தமிழக தினம் கொண்டாடலாமா?

By செ.ச.செந்தில்நாதன்

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் மாநில உருவாக்க நாள் என்பது மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டுவருகிறது. நவம்பர் 1, கர்நாடகத்தில் மாநில உருவாக்க நாள் அல்லது ராஜ்ய உத்ஸவ தினம் என, இந்திய சுதந்திர தினத்தைவிட எள்ளளவிலும் குறையாத நாளாக, கொண்டாடப்பட்டுவருகிறது. அந்த நாளில் கர்நாடக வரைபடத்தைத் தாங்கிய மஞ்சள் கொடி கர்நாடகத்தின் எல்லா இடங்களிலும் பறக்கும். அதே நாள் கேரளத்தில் கேரளப் பிறவி தினம் என்று கொண்டாடப்படுகிறது. அதைப் போலவே ஒடிஷாவில் ஏப்ரல் 1-ம் தேதி உத்கல் திவசமாகவும் பிஹாரில் மார்ச் 2 பிஹார் திவாஸாகவும் கொண்டாடப்படுகிறது. (ஆந்திராவும் தெலுங்கானாவும்தான் இப்போது குழப்பத்தில் இருக்கின்றன).

இதே நவம்பர் 1, 1956-ல்தான் நமது தமிழகமும் (சென்னை மாநிலம் என்கிற பெயரில்) புதிய எல்லை வரையறைக்கு உட்படுத்தப்பட்டு, ஒரு மாநிலமாக உருவாக்கப்பட்டது. ஆனால், நாம் ஏன் நவம்பர் 1-ஐ மாநில உருவாக்க நாளாகக் கொண்டாடுவதில்லை? இதற்கான பதிலுக்குள் பல வரலாற்றுச் செய்திகள் ஒளிந்திருக்கின்றன.

மொழிவாரி மாகாணங்களின் ஒன்றியம்

இந்தியாவில் மொழிவாரி மாநிலங்களின் கோரிக்கை களின் வரலாறு 19-ம் நூற்றாண்டின் இறுதியிலேயே தொடங்கிவிட்டது! தனி மாநில/மாகாண கோரிக்கை களின் தொடக்கம் ஒரிசாதான் என்பது பலருக்கு ஆச்சரிய மாக இருக்கலாம். 1895-ல் மத்திய மாகாணத்தின் ஒரு பகுதி யாக இருந்த ஒரிசாவில் பிரிட்டிஷ் அரசு நிர்வாக வசதிக்காக இந்தியை ஒரிசாவின்மீது திணித்தபோது, சம்பல்பூரில் போராட்டம் வெடித்தது. அதிலிருந்து ஒரிசா தனி மாகாண மாக ஆக்கப்படவேண்டும் என போராட்டம் தொடர்ந்தது. இறுதியில், 1935-ல் ஒரிசா தனி மாகாணமாக ஆனது. ஒரியர் களைப் போலவே மராத்தியரும் தமக்கான மொழிசார்ந்த புவி அடையாளத்தைக் கண்டடைவதில் பின்தங்கியிருக்க வில்லை. ஒரு கட்டத்தில் இந்தியாவில் எல்லாத் தரப்பினருமே மொழிவாரி மாகாணங்கள் என்கிற கருத்தாக்கத்தையே வந்தடைந்தனர்.

மத்திய சட்டசபை 1948-ல் எஸ்.கே. தர் தலைமையில் ஒரு கமிட்டியை அமைத்து மொழிவாரி மாநிலக் கோரிக்கைகளை ஆராய்ந்தது. மொழிவாரி மாகாணங்கள் தொடர்பான யதார்த்தத்தை தர் கமிட்டி அங்கீகரித்தது. ஆனால், அது தேச நலன்களுக்கு எதிரானது என்று முடிவு செய்தது. ஆனால், 1952 டிசம்பர் 16-ல் பொட்டி ராமுலுவின் உயிர்க்கொடைக்குப் பின் நேரு அரசு தனது தூக்கத்தைக் கலைக்க வேண்டியதாயிற்று. 1953 அக்டோபர் 1-ல் ஆந்திர மாநிலம் உருவானது. இது இந்தியா முழுக்க, தனி மாநிலக் கனவுகளில் இருந்த மக்களுக்கு உற்சாகமளித்தது. 1953-ல் மத்திய அரசு மாநில மறுஒழுங்கமைப்புக் குழுவை அமைக்கும் நிலைக்கு உள்ளானது. 1955-ல் அந்தக் குழு 16 மொழிவழி மாநிலங்களையும் 3 யூனியன் பிரதேசங்களையும் அமைக்கப் பரிந்துரை செய்தது. அதன் அமலாக்கம் மாநில மறுஒழுங்கமைவுச் சட்டம்-1956 மூலமாக நடந்தேறியதெல்லாம் நாம் அறிந்த வரலாறு.

மலபார், திருவிதாங்கூர்-கொச்சி சமஸ்தானம், தென் கர்நாடக- மலையாளப் பகுதிகள் இணைந்து கேரள மாநிலம் உருவானது. அதற்கு முக்கியப் பங்காற்றியவர்களில் முதுபெரும் கம்யூனிஸ்ட் தலைவர் ஈ.எம்.எஸ் நம்பூதிரிபாடு குறிப்பிடத் தக்கவர். அதுபோலவே, மைசூர் சமஸ்தானம், சென்னை / பம்பாய் சமஸ்தானங்களில் அடங்கியிருந்த கன்னடர்கள் பெருவாரியாக வசித்த பகுதிகள், ஹைதராபாத் கர்நாடகப் பகுதி ஆகியவற்றை உள்ளடக்கிய புதிய மைசூர் மாநிலம் 1956 நவம்பர் 1-ல் உருவானது. இது 1973-ல் கர்நாடகம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. காங்கிரஸ் தலைவர்களான மொரார்ஜி தேசாயும் இந்துலால் யக்னிக்கும் மகாகுஜராத் இயக்கம் நடத்தி, பம்பாய் மாகாணத்தின் குஜராத்தி பகுதிகளையும் செளராஷ்டிர, கட்ச் பகுதிகளையும் இணைத்து குஜராத் மாநிலத்தை உருவாக்கினார்கள்.

தமிழகம் செய்ததென்ன?

மொழிவாரி மாநிலப் பிரிவினை சூறாவளியாகச் சுழன்றடித்த வேளையில் தமிழகம் ஒரு விநோதமான சூழலைச் சந்தித்தது. மொழி அரசியலுக்கும் மாநில உரிமைகளுக்கும் முன்னோடி என்று கருதப்படும் தமிழகம் 1940-50-களில் இவ்விஷயத்தில் மிகவும் குழம்பிப்போயிருந்தது.

தமிழக தனி மாகாண அல்லது மாநிலக் கோரிக்கைக்கும் நீண்ட வரலாறு உண்டு. காங்கிரஸ்காரராக இருந்த சர் சி. சங்கரன் நாயர் 1926-ல் மத்திய சட்டப்பேரவையில் சென்னை மாகாணத்திலுள்ள பத்து தமிழ் மாவட்டங்களைத் தனியாகப் பிரித்து பிரிட்டிஷ் ராஜ்ஜியத்தின் கீ்ழ் டொமினியன் அந்தஸ்து உள்ள பிரதேசமாகத் தமிழகத்தை உருவாக்க வேண்டும் என ஒரு தீர்மானத்தைக் கொண்டுவந்தார். கிட்டத்தட்ட ஒரு தனிநாடு கோரிக்கையாகவே அது இருந் தது. அது அப்போது ஏற்கப்படவில்லை. ஆனால், அதன் பிறகு, தமிழ்நாட்டில் தனி மாகாண அல்லது தனி நாடு கோரிக்கைகள் மெல்ல மெல்ல உருவாகத் தொடங்கின. முதன்முதலாக, “இந்தியா என்பது ஒரு நேஷனா?” என்று தந்தை பெரியார் கேள்வி எழுப்பியது இதற்குப் பின்புதான். 1938-ல் இந்தித் திணிப்புக்கு எதிரான போராட்டத்துக்குப் பிறகு திராவிட, தமிழ்த் தேசியவாதிகள் அல்லது தமிழறிஞர்கள் பிரிட்டிஷ் அரசுக்குட்பட்ட தமிழ் மாகாணம் ஒன்றை இந்திய எல்லைக்கு உட்பட்டோ அல்லது அதற்கு வெளியிலோ கேட்டார்கள். ஆனால், அவை எதுவுமே பெரும் போராட்டங்களாக வெடிக்கவில்லை. 1947-க்குப் பிறகு, இவை எல்லாம் இந்திய தேசியத்திலோ அல்லது திராவிட நாட்டுப் பெருங்கனவிலோ கரைந்துபோயின.

50-களில் மற்ற இடங்களில் ஐக்கிய கேரளம், சம்யுக்த மகாராஷ்டிரம், விசாலாந்திரம், கர்நாடக ஏகிகரண இயக்கம் என்றெல்லாம் இயக்கங்கள் தோன்றி மொழி அடை யாள அரசியல் பரவிய நேரத்தில், தமிழகத்தின் தலைவர்கள் தங்களுக்கான வியூகத்தை வகுத்திருக்கவில்லை. சொல்லப்போனால், தமிழ்நாட்டில் எல்லைக் காப்புப் போராட்டங்களே மாநில உருவாக்கப் போராட்டமாக இருந்தது. மபொசி, நேசமணி போன்றோரின் போராட்டங்கள் எல்லைக் காப்பை மையமாகக் கொண்டிருந்தன.

திராவிட நாடு எங்கே?

30-களில் ஓரளவுக்காயினும் ஏற்கத் தக்க வரலாற்று யதார்த்தமாக இருந்த திராவிட நாடு கோரிக்கை 50-களில் காலப் பொருத்தமற்றதாகவே மாறியிருந்தது. நூற்றாண் டின் தொடக்கப் பதிற்றாண்டுகளிலேயே தெலுங்கு, கன்னடம், மலையாளம் பேசுபவர்கள் சென்னை மாநிலத்தை உடைத்துத் தங்களுக்கான மாகாணங்களைக் கோரிப் போராடிக்கொண்டிருந்த தருணத்தில், யாருக்காக திராவிட இயக்கத்தினர் திராவிட நாட்டுக் கனவைக் கண்டுகொண்டிருந்தார்கள் என்கிற கேள்வி எழுகிறது. வடக்கின் ஏகாதிபத்தியத்துக்கு எதிரான, அல்லது புதியதோர் சமூக நீதிக்கான உருவகமாக திராவிட நாடு இருந்தது என்பது உண்மைதான். ஆனால், 50-களின் சூழல் அதை நிர்மூலமாக்கிவிட்டது. குறைந்தபட்சம் பெரியார் திராவிட நாட்டுக் கனவை 1956 நவம்பர் 1-ல் கலைத்துக்கொண்டுவிட்டார். ஆனால், அண்ணாவால் அது முடியவில்லை. 1962-ல்தான் அவர் அதைக் கைவிட்டார். இப்படி ஒரு திராவிட தேச மயக்கத்தில் தமிழகம் இருந்தபோதுதான், இந்தியா முழுக்க மொழிவாரியாக இடங்கள் பிரிக்கப்பட்டபோது, தேவிகுளமும் பீர்மேடும் மட்டும் ‘புவியியல்’ காரணங்களுக்காக கேரளத்திடமே இருக்கும்படி அனுமதிக்கப்பட்டது. அது திராவிட நாட்டில் இருப்பதால் அண்ணா சகித்துக்கொண்டார். காமராஜருக்கோ அவை இந்தியாவில்தானே இருக்கிறது என்பதால் கவலை இல்லை. பெரியாரோ, தான் சமூக முன்னேற்றத்துக்காகப் போராடுகிறவனே ஒழிய, விஸ்தீரணத்துக்காகப் போராடுபவன் இல்லை என்று அறிவித்துவிட்டார். இவ்வாறாக, சென்னை மாகாணத்தின் எச்சமாக தமிழ்நாடு வேறு வழியில்லாமல்- உருவானது. அதனால்தான், தமிழகத்தில் நவம்பர் 1, கொண்டாடப்படக்கூடிய ஒரு நிகழ்வாக இருந்ததில்லை.

இந்தியாவில் மொழிவாரி மாநிலப் பிரிவினை என்பது இந்தியாவின் பன்மைத்தன்மையை அங்கீகரித்த ஒரு செயல்பாடாகும். ஆகவே, நவம்பர் 1-ம் தேதியைக் கொண்டாட வேண்டியதன் அவசியம் நமக்கு இருக்கிறது. ஆயிரம் குற்றம் குறைகள் இருந்தாலும், ஒரு தமிழ் அரசாக, தமிழகப் பகுதி உருவான நாள் அந்த 1956 நவம்பர் 1-தான் என்கிற உண்மையை யாரால் மறுக்கவியலும்?

- செ.ச. செந்தில்நாதன், அரசியல் செயல்பாட்டாளர், எழுத்தாளர், தொடர்புக்கு: zsenthil@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

15 hours ago

கருத்துப் பேழை

15 hours ago

கருத்துப் பேழை

15 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்