நாமும் ஐ-வோட்டு போடலாமா?

By இராம.சீனுவாசன்

எஸ்தோனியா என்ற வட ஐரோப்பிய நாட்டில், 2013-ல் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் வாக்குச்சாவடிக்குச் செல்லாமல் 1,33,808 பேர் இணையதளம் மூலமாக ஐ-வோட் என்ற வாக்கைச் செலுத்தினார்கள். இது அந்தத் தேர்தலில் செலுத்தப்பட்ட மொத்த வாக்குகளான 6,30,050-ல் கிட்டத்தட்ட 21% ஆகும். இதற்கு முன்னர், 2011-ல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 1,40,764 பேர் ஐ-வோட் செலுத்தினர்.

எஸ்தோனியாவின் மக்கள்தொகை 13 லட்சம்தான். இங்கு 80% மக்கள் இணையத்தைப் பயன்படுத்துகின்றனர். ஸ்மார்ட்போன் மூலமாக கைபேசி இணையப் பயன்பாடும் அதிகம். 2005-ல் ஐ-வோட் எனப்படும் ‘இணையவாக்கு’ இங்கு அறிமுகப்படுத்தப்பட்டது. இது நம் நாட்டு தபால் வாக்குக்குச் சமம். 2005-ல் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் 9,317 பேர் மட்டுமே அங்கு ஐ-வோட் பயன்படுத்தினர்.

பின்னர், படிப்படியாக ஐ-வோட் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டது. 2007-ல் நடந்த அந்த நாட்டின் நாடாளுமன்றத் தேர்தலில் 30,243 பேரும், 2011-ல் நடந்த எஸ்தோனியா நாடாளுமன்றத் தேர்தலில் 1,40,764 பேரும் ஐ-வோட் அளித்தனர்.

ஐ-வோட் அங்கு பிரபலமாகிவருவதால், தேர்தல் செலவுகளும் வாக்காளர்கள் வாக்குச்சாவடிக்குச் செல்ல வேண்டிய செலவும் நேரமும் மிச்சம். இதனால், தேர்தலில் வாக்காளர்களின் பங்கு உயரவில்லை என்றாலும், வரும்காலங்களில் இது உயரும் என்ற நம்பிக்கை உள்ளது.

இதுபோன்ற ஐ-வோட் ஐக்கிய அரபு அமீரகம், சுவிட்சர்லாந்து மற்றும் பல அமெரிக்க ஐரோப்பிய நாடுகளின் உள்ளாட்சித் தேர்தல்களிலும் ஐ-வோட் முறை ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. அமெரிக்காவில் உள்ள பல மாகாணங்கள், வேறு நாடுகளுக்குச் சென்றிருக்கும் அமெரிக்க ராணுவத்தில் தங்கள் மக்கள் வேலை செய்யும்போது அவர்களின் ஐ-வோட்டை ஏற்றுக்கொண்டன. நம் நாட்டில்கூட குஜராத் மாநிலம் காந்திநகர் நகராட்சித் தேர்தலில் 2011-ல் சிலரால் ஐ-வோட் பயன்படுத்தப்பட்டது.

ஐ-வோட் என்றால் என்ன?

இணையம் மூலமாக வாக்கைப் பதிவுசெய்வது ஐ-வோட். இணையத் தொடர்பு இருக்கும் ஒரு கணினி யின் மூலம் ஒரே இணையதளத்தில் வாக்குகளைப் பதிவு செய்ய வேண்டும். நீங்கள் பதிவுசெய்யும் வாக்கு உங்கள் கணினியில் இல்லாமல் வேறு இடத்தில் உள்ள மைய சர்வரில் சேமித்துவைக்கப்பட்டு, அட்டவணையிடப்பட்டு, தேர்தல் முடிவுகளில் உள்ளடக்கப்படும். நீங்கள் உங்கள் வீட்டில் உள்ள கணினி, கைபேசி, அல்லது தேர்தலுக்காக அரசு ஏற்படுத்தும் கணினி மையம் என்ற ஏதாவது ஒன்றின் மூலம் உங்கள் வாக்குகளைச் செலுத்தலாம்.

ஐ-வோட் பயன்படுத்துவதால் என்ன பயன்?

ஒன்று, வாக்காளர்கள் வாக்குச்சாவடிக்குச் செல்ல வேண்டியதில்லை. வாக்குச்சாவடிக்குச் செல்வதற்கான நேரமும் சிரமமும் மிச்சம். எனவே, ஐ-வோட் பயன்பாட்டில் இருந்தால், வீட்டில் இருந்தவாறே பலரும் வாக்களிக்க முன்வரலாம். 2009-ல் நடந்த பொதுத்தேர்தலில் 60 சதவீதத்துக்கும் குறைவான வாக்காளர்களே வாக்களித் தனர். இந்த சதவீதம் ஐ-வோட் முறையில் உயரும்.

இரண்டு, இப்போது இருப்பதுபோல் லட்சக் கணக்கான வாக்குச்சாவடிகளும் அவற்றுக்கான பாதுகாப்புச் செலவும் மிச்சம். இதனால் மட்டுமே, பல நூறு கோடி ரூபாய் மிச்சமாகும். சட்டம்- ஒழுங்குக்கும் எந்த ஆபத்தும் வராது. கடந்த முறை, எட்டு லட்சத்துக்கும் அதிகமான வாக்குச்சாவடிகள் இருந்தன. இரண்டரை லட்சம் போலீஸ்காரர்களும் ஊர்க்காவல் படையினரும் பாதுகாப்புப் பணியில் இருந்தனர். பல லட்சம் அரசு ஊழியர்கள் வாக்குச்சாவடிகளை நிர்வகித்தனர்.

மூன்று, வாக்குச்சாவடிகளைக் கைப்பற்ற முடியாது. ஒரு தேர்தல் கணினி சேவை மையத்தில் மதியம் 12 மணிக்குக் கலவரம் ஏற்பட்டு, வாக்களிப்பது நிறுத்தி வைக்கப்பட்டது என்று வைத்துக்கொள்வோம். ஐ-வோட் மூலம் போடப்படும் வாக்குகள் மைய சர்வரில் சேமிக்கப்படுவதால், வாக்குப் பதிவு பாதியில் நிறுத்தப் பட்டாலும், அதுவரை பதிவான வாக்குகள் பத்திரமாக சர்வரில் இருக்கும். மறு வாக்குப்பதிவில், அதுவரை வாக்களிக்காதவர்கள் மட்டுமே வாக்களித்தால் போதும். எனவே, வாக்குச்சாவடியைக் கைப்பற்றுவது சிரமம், மறுவாக்குப்பதிவு செய்வது எளிது.

நான்கு, இப்போது ஒரு வாக்குச்சாவடியில் நான்கு அல்லது ஐந்து அரசு ஊழியர்கள் இருந்தால் மட்டுமே வாக்கு செலுத்த முடியும். வாக்காளரை அடையாளம் காண்பது, வாக்கு செலுத்த அனுமதிப்பது, வாக்கு செலுத்தப்பட்டதற்கான குறியை இடுவது என்று பல வேலைகள் உண்டு. இவை எதுவுமே ஐ-வோட்டில் வேண்டாம். இந்த அனைத்து வேலைகளையும் கணினியே செய்யும்.

உங்களை அடையாளம் கண்டால் மட்டுமே அது வாக்களிக்க அனுமதிக்கும். நீங்கள் ஒருமுறை வாக்களித்தால், மறுமுறை வாக்களிக்க முடியாது. அல்லது உங்களை மீண்டும் அடையாளப்படுத்திக்கொண்டால் மட்டுமே மீண்டும் உங்கள் வாக்கை மாற்றியமைக்க முடியும்.

ஐந்து, நாடு முழுவதும் ஒரு சில நாட்களில் மொத்தத் தேர்தலையும் நடத்தி முடிக்கலாம். இப்போது இருப்பதுபோல ஒரு மாதத் தேர்தல் திருவிழா நடத்த வேண்டியதில்லை.

ஆறு, நம்மில் பலர் வியாபாரம், வேலை நிமித்தமாக வெளியூர், வெளிநாடுகளுக்குச் செல்கிறோம். நாம் சென்ற இடத்திலிருந்து இணையதளம் மூலமாக வாக்களிக்கலாம். விடுதிகளில் உள்ள மாணவர்கள் வாக்களிக்காமல் இருப்பது அதிகரித்துவருகிறது. இவர்களுக்கும் ஐ-வோட் பயனுள்ளதாக இருக்கும்.

ஏழு, முதியோர், உடல் ஊனமுற்றோர், உடல் நலம் குன்றியவர்கள் வீட்டில் இருந்தவாறே வாக்களிக்கலாம். பார்வையற்றவர்கள்கூட ஹெட்ஃபோன், குரல் அடையாளக் கருவி போன்றவற்றைப் பயன்படுத்தி யாருடைய துணையும் இல்லாமல் வாக்களிக்கலாம்.

ஐ-வோட் முறையைச் செயல்படுத்துவதில் உள்ள சிரமங்கள் என்ன?

ஐ-வோட் முறையைச் செயல்படுத்துவதில் இரண்டு அடிப்படைச் சிரமங்கள் உள்ளன. ஒன்று, கல்வியறிவு. இரண்டு, ஐ-வோட் பயன்படுத்த எல்லா இடங்களிலும் இணைய வசதி இருக்க வேண்டும். இந்தியாவில் 120 கோடிக்கு மேல் மக்கள்தொகை இருந்தாலும், அதில் 16.4 இணையச் சந்தாதாரர்கள்தான் உள்ளனர் என்றும், எட்டில் ஏழு பேர் கைபேசி மூலம் இணையத்தைப் பயன்படுத்துவதாகவும் டி.ஆர்.ஏ.ஐ. கூறுகிறது. ஐ-வோட் முறையில் உள்ள கடும் சவாலும் சிரமமும் இவைதான்.

ஐ-வோட் முறையின் தொழில்நுட்பப் பிரச்சினைகள் என்ன?

ஐ-வோட் முறையை எதிர்ப்பவர்களின் காரணங்கள் தொழில்நுட்பரீதியானது. உலக அளவில் நம்பகமாக வாக்களிக்கும் முறை என்பது “ஒருவர் தன்னிச்சையாகவும் சுதந்திரமாகவும் வாக்களிக்க வேண்டும், அவ்வாக்கு ரகசியமானதாக இருக்க வேண்டும், அளிக்கப்பட்ட வாக்கு எண்ணிக்கையில் சேர்க்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.” வாக்குச்சீட்டைப் பயன்படுத்தி, வாக்குச் சாவடியில் வாக்களிப்பதன் மூலமாகவும், அதற்குப் பிறகு, வாக்குச்சீட்டுகள் பாதுகாக்கப்பட்டு வெளிப்படையாக வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதன் மூலமாகவும் மேற்கண்ட விஷயங்களை உறுதிசெய்ய முடியும்.

ஐ-வோட் முறையிலும் ஒருவர் தன்னிச்சையாக, சுதந்திரமாக வாக்களிப்பதை உறுதிசெய்ய முடியும். ஆனால், அவ்வாக்கு ரகசியமாக உள்ளதா, அளிக்கப்பட்ட வாக்குகள் வேறு ஒருவரால் மாற்றப்பட்டனவா, அளித்த வாக்குகள் எண்ணிக்கையில் சேர்க்கப்பட்டனவா என்பதில் குழப்பங்கள் நிறைய உள்ளன.

உண்மையான வாக்காளர் நீங்கள்தான் என்பதைக் கணினி கண்டறிய நவீன மின் அட்டை தேவைப்படும். எஸ்தோனியா நாட்டில் ஒவ்வொருவருக்கும் கொடுக்கப்பட்டுள்ள அடையாள அட்டையில் ஒரு மைக்ரோசிப் உண்டு. அதை அடையாளம் காண்பதற்கான சாதனமும் கணினியில் உண்டு. அல்லது உங்கள் ஸ்மார்ட்போனுக்கு அந்த மென்பொருளைப் பதிவிறக்கம்செய்துகொள்ளலாம். இதுமட்டுமல்லாமல், மின் கையொப்பம் போன்ற தொழில்நுட்பங்களும் தேவை. இவையெல்லாம் இருந்தால் மட்டுமே நம்மால் ஐ-வோட் அளிக்க முடியும். இந்தியா போன்ற பெரிய நாட்டில் இது சாத்தியமில்லைதான்.

சில மென்பொருட்களைப் பயன்படுத்தி, அளிக்கப்பட்ட வாக்குகளை மைய சர்வரில் பாதுகாத்து எண்ணிக்கையில் சேர்க்க முடியும். மைய சர்வரில் இந்த வாக்குகள் திருடப்படாமல் இருப்பதைக்கூட ஓரளவுக்கு உறுதிசெய்யலாம். ஆனால், உங்கள் வீட்டில் உள்ள கணினியில் வைரஸ் இருந்தாலோ, அல்லது வேறு வகையில் உங்கள் வாக்குகளைத் திருத்தியனுப்பும் வசதியை வேறு ஒருவர் பெற முடிந்தாலோ, ஐ-வோட் முறை நம்பகத்தன்மையை இழந்துவிடும்.

உலகில் பல தனியார் நிறுவனங்களும் பல்கலைக் கழகங்களும் ஐ-வோட் முறையைப் பாதுகாப்பானதாக மாற்றும் முயற்சியில் உள்ளன. இதற்கான ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்றுவருகின்றன. இவர்களின் ஒட்டுமொத்த வேண்டுகோளும் இதுதான்,

“ஐ-வோட் முறையைப் பரீட்சார்த்த முறையில் தொடர்ந்து பயன்படுத்தினால் மட்டுமே, ஒரு நாட்டில் அந்தத் தொழில்நுட்பத்தை மேம்படுத்த முடியும்.” முதல்கட்டமாக எங்கெல்லாம் அஞ்சல் வாக்குகள் உள்ளனவோ அங்கெல்லாம் ஐ-வோட் முறையின் பயன்பாட்டை நாம் அறிமுகப்படுத்தலாம்.

- இராம. சீனுவாசன், இணை பேராசிரியர், சென்னைப் பல்கலைக்கழகம்,
தொடர்புக்கு: seenu242@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

6 hours ago

கருத்துப் பேழை

6 hours ago

கருத்துப் பேழை

6 hours ago

கருத்துப் பேழை

10 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

மேலும்