எல்லோரும் ஒரே உயிர்

By பாரதியார்

இளம் மனைவிக்கு பாரதி கடிதம் - 1901

ஸ்ரீ காசி
ஹநுமந்த கட்டம்

எனதருமைக் காதலி செல்லம்மாளுக்கு ஆசீர்வாதம். உன் அன்பான கடிதம் கிடைத்தது. நீ என் காரியங்களில் இத்தனை பயப்படும்படியாக நான் ஒன்றும் செய்யவில்லை. விசுவநாதன் அனாவசியமாக உனக்குப் பயத்தை விளைவித்திருக்கிறான். நான் எப்போதுமே தவறான வழியில் நடப்பவனல்ல. இதைப் பற்றி உன்னைச் சந்திக்கும் சமயங்களில் விவரமாகக் கூறுகிறேன். நீ இந்த மாதிரி கவலைப்படும் நேரங்களில் தமிழை நன்றாகப் படித்துவந்தாயானால் மிகவும் சந்தோஷமுறுவேன்.

உனதன்பன்
சி. சுப்பிரமணிய பாரதி

நீயா இவ்வுலகத்தைப் படைத்தாய்?

நக்ஷத்திரங்களெல்லாம் கடவுள் வலியால் சுழல்கின்றன. திரிலோகங்களும் அவனுடைய சக்கரத்தில் ஆடுகின்றன. நீ அவன், உன் மனம், உன் மனத்தின் நினைப்புகள் எல்லாம் அவனே “ஸர்வம் விஷ்ணுமயம் ஜகத்” - அங்ஙனமாக, மானுடா, நீ ஏன் வீணாகப் பொறுப்பைச் சுமக்கிறாய்? பொறுப்பையெல்லாம் ‘தொப்’பென்று கீழே போட்டுவிட்டு, சந்தோஷமாக உன்னால் இயன்ற தொழிலைச் செய்துகொண்டிரு.

எது எப்படியானால் உனக்கென்ன? நீயா இவ்வுலகத்தைப் படைத்தாய்? உலகமென்னும்போது உன்னைத் தவிர்ந்த மற்ற உலகத்தையெல்லாம் கணக்கிடாதே. நீ உட்பட்ட உலகத்தை, உனக்கு முந்தியே உன் பூர்வ காரணமாக நின்று உன்னை ஆக்கி வளர்த்துத் துடைக்கும் உலகத்தை, மானுடா, நீயா படைத்தாய்? நீயா இதை நடத்துகிறாய்? உன்னைக் கேட்டா நக்ஷத்திரங்கள் நடக்கின்றன? உன்னைக் கேட்டா நீ பிறந்தாய்? எந்த விஷயத்துக்கும் நீ ஏன் பொறுப்பை வகித்துக்கொள்கிறாய்?”

பஞ்சம்

நம் நாட்டில் ராஜாக்களும், சாஸ்திரிகளும், பெரிய மிராஸ்தார்களும், ஸாஹுகார்களும், வியாபாரிகளும், வக்கீல்களும், பெரிய பெரிய உத்யோகஸ்தர்களும் வயிறு கொழுக்க, விலாப் புடைக்க, அஜீர்ணமுண்டாகும்படி ஆஹாரங்களைத் தம்முள் திணித்துக்கொண்டிருக்கையிலே, உலகத்தில் வேறெந்த நாட்டிலும் இல்லாதபடி இந்தியாவில் மட்டும் தீராத, மாறாத பஞ்சம் தோன்றி ஜனங்களை அழிக்கிற கொடுமை தீர்க்க வழி தேட வேண்டிய யோசனை அவர்களுடைய புத்திக்குச் சற்றேனும் புலப்படாதிருப்பதை எண்ணுந்தோறும் எண்ணுந்தோறும் எனக்கு மிகுந்த வருத்தமுண்டாகிறது.

நவீன ருஷ்யாவில் விவாக விதிகள்

போல்ஷிவிக் ஆட்சி ஏற்பட்ட காலத்திலே அதற்குப் பலவகைகளிலும் தோஷங்கள் கற்பிப்பதையே தம் கடமையாகக் கருதியவர்களிலே சிலர் அதன்மீது ராஜரீக நெறிகளிலே குற்றங்கள் சுமத்தியது போதாதென்று, போல்ஷிவிஸ்ட் கக்ஷியார் ஸ்திரீகளையும் பொதுவாகக் கொண்டு ஒருத்தியைப் பலர் அனுபவிக்கிறார்களென்று அபாண்டமான பழி சுமத்தப்பட்டது. ஆனால், ‘கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளைக்கு.’ ஒன்பதாம் நாள் உண்மை எப்படியேனும் வெளிப்பட்டு விடும்.

ஒரு பெரிய ராஜ்யத்தைக் குறித்து எத்தனை காலம் பொய் பரப்பிக்கொண்டிருக்க முடியும்? சில தினங்களுக்கு முன்பு, இங்கிலாந்து தேசத்தில் மாஞ்செஸ்டர் நகரத்தில் பிரசுரம் செய்யப்படும் ‘மாஞ்செஸ்டர் கார்டியன்’ என்ற பத்திரிகை நவீன ருஷியாவின் விவாக விதிகளைப் பற்றிய உண்மையான விவரங்களைப் பிரசுரம் செய்திருக்கிறது.

அவற்றைப் பார்க்கும்போது, நவீன ஐரோப்பிய நாகரீகம் என்று புகழப்படும் வஸ்துவின் நியாயமான உயர்ந்த பக்குவ நிலையை மேற்படி போல்ஷிவிஸ்ட் விவாக சம்பிரதாயங்களில் எய்தப்பட்டிருக்கிறதென்று தெளிவாக விளங்குகிறது. ஆண், பெண் இருபாலாரும் பரிபூரண ஸமத்துவ நிலைமையுடையோர். இங்ஙனம் இருபாலாரும் முற்றிலும் சமானம் என்ற கொள்கைக்குப் பங்கம் நேரிடாதபடி விவாகக்கட்டைச் சமைக்க வேண்டும் என்பதே ஐரோப்பிய நாகரீகத்தின்உண்மையான நோக்கம்.

பெண்களுக்கு விடுதலை தாங்கள் வேறு பல ஜாதியார்களைக் காட்டிலும் அதிகமாகக் கொடுத்திருப்பதே தாம் நாகரீகத்தில் உயர்ந்தவர்கள் என்பதற்கு முக்கியமான அடையாளங்களில் ஒன்றாமென்று ஐரோப்பியர்கள் சொல்லுகிறார்கள். அந்த வகையிலே பார்த்தால், ஐரோப்பாவின் இதர பகுதிகளைக் காட்டிலும் நவீன ருஷியா உயர்ந்த நாகரீகம் பெற்றுள்ளதென்பது ப்ரத்யக்ஷமாகத் தெரிகிறது.

கண்ணுடையவன்

“கடவுள் எங்கும் இருக்கிறாரே? எல்லாம் கடவுள்தானே? ஊருக்கு நடுவில் ஒரு கோவிலைக் கட்டி, அதில் ஒரு கல்லையோ செம்பையோ நட்டு, அங்கேதான் எல்லோரும் வந்து கும்பிட வேண்டும் என்ற நியமம் எதற்காக?” என்றால், ஜனங்களுக்குள் ஐக்யம் ஏற்படுவதற்காக.

கல்லில் மாத்திரம் தெய்வம் இருக்கிறதென்று நம்பி, நம்மைச் சூழ்ந்த ஜனங்களிடம் தெய்வம் இல்லை என்று நம்பலாமா?

கவனி! அண்ட பகிரண்டங்கள் எல்லாவற்றையும் உள்ளே இருந்து ஆட்டுவிக்கும் பரஞ்சுடரே நம்மைச் சூழும் அநந்த கோடி ஜீவராசிகளாக நின்று சலிக்கிறது.

இதுதான் வேதத்தின் கடைசியான கருத்து. ‘‘தன்னிடத்தில் உலகத்தையும் உலகத்தினிடம் தன்னையும் எவன் காண்கிறானோ அவனே கண்ணுடையவன்” என்பது முன்னோர் கொள்கை.

உன்னுடைய ஆத்மாவும் உலகத்தினுடைய ஆத்மாவும் ஒன்று. நீ, நான் முதலை, ஆமை, ஈ, கருடன், கழுதை - எல்லோரும் ஒரே உயிர். அந்த உயிரே தெய்வம்.

கணக்கு வழக்கே கிடையாது

நம்முடைய ஜனங்களுக்கிடையே இந்த நிமிஷம் வரை நடைபெறும் மூட பக்திகளுக்குக் கணக்கு வழக்கே கிடையாது. இதனால் நம்மவர்களின் காரியங்களுக்கும் விவஹாரங்களுக்கும் ஏற்படும் விக்கினங்களுக்கு எல்லை இல்லை. இந்த மூட பக்திகளிலே மிகவும் தொல்லையான அம்சம் யாதெனில், எல்லாச் செய்திகளுக்கும் நாள் நக்ஷத்திரம், லக்னம் முதலிய பார்த்தல், க்ஷவரம் பண்ணிக்கொள்ள வேண்டுமென்றால், அதற்குக்கூட நம்மவர் மாஸப் பொருத்தம், பக்ஷிப் பொருத்தம், திதிப் பொருத்தம், நாட்பொருத்தம் இத்தனையும் பார்த்தாக வேண்டியிருக்கிறது.

“க்ஷவரத்துக்குக்கூட இப்படியென்றால், இனி கலியாணங்கள், சடங்குகள், வியாபாரங்கள், யாத்திரைகள், விவசாய ஆரம்பங்கள் முதலிய முக்கிய கார்யங்கள் பல்லாயிரத்தின் விஷயத்திலே நம்மவர் மேற்படி பொருத்தங்கள் பார்ப்பதில் செலவிடும் கால விரயத்துக்கும் பொருள் விரயத்துக்கும் வரம்பே கிடையாது. சகுனம் பார்க்கும் வழக்கமும் கார்யங்களுக்குப் பெருந்தடையாக வந்து மூண்டிருக்கிறது. இதில் நேரும் அழிவுகளும், அவற்றால் பொருள் அழிவுகளும் எவ்வளவு உண்டாகின்றன என்பதை நம்மவர் கவனிப்பதே கிடையாது சகுனம் பார்ப்பதனால், கார்ய நஷ்டம் மாத்திரம் உண்டாகிறது. நாட்பொருத்தம் முதலியன பார்க்குமிடத்தே, கார்யநஷ்டம் மட்டுமன்றி மேற்படி லக்னம் முதலியன பார்த்துச் சொல்லும் சோதிடருக்கு வேறு பணம் செலவாகிறது.

‘மெம்பர்’

‘மெம்பர்’ என்பதற்குச் சரியான தமிழ்ச் சொல் எனக்கு அகப்படவில்லை. இது ஆச்சரியத்திலும் ஆச்சர்யம். ‘அவயவி’ சரியான வார்த்தையில்லை. ‘அங்கத்தான்’ கட்டிவராது. ‘சபிகன்’ சரியான பதந்தான். ஆனால், பொதுஜனங்களுக்குத் தெரியாது. யாரேனும் பண்டிதர்கள் நல்ல பதங்கள் கண்டுபிடித்துக் கொடுத்தால் புண்ணியமுண்டு. அரை மணி நேரம் யோசித்துப் பார்த்தேன்; ‘உறுப்பாளி?’ ஏதெல்லாமோ நினைத்தேன். ஒன்றும் மனதிற்குப் பொருந்தவில்லை. என்ன செய்வேன்! கடைசியாக ‘மெம்பர்’ என்று எழுதிவிட்டேன். இன்னும் ஆற, அமர யோசித்துச் சரியான பதங்கள் கண்டுபிடித்து மற்றொருமுறை சொல்லுகிறேன்.

- தொகுப்பு: அரவிந்தன்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

4 hours ago

கருத்துப் பேழை

4 hours ago

கருத்துப் பேழை

4 hours ago

கருத்துப் பேழை

1 hour ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

மேலும்