பஸ்தரின் சோட்டா தோங்பால் கிராமம். சரசரவென்று நுழைகின்றன அரசப் படைகள். கிட்டத்தட்ட 150 பேர். வீடு வீடாகப் புகுகிறார்கள். ஆட்களைப் பிடிக்கிறார்கள். குழந்தைகள், பெண்கள், ஆண்கள் என எந்த வேறுபாடும் இல்லாமல் அடித்து நொறுக்குகிறார்கள். இளைஞர்களைத் தூக்கிப்போட்டுக்கொண்டு அங்கிருந்து புறப்படுகிறார்கள். அடுத்து ஜங்கம்பால் கிராமம். அடுத்து, படே குர்பே கிராமம். வேட்டை தொடர்கிறது. ஒவ்வொரு பழங்குடி கிராமமும் கதறுகிறது.
இந்த மாதிரி தாக்குதல்களில் எப்போதுமே முதல் இலக்காகுபவர்கள் பெண்கள். காரணங்கள் என்னவாக வேண்டுமானாலும் இருக்கலாம். தாக்குதல்களும் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். கை, கால், விலா எலும்புகளெல்லாம் முறிபட்டுக் கிடக்கிறார் பீம கவாசி. மோசியை முழுக்க ஆடைகளைக் களைந்து நிர்வாணமாக்கியிருக்கிறார்கள். சுகாடி மாண்டவியைக் காவல் நிலையத்துக்கு அள்ளிப்போட்டுக்கொண்டு போய்விட்டார்கள். எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கும் பெண்களின் எண்ணிக்கை மட்டும் 12 என்கிறார் ஜங்கம்பால் கிராமத் தலைவர் முடக்ராம் சோதி. சுகாடி மாண்டவியைக் காவல் துறையினர் விடுவிக்க வேண்டும் என்று வலியுறுத்தி 3 நாட்கள் தொடர்ந்து கிராம மக்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டார்கள். விவகாரம் பெரிதாக ஆரம்பித்ததும், காவல் துறை அந்தப் பெண்ணை விடுவித்தது. கொஞ்சம் அவகாசம் விட்டு, கிராமத்துக்கு மீண்டும் சென்றது. கண்ணில் பட்டவர்களையெல்லாம் அடித்து நொறுக்கிவிட்டு, 15 பேர் மீது மாவோயிஸ்ட் கூட்டாளிகள் என்று வழக்குப் பதிவுசெய்து தண்டேவாடா சிறையில் அடைத்திருக்கிறது.
“சுகாடியை நாங்கள் கைதுசெய்யவில்லை; அவரைக் காணவில்லை என்று அவருடைய உறவினர்கள் புகார் செய்தனர்; நாங்கள் சுக்மாவில் அவரைக் கண்டுபிடித்துக் குடும்பத்துடன் சேர்த்துவிட்டோம். 15 பேர் கைதுசெய்யப்படக் காரணம், மாவோயிஸ்ட்டுகள் நடத்திய பந்த் தொடர்பானது” என்று பேட்டி கொடுத்திருக்கிறார் சுக்மா மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் டி. ஸ்ராவண். - இது சமீபத்திய சம்பவம். ஆக, இப்போது மாவோயிஸ்ட் படையில் மேலும் 15 பேர் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள்.
சிச்சுர் குடா கிராமத்தைச் சேர்ந்த விவசாயி மட்காம் பாண்டா. திடீரென்று அவருடைய வீட்டுக்கு வந்தார்கள் காவல் துறையினர். அவரிடம் சில தாள்களில் கையெழுத்து வாங்கினார்கள். அப்புறம், அவருடைய முகத்தில் துணியைச் சுற்றி நாலைந்து புகைப்படம் எடுத்தார்கள். அப்படியே அழைத்துச் சென்றார்கள். மறுநாள் பத்திரிகைகளில் மட்காம் பாண்டாவின் புகைப்படத்துடன் செய்தி வெளியாகிறது: சரண் அடைந்த மாவோயிஸ்ட்.
கொடுமை என்னவென்றால், மாவோயிஸ்ட்டுகளை அழித்தொழிக்க அரசே பின்னின்று இயக்கிய சல்வா ஜுடும் படையில் 3 வருடங்கள் காவலராக இருந்தவர் மட்காம் பாண்டா. இந்தச் சம்பவத்தையொட்டி மட்டும் இப்படிச் சரண் அடைந்ததாகக் கணக்குக் காட்டப்பட்டவர்கள் 47 பேர் என்கிறார்கள்.
இதுவும் சமீபத்திய சம்பவம்தான். ஆக, மாவோயிஸ்ட் படையிலிருந்து மேலும் 47 பேர் விலகிச் சரணடைந்திருக்கிறார்கள்.
மாவோயிஸ்ட்டுகள் விவகாரத்தை அணுகும் நம்முடைய படைகள், அரசுக்கும் மக்களுக்கும் மாவோயிஸ்ட்டுகளைப் பற்றிச் சொல்லிக்கொண்டிருக்கும் பெரும்பாலான கதைகளின் பின்னணிக்குச் சில உதாரணங்கள் இந்தச் சம்பவங்கள்.
இன்றும் அன்றும்
தண்டகாரண்யத்தில் வெறும் 7 பேர் குழுவாக மாவோயிஸ்ட்டுகள் நுழைந்து 34 வருடங்கள் ஆகின்றன. இன்றைக்கு அந்தக் காட்டில் உண்மையிலேயே மாவோயிஸ்ட்டுகள் எவ்வளவு பேர் இருக்கிறார்கள் என்பது யாருக்குமே தெரியாத கணக்கு. ஆனால், ஒரு மாற்று அரசாங்கத்தை அவர்கள் நடத்துகிறார்கள். 2013-ல் இந்திய அரசு அறிவித்தபடி, நாட்டின் 10 மாநிலங்களில், 80-க்கும் மேற்பட்ட மாவட்டங்கள் மாவோயிஸ்ட்டுகளின் செல்வாக்குக்கு நேரடியாக ஆட்பட்டிருக்கின்றன; 106 மாவட்டங்களில் அவர்களது சித்தாந்தங்களுக்கு ஆதரவு இருக்கிறது.
இந்திய அரசை ‘லூட்டி சர்க்கார்’ (கொள்ளை அரசு) என்று குறிப்பிடும் மாவோயிஸ்ட்டுகள் தங்களுடைய அரசாங்கத்துக்கு வைத்திருக்கும் பெயர் ‘ஜன்தன் சர்க்கார்’(மக்களுடைய அரசு). விவசாயத் துறை, வனத் துறை, வணிகத் துறை, பொருளாதாரத் துறை, சுகாதாரத் துறை, பொதுமக்கள் தொடர்புத் துறை, நீதித் துறை, பாதுகாப்புத் துறை, கல்வித் துறை என்று 9 பிரிவுகளைக் கொண்ட இந்த நிர்வாக முறையின் முதுகெலும்பு அதன் ராணுவப் படையணியான ‘மக்கள் விடுதலை கெரில்ல படை’(பிடபிள்யுஜிஏ).
இந்தப் படை ஆதார அமைப்பு, மத்திய அமைப்பு, பிரதான தாக்குதல் அமைப்பு என்று 3 அடுக்குகளாகக் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. பொதுவாக, இவர்களுக்கு ஊதியம் என்று எதுவும் கிடையாது. போர்ப் பயிற்சி அளிக்கிறார்கள். சீனத்திலும் வியட்நாமிலும் கம்யூனிஸ்ட்டுகள் கையாண்ட போர் முறைகள், விடுதலைப் புலிகள் உள்ளிட்ட சில ஆயுதக் குழுக்கள் கையாண்ட வியூகங்கள் இவர்களுடைய போர்ப் பயிற்சியில் முக்கிய இடம் வகிக்கின்றன.
ஆரம்ப நிலையில் இருப்பவர்களில் பெரும்பாலானோருக்கு வெட்டுக்கத்தி, வில் - அம்பு, கோடரி உள்ளிட்டவைதான் ஆயுதங்கள். அடுத்தடுத்த நிலைகளில் இருப்பவர்கள் நவீன ரக ஆயுதங்களைப் பயன்படுத்துகிறார்கள். இவற்றில் பெரும்பாலானவை காட்டில் தாக்குதலுக்கு வரும் அரசப் படைகள் / காவல் நிலையங்கள், ரயில் நிலையங்களில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் காவலர்கள் / தாக்குதலுக்குள்ளாகும் காவல் நிலையங்கள், முகாம்களில் அடித்துச் செல்லப்படுபவை.
உண்மையான படை பலம் என்ன?
கடந்த 2000-ல் இந்தப் படை ஆரம்பிக்கப்பட்டது. ஆரம்பக் காலங்களில் இந்தப் படையினரின் எண்ணிக்கை குறைத்து மதிப்பிடப்பட்டது. இப்போது, சுமார் 10,000 பேர் வரை இருக்கலாம்; அவர்களில், சரிபாதியினர் வசம் துப்பாக்கி உள்ளிட்ட நவீன ரக ஆயுதங்கள் இருக்கலாம்; இந்தப் படையினருக்குப் பின்பலமாக சுமார் 40,000 பேர் இருக்கலாம் என்பது டெல்லி ராணுவ வியூகவாதிகளின் கணிப்பாக இருக்கிறது. இதில் கவனிக்க வேண்டிய முக்கியமான அம்சம் படையினரில் சரிபாதிக்கும் மேற்பட்டவர்கள் பெண்கள். இந்தப் படையின் ஆளுகைக்கு உட்பட்ட 27 பிரிவுகளில், 20 பிரிவுகளுக்கான தலைமைப் பொறுப்பாளர்கள் பெண்கள் என்கிறார்கள்.
கடந்த 14 ஆண்டுகளில் இந்தப் படையின் மிகப் பெரிய வளர்ச்சிக் காலகட்டமாக அரசப் படைகளே இப்போது ஒப்புக்கொள்ள ஆரம்பிக்கும் காலகட்டம் சால்வாஜூடும் காலகட்டம். ஒரு அரசாங்கம் எவ்வளவு மோசமாக ஒரு கிளர்ச்சியை எதிர்கொள்ளத் துணியும் என்பதற்கான இந்தியாவின் உச்சபட்ச உதாரணம் சால்வாஜூடும்.
(தொடரும்...)
சமஸ், தொடர்புக்கு: samas@thehindutamil.co.in
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
21 hours ago
கருத்துப் பேழை
17 hours ago
கருத்துப் பேழை
20 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago