வன்னி நிலத்தின் விரிவான ஆவணம்
இலங்கைத் தமிழர்களின் தாயகப் பகுதியாகக் கருதப்படும் வன்னி நிலத்தைப் பற்றிய விரிவான ஆவணம் இந்தப் புத்தகம். வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் வன்னி நிலத்தில் வாழ்ந்த மனிதர்கள்பற்றிய பதிவு என்று தொடங்கி, வன்னிப் பகுதியின் தொல்லியல் மையங்கள், அப்பகுதியில் வசிக்கும் மக்களின் மீன்பிடித் தொழில், பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களின் சமூகப் பொருளாதார நிலை, அப்பகுதியின் வனப் பகுதிகள், வன்னி இலக்கியப் பதிவுகள், வன்னி சிறுதெய்வ வழிபாடுபற்றிய தகவல்கள் என்று ஏராளமான விஷயங்களின் தொகுப்பாக இந்தப் புத்தகம் வெளிவந்திருக்கிறது.
வ.ஐ.ச. ஜெயபாலன், சேரன், ஜெயமோகன் உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட எழுத்தாளர்கள், ஆய்வாளர்கள், பேராசிரியர்கள் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இது. நார்வேயில் வசிக்கும் கணபதிப்பிள்ளை சுந்தரலிங்கம் தனது கடும் உழைப்பின் மூலம், இந்தப் புத்தகத்தைத் தொகுத்திருக்கிறார். இந்தப் புத்தகம், இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதியைப் பற்றிய விரிவான அறிமுகத்தை வாசகர்களுக்குத் தரும்.
வன்னி: வரலாறும் - பண்பாடும்
பதிப்பாசிரியர்: கணபதிப்பிள்ளை சுந்தரலிங்கம்,
பக்கங்கள்: 655, விலை: ரூ. 900,
கிடைக்குமிடம்: குமரன் பப்ளிஷர்ஸ்,
நெ.3, மெய்கை விநாயகர் தெரு, வடபழனி, சென்னை - 600 026.
வியர்வை உடல்களின் வேர்கள்
அமெரிக்காவின் அசுர வளர்ச்சிக்கு அடியுரமாய், ஆப்பிரிக்காவிலிருந்து அடிமைகளாய்க் கொண்டுவரப்பட்ட கருப்பினத்தவரின் வியர்வையும் ரத்தமும் உள்ளன. தனித்த, முழுமையான பண்பாட்டுடன் ஆப்பிரிக்காவில் வசித்த கருப்பின மக்கள், 18-ம் நூற்றாண்டில் அடிமைகளாக விற்கப்பட்டு, அமெரிக்க நிலத்துக்கு அழைத்துவரப்பட்டார்கள். அங்கு கிடைத்ததெல்லாம், உயிரை உடலில் தக்க வைத்துக்கொள்ளப் போதுமான உணவு மட்டும்தான்.
வசைகள், சித்தரவதைகள் என்று பல்வேறு துன்பங்களுக்கு இடையில் பணிசெய்ய அமர்த்தப்பட்ட பரிதாப உயிர்கள் அவர்கள். அப்படி, மேற்கு ஆப்பிரிக்காவின் காம்பியாவில் பிறந்து, அமெரிக்காவில் அடிமையாக வேலைபார்க்க நேர்ந்த குண்டா கின்டே என்பவரின் வழிவந்த ஏழாவது தலைமுறையைச் சேர்ந்தவர்தான் அலெக்ஸ் ஹேலி. மால்கம் எக்ஸ் வாழ்க்கை வரலாற்றை எழுதிய இவர், தனது மூதாதையரின் கிராமத்தைத் தேடிச்சென்று அவர்களது வாழ்க்கையைப் புத்தகமாக எழுதினார்.
அதுதான் ‘வேர்கள்’ (ரூட்ஸ்) நாவல். 1976-ல் வெளியான இந்த நாவல், தொலைக்காட்சித் தொடராக வெளிவந்து, பெரும் வரவேற்பைப் பெற்றது. ஆப்பிரிக்க - அமெரிக்க மக்களின் வாழ்க்கை, அவர்களது கலாச்சாரம் பற்றிய தகவல்கள் கொண்ட இந்தப் புத்தகம், 50-க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது.
வேர்கள்
அலெக்ஸ் ஹேலி, தமிழில்: பொன். சின்னத்தம்பி முருகேசன்,
பக்கங்கள்: 910, விலை: ரூ. 999.
மறக்கப்பட்ட பேரரசரின் சரித்திரம்
கி.மு. 304-ல் பிறந்த அசோகச் சக்ரவர்த்தி கி.மு. 270 முதல் கி.மு. 233 வரை, இந்தியாவின் தென் பகுதி நீங்கலாக மொத்த நாட்டையும் ஆண்டவர். ‘சாலை ஓரங்களில் மரத்தை நட்டார்’ என்ற அளவில் அவரைப் பற்றிய அறிமுகம் நம் அனைவருக்கும் பரிச்சயம். அசோகரின் வாழ்க்கை, இந்தியாவின் பேரரசராக அவரது வரலாறு, புத்த மதத்தைத் தழுவியதற்கான காரணம், பயணத்தின் மீது அவருக்கு இருந்த ஆர்வம், வெளிநாடுகளிலும் புத்த மதத்தைப் பரப்ப அவர் எடுத்துக்கொண்ட முயற்சிகள் என்று பல்வேறு தகவல்களுடன் விரிவான புத்தகமாக வெளிவந்திருக்கிறது, ‘பேரரசன் அசோகன் - மறக்கப்பட்ட மாமன்னனின் வரலாறு’.
ஆங்கிலோ இந்திய எழுத்தாளரான சார்ல்ஸ் ஆலன் எழுதிய இந்தப் புத்தகத்தைத் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார் தருமி. இந்த வரலாறு நேர்க்கோட்டில் அல்லாமல், பல்வேறு காலகட்டத்தில் நடந்த விஷயங்களின் தொகுப்பாக இருப்பது வாசகர்களுக்குப் புது அனுபவமாக இருக்கும்.
பேரரசன் அசோகன்
சார்ல்ஸ் ஆலன், எதிர் வெளியீடு,
தமிழில்: தருமி, பக்கங்கள்: 496, விலை: ரூ. 400
மேற்கண்ட இரண்டு நூல்களையும் வெளியிட்டவர்கள்: எதிர் வெளியீடு, 96, நியூ ஸ்கீம் ரோடு, பொள்ளாச்சி - 642002. தொலைபேசி: 04259-226012, 98650 05084.
அ. மார்க்ஸ் புத்தகங்கள்
சோவியத்துக்குப் பிந்தைய உலகம்
அரபுலக எழுச்சிகள் தொடர்பாகத் தான் எழுதிய புத்தகத்துக்குப் பின்னர், உலக அரசியல்பற்றி எழுதியிருக்கும் புத்தகம் இது என்று அ. மார்க்ஸ் குறிப்பிடுகிறார். இடதுசாரிகள் எதிர்கொள்ளும் சவால்கள், வால்ஸ்ட்ரீட் போராட்டம், காஸா பிரச்சினை உள்ளிட்ட விஷயங்கள் இப்புத்தகத்தில் பதிவுசெய்யப்பட்டிருக்கின்றன. அ. மார்க்ஸ் எழுதியிருக்கும் முன்னுரையிலிருந்து…
“90-களில் பொதுவுடைமைக் கட்சிகளின் தலைமையில் இருந்த அரசுகள் பொலபொலவெனச் சரிந்தன, இரு துருவ உலகம் ஒரு துருவ உலகமாக மாறும் நிலை ஏற்பட்டது, ‘கம்யூனிசப் பயங்கரவாத’த்தின் இடத்தில் ‘இஸ்லாமியப் பயங்கரவாதம்’ கட்டமைக்கப்பட்டது முதலியன அடுத்தடுத்த நிகழ்ச்சிகளாயின. சோஷலிசக் கட்டுமானங்களின் வீழ்ச்சியின் இன்னொரு பக்கம் உலகமயமும் தாராளமயமும் தகவல் தொழில்நுட்பப் புரட்சியும் அவர்கள் உரிமை கொண்டாடியதுபோல உலகத்தை ஒரு கிராமமாகச் சுருக்கின.”
பக்கங்கள்: 166, விலை: ரூ. 130,
இராணுவமயமாகும் இலங்கை
இலங்கையில் 2009-ல் நடந்த இறுதிக் கட்டப் போருக்குப் பின்னர் நடந்துகொண்டிருக்கும் நிகழ்வுகளின் தொகுப்பாக அ. மார்க்ஸ் எழுதியிருக்கும் புத்தகம் இது. 2011-13 காலச் சூழலில் அசுரவேகத்தில் ராணுவமயமாகி வரும் இலங்கையின் நிலை, 13-வது சட்டத்திருத்தத்தின் அபத்தங்கள், கொழும்புவில் அமைச்சர்களைவிட அதிக அதிகாரத்துடன் வளையவரும் ராஜபக்ச குடும்பம் உள்ளிட்ட பல விஷயங்களை இந்தப் புத்தகம் பேசுகிறது.
பக்கங்கள்: 88, விலை: ரூ. 70,
கரையும் நினைவுகள்
காத்திரமான அரசியல், சமூக விமர்சனக் கட்டுரைகள் எழுதும் சமூக ஆர்வலராக வாசகர்களால் அறியப்பட்ட அ. மார்க்ஸ், தனது அனுபவ நினைவுகளின் தொகுப்பாக எழுதியிருக்கும் புத்தகம் இது.
‘இரவு 11 மணி வாக்கில் ஓய்வான, குதூகலமான, உள்நோக்கிய சிந்தனைவயப்பட்ட தருணங்களில்’ தனது வலைப்பூ, ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் பதிவேற்றிய அனுபவக் குறிப்புகளைப் புத்தகமாக்கியிருக்கிறார் அ. மார்க்ஸ். அனுபவக் குறிப்புகள் என்றாலும், அ. மார்க்ஸின் அலாதியான நடையால் படைப்பிலக்கியத் தன்மை கொண்டதாக இருக்கிறது இந்த நூல்.
பக்கங்கள்: 144 , விலை: ரூ. 115,
இந்த மூன்று புத்தகங்களையும் உயிர்மை பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. தொடர்புக்கு: உயிர்மை பதிப்பகம், 11/29 சுப்பிரமணியம் தெரு, அபிராமபுரம், சென்னை - 600 018, தொலைபேசி: 91-44-24993448, மின்னஞ்சல்: uyirmmai@gmail.com
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
4 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago