நவீன இந்தியாவின் சிற்பிகளில் ஒருவரான மவுலானாவைப் பற்றிய நினைவுகூரல்
பிஹாரின் ராம்கர் நகரில் 1940-ல் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டுக்குத் தலைமை வகித்துப் பேசிய மவுலானா அபுல் கலாம் ஆஸாத், தனது உரையில் இப்படிக் குறிப்பிட்டார்: “நான் ஒரு முஸ்லிம். அதற்காகப் பெருமைப் படுகிறேன். 1,300 ஆண்டு பாரம்பரியமிக்க செழுமையும் புகழும் கொண்ட மார்க்கத்துக்குச் சொந்தக்காரன் நான். அதில் அணுவளவுகூடப் பங்கம் ஏற்படுவதை நான் ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன். நான் ஒரு இந்தியன் என்பதிலும் அதே அளவு பெருமை கொள்கிறேன்.” ஆம், ஆஸாத் ஒரே நேரத்தில் உண்மையான முஸ்லிமாகவும், சிறந்த இந்தியனாகவும் விளங்கினார்.
பள்ளிப் பருவத்திலேயே அரசியலில் ஈடுபாடு கொண்டிருந்தார் ஆஸாத். 1906-ல் டாக்காவில் நடைபெற்ற முஸ்லிம் லீக் தொடக்க மாநாட்டில் கலந்துகொண்டார். எனினும் முஸ்லிம் லீக்கின் மிதவாதப் போக்கு அவரை ஈர்க்கவில்லை. எனவே, 1907-ல் புரட்சிகரக் கட்சியில் சேர்ந்தார். இந்துக்களும் முஸ்லிம்களும் ஒன்றிணைந்து ஆங்கில ஆட்சிக்கு எதிராகப் போராட வேண்டும் என்று பிரச்சாரம் செய்தார். 1913-ல் ஹிஸ்புல்லா என்ற அமைப்பைத் தொடங்கினார்.
1920-ல் மகாத்மா காந்தியைச் சந்தித்த பின்னர்தான், காங்கிரஸ் இயக்கத்தில் தன்னை முழுமையாக இணைத்துக் கொண்டார். ஒத்துழையாமை இயக்கத்திலும், கிலாபத் இயக்கத்திலும் முகம்மது அலி ஜவுகருடன் இணைந்து செயல்பட்டார். இவ்விரு தலைவர்களும் நாட்டு மக்களால் பெரிதும் மதிக்கப்பட்டனர். காங்கிரஸ் இயக்கம் நடத்திய அனைத்துப் போராட்டங்களிலும் ஆஸாத் பங்குகொண்டார். ஆறு முறை கைது செய்யப்பட்ட அவர், தன்னுடைய வாழ்நாளில் 10 ஆண்டுகள் 7 மாதங்கள் சிறைவாசம் அனுபவித்தவர்.
நீதிமன்றத்தில் கர்ஜனை
1922-ல் நடைபெற்ற ஒத்துழையாமை இயக்கத்தின்போது கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர் மீது அலிப்பூர் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றது. 11.01.1922 அன்று அலிப்பூர் நீதித் துறை நடுவர் முன்னிலையில் ஆஜரான அவர், ஆக்ரோஷமான வார்த்தை களில் வாக்குமூலம் அளித்தார். ஆஸாத் பேசியதிலிருந்து சில வரிகள்:
“நீங்கள் எனக்கு உச்சபட்சத் தண்டனை அளியுங்கள். அது எவ்வளவு பெரிய தண்டனையாக இருந்தாலும் நான் பதற மாட்டேன். தீர்ப்பை எழுதும்போது உங்கள் கரங்கள் நடுங்கலாம். ஆனால், உங்கள் தீர்ப்பைச் செவிமடுக்கும்போது எனது இதயம் நடுங்காது. இது உறுதி. எனக்குக் கிடைக்கவிருப்பது சிறைக்கொட்டடி எனில், உங்களுக்கு நீதித் துறையின் உயர் பதவிகளும் மரியாதைகளும் கிடைக்கும். இதே நிலை தொடர என்னை அனுமதியுங்கள்; நீங்கள் நீதிபதியாகவும் நான் குற்றவாளி யாகவும். இந்த நிலை சில காலம் தொடரும். அதன் பிறகு நாம் மற்றொரு நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவோம். அங்கே இறைவனே நீதிபதியாக வீற்றிருந்து தீர்ப்பு வழங்குவான். அதுதான் இறுதித் தீர்ப்பாகும்.” அவரது வாக்குமூலத்தைக் கேட்டு நீதித் துறை நடுவர் நடுநடுங்கிப்போனதாகக் கூறப்படுவதில் ஆச்சரியம் இல்லை.
1942-ல் நடைபெற்ற ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தில் கலந்துகொண்டதற்காகக் கைதுசெய்யப்பட்டு, அஹமத் நகர் சிறையில் அடைக்கப்பட்டார் ஆஸாத். அவருடன் நேருவும் இருந்தார். 3 ஆண்டுகள் நீடித்த இந்தச் சிறைவாசத்தின்போது அவரது மனைவி சுலைஹா பீவியும், சகோதரி ஹனீபா பேகமும் அடுத்தடுத்த ஆண்டு களில் மரணமடைந்தார்கள். இந்த இருவரின் இறுதிச் சடங்குகளிலும் கலந்துகொள்ள ஆங்கில அரசு அவருக்கு அனுமதி வழங்கவில்லை. 1945-ல் விடுதலை பெற்ற பின்னரே இருவரின் கல்லறைகளுக்கும் சென்று மலர் தூவி ஃபாத்திஹா ஓதினார் ஆஸாத்.
எழுச்சியூட்டும் எழுத்து
மேடைகளில் எழுச்சியுடன் உரையாற்றும் வல்லமை பெற்றிருந்த ஆஸாத் சிறந்த எழுத்தாளரும்கூட. ‘சமந்தார்’, ‘மதீனா’, ‘முஸ்லிம் கெஜட்’, ‘ஹம்தர்த்’ ஆகிய உருது இதழ்களில் ஆங்கில அரசின் கொள்கைகளைக் கண்டித்துக் காரசாரமாக எழுதினார். பின்னர், ‘அல்ஹிலால்’ என்ற பத்திரிகையைத் தொடங்கி, அதில் கட்டுரைகள் எழுதிவந்தார். இந்த இதழைத் தொடர்ந்து நடத்தவிடாமல் ஆங்கில அரசு அவருக்குக் கடுமையான நெருக்கடிகளைக் கொடுத்தது. பத்திரிகைக்கு அதிகப் பிணைத்தொகை செலுத்துமாறு அரசு அவருக்கு ஆணையிட்டது. இதே காலகட்டத்தில் ‘அல்பலாக்’ என்ற பெயரில் மற்றொரு பத்திரிகையையும் தொடங்கினார் ஆஸாத். அவரது எழுத்தும் பேச்சும் உணர்ச்சிபூர்வமாகவும் அறிவுபூர்வமாகவும் அமைந்திருந்தது.
பிரிவினையை ஏற்காதவர்
1940-ல் காங்கிரஸ் இயக்கத்தின் தலைவராக ஆஸாத் தேர்ந்தெடுக்கப்பட்டார். (அவரை எதிர்த்துப் போட்டியிட்டவர் எம்.என்.ராய்) 1946 இறுதி வரை அப்பதவியில் இருந்தார். இறுதி வரை பாகிஸ்தான் பிரிவினையை எதிர்த்தார். எனினும், காந்தி உள்ளிட்ட தலைவர்களால்கூடப் பிரிவினையைத் தடுக்க முடியாமல் போனபோது, செய்வதறியாது கை பிசைந்து நின்றார்.
பிரிவினைக்குப் பின்னர் தலைநகர் டெல்லியில் நடைபெற்ற வகுப்புக் கலவரங்களில் முஸ்லிம்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளானார்கள். நூற்றுக் கணக்கான முஸ்லிம்கள் அவரது இல்லத்திலேயே தஞ்சம் அடைந்திருந்தார்கள். அப்போது உள்துறை அமைச்சராக இருந்த சர்தார் பட்டேல் இந்தக் கலவரங்களை ஒடுக்க தக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளவில்லை என ஆஸாத் கருதினார். இதுபற்றி தனது மனக்குமுறல்களை ‘இந்திய விடுதலை வெற்றி’ என்ற நூலில் பதிவுசெய்திருக்கிறார் ஆஸாத். அந்தப் புத்தகத்தின் சமர்ப்பணத்தில் இப்படி எழுதியிருப்பார்: ‘நண்பரும் தோழருமான ஜவாஹர்லால் நேரு அவர்களுக்கு’.
பாகிஸ்தான் எதிர்ப்பு
சிறந்த இஸ்லாமிய மார்க்க அறிஞராகத் திகழ்ந்தார் ஆஸாத். ராஞ்சி சிறையில் இருந்தபோது திருக்குர்ஆனை உருது மொழியில் மொழிபெயர்த்தார். பாகிஸ்தான் தனி நாடு கோரிக்கையால் பெரிதும் ஈர்க்கப்பட்டு, ஜின்னாவின் தலைமையின் கீழ் அணி திரண்டிருந்த பெரும்பான்மையான முஸ்லிம்கள் அவரை முஸ்லிம் விரோதி எனத் தூற்றியபோதிலும் அவர் கலங்கவில்லை. தனது பாகிஸ்தான் எதிர்ப்பு நிலைப்பாட்டில் கடைசி வரை உறுதியாகவே இருந்தார்.
இந்தியாவின் முதல் கல்வி அமைச்சராகப் பொறுப்பேற்ற ஆஸாத், கல்வி முறையில் பல அடிப்படை சீர்திருத்தங்களைக் கொண்டுவந்தார். கிராமப்புற ஏழை மக்களுக்குக் கட்டாய இலவசக் கல்வி வழங்கிட முன்னுரிமை அளித்தார். முதியோர் கல்விக்கு வித்திட்டார்.
பல்கலைக்கழகக் கல்விக்குழு, இடைநிலைக் கல்விக் குழு, பல்கலைக்கழக மானியக்குழு, இந்திய அறிவியல் கழகம், தொழில்நுட்பக் கல்லூரிகள் ஆகியவை அவரது பதவிக் காலத்தில்தான் உருவாக்கப்பட்டன. கலை, இலக்கியம், பண்பாடு ஆகியவற்றைப் பாதுகாத்து ஊக்குவிக்கும் பொருட்டு சாகித்ய அகாடமி, சங்கீத அகாடமி, லலிதகலா அகாடமி, நாடக அகாடமி ஆகிய அமைப்புகளை உருவாக்குவதில் பெரும் பங்காற்றினார். தேசிய ஆவணக் காப்பகம் உருவாக்கப்பட்டதும் அவரது பதவிக் காலத்தில்தான்.
2.2.1958-ல் அவர் மரணமடைந்தபோது, அரசு கடனில் வாங்கிய கார் ஒன்றைத் தவிர குறிப்பிட்டுச் சொல்லும் படியான வேறு எந்தச் சொத்தும் அவரிடம் இல்லை. சொத்துக்கள் என்று அவர் எதையும் விட்டுச் செல்லவில்லை. வங்கிக் கணக்கு இல்லாமல், அசையும், அசையாச் சொத்துக்கள் எதுவும் இல்லாமல் ஆஸாத் இவ்வுலகை விட்டுப் பிரிந்தார்.
இந்து-முஸ்லிம் ஒற்றுமையை நிலைநாட்டுவதில் மிகுந்த அக்கறையும் கவனமும் செலுத்திவந்தவர் ஆஸாத். ‘அல்பலாக்’ இதழில் அவர் இப்படி எழுதினார்: “சுதந்திரம் கிடைப்பதற்குத் தாமதமானாலும் பரவாயில்லை. இந்தியத் தாய்க்கு ஒரு நிமிடம்கூட வேற்றுமையின் பாரத்தைத் தாங்கும் சக்தியில்லை.” சாதி, மத, இன மோதல்கள் இல்லாததும், அறிவில் உயர்ந்து விளங்குவதுமான ஒரு இந்தியாதான் ஆஸாதின் கனவு இந்தியா. அந்த இந்தியாவை நோக்கி நாம் எடுத்துவைக்கும் ஒவ்வொரு அடியிலும் ஆஸாதை நாம் பெருமைப்படுத்துகிறோம்.
- சேயன் இப்ராகிம்,அஞ்சல்துறை உதவிக் கண்காணிப்பாளர் (ஓய்வு).
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
7 hours ago
கருத்துப் பேழை
7 hours ago
கருத்துப் பேழை
7 hours ago
கருத்துப் பேழை
10 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago