கார்காலத்தைப் போற்றுவோம்!

By தங்க.ஜெயராமன்

மீன் பூத்த வானம் தரைக்கு வந்ததுபோல் ஜொலிக்கும் கார்த்திகையைப் போற்றுவோம்

புது நெல்லின் வரவு தைப் பொங்கல். புது நெல்லுக்கு முதலாக இருந்த விதைநெல்லில் எஞ்சியது கார்த்திகையில் அவலாகிப் பொரியாகும். இப்படி நெல்லின் மிச்சமும் அதன் புது வரவும் விழாக்களைக் கோக்கும் சரடாக இருப்பது நெல் கலாச்சாரம். ஐப்பசியில் அடைமழை என்றால், கார்த்திகையில் கருத்த இடமெல்லாம் மழை. துண்டு துண்டாகக் கருத்துவரும் மேகங்கள் விட்டு விட்டுப் பெய்துகொண்டே போகும். வானம் மூடி மூடித் திறக்கும். அவ்வப்போது வெளிவாங்கி வெளிச்சம் காட்டும். குணவடைக் காற்று (வட கிழக்கிலிருந்து வீசும் காற்று) சற்று வலுத்துக் குளிர் தட்டியிருக்கும். மழைக் காலத்தின் தோழமையோடு வரும் கார்த்திகையில் ஆடம்பரத்துக்கு இடமில்லை. ஆரவாரம் செல்லுபடியாகாது. மண் அகலின் திரிநுனியில் தொற்றிக்கொண்டு நிதானமாக எரியும் ஒளிப்பொட்டுக்குப் பரபரப்புதான் பகை. வாழும் இல்லத்தை மையப்படுத்திப் பெண்கள் கொண்டாடுவது இந்தக் கார்காலத் திருவிழா.

எஞ்சிய விதையே கார்த்திகைப் பொரி

அப்போதெல்லாம் காவிரிப் படுகை உழவர்களுக்குப் புரட்டாசியில் உழவு வேலை முடிந்துவிடும். அந்த மாதம் வரும் ஆயுதபூஜைக்குக் கலப்பையைக் கழுவிப் பொட்டிட்டுக் கும்பிடுவதோடு அடுத்த ஆண்டு பொன்னேர் கட்டுவதற்குத்தான் அது வயலுக்குச் செல்லும். நடவு முடிந்தபிறகு விதைநெல் எஞ்சியிருக்கும். அதை ஊற வைத்து வரையோட்டில் வறுத்து, சூடு ஆறுவதற்குள் உரலில் இட்டுக் குத்திப் புடைத்து அவலாக்கிக்கொள்வார்கள். இதனைப் பொரித்து வெல்லப் பாகும் எள்ளும் தேங்காய்ப் பல்லும் கலந்தது கார்த்திகைப் பொரி.

இந்த மாதத்தில் நெல் தட்டுப்பட்டுப்போகும். பிரசவித்த பெண்களுக்குப் பத்தியச் சாப்பாட்டுக்குக்கூட பழைய நெல் கிடைக்காது. அடித்தட்டு மக்களிடையே கீரைத்தண்டும் கருவாடும்தான் குழம்புக்கு உரியதாக இருக்கும். மழையோடு மெதுவாகக் குளிரும் தொடங்கும் பருவத்தில் மிளகு, பூண்டு, நற்சீரகம் சேர்ந்த இந்தப் பக்குவத்துக்கு உள்ள பொருத்தம் ருசித்தவர்கள் மட்டுமே அறியக்கூடியது. நெல்லைச் சிறுவாடாகச் சேர்த்து வைத்திருக்கும் வீட்டுப் பெண்கள், நெல்லுக்குப் பண்டமாற்றாக மரவள்ளிக் கிழங்கை வாங்கி அவித்து உண்பார்கள். இந்தக் கிழங்கையே ஒரு வேளை உணவாகக் கொண்டிருந்த குடும்பங்கள் ஏராளம். சோழ நாட்டிலும் இப்படி இருந்ததா என்று நீங்கள் நினைக்கக்கூடும்.

பெரிய கார்த்திகை

கார்த்திகை மாத பவுர்ணமியில் வரும் கார்த்திகையைப் பெரிய கார்த்திகை என்பார்கள். மழைக் கால முழு நிலவின் ஒளி, மொழியின் சொற்கள் தோற்றுப்போகும் தருணங்களில் ஒன்று. அந்த ஜொலிப்பில் ஆயிரம், லட்சம் ஒளிப்பொட்டுகளாக அகல் விளக்குகள் வீடுவீடாக, தெருத்தெருவாக முடிவில்லாமல் நீண்டுகொண்டேயிருக்கும். தொன்மையிலும், எளிமையின் வசீகரத்திலும், கண்கொள்ளா விரிவிலும் கார்த்திகைக்கு ஈடாக மற்றொரு விழாவைச் சொல்ல இயலாது. கார்த்திகை நாளிலும், அதற்கு முதல் நாளும் மறுநாளும் மூன்று நாட்கள் வீட்டிலும் திண்ணையிலும் வாசலிலும் பெண்கள் அகல் விளக்குகளை ஏற்றி வைப்பர்கள். நிறை நிறையாக ஒளிரும் அகல்கள் மீன் பூத்த வானம் தரைக்கு வந்ததுபோல் இருக்கும்.

முன்னிருட்டுக் காலம் கார்த்திகை. பொழுது சாய்ந்த மசண்டையில் (அந்திப்பொழுது) வீட்டில் குத்துவிளக்கேற்றிப் பழம், பாக்கு வெற்றிலை வைத்து, தேங்காய் உடைத்துச் சாமி கும்பிடுவார்கள். கார்த்திகைப் பொரியும், சில வீடுகளில் அப்பமும் படையலாக இருக்கும். பச்சை அவலில் வெல்லம், தேங்காய் கலந்து படைப்பதும் உண்டு. அங்கிருந்து அகல் விளக்குகளை ஏற்றி வீட்டு நிலைப்படிகளின் இரு பக்கமும் வைத்திருப்பார்கள். திண்ணைக் குறடும் தெருவாசலும் அகல்களால் அலங்கரித்திருக்கும். அடுப்பு, அரிசிப்பானை, உப்புமரவை, தவிட்டுக்கூண்டு, மாட்டுக்கொட்டில், கிணற்றடி, குப்பைக்குழி இவற்றிலும் தவறாமல் ஒரு அகல் விளக்கு எரியும். அன்று வீட்டுக்கு வரும் லட்சுமி இங்கெல்லாம் தங்கித் துலங்க வேண்டுமென்று பெண்கள் வேண்டிக்கொள்ளும் மரபு. உப்பும் தவிடும் குப்பையும்கூட திருமகள் தங்குமிடமாகப் பார்க்கும் கலாச்சாரத்தின் தன்மையை முழுமையாகப் புரிந்துகொள்ள தற்காலத்தில் இயலாது. உப்பும் தவிடும் அரிசியும் தண்ணீரும் புது வீடு குடிபோகும்போது உடன் கொண்டுசெல்லும் பொருட்களாக இருப்பதை நினைத்துக்கொள்ள வேண்டும். குடிபுகுவதற்கு கார்த்திகை மாதத்துக்காகக் காத்திருப்பர்கள். அவ்வாறே வீட்டில் புது அடுப்பு கட்டுவதும் இந்த மாதத்தில்தான்.

குப்பையிலும் லட்சுமி

முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு திருவண்ணாமலையில் தீபம் பார்த்த கையோடு ஊருக்குத் திரும்பிக்கொண்டிருந்தேன். திருக்கோவிலூருக்குச் சற்று முன்பு சாலை ஓரத்தில் ஒரு ஓலைக் கூரை வீடு. அருகே இரண்டு உழவு மாடுகள் கட்டியிருந்தன. ஓரத்தில் இருந்த குப்பைக்குழியில் ஒரு அகல் விளக்கு. எனக்குத் திருமகளை அங்கே கண்டது போன்றிருந்தது. காலத்தாலும் இடத்தாலும் விலகி எட்டி நிற்பவற்றில் 19-ம் நூற்றாண்டு ஆங்கிலக் கவிகள் கண்ட கவர்ச்சியாக நான் இதனைச் சந்தேகிக்கவில்லை.

இப்போது தீபாவளியில் மீத்திய (மிஞ்சிய) சீனி வெடியைக் கார்த்திகையில் வெடிக்கிறார்கள். முன்பு பனம்பிடுக்கைக் கருக்கி இடித்து, உமியும் கொஞ்சம் உப்புக்கல்லையும் சேர்த்து துணிப்பையில் திணித்துக்கொள்வார்கள். அதில் சிறிய ஓட்டையிட்டுப் பற்றவைத்துச் சுற்றினால், எரிந்து பொறிப் பொறியாகச் சிதறும். கார்த்திகையில் இது சிறுவர்களின் விளையாட்டாக இருந்தது.

எங்கள் வீட்டில் அகல்களோடு விதம் விதமான மண்விளக்குகளும் இருந்தன. லட்சுமி விளக்கு வடிவில் மூன்று முகம் வைத்துச் சுடுமண்ணால் செய்யப்பட்டிருந்தன. இவை போதாதென்று அன்றைய தேவைக்குப் பச்சை மன்ணால் நிறைய அகல்களைச் செய்துகொள்வோம். அவை, எண்ணெயில் ஊறிச் சிதைந்துவிடாது. தீபத்துக்குப் பெரும்பாலும் பயன்படுத்தியது இலுப்பை எண்ணெய். பின்னைக்கொட்டை எண்ணெயும் உண்டு. நல்லெண்ணெய் எல்லாம் அவற்றுக்கு அடுத்துதான். அந்த ஆண்டு திருமணமாகிப் புகுந்த வீடு சென்ற உடன்பிறந்தாளுக்குச் சீர் கொண்டுசெல்வது சிலரது வழக்கம். சீர்வரிசையில் விளக்குகளும் இருக்கும். கார்த்திகையின்போது புகுந்த வீட்டில் அந்த விளக்குகளை ஏற்றிவைப்பார்கள்.

கற்பூர சொக்கப்பனை

கார்த்திகை நாளின் அந்தியில் கோயில்களுக்குரிய வழிபாடு ஒன்று உண்டு. பெருமாள் கோயிலில் பருத்திக் கொட்டையைத் துணியில் முடிந்து ஒரு சட்டியில் வைத்து எண்ணெய் ஊற்றியிருக்கும். முடிச்சின் நுனி திரியாக இருக்கும். இதைச் சுற்றிலும் தாம்பாளத்தில் ஐந்து மடக்குகளில் தீபம் ஏற்றிப் பெருமாளுக்குத் தீபாராதனை நடக்கும். எங்கள் ஊரில் பெருமாளுக்கும் தாயாருக்கும் தீபத் தாம்பாளம் முன்னால் செல்ல, பிராகாரத்திலேயே அன்று புறப்பாடு. தாயார் படிதாண்டாப் பத்தினியாதலால் கோயிலுக்கு உள்ளேயே நின்று கற்பூரச் சொக்கப்பனை காண்பார். ஒன்றிரண்டு பட்டைகளை உரித்துவிட்டு, ஒரு வாழை மரத்தைத் தண்டாக நட்டு, அதன் உயரத்துக்கு இரும்பு அகல்கள் சுற்றிலும் செருகியிருக்கும். அவற்றில் கற்பூரத்தை வைத்து எரிய விடுவார்கள். அவை எரியும்போது கீழிருந்து மேலாக குங்கிலியப் பொடியைத் தூவுவார்கள். பின்னர், பெருமாள் மட்டும் கோயிலுக்கு வெளியே வந்து சொக்கப்பனை காண்பதற்கு நின்றுகொள்வார். தாயாருக்கும் சேர்த்து இரண்டு சொக்கப்பனை தனித்தனியாக இருக்கும். பனைமட்டைகளை வெட்டிக் காய வைத்து கூம்பாகச் சொக்கப்பனை கட்டியிருப்பார்கள். பெருமாளுக்கு முன்னால் வந்த தீபத்தைக் கொண்டு சொக்கப்பனை கொளுத்தப்படும். சிவன் கோயில்களிலும் இவ்வாறுதான். கற்பூர சொக்கப்பனை மட்டும் கிடையாது. பனைமட்டைகள் சடசடத்து எரியும்போது சுடலை பறக்கும். அதைத் தாவிப் பிடித்து நெற்றிக்கு அணிந்துகொள்வார்கள்.

மின் விளக்கைப் போல் இருளை அழித்துத் துடைத்துவிடாமல் அதனைப் பின்னணியாக வைத்துக்கொண்ட ஓவியமாக அகல் விளக்கு எரியும். பார்ப்பவற்றிலும் கேட்பவற்றிலும் உள்ள ஆரவார அம்சங்களுக்கே நமது ரசனை அடிமையாகிவிட்டதல்லவா! கோலத்தின், குத்துவிளக்கின், இந்த அகல் விளக்கின் ஈர்ப்பு நமக்கு இன்னும் இருக்கிறதே! இதிலும், இதை ஒத்தவற்றிலும்தான் நமது ரசனையின் மறுமலர்ச்சிக்கான வித்து ஒளிந்துகொண்டிருக்கிறது.

- தங்க. ஜெயராமன்,

ஆங்கிலப் பேராசிரியர், ஒமர் கய்யாமின் ‘ருபாயியத்’ நூலை ஆங்கிலம் வழியாகத் தமிழில் மொழிபெயர்த்தவர், தொடர்புக்கு: profjayaraman@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

11 hours ago

கருத்துப் பேழை

11 hours ago

கருத்துப் பேழை

12 hours ago

கருத்துப் பேழை

14 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்