உள்நாட்டுத் திருடர்களின் எண்ணிக்கை 80 லட்சத்துக்கு மேலே இருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை!
இன்று மாய எண்ணாகப் பார்க்கப்படுகிறது 627. இந்த எண்ணின் பின்னால் மறைந்திருப்பவர்களின் அடையாளம் தெரிந்து, அவர்களை அவமானம் அடையச் செய்துவிட்டால், அது கருப்புப் பணத்துக்கு எதிராக நாடு தொடங்கியிருக்கும் போரின் முதல் வெற்றியாக இருக்கும் என்று மக்கள் கருதுகிறார்கள். கருதுவது சரிதான் என்றாலும், கருப்புப் பணத்துக்கு எதிராக வெற்றி காண்பது அவ்வளவு எளிதல்ல.
வங்கியின் ஒரு கிளையில் உள்ள கணக்குகளின் எண்ணிக்கைதான் 627. இது போன்று பல வங்கிகளில் பல கிளைகளில் கணக்குகள் இருக்கின்றன. சராசரியாக ஒரு கணக்கில் 10 கோடி ரூபாய் இருக்கிறது என்று வைத்துக்கொண்டாலும், மொத்தம் 6,270 கோடி ரூபாய்தான். இது கருப்புப் பண வெள்ளத்தில் ஒரு துளி. வெளிநாட்டில் பதுக்கப்பட்டிருக்கும் பணத்தின் மதிப்பு 30 லட்சம் கோடி ரூபாய் என்று சிபிஐ இயக்குநர் சொல்கிறார்.
வெளிநாட்டில் பணத்தைப் பதுக்கி வைத்திருப்பவர்கள் 80,000 பேருக்கும் மேல் இருப்பார்கள் என்கிறார் பொருளாதார வல்லுநர் வைத்தியநாதன். இவர்களில் அரசியல்வாதிகள், சினிமா நடிகர்கள், தொழிலதிபர்கள், மருத்துவர்கள், பொறியியலாளர்கள், கல்வி நிறுவனங்களின் சொந்தக்காரர்கள், அடுக்குமாடிக் குடியிருப்புக் கட்டுபவர்கள் என்று பலரும் இருக்கிறார்கள் என்கிறார் அவர். பட்டியல் தயாரித்தால் அதில் பத்மவிபூஷண் வாங்கியவரிலிருந்து பத்மஸ்ரீ வாங்கியவர் வரை பலர் இருக்கலாம்.
இந்த நாட்டின் பல்வேறு அதிகார, பொருளாதார, கலாச்சார மையங்கள் கருப்புப் பணம் வைத்திருப்பவர்கள் கைகளில் இருக்கும்போது அதை வெளியில் கொண்டுவருவதற்கு அரசோ, பதவியில் இருக்கும் அரசியல் கட்சிகளோ மற்ற நிறுவனங்களோ பெருமுயற்சி எடுக்கும் வாய்ப்புகள் குறைவு. தங்கள் தலைகளிலேயே அவர்கள் மண்ணை வாரிப் போட்டுக்கொள்வார்களா என்ன?
வரியில்லாச் சொர்க்கங்கள்
சுவிட்சர்லாந்தைத் தவிர, உலகம் முழுவதும் வரியில்லாச் சொர்க்கங்கள் பல இருக்கின்றன. அமெரிக்கா போன்ற நாடுகள் இவர்களின் கைகளை முறுக்கி இந்த நாடுகளில் கள்ளப்பணம் வைத்திருப்பவர்களைப் பற்றிய தகவல்களை அறிகிறார்கள். பிரான்ஸ், ஜெர்மனி, பிரித்தானியா போன்ற நாடுகளும் இந்த சொர்க்க வாசத்திலிருந்து பணத்தை வெளியே கொண்டுவர முயன்றுகொண்டிருக்கின்றன.
இந்தியாவும் இவர்களுடன் சேர வேண்டும் என்கிறார் வைத்தியநாதன். இந்தியாவிலிருந்து மட்டும் வருடத்துக்கு ஐந்து லட்சத்துக்கும் மேற்பட்டோர் சுவிட்சர்லாந்து பயணம் செல்கிறார்கள். எனவே, இந்தியாவின் தயவு அவர்களுக்கு நிச்சயம் தேவை. அரசு நினைத்தால், சுவிட்சர்லாந்தை வழிக்குக் கொண்டுவர முடியும். உண்மையாக நினைப்பார்களா, அல்லது நினைப்பது போன்ற நாடகம் ஆடுவார்களா என்பதுதான் பிரச்சினை.
கருப்புப் பணத்தின் வகைகள்
வெளிநாட்டில் இருக்கும் இந்தியக் கருப்புப் பணம் இரு வகைகளைச் சார்ந்தது. முதல் வகை, நியாயமான வழியில் சம்பாதித்தாலும் வரிக்குப் பயந்து பதுக்கிய பணம்ன. இரண்டாவது ஹவாலா, போதைப்பொருள் கடத்தல், ஆயுதம் விற்றல் மற்றும் லஞ்சம் மூலமாக வந்தது. இந்த வகையில் சம்பாதித்த மொத்தப் பணமும் நியாயமற்ற முறையில் சம்பாதிக்கப்பட்டது. வல்லுநர்கள் இரண்டு வகைகளும் வெவ்வேறான முறைகளில் அணுகப்பட வேண்டும் என்கிறார்கள். பொதுமக்களுக்கு இரண்டும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான் என்று தோன்றும். இன்று வரை பத்து ரூபாய் கூடத் திரும்பி வராதபோது, அதன் வகை எப்படி இருந்தால் என்ன?
இந்தியாவில் இருக்கும் கருப்புப் பணம்
வெளிநாட்டில் இருக்கும் கருப்புப் பணமே நம்மைத் தலையைச் சுற்ற வைக்கிறது என்றால், இந்தியாவுக்குள் அதை விட ஏழெட்டுப் பங்குகள் அதிகமாகக் கருப்புப் பணம் புழங்குகிறது. சமீபத்தில் வந்த அறிக்கையின்படி, நாட்டில் புழங்கும் கருப்புப் பணத்தின் மதிப்பு நமது மொத்த உற்பத்தியின் மதிப்பில் 75% இருக்கும். அதன் அதிகரிப்பின் சதவீதம் மொத்த உற்பத்தியின் சதவீதத்தை விட அதிகம். நமது மொத்த உற்பத்தியின் மதிப்பு 6%-ல் உயர்கிறது என்றால், கருப்புப் பணம் 8%-ல் கொழுக்கிறது. இன்னும் சில வருடங்களில் அது மொத்த உற்பத்தியின் மதிப்பை விட அதிகரிக்கலாம்.
கருப்புப் பணத்தின் மாபெரும் உற்பத்தி ஊற்றுகள் மூன்று. ரியல் எஸ்டேட், கல்வித் துறை மற்றும் சுரங்கத் துறை. 627-ல் பெயர் தெரிந்த மூவரில் ஒருவர் சுரங்கங்களின் அதிபதி என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். இந்தியாவில் எந்த இடத்திலும் வீடு வாங்குவதிலேயோ வீட்டு மனை வாங்குவதிலேயோ 50%-த்துக்கு மேலாகக் கருப்புப் பணம் புழங்குகிறது. இது எல்லோருக்கும் தெரிந்த உண்மை. கல்வித் துறையில் வருடத்துக்கு 50,000 கோடி ரூபாய் கருப்புப் பணம் பிறக்கிறது என்று புள்ளிவிவரங்கள் சொல்கின்றன.
இரு உதாரணங்கள் போதும். நமது மருத்துவக் கல்லூரிகளில் 11,000 இடங்கள் இருக்கின்றன. இவற்றில் 2,800 இடங்கள் ‘தாராளமய’மாக்கப்பட்டு விலைக்குக் கொடுக்கப்படுகின்றன. விலை ஒரு கோடியிலிருந்து நான்கு கோடி வரை. ஒரு கோடி என்று வைத்துக்கொண்டாலும் கூட வருடத்துக்கு 2,800 கோடி ரூபாய் கருப்புப் பணம் உருவாகிறது. இதை விடுங்கள். குழந்தைகளை மழலைப் பள்ளிகளில் சேர்ப்பதில் உருவாக்கப்படும் கருப்புப் பணம் 15,000 கோடி!
அரசு என்ன செய்யலாம்?
இந்தியாவில் கருப்புப் பணம் இல்லாமல் தேர்தல்கள் நடத்த முடியாது என்ற நிலைமை இன்று இருக்கிறது. பிரதமர் உண்மையாகவே கருப்புப் பணத்துக்கு முடிவுகட்ட வேண்டும் என்று நினைத்தாலும், தேர்தல்களில் பணம் செலவு செய்வதைக் கணிசமாகக் குறைத்தால் ஒழிய அவர் நினைப்பது நடக்காது. அமெரிக்கா போன்ற நாடுகளில் யார் வரியை ஏய்த்தாலும் அரசு கடுமையான நடவடிக்கையை உடனடியாக எடுக்கிறது. நமது நிலைமையைப் பாருங்கள். இந்த 627 பெயர்கள் 2006-ம் ஆண்டு வங்கிக் கணக்கிலிருந்து எடுக்கப்பட்டவை.
இது நம்மிடம் வந்து சேர்ந்து நான்கு வருடங்களுக்கும் மேல் ஆகியும், அரசு அங்கும் இங்கும் ஓடுவதாக நாடகம் காட்டிக்கொண்டிருந்ததே தவிர, உண்மையாக ஏதும் செய்யவில்லை. இப்போது உச்ச நீதிமன்றம் சிறப்பு விசாரணைக் குழுவுக்கு 31 மார்ச் 2015-க்குள் அறிக்கை தருமாறு கெடு விதித்திருக்கிறது. இதற்குப் பிறகுதான் நடவடிக்கை. வெளிநாட்டில் பணம் வைத்திருப்பவர்கள் 80,000 பேருக்கும் மேல். உள்நாட்டுத் திருடர்கள் 80 லட்சம் இருந்தாலும் ஆச்சரியமில்லை. இவர்களுக்கு எதிராக என்று நடவடிக்கை எடுத்து எப்போது பணத்தைக் கொண்டுவர? 31 மார்ச் 3015-ம் வருடத்திலா?
நாம் என்ன செய்யலாம்?
இந்தப் பெருந்திருட்டுக்கு நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த நாமும் உடந்தை என்பதை எளிதாக மறந்துவிடுகிறோம். நமது ஆடிட்டர்களும் வழக்கறிஞர்களும் டாக்டர்களும் சிறுதொழில் செய்பவர்களும் தங்கள் உண்மையான வருமானத்தில் சுமார் 30 சதவீதத்துக்கு மட்டுமே வரி செலுத்துகிறார்கள். வழக்கறிஞர்களில் வருமானவரி அறிக்கையைச் சமர்ப்பிப்பவர்கள் 3% மட்டுமே. ஆடிட்டர்களில் 7%; டாக்டர்கள் பரவாயில்லை - 43%. லஞ்சம் வாங்கும் அதிகாரிகளையும் சேர்த்துக்கொண்டால், நமது வில்லன்களின் எண்ணிக்கை பாகிஸ்தான் மக்கள்தொகையைவிட அதிகமாக இருக்கலாம். கொடுக்கும் வரி சரியாகச் செலவிடப்படவில்லை என்று சொல்வதெல்லாம் நாம் நமக்கே கூறிக்கொள்ளும் சமாதானம். நாமிருக்கும் நாடு நமது என்பதை நாம் அறியும் வரை கருப்புப் பணத்தை நம்மால் ஒழிக்கவே முடியாது.
- பி.ஏ. கிருஷ்ணன்,
‘புலிநகக்கொன்றை’, ‘கலங்கிய நதி’ ஆகிய நாவல்களின் ஆசிரியர்.
தொடர்புக்கு: tigerclaw@gmail.com
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
11 hours ago
கருத்துப் பேழை
11 hours ago
கருத்துப் பேழை
11 hours ago
கருத்துப் பேழை
11 hours ago
கருத்துப் பேழை
9 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago