முக்கியமான மாற்றங்கள் நடந்திருக்கின்றன; பயன்படுத்திக் கொள்வது தலைவர்களின் கையில் உள்ளது.
2014-ம் ஆண்டு முடிவுக்கு வந்துகொண்டிருக்கிறது. இந்த ஆண்டில் பல்வேறு முக்கிய சம்பவங்கள் நடந்திருக்கின்றன. உலகம் முழுவதற்கும் பொருந்தும்படியான பலனுள்ள விவாதமும் நடந்திருக்கிறது. புவி வெப்பம் காரணமாக பருவநிலைகளில் ஏற்படும் மாற்றம் மற்றும் அதைத் தடுத்து நிறுத்துவதற்கான வழிகளைப் பற்றிய விவாதம் அது. பருவநிலை மாறுதலைத் தடுத்து நிறுத்த, கரிப்புகை வெளியீட்டைக் குறைக்க சுற்றுச்சூழலுக்கு நன்மை தரும் உற்பத்தி முறைகளைக் கையாள்வது என்ற முடிவு இதில் முக்கியமானது.
பிரேசில் நாட்டின் சாவ் பாவ்லோ நகரில் கடுமையான குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது. சூரிய ஒளியிலிருந்து மின்சாரம் தயாரிக்க உதவும் பேனல்களின் விலை அமெரிக்கா, சீனா இரண்டிலுமே குறைந்துவிட்டது. கூகுள், ஆப்பிள் நிறுவனங்கள் புவிவெப்பத்தைக் குறைக்க மறைமுகமாக உதவியிருக்கின்றன. இப்படி, இந்த ஆண்டு பல முக்கிய நிகழ்வுகள்.
‘பிராக்கிங்’ செய்த அற்புதம்
சர்வதேசச் சந்தையில் கச்சா பெட்ரோலிய எண்ணெய் விலை சரிந்துவருகிறது. (மின்) ஆற்றல் துறைப் பொருளாதார அறிஞர் பில் வெர்லெகர் இதற்கான காரணத்தை விளக்கி எனக்கு எழுதியிருக்கிறார். “பர்சனல் கம்ப்யூட்டர் என்ற கண்டுபிடிப்புக்கு இணையானது ‘பிராக்கிங்’. பூமியின் வெகு ஆழத்தில் பாறைகளுக்கடியில் மண்டியிருக்கும் இயற்கை எரிவாயுவை மேலே கொண்டுவரும் தொழில்நுட்பம் இது. இதன் மூலம் அமெரிக்கா, கனடா, பிரிட்டன் ஆகிய நாடுகள் இயற்கை எரிவாயுவை அதிக அளவில் தயாரிக்கத் தொடங்கியுள்ளன. அவற்றிடம் உள்ள இந்த இயற்கை எரிவாயு இருப்பு அடுத்த நூறாண்டுகளுக்குப் போதுமானது என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது. இந்தத் தொழில்நுட்பத்தால் தயாரிக்கப்படும் எரிவாயுவை இந்நாடுகள் விற்று லாபம் சம்பாதித்துவிடக்கூடாது என்பதற்காக அரேபிய நாடுகள் தங்களுடைய கச்சா பெட்ரோலியத்தின் விலையையும் குறைத்து உற்பத்தியையும் அதிகப்படுத்தியுள்ளன. அப்படிச் செய்தால், பிராக்கிங் மூலம் எரிவாயு எடுக்கும் அமெரிக்க நிறுவனங்களுக்கு அது கட்டுப்படியாகாமல் உற்பத்தியை நிறுத்திவிடுவார்கள் என்று அந்த நாடுகள் எதிர்பார்க்கின்றன.
இதனால் பெட்ரோலிய எண்ணெய்க்கான தேவை தொடர்ந்துகொண்டே இருக்கும் என்பது அவர்களுடைய கணிப்பு” என்று அவர் விளக்குகிறார்.
விவாதம் முடிந்துவிட்டதா?
பருவநிலை மாறுதல் தொடர்பான உலக வரலாற்றை எழுதும்போது, 2014-ல் அது தொடர்பான விவாதம் முடிவுக்கு வந்துவிட்டது என்று எழுதுவார்கள் என்றே கருதுகிறேன். சர்வதேசச் சந்தையில் கச்சா பெட்ரோலிய எண்ணெயின் விலை குறைந்தாலும், எண்ணெய் - இயற்கை எரிவாயு கையிருப்பை எதிர்காலத் தேவைக்காக நாம் காப்பாற்றி வைப்பது அவசியம் என்று ‘சர்வதேச விசை (ஆற்றல்) முகமை’ அறிவுறுத்துகிறது. கி.பி. 2050-க்குள் நம்மிடம் உள்ள கரிம எரிபொருள் வளங்களில் மூன்றில் ஒரு பங்கை நாம் எரித்திருப்போம். அதனால் புவி வெப்ப நிலை சராசரி வெப்ப நிலையைவிட மேலும் 2 டிகிரி அதிகரிக்கும், துருவப் பிரதேசங்களில் பனிமலைகள் உருகிவிடும், கடலோரப் பகுதிகள் அரிக்கப்பட்டு மேலும் பெரும் பரப்பளவு நீரில் மூழ்கிவிடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறைந்துவரும் குடிநீர்
நவம்பர் 7-ம் தேதி சாவ் பாவ்லோ நகரம் குறித்து பி.பி.சி. செய்தி நிறுவனம் அளித்த தகவல் இது. பிரேசில் நாட்டின் மிகப் பெரிய நகரமான சாவ் பாவ்லோவில் கடுமையான குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது. மக்கள் குடிநீருக்காக அலைகிறார்கள். அங்கிருந்த 3 பெரிய ஏரிகளின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளிலிருந்து பெரும் எண்ணிக்கையில் மரங்கள் வெட்டப்பட்டதால் மழை கணிசமாகக் குறைந்து வரலாறு காணாத வறட்சி ஏற்பட்டிருக்கிறது. கிட்டத்தட்ட 2 கோடி மக்கள் வாழும் பகுதியில் கடுமையான தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுவிட்டது, இனி மழை பெய்தால்தான் உண்டு என்று ஆட்சியாளர்கள் காத்துக்கிடக்கிறார்கள் என்றால், பருவநிலை மாறுதலுக்கு நாங்கள் காரணமில்லை என்று இனியும் மறுத்துக் கொண்டிருப்பதால் என்ன பலன்?
அமெரிக்க, சீன உடன்பாடு
அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவும் சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் நவம்பர் 12-ம் தேதி சந்தித்து ஒரு உடன்பாட்டுக்கு வந்திருக்கிறார்கள். 2005-ல் அமெரிக்காவில் நிலவிய வெப்ப நிலையைவிட, 26% முதல் 28% வரைக்கும் குறைப்பது; அதையும் 2025-க்குள் சாத்தியமாக்குவது என்று பராக் ஒபாமா ஒப்புக்கொண்டுள்ளார். சீன அதிபரும் 2030-க்குள் கரிம வெளியீட்டை அதே அளவுக்குக் குறைத்துவிட ஒப்புக்கொண்டிருக்கிறார். புதுப்பிக்கவல்ல அல்லது சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத தொழில்நுட்ப உதவியுடன் 2030-க்குள் கூடுதலாக 800 கிகா வாட் முதல் 1,000 கிகா வாட் வரையுள்ள தூய்மையான மின்சாரத்தைத் தயாரிப்பதாக அவர் வாக்குறுதி தந்துள்ளார். அந்த அளவானது இப்போது அமெரிக்காவில் உற்பத்தியாகும் மொத்த மின்சார அளவுக்குச் சமமானதாகும்!
கூகுளின் நெஸ்ட் கொள்முதல்
கூகுள் நிறுவனம் கடந்த பிப்ரவரியில் நெஸ்ட் நிறுவனத்தை 320 கோடி டாலர் கொடுத்து வாங்கியது. நெஸ்ட் நிறுவனம் தயாரிக்கும் தெர்மோஸ்டாட்டுகள், வீடுகளில் உள்ள சூடேற்றும் சாதனங்களையும் குளிரூட்டும் சாதனங்களையும் நாம் விரும்பும் வெப்ப நிலையில் வைத்திருக்க உதவுகின்றன. இதனால் ஆயிரக்கணக்கான டாலர்கள் பணம் மிச்சமாகிறது. நாட்டுக்கு கோடிக்கணக்கான டாலர்கள் மிச்சம். அந்த சாதனத்தின் விலை வெறும் 250 டாலர்கள்தான்.
ஆப்பிள் நிறுவனம் ஆப்பிள் ஹோம்கிட் என்ற சாதனத்தை மேம்படுத்தியிருக்கிறது. இது, ஒருவர் வெளியிடத்தில் இருந்தால்கூட தனது வீட்டில் உள்ள சூடேற்றும் மின் சாதனத்தையும் குளிரூட்டும் சாதனத்தையும் ஐ-போன் மூலமே இயக்கவும் கட்டுப்படுத்தவும் உதவுகிறது. வீட்டில் உள்ள சாதனங்களைக் கட்டுப்படுத்தி மின்சாரத்தைச் சேமிக்கும் சாதனங்களை கூகுளும் ஆப்பிளும் போட்டிபோட்டு தயாரித்தால் அதன் விளைவு உலகுக்கே நன்மை தரும் அல்லவா!
காஸோலினின் விலை
அமெரிக்கச் சாலைகள் பராமரிப்பின்றிச் சீரழிகின்றன, அடித்தளக் கட்டமைப்பும் நொறுங்கிக்கொண்டிருக்கிறது, ரயில்பாதைகள் பொதுச் சேவைக்கு உற்றதாக இல்லை. ஆனால் காஸோலின் விலை மட்டும் ஒரு காலனுக்கு 2.5 டாலருக்கும் கீழே போய்க்கொண்டிருக்கிறது, 2009-க்குப் பிறகு இந்த அளவுக்கு விலை குறைந்தது கிடையாது என்கிறார் வெர்லெகர். இதனால் மக்கள் பெரிய கார்களையும் லாரிகளையும் வாங்க ஓடுகின்றனர். இதற்கு ஒரே தீர்வு, ஒரு காலன் காஸோலின் விலையை 3.5 டாலராக உயர்த்துவதுதான் என்கிறார். விலை குறையக் குறைய வரியை உயர்த்துங்கள். அந்தப் பணத்தைக் கொண்டு சாலைகளுக்கும் அடித்தளக் கட்டமைப்புக்கும் பயன்படுத்துங்கள் என்கிறார்.
ஒரு காலனுக்கு ஒரு டாலர் வரி விதிப்பதன் மூலம் ஆண்டுக்கு 15,000 கோடி டாலர் அமெரிக்க அரசுக்குக் கிடைக்கும். இந்த நிதியைப் பொதுச் செலவுகளுக்குப் பயன்படுத்தினால் அது மக்களிடையே மேலும் பல சுழற்சிகளைப் பெற்று நாட்டின் பொருளாதாரத்தையே உச்சாணிக் கொம்புக்குத் தூக்கிச் செல்லும், அதன் மூலம் ஐரோப்பாவும் சரிவிலிருந்து எழுந்து நடக்கத் தொடங்கும் என்பது உண்மையே.
2014-ம் ஆண்டு பருவநிலை மாறுதலைப் பொறுத்தவரை முக்கியமான ஆண்டு, அமெரிக்காவின் மறு கட்டமைப்புக்கு உதவப் போகிற ஆண்டு. ஆனால் இவையெல்லாம் நமது அரசியல் தலைவர்கள் எடுக்கப் போகும் துணிச்சலான நடவடிக்கைகளில்தான் இருக்கிறது!
© நியூயார்க் டைம்ஸ், தமிழில்: சாரி.
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
14 hours ago
கருத்துப் பேழை
14 hours ago
கருத்துப் பேழை
14 hours ago
கருத்துப் பேழை
11 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago