மெல்லத் தமிழன் இனி...! 20 - குழந்தைகளுக்கு என்ன பதில் சொல்லப்போகிறோம் நாம்?

By டி.எல்.சஞ்சீவி குமார்

அந்தப் பிஞ்சுகளின் கண்களில் பயம் இன்னமும் அகலவில்லை. சின்ன சத்தத்துக்குக்கூட உடல் அதிர்கிறார்கள். நான் நீண்ட நேரம் ஆறுதலாகப் பேசியும் ஒரு வார்த்தை பேசவில்லை அவர்கள். “மாமா, நல்லவரும்மா. ஒண்ணும் செய்ய மாட்டாரு” என்கிறார் வகுப்பெடுக்கும் ஆசிரியை. நம்ப மறுத்து மிரள்கிறாள் சின்னவள். பெரியவளோ உணர்ச்சியைக் காட்டாமல் வெறித்துக்கொண்டிருக்கிறாள்.

ரத்தக்கறையுடன் வந்த குழந்தைகள்!

தேனி மாவட்டத்தில்தான் அந்தக் குழந்தைகளை சந்திக்க நேர்ந்தது. “ஒரு மாசத்துக்கு முன்னாடிதான் இங்க வந்தாங்க. குழந்தைங்க கண் முன்னாடியே அவங்க அப்பா, அம்மாவைக் கொன்னுட்டாரு. இதுங்களும் அப்பாவோட காலைப் பிடிச்சுக் கெஞ்சியிருக்குங்க. குழந்தைங்க கதறக்கதறக் கேட்காம அம்மிக் கல்லைத் தூக்கிப் பொண்டாட்டி தலையில் போட்டு கொன்னுட்டாரு. டிரஸ், முகம் எல்லாம் ரத்தக்கறையோடதான் குழந்தைங்க இங்க வந்துச்சுங்க” என்கிறார் குழந்தைகளைப் பராமரிக்கும் பெண்மணி.

தேனி மாவட்டம், கூடலூர்ப் பகுதியைச் சேர்ந்தவர்கள் இந்தக் குழந்தைகள். சகோதரிகளில் மூத்த பெண் ஜீவிதாவுக்கு எட்டு வயது. இளையவள் தேவதர்ஷிணிக்கு ஐந்து வயது. தந்தை கூலித் தொழிலாளி. பெரும் குடிநோயாளி. குடிநோயாளிகளில் கணிசமான பேருக்கு இருக்கும் சந்தேக நோய் அவருக்கும் இருந்திருக்கிறது. ஏற்கெனவே இந்தத் தொடரில் விவரித்திருந்தோமே, அதுபோலதான். மதுவினால் உடல் பலவீனமாகி, மனைவியை திருப்திப்படுத்த முடியாத சூழலில் எழும் சந்தேகங்கள், கேள்விகள் அவருக்கும் எழுந்திருக்கின்றன. குறிப்பாக, குழந்தைகளைப் பார்க்கும்போதெல்லாம் அவருக்கு வெறி ஏறியிருக்கிறது. இது மனைவியைக் கொலை செய்வதில் போய் முடிந்திருக்கிறது. அவர் இப்போது சிறையில் இருக்கிறார். இன்று பல குடிநோயாளிகளின் குடும்பங்கள் இப்படித்தானே சீரழிந்து கொண்டிருக்கின்றன.

தனது தாய் இறந்துவிட்டார் என்பதை இன்னமும் மூத்த பெண்ணால் பெண்ணால் நம்ப முடியவில்லை. “ஆஸ்பத்திரிக்குத் தூக்கிட்டுப் போனாங்க. வந்திடு வாங்கதானே...” என்கிறாராம் ஒரு சமயம். மற்றொரு சமயமோ, “அம்மா செத்திடுச்சு. என் முன்னாடிதான் அப்பா கொன்னுப்போட்டாரு. சாராயம் குடிச்சிட்டு வந்து முதல்ல என்னை அடிப்பாரு. அப்புறம் அம்மாவுக்கு அடி விழும். எல்லாம் சாராயம் பண்ணுற வேலை”என்று இன்னொரு சமயம் பக்குவப்பட்ட தொனியில் பேசுகிறாராம்.

குழந்தைகளுக்குள் எழும் கேள்விகள்

குடிநோயாளிகளால் பாதிக்கப்படும் குடும்ப உறுப்பினர்களில் எல்லோரையும் விடவும் மிகவும் சிக்கலுக்குள்ளாவது குழந்தைகள்தான். இயல்பாகவே குழந்தைகளுக்குள் கேள்விகள் எழுந்துகொண்டே இருக்கும். அப்படி இருக்கும்போது குடிநோயாளிகளின் குடும்பங்களில் நிலவும் அசாதாரணச் சூழல் அவர்களுக்குள் மேலும் மேலும் கேள்விகளை எழுப்புகிறது.

அப்பா ராத்திரி வீட்டுக்கு வந்தால் ஏன் நாற்றம் அடிக்கிறது? அப்பா ஏன் தெருவில் படுத்துக்கிடக்கிறார்? அப்பா ஏன் அம்மாவை அடிக்கிறார்? என்று குழந்தைகளுக்குள் கிளை விரிக்கின்றன கேள்விகள். ஆனால், குடிநோயாளிகளின் குடும்பங்களில் தெளிவான, நேரடியான பதில்கள் கிடைப் பதில்லை. ‘அப்பாவுக்கு உடம்பு சரியில்லை’, ‘டானிக் மருந்து குடிச்சிருக்காரு’, ‘தொணதொணன்னு அனத்தாதே சனியனே...’ இப்படியான பதில்களையே பெறுகிறார்கள். ஒருகட்டத்தில் குழந்தைகள் கேள்விகளுக்கான பதில்களைத் தாங்களே தேடுகிறார்கள். இடம், பொருள், சூழலைக் கொண்டு பதில்களை உருவாக்கிக்கொள்கிறார்கள்.

பேசாதே, நம்பாதே, உணர்ச்சியைக் காட்டாதே!

இப்படி வளரும் குழந்தைகள் பொதுவாகத் தங்களுக்குள் “பேசாதே, நம்பாதே, உணர்ச்சிகளைக் காட்டாதே” என்று மூன்று விதிகளை வகுத்துக்கொள்கின்றன என்கிறார்கள் குடிநோயாளிகளையும் அவர்களின் குடும்பங்களையும் கையாளும் மற்றும் ஆய்வு செய்யும் மனநல மருத்துவர்கள். குடிநோயாளிகளின் குடும்பங்களில் அவர்களின் பிரச்சினைகளை சமாளிப்பதே பெரும் பாடாக இருக்கும். அங்கு குழந்தைகளின் கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்ல யாருக்கும் நேரமும் இருக்காது; பொறுமையும் இருக்காது. பெற்றோரிடம் கேள்வி கேட்டு பதில் கிடைக்காமல் சலித்துப்போயிருப்பார்கள் குழந்தை கள். சமயத்தில் அடிகளும் விழும். அப்போது அவர்கள் உருவாக்கிக்கொள்ளும் பதில்: “யாரிடமும் எதுவும் கேட்காதே. பேசாதே’.

அடுத்ததாக, பெற்றோரை நம்பி தொடர் ஏமாற்றம் அடை கிறார்கள். அப்பா சினிமாவுக்கு அழைத்துப்போவார், அம்மா பூரி சுட்டுத்தருவார், அப்பா ஐஸ்கிரீம் வாங்கித்தருவார், உப்பு மூட்டை சுமந்து விளையாடுவார் என்பது போன்ற குழந்தைகளின் குறைந்தபட்ச ஆசைகளைக்கூட குடிநோயாளிகள் நிறைவேற்றுவது இல்லை. அல்லது அவர்களால் முடிவதில்லை. ஒரு கட்டத்தில் குழந்தையின் மனதில் இது ஆழப் பதிந்துவிடுகிறது. அப்போது குழந்தைகள் உருவாக்கிக்கொள்ளும் பதில், ‘யாரையும் நம்பாதே’.

குடிநோயாளிகளின் குடும்பங்களில் உணர்ச்சி களைக் காட்டும்போதுதான் சண்டைகளே உருவா கின்றன. ஒருவர் குடித்துவிட்டு வீட்டுக்குப் போகும் போது அவரை யாரும் எதுவும் கேட்கவில்லை என்றால் பிரச்சினை இல்லை. ஆனால், மனைவியோ இதர குடும்ப உறுப்பினர்களோ பொறுக்க மாட்டாமல் உணர்ச்சிவசப்பட்டுக் கேள்வியைக் கேட்டுவிட்டால் வீடு ரணகளமாகிவிடும். இதைப் பார்த்துப் பழகிய குழந்தைகள் உருவாக்கிக்கொள்ளும் பதில், ‘உணர்ச்சிகளைக் காட்டாதே’.

இப்போது கட்டுரையின் முதல் பத்தியை மீண்டும் ஒருமுறை படியுங்கள், நிகழ் கால சாட்சியாக நிர்க்கதியாக நிற்கிறார்கள் ஜீவிதாவும், தேவதர்ஷிணியும். இந்தக் குழந்தைகளுக்கு என்ன பதில் சொல்லப்போகிறோம் நாம்?

(தெளிவோம்)

- டி.எல். சஞ்சீவிகுமார்,

தொடர்புக்கு: sanjeevikumar.tl@thehindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

13 hours ago

கருத்துப் பேழை

13 hours ago

கருத்துப் பேழை

12 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்