இன்னொரு இந்தியா 5- பஸ்தாரில் எப்படி ‘மாவோயிஸ்ட்டுகள்’ உருவானார்கள்?

By சமஸ்

ஆச்சரியமாக, இருந்தது அந்த விஷயத்தைக் கேள்விப்பட்டபோது. இவ்வளவு பெரிய காட்டில் பஸ்தரின் ஆயிரக் கணக்கான பழங்குடிகளுக்கு மிகப் பெரிய வாழ்வாதாரம், மஹுவா மரம் உதிர்க்கும் பூக்கள்!

மஹுவா எனும் தேவதை

பஸ்தரில் நூற்றுக் கணக்கான இனங்களைச் சேர்ந்த பல்லாயிரக் கணக்கான மரங்கள் உண்டு. பஸ்தர் காடுகளில் வளரும் தேக்கு மரங்களும் சால் மரங்களும் இந்திய அளவில் அவற்றின் தரத்துக்காகப் பெரும் கிராக்கியோடு வாங்கப்படுபவை. அதேபோல, இந்திராவதி நதிக்கரை மூங்கில்களும் பேர் போனவை. ஆனால், பஸ்தர் பழங்குடிகள் தங்கள் வயிற்றை - வருடத்தில் சில மாதங் களேயானாலும் - முழுவதுமாக நிரப்பிக்கொள்ள மஹுவா மரங்களே உதவுகின்றன. இந்த மரங்களில் பூக்கும் மஹுவா பூக்கள் அவர்களுடைய வாழ்வுடன் பின்னிப் பிணைந்தவை.

மஹுவா பூக்கள் இனிப்பை உள்ளடக்கியவை. நல்ல சத்தும்கூட என்கிறார்கள். பசி நேரத்தில் வேறு உணவு கிடைக்காத வேளைகளிலெல்லாம் மஹுவா பூக்களே இவர்களுக்கு உணவாகின்றன. சோறு பொங்கும்போது, அரிசியுடனும் ரொட்டி சுடும்போது கோதுமையுடனும் மஹுவா பூக்களைச் சேர்த்துக்கொள்கிறார்கள். பாரம்பரிய மது தயாரிப்பதும் மஹுவா பூக்களைக்கொண்டுதான். மருந்து தயாரிப்பிலும் அதற்கு ஓர் இடம் உண்டு. இப்படி அவர்களுடைய சொந்தத் தேவைகளைத் தாண்டி, வருமானத் துக்கான வாய்ப்பையும் மஹுவா பூக்கள் தருகின்றன.

வருஷத்தில் பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மூன்று மாதங்கள் மஹுவா பூக்கும் பருவம். இந்தக் காலகட்டம்தான் தங்களிடம் கொஞ்சம் காசு புழங்கும் காலகட்டம் என்றும் பஸ்தர் பழங்குடிகள் குறிப்பிடுகிறார்கள். அதிகாலையில் 5 மணிக்கெல்லாம் எழுந்து மஹுவா மரங்களைத் தேடிச் செல்கிறார்கள். முதல் நாள் இரவிலிருந்து உதிர்ந்திருக்கும் பூக்களை நாளெல்லாம் பொறுக்கினால், சுமார் 10 கிலோ தேறுமாம். இப்படிப் பொறுக்கி வரும் பூக்களை நான்கைந்து நாட்களுக்கு உலரவைக்கிறார்கள். இளம்பச்சை நிறத்தில் இருக்கும் பூக்கள் சிவப்பு நிறமாக மாற வேண்டும். அப்படி மாறியதும் சனிக்கிழமை கூடும் சந்தைக்குக் கொண்டுசெல்கிறார்கள். அங்கு பெரும்பாலும் பண்டமாற்று முறையில் அது கை மாறுகிறது. “இரண்டு டமி பூக்களைக் கொடுத்தால், ஒரு டமி அரிசி வாங்கலாம்” என்கிறார்கள் (1 டமி என்பது உத்தேசமாக 2 கிலோ). விலைக்கு எடுத்துக் கொண்டால், அந்தந்த நாளைக்கேற்ற மாதிரி கிடைக்குமாம். ஒரு கிலோவுக்கு ரூ.10 கிடைப்பது பெரிய விலை. ஒரு குடும்பம் சராசரியாக ஒரு வருஷத்தில் மஹு பருவத்தில் (அந்த 3 மாதங்களில்) ரூ. 3,000 சம்பாதிக்குமாம்.

இது ஒரு பெரிய தொகை என்பதாலேயே மஹுவா மரங்கள் இவர்களிடையே சொத்து மதிப்பைப் பெறுகின்றன. ஒரு தகப்பனார் சொத்து பிரிக்கும்போது தன்னுடைய பிள்ளைகளுக்கு மஹுவா மரங்களைப் பிரித்துத் தர வேண்டும். அதேபோல, காட்டில் எவ்வளவு தொலைவில் இருந்தாலும், ஒரு மரம் உதிர்க்கும் பூக்களை அந்த மரத்தைத் தலைமுறை தலைமுறையாகப் பூ பறிக்கும் குடும்பத்தைத் தவிர்த்து மற்றவர்கள் தொடுவதில்லை.

எங்கே வாழ்வாதாரம்?

பஸ்தர் காடுகளில் வசிக்கும் ஒரு ஆணுக்குக் குறைந்தது 10 தொழில்கள் தெரியும் என்கிறார்கள், வேட்டையில் தொடங்கி விவசாயம் வரை. பாரம்பரிய இசை, நடனக் கலைகளோடு கைவினைக் கலையிலும் தேர்ந்தவர்கள் அவர்கள். இதைத் தவிர, இப்படிப் பூக்கள் சேகரிப்பு, பீடி தயாரிப்புக்கான டெண்டு இலைகளைச் சேகரித்துத் தருவது, மூங்கில்களை வெட்டிச் சேகரித்துத் தருவது என்று அந்தந்தப் பருவத்தையொட்டி, தங்கள் வேலைகளை இவர்கள் அமைத்துக்கொள்வது உண்டு.

இவ்வளவு அறிந்திருந்தாலும், எது ஒன்றும் எல்லாப் பருவத்துக்கும் அவர்களுக்கு 3 வேளை உணவுக்கு வழிவகுப்பதாக இல்லை என்பதுதான் துயரம். எனினும், எதைப் பற்றியும் அவர்கள் அலட்டிக்கொண்டதில்லை. “அடிப்படையிலேயே அவர்கள் கூச்சசுபாவிகள். தனித்த வாழ்க்கையை விரும்புபவர்கள். வனத் துறையினர் ஒரு பணியுரிமைபோல, எவ்வளவோ காலம் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் அவர்களை வன்முறைக்குள்ளாக்கி இருக்கிறார்கள். நிறைய சுரண்டியிருக்கிறார்கள். அப்போதும் கூட அவர்கள் பெரிய அளவில் எதுவும் எதிர்வினை ஆற்றியதில்லை. வெளியாட்களிடமிருந்து தொல்லைகள் அதிகரிக்கும்போதெல்லாம் அவர்கள் செய்தது ஒன்றே ஒன்றுதான், காட்டுக்குள் மேலும் மேலும் உள்ளே போய் விடுவது. ஒரு பகுதியிலிருந்து இன்னொரு பகுதிக்கு மாறிவிடுவது. ஒரு காலகட்டம் வரை இந்தக் காட்டில் மொத்தம் எவ்வளவு பேர் வசிக்கிறார்கள் என்பதுகூட அரசாங்கத்துக்குத் தெரியாமல் இருந்தது” என்று சொல்கிறார்கள் ஆய்வாளர்கள்.

இப்படிப்பட்டவர்களிலிருந்து எப்படி ‘மாவோயிஸ்ட்டுகள்’ உருவானார்கள்? இதற்கான பதில், இந்தியாவில் மாவோயிஸ இயக்கம் உருவான வரலாற்றோடு பிணைந்தது என்பதால், சுருக்கமாக அதையும் பார்த்துவிடுவோம்.

எப்படி உருவானார்கள் மாவோயிஸ்ட்டுகள்?

இந்திய சுதந்திரத்தை இந்திய கம்யூனிஸ்ட்டுகள் ஏற்றுக் கொண்டாலும், புரட்சியின் மூலமே சமூகப் பொருளாதார விடுதலை சாத்தியம் என்று அவர்களில் ஒரு பகுதியினர் நினைத்தனர். 1949-ல் ஆயுதப் புரட்சியின் மூலம் சீனாவை கம்யூனிஸ்ட்டுகளின் கீழ் மா(வோ) சேதுங் கொண்டுவந்த பின்னர், இந்தியாவிலும் ஆயுதப் புரட்சியைப் பற்றிப் பேசுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்தது. கட்சிக்குள் தொடர்ந்து அவர்கள் இதுபற்றி விவாதித்த வண்ணம் இருந்தார்கள். இந்திய - சீனப் போர் அவர்களுக்கு மேலும் உத்வேகம் தந்தது. இதனிடையே, 1964-ல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அதிகாரபூர்வமாக முதல் உடைவைச் சந்தித்து, மார்க்சிஸ்ட் கட்சி உருவானது. அங்கும் ஆயுதப் புரட்சிக்கு இடம் இல்லை என்று நினைத்தவர்கள், ஒரு தீப்பொறிச் சூழலுக்காகக் காத்துக்கொண்டிருந்தபோதுதான் அது நடந்தது.

மேற்கு வங்க மாநிலம், டார்ஜிலிங் மாவட்டத்தில் நக்ஸல்பாரியில் 1967-ல் நிலச்சுவான்தார்களுக்கு எதிராக ஒரு பெரும் கலகம் நடந்தது. விவசாயத் தொழிலாளர்கள் நடத்திய இந்தக் கலகம்தான் இந்தியாவில் நக்ஸல் இயக்கத்தின் முதல் விதை. சீக்கிரமே காவல் துறையால் இந்தக் கிளர்ச்சி ஒடுக்கப்பட்டாலும், ஆயுதப் புரட்சியை ஆதரிக்கும் தீவிர கம்யூனிஸ்ட்டுகள் இந்த இயக்கத்தை ஒரு தீப்பொறியாகப் பார்த்தார்கள். சீனத்திலிருந்து மாவோவின் ஆதரவும் அவர்களுக்குக் கிடைத்தது. நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இருந்த இவர்கள் 1967 - 1969 காலகட்டத்தில் ஒன்றிணைந்தார்கள். 1969-ல் அப்படி உருவாக்கப்பட்டதுதான் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்). இதற்குப் பின் இப்படி உருவான இயக்கங்களின் எண்ணிக்கை கணக்கில் அடங்காதது.

எங்கோ ஒரு பகுதியில் ஒரு குழு ஆயுதம் எடுப்பதும், வேட்டையாடுவதும், மிகக் குறுகிய காலகட்டத்திலேயே அரசால் அழித்தொழிக்கப்படுவதுமே இந்த இயக்கங்களின் வரலாறு. அரசாங்கம் பொதுவாக இடதுசாரி தீவிரவாத இயக்கங்களை நக்ஸல் என்று அழைக்கிறது. கடந்த 2004-ல், இப்படியான இயக்கங்களில் செல்வாக்கான இரு இயக்கங்களான மார்க்ஸிய - லெனினிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மக்கள் யுத்தக் குழு), மாவோ கம்யூனிஸ இந்திய மையம் (எம்சிசிஐ) ஆகிய இரு இயக்கங்களும் இணைந்தன. ‘இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்)’ என்ற ஒரு புதிய அமைப்பாகத் தங்களை அறிவித்துக்கொண்டன. பொதுச் செயலாளராக கணபதி என்கிற முப்பால லட்சுமண ராவ் தேர்ந்தெடுக்கப்பட்டார். இன்றைக்கு இந்தியாவின் இடதுசாரி தீவிரவாத அமைப்புகளின் ஆகப் பெரும்பான்மைச் சேர்க்கை என்று இதைச் சொல்லலாம்.

மாவோவின் புரட்சிப் பாதை

மாவோயிஸம் என்பது மிக விரிவான விளக்கத்தைக் கோருவது. மாவோவின் புரட்சி வியூகத்தைச் சுருக்கமாக இப்படிப் புரிந்துகொள்ளலாம்: கிராமப்புற மக்களை ஒருங்கிணைத்தல், அவர்கள் உதவியுடன் அரசுக்கு எதிரான கெரில்ல போர் தாக்குதல்களை முன்னெடுத்தல், கொஞ்சம் கொஞ்சமாக ஒட்டுமொத்த கிராமப்புறத்தையும் கையகப் படுத்திய பின் நகரங்களைச் சூழ்ந்து கைப்பற்றுதல். அதாவது, விவசாயப் புரட்சியில் தொடங்கி உச்சபட்ச அதிகாரத்தைக் கைப்பற்றும் உத்தி இது. புரட்சியின் பாதை முழுக்க ரத்தம் உறைந்திருக்கும். அப்படிப் பல்லாயிரக் கணக்கானோரின் ரத்தத்தையும் உயிர்களையும் குழைத்துதான் இன்றைய ‘மக்கள் சீனம்’ உருவாக்கப்பட்டது என்பது வரலாறு.

(தொடரும்...)

- சமஸ், தொடர்புக்கு: samas@thehindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

22 hours ago

கருத்துப் பேழை

18 hours ago

கருத்துப் பேழை

21 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்