இந்தியாவுக்கு வருகைதரும் ரஷ்ய அதிபர் புதினிடம், இந்தியா நட்பு நாடு என்பதை உணர்த்த வேண்டும்.
இரண்டாம் பனிப்போரைப் பற்றித் தெரிந்து கொள்வதற்கு முன்னால், முதல் பனிப்போர் குறித்த சில தகவல்களைக் குறிப்பிட்டாக வேண்டும்.
முதல் பனிப்போர் (1946-1991)
இரண்டாம் உலகப் போர் முடிந்தவுடன், 1946-ம் ஆண்டு தொடங்கிய இந்தப் போர், 1991-ம் ஆண்டு முடிந்தது. முதல் சில ஆண்டுகளில் ரஷ்யாவின் கை ஓங்கியிருந்தது. சீனாவில் கம்யூனிஸ்ட்களின் வெற்றி, கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் கம்யூனிஸ்ட் ஆட்சி, கொரியப் போர் போன்றவை ரஷ்யாவுக்கே வலு சேர்த்தன. இந்தக் காலகட்டத்தில் ரஷ்ய ராணுவமும் மேற்கத்திய நாடுகளின் ராணுவங்களும் நேருக்கு நேராக மோதிக்கொள்ளவில்லை. அவர்கள் கொடுத்த ஆயுதங்களை வைத்துக்கொண்டு மற்றவர்கள் மோதிக் கொண்டார்கள். 45 ஆண்டுகள் நடந்த இந்தப் பனிப்போர், 1991-ல் சோவியத் ஒன்றியத்தின் தகர்வுடன் முடிவுக்கு வந்தது.
ரஷ்யாவை நெருக்குதல்
மேற்கத்திய நாடுகளின் அபார வெற்றியில் முடிந்த இந்தப் போரின் விளைவுகள் ரஷ்யாவுக்கு நெருக்கடியைக் கொடுத்தன. ஸ்டாலின் மிகுந்த பாடுபட்டு சோவியத் ஒன்றியத்துக்கும் மேற்கத்திய நாடுகளுக்கும் இடையே ஒரு பாதுகாப்பு அரணை அமைத்திருந்தார். கிழக்கு ஜெர்மனி போன்ற எட்டு நாடுகள் கொண்ட அந்த அரண், சோவியத் ஒன்றியத்தின் முடிவுக்குப் பிறகு வலுவிழக்க ஆரம்பித்தது. ஜெர்மனி ஒன்றிணைந்தபோது, ரஷ்யாவுக்கு ஓர் உறுதிமொழி கொடுக்கப்பட்டது. ‘நேடோ’ என அழைக்கப்பட்ட மேற்கத்திய நாடுகளுக்கு இடையே இருந்த ராணுவ ஒப்பந்தக் குடையின் கீழ், கிழக்கு ஐரோப்பிய நாடுகள் கொண்டுவரப்படும் என்ற எண்ணம் இல்லை என்பதுதான் அது. ஒரு கட்டைவிரல் அளவுகூட கிழக்கே நகர மாட்டோம் என்று கூறப்பட்டது. ஆனால், 1991-லிருந்து 2009 வரை ரஷ்யாவின் மேற்கில் இருக்கும் எல்லா நாடுகளும் நேடோ குடையின் கீழ் கொண்டு வரப்பட்டன - சோவியத் ஒன்றியத்தில் இருந்த லாட்வியா, எஸ்தோனியா, லித்துவேனியா உட்பட. மிஞ்சியிருந்த நாடுகளில் குறிப்பிடத் தக்கது உக்ரைன் மட்டுமே. இந்த நாட்டையும் தங்கள் வலைக்குள் இழுக்க மேற்கத்திய நாடுகள் முயன்றதே இரண்டாம் பனிப்போருக்குக் காரணம்.
உக்ரைன்
உக்ரைன் சிறிய நாடு அல்ல. சுமார் நான்கரைக் கோடி மக்கள்தொகை கொண்ட அது பரப்பளவில் ஐரோப்பாவிலேயே (ரஷ்யாவைத் தவிர்த்தால்) பெரிய நாடு. பிரான்ஸை விடப் பெரியது.
உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே உள்ள உறவு, 1,000 ஆண்டுகளுக்கும் மேலானது. இரு நாடுகளிலும் ஸ்லாவ் இனக் குழுவைச் சேர்ந்தவர்களே வசிக்கிறார்கள். ரஷ்யா என்ற நாடு பிறந்ததே இன்றைய உக்ரைனின் தலைநகரான கீவ் நகரத்தில்தான் என்று வரலாற்றாசியர்கள் கூறுகிறார்கள். ரஷ்யப் புரட்சியில், முன்னணியில் நின்ற டிராட்ஸ்கி பிறந்தது உக்ரைனில். சோவியத் தலைவரான குருஷ்சேவும் உக்ரைனியர்தான். கொஸாக் என்ற புகழ்பெற்ற புல்வெளிப் போர் வீரர்கள் உக்ரைனியர்கள். ஆனால், ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே உரசல்கள் தொடர்ந்துவந்திருக்கின்றன. இரண்டாம் உலகப் போரின்போது பல உக்ரைனியர்கள் லட்சக் கணக்கான யூதர்களைக் கொல்வதில் நாஜிப் படைகளோடு ஒத்துழைத்தார்கள். 1991-ம் ஆண்டு சோவியத் ஒன்றியத்திலிருந்து பிரிந்ததுமே, ரஷ்யாவுக்கு எதிராக நின்றவர்கள் வலுப்பெறத் தொடங்கினார்கள். இரண்டுங்கெட்டானாக இருந்த உறவு முறியத் தொடங்கியது இந்த ஆண்டின் முதல் மாதங்களில். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட குடியரசுத் தலைவர் யுகோனோவிச்சுக்கு எதிராக - அவர் ரஷ்யாவுக்கு ஆதரவாக, ஐரோப்பிய ஒன்றியத்துக்கு எதிராக இருந்தார் என்பதால் - மேலைநாடுகளால் தூண்டிவிடப் பட்ட இயக்கம் ஒன்று உருவாகியது. பல வன்முறைச் சம்பவங்களுக்குப் பிறகு, யுகோனோவிச் ரஷ்யாவில் தஞ்சம் புகுந்தார். இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் ஆட்சியைக் கைப்பற்றினார்கள். ஆனால், உக்ரைனின் கிழக்குப் பகுதியைச் சேர்ந்தவர்கள் ரஷ்யாவையே ஆதரித்தார்கள்.
உக்ரைனில் மேற்கத்திய நாடுகளோடு முழுவதுமாக ஒத்துழைக்கும் அரசு அமைந்ததால், கருங்கடலில் இருக்கும் ரஷ்யக் கப்பற்படைக்கு ஆபத்து நேரக் கூடும் என்ற எண்ணத்தில், உக்ரைனின் ஒரு பகுதியான க்ரைமியாவை ரஷ்யா தன்னகப்படுத்திக்கொண்டது. க்ரைமியா ரஷ்யாவிலிருந்து உக்ரைனுக்கு குருஷ்சேவ் காலத்தில் 1954-ம் ஆண்டுதான் மாற்றப்பட்டது என்பதையும், க்ரைமிய மக்களில் 96% பேர் ரஷ்யாவுடன் சேர்வதற்கு ஆதரவாக வாக்களித்தார்கள் என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். க்ரைமியா ரஷ்யாவுடன் இணைக்கப்பட்ட இந்த ஆண்டின் மார்ச் 21-ம் தேதிதான், இரண்டாம் பனிப்போரின் தொடக்கம் என்று கூறலாம்.
பனிப்போரின் விளைவுகள்
இன்று ஐரோப்பிய ஒன்றியமும் அமெரிக்காவும் சேர்ந்து ரஷ்யாவின் மீது பொருளாதாரப் போர் தொடுத்திருக்கின்றன. இதனால், ரஷ்யாவில் ரூபிள் வீழ்ச்சியடைந்துவிட்டது. ரஷ்யப் பொருளாதாரம் மிகவும் பின்னடையும் அபாயம் இருக்கிறது. ஆனால், ரஷ்யாவைக் குறைத்து மதிப்பிடுபவர்கள் கடைசியில் தோல்வியைத்தான் சந்திப்பார்கள் என்று வரலாறு சொல்கிறது. ரஷ்யத் தலைவர் புதினும் இவ்வாறே சொல்கிறார். இந்தப் பொருளாதாரப் போர் ரஷ்யா தன்னிறைவை நோக்கிச் செல்வதற்கு ஊக்கமளிக்கும் என்றும் அவர் சொல்கிறார்.
கிழக்கு உக்ரைனில் உள்நாட்டுப் போர் நடந்து கொண்டிருக்கிறது. போர் நிறுத்தம் பெயரளவுக்கு இருந்தாலும், தொடர்ந்து மக்கள் கொல்லப்பட்டு வருகிறார்கள். உக்ரைனிய அரசுக்கு மேற்கத்திய ஆதரவு இருக்கிறது என்றால், கிழக்கு உக்ரைனியப் போராளிகளுக்கு ரஷ்ய ஆதரவு இருக்கிறது. வியத்நாம், கொரியாவில் நடந்தது, இங்கு மறுபடியும் அரங்கேறுகிறது.
உக்ரைனுக்கும் உள்நாட்டுப் போரினால் எந்தப் பயனும் இல்லை. எல்லாவற்றுக்கும் ரஷ்யாவை நம்பி யிருக்கும் நாடு அது. அந்த நாட்டவர் ரஷ்யாவுக்குள் நுழைய எந்தத் தடையும் இல்லை. ரஷ்யாவில் வேலை செய்து, உக்ரைனுக்குப் பணம் அனுப்புபவர்கள் 30 லட்சத்துக்கும் மேல். மிகக் குறைந்த விலையில் இன்றுவரை ரஷ்யா அந்த நாட்டுக்கு எரிபொருள் அளித்துவருகிறது. கணக்கிட்டால், பல பில்லியன் டாலர்கள் மதிப்பு பெறும். எனவே, இன்று உக்ரைனில் நடைபெறுவது மேற்கத்திய நாடுகளின் தூண்டுதலினால் நடக்கிறது என்பது தெளிவு. ஐரோப்பிய நாடுகளும் அகலக் கால் விரித்துவிட்டதை உணர்ந்துகொண்டதற்கான அறிகுறிகள் தெரிகின்றன. ஒருவேளை சமரசம் ஏற்பட்டால், இந்தப் போர் பல வருடங்கள் நீடிக்காமல் முடிவுபெறலாம். ஆனால், ஆயுத உற்பத்தியாளர்களும் போரையே நம்பித் தொழில் நடத்துபவர்களும் வேறு விதமாக நினைக்கலாம். அவர்களை நம்பித்தான் பல அரசுகள் இயங்குகின்றன. இதனால், இந்தப் பனிப் போரும் பல வருடங்கள் நடைபெறலாம்.
இந்தியா என்ன செய்ய வேண்டும்?
சென்ற பனிப்போர் காலகட்டத்தில், சோவியத் ஒன்றியத்திடமிருந்து ஆயுதங்களைப் பெற்றாலும், பொருளாதார வளர்ச்சிக்கு மேற்கத்திய நாடுகளை அணுக இந்தியா தயங்கியதில்லை. இந்த முறையும் நாம் நடுநிலையைக் கையாள வேண்டும். “ரஷ்யா, இந்தியாவின் நெருக்கமான நட்பு நாடு” என்று நமது பிரதமர் சமீபத்தில் கூறியிருக்கிறார். இதையே இந்தியாவுக்கு வருகைதரும் புதினிடம் டிசம்பர் 11 அன்று திரும்பக் கூற வேண்டும். ரஷ்யாவுடன் வணிக உறவுகள் வலுவடையக் கூடாது என்பதைத்தான் அமெரிக்கா விரும்பும். ஆனால், இந்தியா, சீனா, ரஷ்யா ஆகிய நாடுகளின் வணிகக் கூட்டுறவு மூன்று நாட்டு மக்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்ற தொலைநோக்கோடு நமது பிரதமர் நடந்துகொள்வார் என்று நம்புவோம்.
- பி.ஏ. கிருஷ்ணன்
‘புலிநகக்கொன்றை’, ‘கலங்கிய நதி’ ஆகிய நாவல்களின் ஆசிரியர்.
தொடர்புக்கு: tigerclaw@gmail.com
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
12 hours ago
கருத்துப் பேழை
12 hours ago
கருத்துப் பேழை
12 hours ago
கருத்துப் பேழை
12 hours ago
கருத்துப் பேழை
10 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago