இன்னொரு இந்தியா 10 - மனசாட்சியுடன் ஒரு உரையாடல்

By சமஸ்

ப்படியென்றால், வளர்ச்சி தேவை இல்லையா? நம்முடைய வீடுகள் காங்கிரிட்டுக்கு எங்கிருந்து ஜல்லி வரும், ஜன்னல்களுக்கு எங்கிருந்து இரும்புக் கம்பிகள் வரும், நிலைக்கதவுகளுக்கு எங்கிருந்து மரப் பலகைகள் வரும், அரசாங்கத்துக்கு எங்கிருந்து வருமானம் வரும்? ஆதிவாசிகள் காட்டின் மீதும் மலைகள் மீது கொண்டிருக்கும் நம்பிக்கையைவிட பொருளாதார வளர்ச்சி முக்கியமானதல்லவா? எதாவது ஓரிடத்தில் அல்லது யாராவது ஒருவர் இழப்பைச் சந்தித்துதானே தீர வேண்டும்?

‘இந்தியாவின் வண்ணங்கள்’ தொடர் பயணத்தின்போது சந்தித்த ஒரு ஆதிவாசியிடம் இந்தக் கேள்வியைக் கேட்டபோது அவர் சொன்ன பதில் என்ன தெரியுமா?

“திருப்பதி மலையில் இரும்புத் தாது கிடைக்கிறது என்றால், நீங்கள் அதை உடைத்துச் சுரங்கமாக்க சம்மதிப்பீர்களா? வளர்ச்சிக்கு யாராவது ஒருவர் அல்லது எதாவது ஓரிடம் இழப்பைச் சந்தித்துதான் ஆக வேண்டும் என்பதெல்லாம் சரிதான். யார் அந்த ஒருவர்? எது அந்த இடம்? உண்மை என்னவென்றால், இழப்பைச் சந்திப்பவர்கள் நாங்கள். அதன் பலன்களை அனுபவிப்பவர்கள் நீங்கள். உங்கள் வீடுகளுக்குத்தான் காங்கிரிட்டும் இரும்பு ஜன்னல்களும் முரட்டுக் கதவுகளும் தேவைப்படுகின்றன; எங்கள் வீடுகளுக்கு இல்லை.”

கொஞ்சம் இடைவெளி விட்டுச் சொன்னார்: “காலங்காலமாக நாங்கள் இங்கு வாழ்கிறோம். எதையும் அழிக்காமல், சிதைக்காமல் எப்படி வாழ்வது என்று எங்களுக்குத் தெரியும். நம்முடைய இந்திய மக்களுக்கும் அரசாங்கத்துக்கும் தேவையானதை இன்னும் பல தலைமுறைக்கு இங்கிருந்து எடுத்தால்கூட இங்குள்ள வளங்கள் குறையாது. ஆனால், தனியார் முதலாளிகள் பண வேட்கையோடு, ஒட்டுமொத்த உலகத்தின் பசிக்கும் இங்கிருந்து கொள்ளையடிக்கத் துடிக்கிறார்கள். எங்களை விரட்டிவிட்டு எங்கள் தேவதைகளைக் கொல்ல நினைக்கிறார்கள். நாட்டை ஆளும் அமைச்சர்களும் அதிகாரிகளும் அவர்களுக்கு உடந்தையாக இருக்கிறார்கள்...”

தூக்குவாளியில் வைத்திருந்த அவித்த கிழங்கில் ரசம் ஊற்றிப் பிசைந்து, வாளியின் மூடியில் கொஞ்சம்போலச் சாப்பிடக் கொடுத்த அந்த அற்புதமான மனிதரின் பார்வைக்கு என்னால் அதற்குப் பின் பதில் அளிக்க முடியவில்லை.





பெரிய சவால்தான் இது. ஒரு வெறி பிடித்த பேய்போலத் துரத்தும், ஒட்டுமொத்த உலகின் போக்குக்கும் நடுவே இந்தியா தனக்கென ஒரு தனிப் போக்கைக் கண்டடைவது. மூன்று நூற்றாண்டுகளில் அவரவருக்கு விதிக்கப்பட்ட காலங்களில் உறைந்திருக்கும் தன்னுடைய குடிமக்களிடையே ஒரு நியாயமான சமநிலையைக் கொண்டுவருவது. எப்பேர்பட்ட தொலைநோக்கும் அர்ப்பணிப்பும் கொண்ட தலைவர்களும் அலுவலர்களும் நமக்குத் தேவை? எப்படியான அறம் அவர்களைத் தார்மிகரீதியாக இயக்க வேண்டும்?

இனிப்புச் சாப்பிடும் ஒரு குழந்தைக்கு அறிவுரை சொல்லச் சொல்லி ஒரு தாய் அழைத்து வந்தபோது, ஒரு வாரம் கழித்து அவர்களைத் திரும்ப வரச் சொல்லி, இடைப்பட்ட காலத்தில் தான் இனிப்புச் சாப்பிடுவதை நிறுத்திய பின் அந்தக் குழந்தைக்கு அறிவுரை சொன்னாராம் காந்தி. நியாயவான்கள் தார்மிக நெறிகளுக்கும் விழுமியங்களுக்கும் கொடுக்க வேண்டிய மதிப்புக்கு உதாரணமாகப் பள்ளிகளில் சொல்லப்படும் கதை இது. இன்றைக்கு நமக்கு வாய்த்திருப்பவர்கள் யார்?

எந்த வேதாந்தா நிறுவனம் காட்டைச் சூறையாடுகிறது என்று மக்கள் கதறுகிறார்களோ, அந்த வேதாந்தா நிறுவனம்சார் நிறுவனத்தில் இயக்குநர்களில் ஒருவராக இருந்தவர் ப.சிதம்பரம். பின்னாளில், நிதியமைச்சராகவும் உள்துறை அமைச்சராகவும் இந்தியக் காடுகளில், ‘பச்சை வேட்டை’யை ஊக்குவித்தவர் அவர்தான். ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின் காலகட்டத்தில் மட்டும், அவருடைய நடவடிக்கைகளால், வேதாந்தா நிறுவனம் என்னென்ன பலன்களையெல்லாம் அடைந்தது, எப்படியெல்லாம் வளர்ந்தது என்கிற பிணைப்புச் சங்கிலி களெல்லாம் இன்றைக்கும் நூலகங்களில் பத்திரிகைகளில் உயிரோடு இருக்கின்றன.

அடித்தட்டு மக்களின் கடைசி நம்பிக்கை இந்நாட்டில் உச்ச நீதிமன்றம். காட்டைச் சுரண்டித் தின்னும் சுரங்கத் தொழில் தொடர்பான கோடிக்கணக்கான மக்களின் முறைப்பாடுகள் குவிந்து கிடக்கும் இடம். உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்த ஹெச்.கே. கபாடியா அதே வேதாந்தா நிறுவனம்சார் நிறுவனத்தின் பங்குகளை வைத்திருந்தார். அவர் அளித்த தீர்ப்புகளையும் அவர் மீதான குற்றச்சாட்டுகளையும் வரலாற்றிலிருந்து அழித்துவிட முடியாது.

வெறும் மூன்றரை மணி நேரத்தில், 83 பேருக்கு ஒரே மருத்துவர் குடும்பக் கட்டுப்பாட்டு அறுவைச் சிகிச்சை செய்வதும், அதில் 12 பேர் செத்துப்போவதும், சத்தீஸ்கர் முதல்வர் ரமண் சிங்கும் சுகாதாரத் துறை அமைச்சர் அகர்வாலும் துளிச் சலனமின்றி உலாவருவதும்...

எல்லோருமே சட்டப்படி தப்பித்துக்கொள்ள வழியுண்டு. தர்மப்படி? தார்மிக அறநெறிகளின்படி?

நிச்சயமாக இன்றைக்கு நம் நாடு இருக்கும் யோக்கியதையில் அந்த ஆதிவாசிக்கு நியாயமான பதிலைச் சொல்லவே முடியாது!



மோடி அரசு அடுத்து ஒரு காட்டு வேட்டையை நடத்துவதில் உறுதியாக இருக்கிறது. உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் நடவடிக்கைகள் கட்டியம் கூறுகின்றன. ரூ. 10,000 கோடியில் நீளச் சாலைகள், ரூ. 3,500 கோடியில் செல்போன் கோபுரங்கள், 400 அதிநவீன காவல் நிலையங்கள், 21 ஆயுதப் பயிற்சிப் பள்ளிகள்...

எல்லாம் எதற்கு? நம்முடைய குடிமக்களை நாமே அழிக்கவா? இந்தப் பக்கம் சாகும் அரசப் படை வீரர்கள் ஆகட்டும், அந்தப் பக்கம் சாகும் மாவோயிஸ்ட்டுகள் ஆகட்டும், நடுவில் சிக்கி அழியும் பழங்குடிகள் ஆகட்டும்... எல்லோருமே இந்நாட்டுக் குடிமக்கள்தானே? சீனாவுடனும் பாகிஸ்தானுடனும் பேச்சுவார்த்தை நடத்த நம் அரசால் முடிகிறது, தன்னுடைய சொந்த மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்த முடியாதா?

பஸ்தர் காடுகளில் தகிக்கும் வன்முறை உண்மையில் ஒரு அறிகுறி. நோய் அதுவல்ல. அரசாங்கம் இதைப் புரிந்துகொள்ள முயல வேண்டும். பள்ளிக்கூடமே போயிராத, ராய்ப்பூரைக்கூடக் கேள்விப்பட்டிராத, தன் வாழ்வில் ஒருமுறைகூட ரயிலைப் பார்த்திராத ஒரு பெரும்கூட்டம் இன்றைக்கு மாவோயிஸ்ட்டுகளின் பின்னணியில் தம் கைகளில் வில்லையும் அம்பையும் ஏந்தி நிற்பது ஆயுதப் புரட்சிக்காகவும் கம்யூனிஸ உலகைப் படைப்பதற்காகவும் அல்ல; அது தன் குலத்தையும் கலாச்சாரத்தையும் வாழிடத்தையும் பறிகொடுக்காமலிருக்க நடத்தும் போராட்டம். இன்றைக்கு பஸ்தர் ஆதிவாசிகள் போராடிக்கொண்டிருக்கும் பிரச்சினைகளின் ஆணி வேர் இந்தியாவைச் சூறையாட வெறியோடு அலையும்கார்பரேட் அரசியலையும் மனிதகுல அழிவோடு துரத்தும் சக்திகளையும் எதிர்த்து நடக்கும் உயிர்ப் போராட்டம். அஹிம்சா வழியிலான சத்யாகிரகப் போராட்டங்களுக்கு நாம் மதிப்பு கொடுத்திருந்தால் அவர்கள் கையில் இந்த ஆயுதங்கள் இருக்காது. அவர்கள் கையில் ஆயுதத்தைத் திணித்த பொறுப்பை நாம்தான் ஏற்றுக்கொள்ள வேண்டும். காந்தி இன்றைக்கு இருந்தால் நிச்சயம் பஸ்தர் பழங்குடிகள் பக்கம்தான் பேசுவார். பெரும்பான்மை இந்தியச் சமூகம் இதைப் புரிந்துகொள்ள முயல வேண்டும்.

காந்திய வழிகளில் இன்றைய ஆட்சியாளர்களுக்கு மதிப்பிருக்க வாய்ப்பில்லை. ஆயுததாரியான மைக்கேல் எஃப் ஷூயரின் குரலுக்காவது அவர்கள் செவி சாய்க்க வேண்டும். மும்பைத் தாக்குதல் நடந்த சமயம். ஒசாமா பின்லேடனைத் தேடும் சி.ஐ.ஏ. பிரிவின் தலைவராக இருந்த மைக்கேல் எஃப் ஷூயர் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அதன் தலைப்பு இதுதான்: ‘அமெரிக்காவைப் பின்பற்றாதீர்’.

அந்தக் கட்டுரையில் ஷூயர் எழுதுகிறார்:

“அமெரிக்க அரசு அல் - காய்தாவின் தாக்குதல்களை செப்டம்பர் 11 வரை முக்கியமானதாகவே எடுத்துக்கொள்ளவில்லை. பிறகு, மிகவும் விடலைத்தனமாக தனது பதிலடிகளைக் கொடுத்தது. இஸ்லாமிய நாடுகளில் அமெரிக்கா கடைப்பிடிக்கும் வெளியுறவுக் கொள்கைகளுக்கு எதிர்வினையாக நடத்தப்பட்ட, திட்டமிட்ட உயர் தரமான, செம்மையான ராணுவத் தாக்குதல்கள்களாக செப்டம்பர் 11 தாக்குதல்களைப் பார்க்க அமெரிக்கத் தலைவர்கள் மறுத்தனர். மாறாக, சுதந்திரம், ஜனநாயகம், ஆண்-பெண் சமத்துவம் ஆகியவற்றை வெறுக்கும், வெறிபிடித்த, தன்னைத்தானே மாய்த்துக்கொள்ளத் தயாராக இருக்கும் ஓர் எதிரியின் செயல்பாடாகவே அதைப் பார்த்தனர். ஆகையால்தான், அல்-காய்தா மற்றும் அதன் சகாக்களுடனான போரில் அமெரிக்கா தொடர்ந்து தோற்றுவருகிறது. இந்தியா வளர்ந்த, முதிர்ச்சி பெற்ற ஒரு மனிதரைப் போல, இந்தச் சவாலை அணுக வேண்டும் எனில், அது முதலில் இந்தத் தாக்குதல்காரர்கள் கண்மூடித்தனமாகத் தாக்கும் வெறியர்கள் அல்ல என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும். இந்தியா தொடர்ந்து தாக்கப்பட இந்திய அரசின் நடவடிக்கைகளும் தூண்டுதல் என்பதை உணர வேண்டும்!”

பிரச்சினைகள் வெவ்வேறாக இருக்கலாம். நீதி ஒன்றுதான். புறக்கணிப்பால் உருவாகும் வன்முறையை வெறுப்பால் ஒருபோதும் வெல்ல முடியாது!

(நிறைந்தது)

சமஸ், தொடர்புக்கு: samas@thehindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

19 hours ago

கருத்துப் பேழை

15 hours ago

கருத்துப் பேழை

18 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்