மெல்லத் தமிழன் இனி... 36 - நீங்கள் குடிப்பது மதுதானா?

By டி.எல்.சஞ்சீவி குமார்

இந்தியாவில் வேத காலத்திலேயே மது இருந்திருக்கிறது. மது உற்பத்தி, விற்பனை, விநியோகம், மது அருந்துவது குறித்தெல்லாம் ஏராளமான விதிகளை வகுத்திருக்கிறது அர்த்தசாஸ்திரம். சங்க காலத்தின் இறுதியில் தமிழர்களிடையே மதுப் பழக்கம் அளவுக்கு மீறிக் காணப்பட்டது. இந்தச் சூழலில்தான் திருவள்ளுவர் கள்ளுண்ணாமை குறித்து எழுதினார்.

முதன்முதலாக எட்டாம் நூற்றாண்டில் அரேபியர்கள்தான் ஒயின் தயாரித்தார்கள். இஸ்லாம் மதுவைத் தடை செய்திருந்தாலும் அதன் வேதியியல் தயாரிப்பு முறையான வடித்தெடுத்தலை வளர்த்தெடுத்தவர்கள் அரேபியர்களே. அதன் பின்பே 13 மற்றும் 14-ம் நூற்றாண்டுகளில் அரேபியாவிலிருந்து மத்திய தரைக்கடல் நாடுகள் முதல் ஐரோப்பா வரை ஆல்கஹால் ஏற்றுமதி செய்யப்பட்டது. இவ்வாறாக, மதுவின் வரலாறு குறித்து ஏராளமான தகவல்களைத் தனது ‘குடிக் கலாச்சாரமும் கலாச்சாரக் குடிகளும்’ என்கிற நீண்ட கட்டுரையில் மிகவும் ஆழமாக எழுதியிருக்கிறார் எழுத்தாளர் ஜமாலன்.

கழிவிலிருந்து தயாராகும் மது!

எழுத்தாளர் ஜமாலன் குறிப்பிடும் நீண்ட வரலாற்றின் அனைத்துக் காலகட்டங்களிலுமே - அனைத்து விதமான மது வகைகளும் உணவுப் பொருட்களிலிருந்தே தயாரிக்கப்பட்டன. பனை மரம், தென்னை மரங்களில் கள் இறக்கினார்கள். பழங்கள், தானியங்கள், காளான், புற்கள், தேன், பூக்கள் போன்றவற்றிலிருந்து மது தயாரித்தார்கள். இன்றும் பெரும்பாலான நாடுகளில் மதுவை உணவுப் பொருட்களிலிருந்துதான் தயாரிக்கிறார்கள்.

ரஷ்யாவின் ஓட்காவை உருளைக்கிழங்கிலிருந்தும், ஸ்காட்லாந்தின் ஸ்காட்ச்சை கோதுமை, மக்காச்சோளத்திலிருந்தும், சீனாவின் மவுத்தாய் மற்றும் ஜப்பானின் சாக்கேவை அரிசியிலிருந்தும், பிரான்சின் ஷாம்பெயினை திராட்சையிலிருந்தும், கோவாவின் பென்னியை முந்திரியிலிருந்தும் தயாரிக்கிறார்கள்.

இந்தோனேஷியா, இலங்கை, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளில் தென்னை, பனைப் பொருட்களிலிருந்தும் மது தயாரிக்கிறார்கள். ஆனால், இந்தியாவில் மகாராஷ்டிரம், புனே, கோவா உள்ளிட்ட ஒரு சில இடங்கள் நீங்கலாக அனைத்து மாநிலங்களிலும் கரும்பு ஆலைக் கழிவான மெலாசஸிலிருந்தே மதுவைத் தயாரிக்கிறார்கள். தமிழகத்தில் நிலைமை அதைவிட மோசம்.

போட்டியில்லை; தரமும் இல்லை!

இங்கு மதுபானக் கொள்முதலை அரசே தீர்மானிக்கிறது. அரசு கொள்முதல் செய்து விற்பனை செய்யும் மதுபானங்களை மட்டுமே மக்கள் குடிக்கக் கடமைப்பட்டிருக்கிறார்கள், மது எப்படி இருந்தாலும் சரி. கொள்முதலிலும் ஆயிரம் அரசியல்.

சரி, இங்கு உற்பத்தி செய்யப்படும் மதுவும்கூட முறையாக உற்பத்தி செய்யப்படுகிறதா என்றால் அதுவும் சந்தேகமே. தமிழகத்தின் மதுபான ஆலைகள், கரும்பு ஆலைகளில் ‘ரெக்டிஃபெய்டு ஸ்பிரிட்’ (Rectified spirit) வாங்குகிறார்கள். அதனைத் தங்கள் ஆலைகளில் ‘நியூட்ரல் ஸ்பிரிட்’டாக (Neutral spirit) மாற்றுகிறார்கள். அதனை மூன்று நிலைகளில் ஆவியாக்கி வடிகட்டுகிறார்கள். இவ்வாறு மூன்று நிலைகளிலிருந்து வடிக்கப்படும் திரவத்துடன் சர்க்கரைப் பாகுவிலிருந்து தயாரிக்கப்படும் ‘கேரமில்’, மதுபான வகைக்கான எசன்ஸ், தண்ணீர் கலந்து பெரிய கொள்கலன்களில் நிரப்புகிறார்கள்.

இந்தக் கொள்கலன்களில் 72 மணி நேரம் அவற்றை இருப்பு வைக்கிறார்கள் (பிற நாடுகளில் இவை 14 நாட்கள் இருப்பு வைக்கப்படுகின்றன). அங்கு, அவை வேதியியல் மாற்றம் அடைந்து நொதிக்கின்றன. மேலே சொன்னபடி மூன்று நிலைகளில் ஆவியாக்கி வடிகட்டப்படுவதில் முதலில் வடிக்கப்படுவதிலிருந்து தயாரிக்கப்படுவது உயர் ரக மதுபானம், இரண்டாவதாக வடிக்கப்படுவதிலிருந்து தயாரிக்கப்படுவது நடுத்தர ரகம். மூன்றாவதாக வடிக்கப்படுவதிலிருந்து தயாரிக்கப்படுவது கடைசி ரகம்.

இவற்றையெல்லாம் கண்காணிக்க ஒவ்வொரு மதுபான ஆலையிலும் ஒரு துணை கலெக்டர், நான்கு துணை தாசில்தார்கள், ஐந்தாறு தொழில்நுட்ப உதவியாளர்கள் என சுமார் 15 அரசு ஊழியர்கள் நிரந்தரமாகப் பணியில் இருப்பார்கள். இந்த அதிகாரிகள் முன்னிலையில் 72 மணி நேரத்துக்குப் பிறகு கொள்கலன் திறக்கப்பட்டு, ஒரு லிட்டர் மதுவை ஒரு குடுவையில் எடுப்பார்கள்.

இப்போது கொள்கலன், குடுவை இரண்டுக்குமே ‘சீல்’ வைக்கப்படும். அது அரசின் அறிவியல் பரிசோதனைக் கூடத்துக்கு அனுப்பப்படும். அங்கு அந்த மது பரிசோதிக்கப்பட்டு, அதில் ஆல்கஹாலின் அளவு 41.86 - 42.86-க்குள் இருந்தால் மட்டும் அது விற்பனைக்கு அனுமதிக்கப்படும். பின்னர், மதுவை பாட்டிலில் நிரப்புவதிலும் ஏகப்பட்ட தரக்கட்டுப்பாடுகள் இருக்கின்றன. அதன் பின்பே அது விற்பனைக்கு வரும்.

ஆனால், தமிழகத்தில் இந்த நடைமுறைகளெல்லாம் கண்துடைப்புதான் என்கிறார்கள் நேர்மையான அதிகாரிகள். “இங்கு அரசாங்கம் நேரடியாக மதுவை விற்பனை செய்கிறது எனில் உற்பத்தி செய்வது அரசியல் செல்வாக்கு கொண்ட நபர்களே. அதனால், பெரும்பாலும் விதிமுறைகள் பின்பற்றப்படுவதில்லை. ஒவ்வொரு ஆலையிலிருந்தும் பரிசோதனைக்கு அனுப்பப்படும் அந்த ஒரு லிட்டர் மதுவை மட்டுமே சரியான ஆல்கஹால் அளவு கொண்டதாகத் தயாரித்து அனுப்பி, தரச் சான்றிதழ் பெறுகிறார்கள். சில ஆலைகளில் அதுவும் கிடையாது. அப்படியே காய்ச்சி பாட்டிலில் ஊற்றுகிறார்கள். அதனால்தான் சில இடங்களில் மது பாட்டிலுக்குள் கரப்பான் பூச்சி, பல்லி எல்லாம் மதுக்கின்றன. அதைத்தான் மக்கள் குடிக்கிறார்கள்” என்கிறார்கள் அந்த அதிகாரிகள்.

நொதித்த பின்பு கிடைப்பதுதான் மது. ஆனால், இங்கு குடிநோயாளிகள் குடிப்பதெல்லாம் கொதித்த பின்பு கிடைக்கும் எரிசாராயத்தைதான். குடிசார்ந்த நோய்கள் ஏன் அதிகமாகிவிட்டன என்பதும், முன்பை விட குடிநோயால் மரண விகிதம் இப்போது ஏன் அதிகரித்திருக்கிறது என்பதும் இப்போது புரிகிறதா உங்களுக்கு?

(தெளிவோம்)

- டி.எல். சஞ்சீவிகுமார்,
தொடர்புக்கு: sanjeevikumar.tl@thehindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

17 hours ago

கருத்துப் பேழை

17 hours ago

கருத்துப் பேழை

15 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்