வங்கத்தில் மாற்றுக் கட்சியினர் பாஜகவில் இணையும் மேளா விமரிசையாக நடந்துகொண்டிருக்கிறது. நேற்று முன்தினம் திரிணமூல் கட்சியைச் சேர்ந்த பல தலைவர்கள் பாஜகவின் வங்க மாநிலத் தலைவர் திலீப் கோஷ் முன்னிலையில் பாஜகவில் இணைந்திருக்கிறார்கள். கடந்த வாரத்தின் தொடக்கத்திலேயே திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளர் வில்சன் சம்ப்ரமேரி பாஜகவின் டெல்லி தலைமை அலுவலகம் சென்று, அக்கட்சியில் இணைந்தார். அவரோடு தெற்கு தினாஜ்பூர் மாவட்ட ஊராட்சியைச் சேர்ந்த 18 திரிணமூல் உறுப்பினர்களில் 10 பேர் பாஜகவில் சேர்ந்திருக்கிறார்கள். வங்கத்தின் ஜில்லா பரிஷத்தில் ஒன்று இப்போது பாஜக வசமாகிவிட்டது. பாஜகவின் அடுத்த இலக்கு, 24 பர்கானா மாவட்ட ஊராட்சி மன்றங்கள் என்கிறார்கள். பாஜக ஏதோ தேசிய அளவிலும், மாநில அளவிலும் மட்டும் எதிர்க்கட்சிகளிலிருந்து ஆட்களைத் தூக்கவில்லை. கிராமப் பஞ்சாயத்து வரை தன் உத்தியைத் தொடர்கிறது.
கொடி பறக்கும் ரகசியம்
எல்லா மாநிலங்களிலும் எங்களது கொடி பறக்கிறது என்று பெருமிதமாகச் சொல்கிறார் அமித் ஷா. ஐந்தாண்டுகளுக்கு முன்பாக அவர் பாஜகவின் தலைவராகப் பொறுப்பேற்றபோது, எல்லா மாநிலங்களிலும் பாஜக பலம் பெற்றிருக்கவில்லை. பின்பு, எப்படி இது சாத்தியமானது? அடுத்தடுத்து வந்த தேர்தல்களில் எப்படி பெருவெற்றி பெற முடிந்தது? அமித் ஷாவின் கைதேர்ந்த உத்திதான்.
குஜராத்திலிருந்து அமித் ஷா தொடங்கிய விளையாட்டு இது. பொதுவாக, ஏனைய கட்சிகளில் மாற்றுக் கட்சியினரைச் சேர்த்துக்கொள்வதுபோல பாஜகவில் எல்லோரையும் சேர்த்துக்கொள்ளும் வழக்கம் கிடையாது; சித்தாந்த தூய்மைவாதப் பார்வை அங்கே அதிகம். ஒருவேளை கட்சிக்குள் சேர்த்துக்கொண்டாலும், ஆர்எஸ்எஸ் பின்னணி கொண்டவர்களைத் தனித்தும், ஏனையோரைத் தனித்தும்தான் அணுகுவார்கள். சிறந்த தமிழ்நாட்டு உதாரணம் திருநாவுக்கரசர். பதவி, அதிகாரம் கிடைக்கும்; பெரிய அளவில் மாற்றத்தை உண்டாக்கும் இடத்துக்குச் செல்ல முடியாது.
அமித் ஷாவின் வியூகம்
அமித் ஷா இந்த எல்லையைக் கொஞ்சம் விஸ்தரித்தார். குஜராத்தில் நகரங்களில் வலுவாக இருந்த கட்சி கிராமங்களில் பலவீனமாக இருந்தது. இப்படி கட்சி பலவீனமாக உள்ள அல்லது அமைப்பே இல்லாத கிராமப்புறங்களில் அங்கு செல்வாக்கோடு இருக்கும் ஊராட்சி நிர்வாகிகளைக் கட்சிக்குள் ஈர்த்துவந்தார் அமித் ஷா. இப்படிப் புதிதாகக் கட்சிக்குள் ஆட்கள் கொண்டுவரப்பட்ட அடுத்த சில மாதங்களில் அந்தக் கிராமங்களில் ஆர்எஸ்எஸ் ஷாகாக்கள் தொடங்கிவிடும். விரைவிலேயே கட்சிக்கு அங்கு சொந்த பலம் உருவாகிவிடும்.
பாஜக தேசியத் தலைவரானதும் நாடு முழுக்க இதே வியூகத்தைத்தான் விஸ்தரித்தார் அமித் ஷா. வடகிழக்கு மாநிலங்கள் சிறந்த உதாரணம். ஒருகாலத்தில் பாஜக என்றால் என்ன என்று கேட்கக்கூடிய வடகிழக்கில் இன்று 17/25 தொகுதிகளில் வென்றிருக்கிறது பாஜக. அருணாச்சல பிரதேசம், அஸ்ஸாம், திரிபுரா, மணிப்பூர் மாநிலங்களில் ஆட்சியைக் கைப்பற்றியிருப்பதோடு, நாகாலாந்து, சிக்கிமில் ஆளும் கூட்டணியிலும் இருக்கிறது. எப்படி?
அஸ்ஸாம் கண பரிஷத் கட்சியின் செல்வாக்கு மிக்க தலைவராக இருந்த சர்வானந்த சோனாவால்தான் இன்று பாஜகவின் அஸ்ஸாம் முகம் - முதல்வர். நேற்றைக்கு காங்கிரஸின் தூண்களாக அறியப்பட்ட பீமே காண்டு, பைரன் சிங் இன்று பாஜகவின் அருணாசல பிரதேச, மணிப்பூர் முதல்வர்கள். மாநில அளவில் அதிகாரங்களை அனுபவிக்கலாம். ஆனால், தேசிய அளவிலான பாஜகவின் செயல்திட்டங்களுக்கு எதிராக மாநிலத்தில் இவர்களால் ஒன்றும் செய்ய முடியாது. ஆர்எஸ்எஸ் சித்தாந்தப் பயிற்சி பெற்று, கட்சிக்குள் பதவியில் இருப்பவர்களே முக்கிய முடிவுகளை எடுக்கும் இடத்தில் இருப்பார்கள். வடகிழக்கைப் பொறுத்தவரை தற்போது பாஜகவின் தேசிய பொதுச்செயலாளர்களில் ஒருவராக இருக்கும் ராம் மாதவ் மட்டுமே அந்த இடத்தில் இருக்கிறார்.
திமுகவின் திட்டம் சரியா?
தமிழகத்திலும் ஒரு மேளா நடந்துகொண்டிருக்கிறது. அதிமுகவிலிருந்து தினகரனின் தலைமையில் அமமுகவைத் தொடங்கியவர்கள் ஒவ்வொருவராக அவரை விட்டு திமுகவில் சேர்ந்துகொண்டிருக்கிறார்கள். செந்தில் பாலாஜி, வி.பி.கலைராஜன், அடுத்து இப்போது தங்க.தமிழ்ச்செல்வன். இவர்கள் மூன்று பேருமே தத்தமது தொகுதிகளில் சொந்த செல்வாக்கு கொண்டவர்கள் என்பது போக, திமுக இங்கெல்லாம் பலவீனமாகவே இருந்துவருகிறது.
கரூர் சட்டமன்றத் தொகுதி அதிமுகவின் தொகுதியாகவே அறியப்பட்டது. 1971, 1989, 1996 ஆகிய மூன்று தேர்தல்களில் மட்டுமே திமுக வென்ற தொகுதி இது. மக்களவைத் தொகுதியில் 2004-ல் திமுகவின் கே.சி.பழனிசாமி வென்றதோடு சரி. அதேசமயம், இரண்டு முறை அத்தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராகவும் அதிமுக அரசில் அமைச்சராகவும் இருந்தவர் செந்தில் பாலாஜி. வி.பி.கலைராஜன்
2001-க்குப் பிறகு திமுகவால் வெல்ல முடியாத தியாகராயர் நகர் தொகுதியிலிருந்து, இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.
தங்க.தமிழ்ச்செல்வன் ஆண்டிபட்டி தொகுதியிலிருந்து மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். திமுகவால் இரு முறை மட்டுமே வெல்ல முடிந்த தொகுதி இது. ஆண்டிபட்டியை உள்ளடக்கிய பெரியகுளம் மக்களவைத் தொகுதியிலும் திமுக இரண்டு முறை மட்டுமே வென்றிருக்கிறது. அதிலும் தேனி என்று தொகுதி பெயர் மாறிய பிறகு, திமுகவின் கணக்கு இன்னும் தொடங்கவில்லை.
அதிகாரக் கணக்குகள்
ஆக, அமித் ஷாவின் உத்தியைக் கையில் எடுத்திருக்கிறார் ஸ்டாலின் என்ற பேச்சு திமுகவின் மேல்மட்டத்தில் இப்போது எழுந்திருக்கிறது. ஆனால், உள்ளூர் அளவில் கட்சியின் மூத்த தலைவர்கள், பல காலமாக உழைத்த செயல்பாட்டாளர்கள், முக்கியமாக கொள்கை சார்ந்து திமுகவில் நீடிப்பவர்களுக்கு இது அதிர்ச்சியையே தந்திருக்கிறது. ஏனென்றால், திமுக நோக்கிப் புதிதாக வந்திருப்பவர்களுக்குத் தங்களுடைய பதவி அதிகாரக் கணக்குகளே பிரதானமானவை.
அமித் ஷாவின் பாணியில் முக்கியமான மூன்று விஷயங்கள் உண்டு. கட்சிக்காக உழைத்தவர்கள், சித்தாந்தரீதியாக பாஜகவோடு பிணைந்திருப்பவர்கள் ஒருநாளும் அங்கே பின்னுக்குத் தள்ளப்பட மாட்டார்கள். அதேபோல, அவர்களுடைய பதவி, அதிகாரமெல்லாம் எல்லைக்கு உட்பட்டது.
முக்கியமான இன்னொரு விஷயம், புதிதாக வருவோரைக் கொண்டு சித்தாந்தரீதியாகக் கட்சியை அந்தந்தப் பிராந்தியங்களில் வளர்த்தெடுப்பதை முக்கியமான வேலையாகக் கருதிச் செய்கிறது பாஜக. திமுகவும் ஸ்டாலினும் என்ன செய்யப்போகிறார்கள்? சித்தாந்தரீதியாக அந்தந்தப் பகுதிகளில் கட்சியை வளர்த்தெடுக்க திமுகவிடம் ஏதேனும் திட்டங்கள் இருக்கின்றனவா? அப்படி என்ன அமைப்பு கட்சிக்குள் இன்று இருக்கிறது? ஏனென்றால், வெறும் அதிகாரத்துக்காகவும் பதவிகளுக்காகவும் அணி மாறுபவர்களை அப்படியே முக்கியப் பொறுப்புகளில் அமர்த்தினால், கட்சி வளராது; காணாமல்போய்விடும்!
தொடர்புக்கு: puviyarasan.s@thehindutamil.co.in
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
27 secs ago
கருத்துப் பேழை
20 hours ago
கருத்துப் பேழை
20 hours ago
கருத்துப் பேழை
20 hours ago
கருத்துப் பேழை
21 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago