப்படுத்த முடியாது. ஈழத் தமிழர்கள் பிரச்சினையில் பல குறைபாடான உத்திகள் கையாளப்பட்டுள்ளன. இருநாட்டுப் பிரச்சினைகளில் அனைத்துக் கட்சிகளின் ஒருமித்த கருத்து அவசியம். ஆனால், ஈழத் தமிழர்கள் விஷயத்தில் காங்கிரஸ் அரசு இதைச் செய்யவில்லை.
இதற்கும் முன்பாக இலங்கையின் வட பகுதியை புலிகள் சுற்றிவளைத்தபோது, சந்திரிகா அரசு வேண்டுகோளுக்கு இணங்க, ‘முற்றுகையை வாபஸ் பெறவில்லை எனில், இந்திய ராணுவத்தை அனுப்புவோம்’ என மிரட்டியது வாஜ்பாய் அரசுதானே?
நீங்கள் கேட்பது மிகவும் பழைய விஷயம். இதுபோன்ற பழைய சம்பவங்களை ஒரே அடியாகப் புதைத்துவிடுவதுதான் நல்லது. இந்த விஷயத்தில் வாஜ்பாய் அரசு என்ன முடிவு எடுத்தது எனத் தெளிவாக என் நினைவுக்கு வரவில்லை!
தமிழர்களின் படுகொலையில் மனித உரிமைகளை மீறிய ராஜபக்ஷ மீது போர்க் குற்ற விசாரணை நடத்த வேண்டும் என தமிழக பா.ஜ.க. வலியுறுத்துகிறது. இதை உங்கள் தலைமை வலியுறுத்தாதது ஏன்?
நோ கமென்ட்ஸ்!
ராஜீவ் காந்தி கொலைக் குற்றவாளிகள் விடுதலையைத் தமிழக பா.ஜ.க. வரவேற்கிறது, தேசியத் தலைமையோ எதிர்க்கிறது. ஏன்? பல்வேறு விஷயங்களில் மாநிலத் தலைவர்களும் தேசியத் தலைவர்களும் வேறுபட்டுப் பேசுவது ஏன்?
எங்களது ஒரு தேசிய கட்சி. இதன் மாநிலம் மற்றும் தலைமைக்கு இடையே இருவேறு கருத்துகள் இருக்க முடியாது. நீங்கள் கூறுவது எனக்குப் புதிய தகவலாக உள்ளது. இதுகுறித்துத் தமிழக பா.ஜ.க. தலைவர்களிடம் பேசுவோம். இனி இதுபோன்ற தகவல் தொடர்பு இடைவெளி இல்லாமல் பார்த்துக்கொள்வோம்.
உங்கள் அணியில் இணைந்துள்ள வைகோ, சேர இருக்கும் பா.ம.க-வும்கூட வரவேற்கிறார்களே?
(லேசான புன்னகையுடன்) இது விஷயமாக அவர்களிடம் பேசுவோம்.
விஜயகாந்த் இருபுறமும் கூட்டணிக்குப் பேசி வரும் போது, பா.ஜ.க. அவரைச் சேர்த்துக்கொள்ள இன்னும் ஆர்வம் காட்டுவது சந்தர்ப்பவாதம் அல்லவா?
தேர்தலுக்கு முன்பாகக் கூட்டணி அமைக்க அவருடன் தமிழகத் தலைவர்கள் பேசிவருவது உண்மைதான். மேலும், அங்குள்ள முக்கியப் பெரிய கட்சிகளுடனும் (தி.மு.க. அல்லது அ.தி.மு.க.) கூட்டணி உருவாகலாம். இதை சாத்தியமில்லை எனக் கூற முடியாது. இது எந்தக் கட்சிகளுடன் என்பதை இப்போது என்னால் கூற முடியாது. இந்தப் பேச்சுவார்த்தை மிகவும் ஆரம்ப நிலையில் இருப்பதால், அது முடிவுக்கு வந்த பிறகு அறிவிப்போம்.
தமிழக முதல்வர் ஜெயலலிதாவுடனான மோடியின் நட்பு, தேர்தல் முடிவுகளுக்குப் பின் உதவுமா?
மோடிக்கு எல்லோருடனும் நட்பு உள்ளது. அது வேறு விஷயம். ‘மிஷன் 272 ப்ளஸ்’ என பா.ஜ.க. அறிவித்துள்ள எண்ணிக்கையைக் கண்டிப்பாக எட்டுவோம்.
- ஆர்.ஷபிமுன்னா, தொடர்புக்கு: shaffimunna.r@kslmedia.in
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
18 hours ago
கருத்துப் பேழை
18 hours ago
கருத்துப் பேழை
18 hours ago
கருத்துப் பேழை
19 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago