ஒமர் கய்யாம் மறைந்த தினம்: டிசம்பர்-4, கி.பி. 1131
போர்களின், துயரங்களின் உலகில் நமக்கு அத்தியாவசியமான மருந்துதான் ஒமர் கய்யாம்.
ஒமர் கய்யாமை நம்முடைய காலத்தவராக ஆக்குவது எது? இரண்டு உலகப் போர்களின் பாதிப்பிலிருந்து இன்னும் முழுமையாக விடுபடவில்லை நாம். உலகப் போர்களை விட பேராபத்துக்களை வெவ்வேறு வடிவில் தினமும் எதிர்கொள்ளும் நமக்கு, இறுதியில் இந்த வாழ்க்கை என்பதுதான் என்ன என்று பெரும் கேள்வி எழுகிறது. இதே போன்ற ஒரு கேள்விதான் முதல் உலகப் போரின்போதும் பலருக்கும் எழுந்தது. படித்த அமெரிக்கப் போர்வீரர்கள் பலரும், தவிர்க்கவே முடியாமல் போன அந்தப் போரில், மேற்குப் பிராந்தியம் நோக்கி முன்னேறிக்கொண்டிருந்தபோது அடிக்கடி உச்சரித்த வரிகள் இவை:
ஒன்றாக இணைத்துச் செய்யப்பட்ட கோப்பையின் பாகங்கள்/ அதை உடைப்பது குற்றம், குடிகாரனைப் பொறுத்தவரை;/ எத்தனையோ நுட்பமான தலைகள், கால்கள், கைகள்,/ யாருடைய அன்பால் இணைக்கப் பட்டன, யாருடைய வெறுப்பால் சிதைக்கப்பட்டன அவை?
போர் முனையில் மனித உயிர் துச்சமான நிலையில், மனித உடல்கள் சிதறிப்போய், உறுப்புகளெல்லாம் ஆங்காங்கே கிடக்கும் சூழலில், வாழ்க்கையின் பொருள் கேள்விக்குள்ளான நிலையில், கய்யாமின் வரிகள் அவர்களுக்குத் துணை வந்ததில் என்ன வியப்பு?
ஒமர் கய்யாமின் வாழ்க்கை
1941 வரை ஒமர் கய்யாம் பிறந்த தேதி உறுதிப் படுத்தப்படாமலே இருந்தது. சுவாமி கோவிந்த தீர்த்தர் தனது ‘தி நெக்டார் ஆஃப் கிரேஸ்: ஒமர் கய்யாம்’ஸ் லைஃப் அண்டு வொர்க்ஸ்’ என்ற நூலில் கய்யாம் பிறந்த தேதியாக கி.பி. 1048-ம் ஆண்டின் மே மாதத்தின் 18-ம் நாளைக் குறிப்பிடுகிறார். இந்தக் கணிப்பு ஒமர் கய்யாமின் ஜாதகத்தை வைத்துச் செய்யப்பட்டது. பிற்பாடு, அறிவியல் துறைகளுக்கான சோவியத் மன்றத்தின் வானியல் துறை இந்தக் கணிப்பு சரியானதே என்று உறுதிசெய்தது. அதேபோல், ஒமர் கய்யாம் இறந்த தேதியும் கி.பி. 1131, டிசம்பர்-4, என்று வரையறை செய்யப்பட்டிருக்கிறது.
முந்தைய பாரசீகத்தின் வடகிழக்குப் பகுதியான குராசானின் தலைநகராக விளங்கிய நிஷாபூரில் ஒமர் கய்யாம் பிறந்தார். கய்யாம் தனது காலத்தில் மிகுந்த புகழ் பெற்ற வராக இருந்தார். ஆனால், கவிதைகளுக்காக அல்ல. தத்துவம், வானவியல், கணிதம் அதிலும் குறிப்பாக, இயற்கணிதம் போன்ற துறைகளுக்காக. கணிதத்தில் அவருடைய பங்களிப்பின் தாக்கம் இன்றுவரை தொடர்கிறது. செல்ஜுக் மன்னனுக்காக வடிவமைக்கப்பட்ட நாட்காட்டியின் உருவாக்கத்தில் பங்குபெற்ற வானியலாளர்களுள் கய்யாமும் ஒருவர். மொத்தத்தில், கய்யாம் தன் காலத்தில் ஒரு ‘தனிமனிதப் பல்கலைக்கழகமாக’ இருந்தார் என்று தெரிகிறது. ஆனால், ஒரு கவிஞராக கய்யாமின் புகழ் தெரியவருவதற்கு ஃபிட்ஜெரால்டு (1809 -1883) என்ற ஆங்கில மொழிபெயர்ப்பாளர் வர வேண்டி யிருந்ததுதான் விசித்திரம்.
ஒமர் கய்யாம் மரபு
சில அறிஞர்கள் ஒமர் கய்யாமுடையது என்று 1200-லிருந்து 1400 ருபாயிகள்வரை (ருபாயி - ஒரு வகை நான்கு வரிக் கவிதை) அடையாளமிட்டுக் கூறுகிறார்கள். வேறு சில அறிஞர்கள் ஒன்றிரண்டு கவிதைகளையும், இன்னும் சிலர் நூற்றுச் சொச்சம் கவிதைகளையும் மட்டும் கய்யாமுடையதாகக் கருதுகிறார்கள். நிறைய இடைச்செருகல்கள் இருப்பதால் தெளிவான முடிவு இன்னும் எட்டப்படவில்லை. இந்தப் பாடல்களை கய்யாம் எழுதவில்லை என்றே கொண்டாலும் கய்யாமின் மரபைப் பின்பற்றிப் பலர் எழுதியதாகவும் கொள்ளலாம். கய்யாமின் மரபு என்பதால், அதற்கு அவருடைய முகத்தைக் கொடுப்பது ஒன்றும் தவறில்லை.
ஒமர் கய்யாமின் மரபு உண்மையிலேயே ஒரு புகலிடம் தான். தன் காலத்தின் அடிப்படைவாதம், போர்கள், சம்பிரதாயம், கபடம் எல்லாவற்றுக்கும் எதிராகக் குரல்கொடுக்க நினைத்தவர்களுக்கு, புகழ்பெற்ற கய்யாமின் பேரில் ஒளிந்துகொள்வது பாதுகாப்பைக் கொடுத்திருக்கலாம் என்று ஒமர் கய்யாம் ஆய்வாளர் மெஹ்தி அமின்ரஜாவி கருதுகிறார். இன்றைய வாசகர் ஒருவர், கய்யாமின் கவிதைகளைப் படிக்கும்போது இஸ்லாம் இதையெல்லாம் எப்படி அனுமதித்தது என்ற கேள்வி எழக்கூடும். இஸ்லாமுக்கு எதிரான மேற்கத்திய நாடுகளின் மிகைப்படுத்தப்பட்ட பிரச்சாரங்களின் காரணமாக எழும் கேள்வி அது. இஸ்லாம் எல்லாப் போக்குகளையும் சகிப்புத்தன்மையுடன் அணுகக்கூடியது என்பதற்கு ஓர் உதாரணம்தான் ஒமர் கய்யாம் என்ற சுதந்திரச் சிந்தனையாளர்.
ஒமர் கய்யாமுக்கும் முந்தைய நூற்றாண்டிலிருந்து 15-ம் நூற்றாண்டு வரை பாரசீகமும் அதை ஒட்டிய பிற பகுதிகளும் உலகின் தலைசிறந்த அறிவுக் கலாச்சாரத்தை, பண்பாட்டு வளத்தைக் கொண்டிருந்தன. சகிப்புத்தன்மை இல்லாத ஒரு சமூகத்தில், இவ்வளவு கலாச்சார மேம்பாடு நடந்திருக்குமா? அடிப்படைவாதிகள் எல்லாக் காலத்திலும் எல்லா நாடுகளிலும் எல்லா மதங்களிலும் இருக்கத்தான் செய்வார்கள். அதேபோல், அவர்களுக்கு எதிரான போக்கும் எங்கும் இருக்கத்தான் செய்யும். அப்படிப்பட்ட ஒரு போக்குதான் கய்யாம்.
ஒமர் கய்யாமின் மதம்
எல்லாப் போக்குகளிலும் உள்ள அடிப்படைவாதிகள் ஒமர் கய்யாமை வெறுத்ததற்கு, வெறுப்பதற்குக் காரணம், அவர் எல்லாவற்றையும் கேள்விக்குள்ளாக்குவதே. வாழ்க்கை என்பது எல்லாக் கோட்பாடுகளையும் பிரதி களையும் மீறி நிகழக்கூடியது என்பதை அறிந்தவர் கய்யாம். ‘நிலவைச் சுட்டிக்காட்டும் விரலையே நிலவாகக் கருதிவிடக் கூடாது’ என்று சொல்லும் ஜென் பழமொழிக்கு மிகவும் நெருக்கமானது கய்யாமின் இந்த வரி:… மதநம்பிக்கை, நம்பிக்கையின்மை இரண்டிலிருந்தும் விடுபட்டிருப்பதுதான் எனது மதம்.
மேலோட்டமாகப் பார்க்கும்போது, ‘மதநம்பிக்கை, நம்பிக்கையின்மை இரண்டிலிருந்தும் விடுபட்டிருப்பது’ என்ற வரி, முரண்களை வைத்துச் செய்யப்பட்ட வார்த்தை விளையாட்டு போன்று தோன்றும். உண்மையில் அப்படியல்ல. ஒரு நம்பிக்கையின் மீது தீவிரப் பற்றுள்ளவர் தனது நம்பிக்கையைத் தவிர, வேறு எதையும் காணத் தவறுகிறார்; நம்பிக்கையின்மையில் தீவிரப் பற்றுள்ளவரும் தனது நம்பிக்கையின்மையைத் தவிர வேறு எதையும் காணத் தவறுகிறார். இந்த இரண்டுமே நம் கண்களை மறைப்பவை. இந்த இரண்டிலிருந்தும் விடுபட்ட ஒருவர்தான் கய்யாம்.
பாரசீகச் சித்தர்
ஒரு வகையில், நம் தமிழ்நாட்டுச் சித்தர்கள் மரபுக்கு நெருங்கியவர் கய்யாம். இந்தப் பாடலைப் பாருங்கள்:
கனிவோடு விளிம்பில் அழுத்தி நூறுநூறு முத்தங்கள் கொடுத்து,/ படைப்பு-ஞானம் வனையும் பாண்டம் இது;/ இப்படியொரு அருமையான பாண்டத்தை உருவாக்கி,/ பிறகு மண்ணில் வீசுகிறான் பிரபஞ்சக் குயவன் மீண்டும் அதனை.
‘நந்தவனத்தில் ஓர் ஆண்டி’ பாடல் நினைவுக்கு வருகிறதா? ஒரே ஒரு வித்தியாசம், சித்தர் பாடலில் ஆண்டி பாண்டத்தை உடைக்கிறார். கய்யாமின் பாடலில் உடைப்பது குயவன் (அதாவது படைத்தவன்).
மனிதர்கள் மட்டுமல்ல, இந்தப் பிரபஞ்சத்தில் எதுவும், உண்மையில் இந்தப் பிரபஞ்சம்கூட ஸ்திரமானது அல்ல என்கிறார் கய்யாம்:
மனிதனின் இதயத்திலுள்ள நன்மையும் தீமையும்,/ நமது அதிர்ஷ்டமும் விதியுமான மகிழ்ச்சியும் துக்கமும்,/ வானகச் சக்கரத்தைப் பொறுப்பாக்காதே அவற்றுக்கு, பார்க்கப்போனால்,/ உன்னைவிட ஆயிரம் மடங்கு சக்தியற்றது அந்தச் சக்கரம்.
இதுபோன்ற பாடல்கள் மூலமாகக் கடவுளின் இருப்பை கய்யாம் மறுப்பதில்லை. மாறாக, மனிதர்கள் தங்கள் வாழ்க்கைக்குத் தாங்களே பொறுப்பாக வேண்டும் என்று சொல்கிறார். கய்யாமை மேலோட்டமாகப் படிக்கும் பலரும், அவர் ஒரு அவநம்பிக்கைவாதி என்ற முடிவுக்கு வரக்கூடும். அது உண்மையல்ல. வாழ்க்கையின் நிலையாமையைச் சொல்லி, இந்தக் கணத்தின் முக்கியத்துவத்தை உணர வேண்டும் என்றவர் அவர். இந்தக் கணத்தை வாழாமல் எந்தக் கணத்தை நீங்கள் வாழ முடியும் என்று கேள்வி கேட்டவர் அவர். கடவுளையும் வாழ்க்கையின் பொருளையும் இங்கேதான் தேட வேண்டுமே தவிர, நிச்சயமற்ற மறு உலகில் அல்ல என்று வலியுறுத்துகிறார்:
வாழ்வின் பொருள் இதயத்துக்கு எட்டுமெனில்,/இறப்பின்போது கடவுள் என்ற ரகசியமும் அறியக்கூடும் அது;/ இன்று உன்வசம் நீ இருக்கும்போது நீ அறிந்திருப்பது ஏதுமில்லை,/ நாளை உன்னை நீ விட்டுச் செல்லும்போது எதைத்தான் அறிந்துகொள்ளப்போகிறாய்?
- ஆசை, தொடர்புக்கு: asaithambi.d@thehindutamil.co.in
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
9 hours ago
கருத்துப் பேழை
9 hours ago
கருத்துப் பேழை
9 hours ago
கருத்துப் பேழை
13 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago