நிலம் நிகழ்த்தும் சுனாமி

By வறீதையா கான்ஸ்தந்தின்

சுனாமிப் பேரழிவுக்குப் பிறகான 10 ஆண்டுகளில் மீனவர் வாழ்வு மேம்பட்டிருக்கிறதா?

நேற்று அடித்து ஓய்ந்தது போலிருக்கிறது 2004-ல் இந்தியப் பெருங்கடல் சுனாமி. நிலநடுக்கம், புயல், வெள்ளப்பெருக்கம் போன்ற பேரிடர்கள் நமக்குப் பரிச்சயமானவையே. எனினும், சுனாமி என்னும் சொல் 2004-ல்தான் நம் மொழிவழக்கில் நுழைந்தது. நம் கற்பனைக்கு அப்பாற்பட்ட அந்நிகழ்வும் அதன் தாக்கமும் நமக்குப் புதியவை.

11 நாடுகளைப் பாதித்த 2004 சுனாமி, தமிழ்நாட்டுக் கடற்கரையில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட மனித உயிர்களைப் பலிவாங்கியதுடன் எஞ்சி நின்ற கடலோர மக்களின் வாழ்வாதாரத்தையும் வீடுகளையும் பறித்துச் சென்றுவிட்டது. கடல் நிகழ்த்திச் சென்ற சுனாமியைத் தொடர்ந்து, நிலம் மற்றொரு சுனாமியை நிகழ்த்தியது - கருணைச் சுனாமி. கடல் சுனாமியின் தாக்குதலையும் தாக்கங்களையும் அரசும், அறிவியல் சமூகமும் எதிர்கொள்ள இயலாது திணறிநின்றது போலவே, நிலத்தின் கருணைச் சுனாமியையும் முறையாகக் கையாளத் தவறிவிட்டது என்றே சொல்ல வேண்டும்.

சுனாமிப் பேரிடர் ஓர் அசாதாரண நெருக்கடிச் சூழல் என்பதை நாம் அறிவோம். எனவே, மீட்பு, நிவாரண மறுகட்டுமானக் கட்டிடங்களில் நேர்ந்த சிறுசிறு குறைபாடுகளைத் துருவிப் பார்த்துக்கொண்டிருப்பது அர்த்தமற்றது. பேரிடரிலிருந்து மீண்ட மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பும் உரிமை கொண்டவர்கள். சுனாமியால் பாதிப்புக்குள்ளான தமிழகக் கடலோர மக்களின் வாழ்வு கடந்த 10 ஆண்டுகளில் மறுகட்டுமானம் பெற்றுள்ளதா? விடை கண்டாக வேண்டிய கேள்வி இது. மறுகட்டுமானத்தை நிகழ்த்துவற்குக் கட்டுடைத்தல் மிக முக்கியமான தேவை. பேரிடர் பாதித்த மக்களின் முந்தைய வாழ்க்கை முறையைப் புரிந்துகொண்டிருந்தால் மட்டுமே அவர்களின் மறுவாழ்வை மீளக் கட்டமைக்க உதவ முடியும்.

தவறிய இலக்கு

தமிழ்நாட்டுக் கடற்கரையில் சுனாமி நிவாரணங்கள் தொடங்கி ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொண்டுநிறுவனங்கள் கடற்கரைகளில் நுழைந்தன. திசையெட்டிலுமிருந்து குவிந்துகொண்டிருந்த நிவாரண உதவிகளை மேலாண்மை செய்வது அரசும் தொண்டு நிறுவனங்களும் ஏதிர்கொண்ட மிகப் பெரிய சவாலாக இருந்தது. அளவிட முடியாத உதவிகள் குவிந்தபோதும் நிவாரணங்கள் தோல்வியில் முடிந்தது ஏன்? பல ஆயிரம் கோடிகளைக் கொட்டிய பிறகும் சுனாமி மறுகட்டுமானம் ஏன் இலக்கை எட்ட முடியவில்லை?

இன்றைக்குப் பெரும்பான்மையான கடற்கரைக் கிராமங்களில் திணைக் குடிநிலத்தின் அடையாளங்கள் அழிந்துவிட்டன. மறுகட்டுமானத்தின் பல்வேறு கட்டங்களில் அரசு இயந்திரம் இயந்திரத்தனமாகவே நடந்துகொண்டது. இழந்தது எத்தனை பெரிய வீடாயிருப்பினும், அந்த வீட்டில் எத்தனை குடும்பங்கள் வாழ்ந்திருந்தபோதிலும் வீடிழந்தவர்களுக்கு ஒரே ஒரு வீடு என்பதில் அரசு பிடிவாதமாக இருந்தது. பேரிடர் அபாயத்தைச் சொல்லி, ஏராளமான கடற்கரைக் குடியிருப்புகள் ஐந்து, பத்து கிலோ மீட்டருக்கு அப்பால் நகர்த்தப்பட்டன. கடலுடனான உறவு அறுந்துபோனால், பாரம்பரிய மீனவர்களின் வாழ்வு என்னாகும் என்று எந்த அதிகாரியும் சிந்திக்கவில்லை.

குடிநீர் முதலிய அடிப்படைத் தேவைகள் முதல் பிள்ளைகளின் கல்வி, வாழ்வாதாரம் வரை எல்லாவற்றிலும் சிக்கல்கள் ஏற்பட்டன. இடம்பெயர்க்கப்பட்ட மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாயினர்.

தாய்-பிள்ளை போல

கடலைக் கவனித்தவாறு வாழ்தல் பாரம்பரிய மீனவர்களுக்கு மிக முக்கியமானது. அவர்களின் வாழ்வு கடலைச் சார்ந்த ஒன்று. அவர்கள் கடலுக்கு நெருக்கமாகவே வாழ முடியும். கடலுக்குள் சென்று மீன்பிடித்து வருவது அலுவலக வேலைபோல மீனவர்கள் மணிக்கணக்குப் பார்த்துச் செய்வதல்ல. 24 மணி நேரமும் இவர்கள் மீனவர்களாகவே வாழ்ந்தாக வேண்டும். ‘கடலும் நாங்களும் தாய்-பிள்ளை போல; எங்களுக்கிடையில் சச்சரவுகள் நேர்ந்தாலும் விரைவில் நாங்கள் ஒப்புரவாகிவிடுவோம்’ என்பதே மீனவர்களின் நிலைப்பாடாக இருந்தது.

நில மையப் பார்வை கொண்ட அரசு அதிகாரிகளுக்கும் கொள்கை வகுப்பாளர்களுக்கும் புரியாமல் போனது கடலின் தன்மைகள் மட்டுமல்ல, மீனவர்களின் வாழ்க்கையும்தான். சுனாமி அபாயத்தை எதிர்கொள்ள தமிழகக் கடலோரம் நெடுக தடுப்புச்சுவர் கட்டும் எண்ணம்கூட அன்றைய மாநில அரசுக்கு இருந்தது. கிழக்குக் கடற்கரைச் சாலையும் இறால் பண்ணைகளும் பண்ணைச் சுற்றுலா விடுதிகளும் கடலுக்கும் மீனவர்களுக்குமான தொப்புள்கொடி உறவை ஊடறுத்துக்கொண்டிருக்கின்றன.

சேதுக்கால்வாய் என்னும் அபாயம்

கல்பாக்கம், கூடங்குளம் அணுமின் திட்டங்கள் தவிர, தமிழகக் கடற்கரைகளில் 100 அனல்மின் நிலையங்கள் நிறுவும் திட்டம் மாநில அரசின் பரிசீலனையில் இருக்கிறது. உப்பூர் (இராமநாதபுரம்), செய்யூர் (விழுப்புரம்) போன்று பல இடங்களில் அதற்கான பூர்வாங்க வேலைகள் தொடங்கப்பட்டுவிட்டன. பழவேற்காடு முதல் நீரோடி வரையுள்ள முக்கியமான கடற்கரைகளில் நான் இவ்வாண்டு பயணித்தபோது, நிலம் நிகழ்த்தும் சுனாமியின் தீவிரத்தை, அதன் மோசமான விளைவுகளைக் கண்டேன்.

சுனாமி தாக்கத்தைக் குறைக்க உதவிய பக்கிங்ஹாம் கால்வாய் பழுதுபட்டுக் கிடக்கிறது; தூத்துக்குடி, ராமநாதபுரம், கடற்கரைகளைச் சுனாமி தாக்கத்திலிருந்து பாதுகாத்த மன்னார்கடல் பவளப் பாறைகளை சிதைத்து சேதுக்கால்வாய் தோண்டத் தொடங்கினார்கள். அத்திட்டம் இப்போதைய மைய அரசின் மறுபரிசீலனையில் உள்ளது.

நிலம் நிகழ்த்தி வரும் சுனாமிதான் கடல் பழங்குடி களுக்குப் பெரும் அச்சத்தை விளைவித்துக்கொண் டிருக்கிறது. கடலுக்குள் நிகழ்வதென்ன என்பதை நாம் அவதானித்ததில்லை. அறிந்துகொள்ள எத்தனித்ததும் இல்லை. நாம் அறிந்ததெல்லாம் ஆதிக்கச் சமூகங்களின் கற்பிதங்களும் ஊடகங்களின் கற்பனைகளும்தான்.

எல்லாமே பேரிடர்தான்

சுனாமி மறுகட்டுமானத்தின்போது பண்பாட்டு இடையீடுகள் நிகழவேயில்லை. இந்தப் பத்து ஆண்டுகளில் கொள்கைத் தளங்களில் மீனவர்களுக்கு நேர்ந்த மீறல்களையும் வன்முறைகளையும் எழுத இங்கே இடம் போதாது. கடற்கரை மேலாண்மை அறிவிக்கை (2007), மீன்வள ஒழுங்காற்று மசோதா (2009), பாரம்பரிய மீனவர் வாழ்வாதாரப் பாதுகாப்பு மசோதா (2009), மீன் இறக்குமதிக் கொள்கை எனத் தொடங்கி, கடந்த ஆகஸ்ட் 2014-ல் வெளியிடப்பட்ட ஒருங்கிணைந்த மீன்வளக் கொள்கை அறிக்கை (2014) வரை எல்லாமே மீனவர்களுக்கு நேரும் பேரிடர்கள்தாம்.

மீண்டும் மீண்டும் பாரம்பரியக் கடலோர மீனவர்களுக்குச் சொல்லப்படும் ஒற்றைவரிச் செய்தி - கடலையும் கடற்கரையையும் விட்டுவிட்டு நிலத்தை நோக்கி அவர்கள் பெயர்ந்து போய்விட வேண்டும் என்பதே. தமிழ்நாடு அரசு செயல்படுத்திய சுனாமி மறுகட்டுமானத் திட்டங்களில் பன்னாட்டு வேளாண் வளர்ச்சி நிதியம் (IFAD) வழங்கிய பெரும் நிதியுதவியும் ஒன்று. இத்திட்டத்தின்கீழ் தமிழகக் கடற் கரையில் தேர்ந்தெடுக்கப்பட்ட 200 கிராமங்களின் பட்டிய லில் கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள இராஜக்கமங்கலம் துறையும் முள்ளூர்துறையும் உட்படும்.

இந்த இரண்டு கிராமங்களிலுள்ள மீனவர்களுக்கு இந்தத் திட்டத்தின் பயன்கள் எதுவும் சென்றடையவில்லை என்கிறார்கள் அங்குள்ள மக்கள். கொள்கை வகுக்கும் தளங்களில் மீனவர்களுக்குப் பங்கேற்பு வழங்குவது உள்ளிட்ட அதன் திட்ட இலக்குகளில் எதுவும் நிறைவேறவில்லை.

தமிழகக் கடற்கரை நெடுக நான் மேற்கொண்ட பயணங்களின்போது இரண்டு விசயங்கள் என் கவனத்தை ஈர்த்தன. ஒன்று, சாதிகளாய்ப் பிரிந்துகிடக்கும் மீனவ இனக் குழுக்களின் பண்பாட்டு ஒருமை; இரண்டு, பிரதேச வேறுபாடுகளைக் கடந்து அவர்களின் வாழ்வாதார, வாழிடச் சிக்கல்களில் நிலவும் பொதுமை. மீனவர்களின் வாழ்க்கையையும் வழக்காறுகளையும் வடிவமைப்பது ஒரே கடல்தான். ஒரே மாதிரியான நெருக்கடிகளுக்கு உட்படுத்தப்படுவதே அவர்களது வாழ்க்கைச் சிக்கல்களின் பொதுத்தன்மைக்குக் காரணமாகிறது.

சுனாமி மறுகட்டுமானத்துக்கு எத்தனை ஆயிரம் கோடிகள் கொட்டப்பட்டன, எத்தனை நூறு நிறுவனங்கள் அவர்களுக்காக உழைத்தன என்பதையெல்லாம் கடந்து விஸ்வரூபம் எடுக்கும் கேள்வி ஒன்றே ஒன்றுதான்:

பாரம்பரிய மீனவர்கள் கடலையும் கடற்கரையையும் விட்டு வெளியேறிவிட வேண்டும் என்றால் இந்தப் பத்தாண்டு சுனாமி மறுகட்டுமானத்தின் பெறுமதி என்ன? கடற்கரை மக்களை மனித உயிர்களாகக் கருதும் முதிர்ச்சி கொண்ட ஒவ்வொரு தமிழரும் விடை கண்டாக வேண்டிய கேள்வி இது.

- வறீதையா கான்ஸ்தந்தின்,
பேராசிரியர், கடல் ஆய்வாளர்,
தொடர்புக்கு: neidhalveli2010@gmail.com

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE