டெனமென்ட் அருங்காட்சியகம். நியூயார்க் நகரிலேயே எனக்கு மிகவும் பிடித்தமான இடங்களில் ஒன்று. அமெரிக்காவின் வடக்குக்கும் தெற்குக்கும் இடையில் உள்நாட்டுப் போர் நடந்தபோது, குடியேற்ற உரிமை கோரி அலையலையாக வந்த மக்களைத் தங்கவைக்கப் பயன்பட்ட பெரிய மாளிகை அது.
எப்படியாவது இந்த நாட்டின் குடிமக்கள் ஆகிவிட மாட்டோமா என்ற ஏக்கத்துடன் ஆயிரக் கணக்கான மக்கள் குடும்பம் குடும்பமாகப் பரிதவிப்போடு காத்திருந்த அந்த நாட்கள் அனைவருக்கும் நினைவுக்கு வரும். நாடு வேறு, மொழி வேறு, கலாச்சாரம் வேறு என்றாலும் புதிய நாட்டில் நாமும் குடிமக்களாக அங்கீகரிக்கப்பட வேண்டுமே என்ற வேண்டுதலுடன் பலர் காத்திருந்த இடம் இது.
ஒபாமாவின் முடிவுக்கு ஆதரவு
காத்திருக்கும் பல லட்சக் கணக்கான அமெரிக்கவாசிகளுக்கு நிரந்தரக் குடியுரிமை வழங்க பரிசீலிப்பது என்ற முடிவை அதிபர் பராக் ஒபாமா எடுத்ததுமே நான் ஆர்வமாக ஆதரித்தேன். மனிதர்களின் கண்ணியத்தைக் காக்கும் எளிதான நிர்வாக நடவடிக்கை இதுவாகத்தான் இருக்க முடியும்.
அமெரிக்காவின் எல்லைகள் திறந்தே இருக்க வேண்டும், யார் வேண்டுமானாலும் வந்து குடியேறிக்கொள்ளட்டும் என்று நானோ பிற முற்போக்காளர்களோ கருதவில்லை. பால்டிஸ்ஸி குடியிருப்பில் முக்கியமான ஒன்றை நீங்கள் இப்போதும் பார்க்க முடியும்; சுவரில் மாட்டப்பட்டிருக்கும் முன்னாள் அதிபர் பிராங்க்ளின் டி. ரூஸ்வெல்ட்டின் படம்தான் அது. ரூஸ்வெல்ட் கொண்டுவந்த சமூக - பொருளாதார ஏற்பாடு அமெரிக்காவைச் சிறந்த வாழிடமாக மாற்றியது. முதலாம் உலகப் போருக்குப் பிறகு, அமெரிக்காவில் குடியேற விதிக்கப்பட்ட சில கட்டுப்பாடுகள் இல்லாவிட்டால் இது சாத்தியமாகியிருக்காது. அமெரிக்காவில் கொண்டுவரப்பட்ட நல்வாழ்வு நடவடிக்கைகளால் கவரப்பட்ட மக்கள் லட்சக் கணக்கில் இந்த நாட்டை நோக்கிப் படையெடுக்கத் தொடங்கினார்கள். அப்படியே அனைவரையும் அனுமதித்திருந்தால் நிலைமை கட்டுமீறிப் போயிருக்கும்.
எல்லோரையும் அமெரிக்காவுக்குள் அனுமதித்திருந்தால் குறைந்த கூலிக்கு வேலை செய்வோர் எண்ணிக்கை அதிகரித்து, எவருமே என்றைக்குமே குடியுரிமை பெற்று முன்னுக்கு வந்திருக்க முடியாது. தேர்தலிலும் அவர்களுக்கு வாக்குரிமை கிடைத்திருக்காது. கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால்தான் ஏற்கெனவே வந்து குடியுரிமைக்காகக் காத்திருந்தவர்கள், நிபந்தனைகளைப் பூர்த்திசெய்த பிறகு, படிப்படியாகக் குடியுரிமை பெற்றார்கள். வாக்குரிமை இல்லாமல் வெறும் குடியேறிகளாக இருந்தவர்களின் எண்ணிக்கை நாளாவட்டத்தில் குறைந்து, அவர்கள் குடியுரிமை பெற்றதுடன் அரசின் நல்வாழ்வு நடவடிக்கைகளின் பலன்களையும் பெறத் தொடங்கினார்கள்.
குழந்தைகளைப் பாதிக்கக் கூடாது
குடியேற்றக் கொள்கையை வகுப்பதிலும் அமல்படுத்துவதிலும் பிரச்சினை இருக்கிறது. ஆனால், ஒரு விஷயத்தில் உங்களுக்குள் தெளிவு ஏற்பட வேண்டும்; அமெரிக்காவில் இருக்கும் குடியுரிமையற்ற குழந்தைகளின் எதிர்காலம்பற்றியதுதான் அது. அமெரிக் காவின் குடியுரிமையைப் பெற்றிருக்கா விட்டாலும் எல்லா வகையிலும் அதன் குடிமக்களைப் போலவே வாழ்ந்துவரும் அவர்களுடைய கண்ணியம் காக்கப்பட வேண்டும். அதைத்தான் ஒபாமாவின் முன் முயற்சி உணர்த்துகிறது.
சின்னஞ்சிறு மழலையாக இருந்த போதிலிருந்தே இந்த நாட்டுக்குள் வந்த - ஆம், சட்டவிரோதமாக வந்த - குழந்தைகளின் எண்ணிக்கை 10 லட்சத்துக்கும் மேலிருக்கும். அப்போது சட்டவிரோதமாக வந்த பெரியவர்களுக்கு இந்த நாட்டில், இங்கேயே பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கை மேலும் பல லட்சங்கள் இருக்கும். அவர்கள் இங்கேயே பிறந்ததால் உங்களுக்கும் எனக்கும் உள்ள உரிமைகள் அனைத்தும் அவர்களுக்கும் உண்டு. குடியுரிமை பெற்ற அமெரிக்கர்களின், பெற்றோருக்குக் குடியுரிமை இல்லை என்றால் எப்படி?
குடியேற்ற உரிமைக்காகக் காத்திருப் போரையும் அவர்களுடைய குடும்பங் களையும் என்ன செய்வது? நம்மிடையே சில அரசியல் தலைவர்கள் இருக்கிறார்கள்; சட்டவிரோதமாகக் குடியேறியவர்களை, இரும்புக்கரம் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்து கிறார்கள். சிறு குழந்தைகளாக வந்து இளைஞர் களாகிவிட்ட - வேறு ஊரோ, நாடோ தெரியாத - ஆயிரக் கணக்கானவர்களைக் கட்டாயப்படுத்தி எங்காவது அனுப்பிவிட வேண்டுமா? இந்த நாட்டவர்தான் என்று நிரூபிக்க எந்த வித ஆவணமும் இல்லாத பெற்றோரைப் பிரித்து வெளியேற்றிவிட்டு, அவர்களுடைய குழந்தைகள் இங்கேயே எங்காவது தலைமறைவாக வாழட்டும் அல்லது தங்களைத் தாங்களே பார்த்துக் கொள்ளட்டும் என்று விட்டுவிட வேண்டுமா?
வேறு எந்தக் காரணத்துக்காக இல்லா விட்டாலும் சுயநலம் கருதியாவது நாம் அவர்களுக்குக் குடியுரிமை தந்தே தீர வேண்டும். குடியேற்ற உரிமைக்காகக் காத்திருக்கும் இன்றைய குழந்தைகள்தான் நாளைய தொழிலாளர்கள், வரி செலுத்து வோர், நம்முடைய அண்டை-அயலார். அவர்கள் எப்போதும் இருளிலேயே இருக்க வேண்டும் என்று நாம் நினைத்தால் அவர்களுடைய வீடுகளில் அமைதியும் நிம்மதியும், நம்பிக்கையும் இருக்காது. நல்ல படிப்பையும் தொழில்திறனையும் பெறும் வாய்ப்பை அவர்கள் இழந்துவிடுவார்கள். அவர்களால் பொருளாதாரத்துக்குக் குறைந்த பங்களிப்பையே செய்ய முடியும். சமூகத்திலும் குறைந்த அளவுக்கே அவர்களுடைய பங்களிப்பு இருக்கும்.
குடியேறிகளான என்னுடைய பெற்றோர் களை அமெரிக்கா அரவணைத்துக் குடி யுரிமையை வழங்கியதால்தான் அவர்களால் நன்றாக வாழ முடிந்தது. அவர்களின் புதல்வனான நான் ஒரு அமெரிக்கனாக, பொருளாதாரத்துக்கான நோபல் பரிசைப் பெற்றிருக்கிறேன். அதுபோன்ற உரிமையை இன்றைய இளைஞர்களுக்கும் தருவதுதான் சரியான நடவடிக்கை. அதிபர் ஒபாமாவை அதற்காகப் பாராட்டுவோம்.
தி நியூயார்க் டைம்ஸ், தமிழில்: சாரி
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
1 hour ago
கருத்துப் பேழை
1 hour ago
கருத்துப் பேழை
1 hour ago
கருத்துப் பேழை
2 hours ago
கருத்துப் பேழை
22 hours ago
கருத்துப் பேழை
22 hours ago
கருத்துப் பேழை
22 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago