அண்ணனூர் ஹே, ஆவடி ஹே, அரக்கோணம் ஹேஹே!

By ராணிப்பேட்டை ரங்கன்

எப்பேர்ப்பட்ட சக்ரவர்த்தியாக இருந்தாலும் ஒரு முகூர்த்த காலம் நரகத்தில் கழித்தாக வேண்டும் என்பது சாஸ்திரம். சென்னை மாநகரத்தில் எத்தனையோ விதமான வாகனங்களில் பயணித்தாலும் சென்னை பீச் - தாம்பரம், சென்னை சென்ட்ரல் -அரக்கோணம், சென்னை சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி மார்க்கங்களில் போகாதவர், போக வேண்டிய அவசியம் இல்லாதவர் மனிதரே அல்ல. ஒரு முகூர்த்த காலம் அல்ல, ஏராளமான முகூர்த்த காலங்கள் இதிலேதான் கழிகிறது.

சென்னை சென்ட்ரல் புறநகர் மின்சார ரயில் நிலையத்துக்குள் நுழைந்து, அங்கிருக்கும் (பே அண்ட் மிஸ்யூஸ்) கட்டணக் கழிவறைக்குள் சென்றால், கொடைக்கானல் எலிவால் அருவி போல ஒரு பேசினிலிருந்து தண்ணீர் நிரம்பி கொட்டிக் கொண்டேயிருக்கும்; இது வேண்டாம் என்று அடுத்ததற்குப் போனால் பேசினே இருக்காது! இதுவும் வேண்டாம் என்று அடுத்தது போனால், இன்னொருவர் ‘ஸ்டார்ட்டிங் டிரபிளுடன்’ பிரஷர் கூடி நின்றிருப்பார். கடைசியாக உள்ளதை நோக்கிப் போக வேண்டாம், கால்களைத் தரையே இழுத்துத் தள்ளிவிடும் - ஆம், பொதுக் கழிப்பறைகளுக்கே உரிய மஞ்சள் நிறப் பாசி வழுக்கல் உங்களை வரவேற்கும்; பேசினை அடைந்த மதர்ப்பில் ‘வேலையைத் தொடங்கினால்’, காலைச் சுற்றியே நீர் சிதறும். பேசினுக்கும் குழாய்க்கும் விவாகரத்தாகி, ‘போவதெல்லாம்’ நம் காலடியிலேயே சேர்கிறார்போல அற்புதமான வடிகால் அமைப்பு! அறை முழுக்க ‘கான்சட்ரேடட் யூரிக்’ அமில மணம்.

இந்த பேசின்களுக்கு எதிர் வரிசையில்தான் ‘டூ பாத்ரூம்’கள். கீழ் பாதியிலும் பாதி இற்றுப்போன கதவின் அடியிலிருந்து திடீரென டப்பாவோடு ஒரு கை நீளும். “தண்ணி பத்தல, கொஞ்சம் புடிச்சுக் கொடுபா” என்று குரல் வரும். பொதுக்கழிப்பறை என்றால் தொட்டியில் தண்ணீரை நிரப்பி, அடி பிய்ந்துபோன அல்லது கைப்பிடி இல்லாத டப்பாவை அதில் மிதக்க விட வேண்டும் என்று பொதுக்கழிப்பறை வாஸ்து சாஸ்திரம் வலியுறுத்திக் கூறியிருக்கிறது. எனவே வருகிற, போகிற ஆட்கள் ஒருவருக்கொருவர் உதவிக்கொள்ள வேண்டும்.

உள்ளே ‘போய்விட்டு’ வந்தாலே இரண்டு ரூபாய் வாங்குவார்கள். “ஏம்பா, உள்ள சுத்தம் பண்ணக் கூடாதா, பைப்பெல்லாம் ஒழுகுதே?” என்றால், அலட்சியமாக ஒரு பார்வை பார்த்துவிட்டு, “போயிட்டியா, போ” என்ற பதில் வரும். “போயிட்டியா” (ஒண்ணுக்கு), “போ” (ரயிலைப் பிடிக்க) என்பதன் சுருக்கமே அது. இலக்கியத்தில்கூட இத்தனை அழகான சொற்செறிவையும் வார்த்தைச் சிக்கனத்தையும் பார்க்க முடியாது!

மும்மொழியே செம்மொழி

ரயில் வந்ததும் மும்மொழியிலும் அறிவிப்பார்கள். ரயிலுக்குள்ளும் அறிவிப்பு உண்டு. அதில் ஐ, ஆல், கு, இன், அது, கண் போன்ற வேற்றுமை உருபுகள் தமிழ் அறிவிப்பில் அறவே இருக்காது. உதாரணத்துக்கு, “சென்னை சென்ட்ரல் இருந்து திருவள்ளூர் செல்லும் 9 பெட்டிகள் கொண்ட மெதுவான வண்டி இது” என்பார்கள். ‘சென்ட்ரலில் இருந்து’ என்று அல் விகுதி சேர்க்கையே கிடையாது. அடுத்து வரும் ரயில் நிலையத்தை அறிவிக்கும்போது இந்தியில் ‘ஹே’ சேர்ப்பார்கள். இந்த ‘ஹே’ தமிழர்களுக்கெல்லாம் கவலையை மறந்து சிரிக்கவைக்கும். அண்ணனூர் ஹே! ஆவடி ஹே! அரக்கோணம் ஹே!

வழியில் பல நந்திகள்

சில விநாடிகள் தாமதித்தால் பெட்டிகள் நிரம்பிவிடும். அடுத்த ரயில் நிலையத்தில் யாரோ நலங்கு வைக்கக் காத்திருப்பதைப் போல வழியிலேயே 6 பேர் இரண்டு பாதங்களையும் சேர்த்து வைத்துக்கொண்டு, குத்துக்காலிட்டு உட்கார்ந் திருப்பார்கள். “இப்படி வழியில் உட்கார்ந்தால் எப்படிப்பா ஏறுவது?” என்று யாராவது கேட்டால், “பரவால்ல, பாத்துப் போ சார்” என்பார்கள். அவசரத்தில் யாராவது காலை மிதித்துவிட்டால், மூன்று தலைமுறைக்கு) திட்டித் தீர்ப்பார்கள். இதில் வாத்ஸ்யாயனரின் காமசூத்திரத்திலிருந்து அப பிரயோகங்களும் சேர்ந்துகொள்ளும்!

ஒரு வழியாக உள்ளே ஏறிவிட்டால், சுருக்குக் கயிறுகள் போன்ற மரக் கைப்பிடிகள் மேலே தொங்கிக்கொண்டிருக்கும். அவற்றில் பல லாவகமாகப் பிய்த்தெடுக்கப்பட்டு, இரும்புக் கம்பி மட்டும் பசுமாட்டுக் காம்பு போல கைக்குப் பற்றுதலாக இருக்கும்.

காரணம் ஏன் கண்ணே?

பிளாட்ஃபாரத்தில் எப்போதாவது ரயில்வே போலீஸ், ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸைக் கும்பலாகப் பார்த்தால் அது ஆகஸ்ட் 15, ஜனவரி 26 என்று உறுதி செய்துகொள்ளலாம். மற்ற நாட்களில் ஓரிருவரைப் பார்த்தால் அவர்கள் உண்டு, அவர்கள் வேலை உண்டு என்று போவார்களே தவிர, ரயில் பெட்டிக்குள் எட்டிப்பார்த்து யாரையும் எதையும் கேட்பது கிடையாது. அடுத்தவர் விவகாரங்களில் தலையிட விரும்பாத, தலையிடாக் கொள்கைதான் அவர்களுடையது.

பெரும்பாலான நாட்களில் புறநகர் மின்சார ரயில்கள் அரக்கோணம் மார்க்கத்தில் தாமதமாகத் தான் வரும். சனி, ஞாயிறு, தேசிய விடுமுறை நாட்களில் மட்டும் குறித்த நேரத்துக்கு வரும். காரணம், அன்று மூத்த அதிகாரிகளுக்கெல்லாம் விடுமுறை! புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்.

பிச்சை எடுப்போர், இச்சைக்கு அழைப்போர், தின்பண்டம் விற்போர், தின்றவர்களுக்குச் சளி, இருமல் வராமல் காக்க இஞ்சிமுரப்பா தருவோர், காய்ச்சல், ஜுரம், தலைவலிக்கு நீலகிரி தைலம் விற்போர், டாக்டர்களையே சந்திக்க வேண்டிய அவசியம் இல்லாதபடிக்கு கைவல்ய புத்தகம் விற்போர், பகுத்தறிவுள்ள தமிழனுக்குப் பொது அறிவு புகட்டப் புத்தகம் விற்போர், பெண்ணுக்குத் தாலி வாங்க மஞ்சள் புடவையுடன் வந்து மொய் கேட்போர், “எங்க அம்மாவுக்கு நடக்க முடியாது (அரசியல் அம்மா இல்லை), அப்பாவால வேலைக்குப் போக முடியாது, எனக்குக் கண் தெரியாது, என் பெண்டாட்டிக்குச் சமைக்க முடியாது, நீங்க பாத்து எனக்குக் கொடுத்தாதான் தர்மம்” (கொடுக்க மறுப்பது அதர்மம்) என்று அதிகாரப் பிச்சை கேட்போர் என்று பலரால் ஆக்கிர மிக்கப்பட்டதே புறநகர் மின்சார ரயில்.

கொசுக்கடி கொடுந்தண்டனை

மாலை 7 மணிக்குப் பிறகு எந்தப் பயணியும் ரயில் நிலையங்களில் அநாவசியமாகப் பொழுதைக் கழிக்க முடியாதபடி ‘இயற்கையான ஏற்பாடு’ஒன்றையும் நிர்வாகம் செய்திருக்கிறது. அதுதான் கடுமையான கொசுக்கடி. லஞ்சம், ஊழல் போன்ற குற்றச்சாட்டுகளின் பேரில் கைது செய்கிறவர்களை போலீஸ் லாக்கப்பில் அடைப்பதற்குப் பதில் சென்ட்ரல், பெரம்பூர், வில்லிவாக்கம், அம்பத்தூர், ஆவடி போன்ற ரயில் நிலையங்களில் மாலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை பெஞ்சில் உட்காரும் சாதாரண தண்டனை கொடுத்தாலே போதும், மிகவும் வருந்துவார்கள். அதன் காரணமாகவே திருந்துவார்கள்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

10 hours ago

கருத்துப் பேழை

10 hours ago

கருத்துப் பேழை

10 hours ago

கருத்துப் பேழை

12 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

மேலும்