நாடு மீண்டும் பிளவுபடுவதைத் தாங்க முடியாது : சரத் யாதவ் பேட்டி

By ஸ்மிதா குப்தா

த்திய பிரதேச மாநிலத்தில் பிறந்து தேசிய அரசியலில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக முத்திரை பதித்துவரும் சரத் யாதவ் சமத்துவம், மதச்சார்பின்மை கொள்கைகளில் ஊறியவர். ஐக்கிய ஜனதா தளக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர். ஜெயப்பிரகாஷ் நாராயணின் இயக்கம் மூலம் அரசியலில் குதித்தவர். லோஹியாவின் சீடர். பிஹார் முதலமைச்சர் நிதீஷ் குமார், லாலு பிரசாதின் ஆர்.ஜே.டி.யுடனான கூட்டை முறித்துக்கொண்டு பாஜகவுடன் சேர்ந்து மீண்டும் ஆட்சியமைத்ததை எதிர்ப்பவர். இப்போது காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க் கட்சிகளை ஓரணியில் திரட்டுகிறார், நாட்டின் ‘கூட்டுக் கலாச்சாரத்தைக் காப்போம்’ என்ற கொள்கை முழக்கத்துடன். மண்டல் அரசியல், சோஷலிச இயக்கம், நிதீஷுடன் ஏற்பட்ட பிணக்கு, எதிர்க்கட்சிகளின் இணைப்பு குறித்து அவர் அளித்த பதில்கள்:

‘கூட்டுக் கலாச்சாரத்தைக் காப்போம்’ என்ற கொள்கை அடிப்படையில் நீங்கள் கூட்டிய கூட்டத்தில் பல எதிர்க்கட்சிகள் பங்கேற்றன; குறுகிய காலத்தில் இது எப்படி சாத்தியமாயிற்று?

நம் நாட்டின் அரசியல் சட்ட முகப்புரையே கூட்டுக் கலாச்சாரம் குறித்துப் பேசுகிறது. மூன்று மாதங்களுக்கு முன்பு மார்க்சிஸ்ட் தலைவர் சீதாராம் யெச்சூரியுடன் பேசியபோது இந்த யோசனை உதித்தது. மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத் (காங்கிரஸ்) அறையில் நடந்த இன்னொரு விவாதத்தில் இது பலருடைய ஆதரவையும் பெற்றது. ஆகஸ்ட் 17-ல் கூட்டம் நடத்த முடிவானது. நாடு முழுவதிலுமிருந்து இவ்வளவு பேர் வருவார்கள் என்று நான் எதிர்பார்க்கவேயில்லை.

2014-ல் மோடி அரசின் நிலம் கையகப்படுத்தும் சட்டத்துக்கு எதிராக எல்லா எதிர்க் கட்சிகளையும் ஓரணியில் திரட்டுவதில் முக்கியப் பங்கு வகித்தீர்கள் அல்லவா?

ஒருங்கிணைப்பாளராக இருந்தேன். காங்கிரஸுடன் இணைந்து போராட பல கட்சிகள் தயக்கம் காட்டின. அவை காங்கிரஸுக்கு எதிராகப் போராடியவை. அந்தச் சட்டம் விவசாயிகளுக்கு விரோதமானது என்பதால் அனைவரையும் திரட்டினேன். குடியரசுத் தலைவர் மாளிகைக்கு ஊர்வலம் செல்ல முடிவு செய்தோம். சோனியாவும் வர விரும்புகிறார் என்று முதல் நாள் மாலை குலாம் நபி ஆசாத் தெரிவித்தார். வரட்டும் என்று சொன்னேன். அந்த ஊர்வலத்துக்குப் பிறகு இருவர்தான் பேசினோம். ஒன்று நான், இன்னொன்று சோனியா. அதற்குப் பிறகுதான் அந்தச் சட்டம் மாற்றப்பட்டது. அப்போது நான் ஐக்கிய ஜனதா தளத் தலைவர். அப்பதவியிலிருந்து நான் இறங்கிய பிறகு கட்சியின் போக்கு மாறிவிட்டது.

எப்படி மாறியது?

டெல்லியில் நான் ஒன்றைப் பேசினால் பாட்னாவில் கட்சியின் புதிய தலைவர் நிதீஷ் குமார் அதற்கு மாறாகப் பேசுவார். பணமதிப்பு நீக்கத்தை நான் எதிர்த்தேன்; அது நல்ல நடவடிக்கை என்றார் நிதீஷ். குடியரசுத் தலைவர் வேட்பாளர் தேர்வு தொடர்பான 2 கூட்டங்களில் நான் பங்கேற்றேன். தமிழ்நாட்டில் நடந்த கூட்டத்தில் முதல்வரும் கட்சித் தலைவருமான நிதீஷ் பங்கேற்றார். ராம்நாத் கோவிந்த் வேட்பாளர் என்று பாஜக அறிவித்ததும் ஐக்கிய ஜனதா தளம் அவரை ஆதரிக்கிறது என்ற அறிவிப்பு எனக்கு தர்மசங்கடமாகிவிட்டது.

சமீபத்தில் மாண்ட்சவுர் நகரில் விவசாயிகளுக்கு ஆதரவாக காங்கிரஸ் தலைவர்களுடன் கிளர்ச்சியில் ஈடுபட்டீர்கள்; சோஷலிஸ்டுகளும் லோஹியா ஆதரவாளர்களும் காங்கிரஸைக் கடுமையாக எதிர்ப்பவர்கள். இப்போது சேர வேண்டிய அவசியம் என்ன?

இதில் மாற்றம் ஏதுமில்லை. அப்போதிருந்த சூழலில் காங்கிரஸை எதிர்த்தோம். இந்திரா காந்தி காலத்தில் அரசியலுக்கு வந்தேன். அப்பா ஹோஷங்காபாத் மாவட்ட காங்கிரஸ் தலைவர். துர்கா பிரசாத் மிஸ்ரா, சேத் கோவிந்த தாஸ் ஆகியோருக்கு நெருக்கம். நான் லோஹியாவால் ஈர்க்கப்பட்டேன். பல்கலைக்கழகத்தில் படித்தபோது பாட்னா முதல் பரோடா வரை கல்லூரி வளாகங்களில் அரசியல் எழுச்சி பொங்கிக்கொண்டிருந்தது.

நாகபூஷண் பட்நாயக்கும் நானும் 1971-ல் கைது செய்யப்பட்டோம். நான் நீண்ட காலம் சிறையில் இருந்தவன். நான் தலைவர்களாக மதித்த லோஹியா, ஜெயப்பிரகாஷ் நாராயண், கற்பூரி தாக்கூர் – அனைவருமே சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள். நம்முடைய அரசியல் சட்டமே சுதந்திரப் போராட்டத்தை நினைவூட்டுவதுதான்.

அப்படியானால் இது உங்களுக்கு சொந்த வீட்டுக்குத் திரும்புவதைப் போல – அப்படித்தானே?

நான் காங்கிரஸ் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவன். மதச்சார்பின்மையும் கூட்டுக் கலாச்சாரத்தில் நம்பிக்கையும் என்னுடைய அடையாளம். இவை அரசியல் சட்டத்தில் இடம் பெற்றிருப்பவை.

எதிர்க்கட்சிகளுக்கு யார் தலைமை வகிப்பார்கள்? சோனியா காந்தியா?

17 எதிர்க்கட்சிகளை சோனியா ஒருங்கிணைக்கிறார். கூட்டுக் கலாச்சாரத்தைக் காப்பதற்கான முயற்சிகளுக்கு எல்லையே இல்லை. இப்போது பல போராட்டங்கள் நடக்கின்றன. கடன் சுமையில் உள்ள விவசாயிகள், வேலை கிடைக்காத இளைஞர்கள், ரோகித் வெமுலா தற்கொலை - உனா சம்பவங்களுக்காக தலித்துகள் போன்றோர் போராடிவருகின்றனர். நம் நாடு ஒரு முறை பிளவுபட்டது, மீண்டும் அப்படியொரு பிளவு ஏற்படுவதை அனுமதிக்க முடியாது. இதில் முரண்பாடுகள் ஏதுமில்லை.

நான் ஒரு குழுவை அமைப்பேன். எல்லாக் கட்சிகளையும் சேர்ந்த செல்வாக்கு பெற்ற தலைவர்கள் அதில் இடம் பெறுவார்கள். எதிர்க் கட்சிகளிலேயே பெரிய கட்சி காங்கிரஸ்தான். ஆகவே, சோனியா காந்திதான் எதிர்க் கட்சிகளுக்குத் தலைமை வகிப்பார்.

பிஹாரில் கட்சிக்குக் கிடைத்த வாய்ப்பு மாநிலத்தை வளப்படுத்துவதற்காகத்தான்; ஒரு குடும்பம் மேலும் மேலும் பணம் குவிக்க அல்ல என்று நிதீஷ் குமார் கூறியிருக்கிறாரே?

மகா கூட்டணியை உருவாக்கியவர் லாலு பிரசாத். ஐக்கிய ஜனதா தளம் முன்முயற்சி எடுத்தது. வாக்கு வேட்டைக்கு ஆர்.ஜே.டி. நல்ல கட்சியாக இருந்தது; முதல் தகவல் அறிக்கை பதிவானதால் அதனுடனான கூட்டணியை முறிப்பதைப்போன்ற கேலிக்கூத்து இல்லை. 11 கோடி மக்களுக்குத் தெரியும் எதற்காக, எங்களுக்கு வாக்களித்தார்கள் என்று.

இது பழைய ஜனதா கட்சிக்கான வாக்கு, காங்கிரஸ் உடன் நின்றது. ஐந்தாண்டு ஆட்சி செய்ய ஒன்றரை மாதங்கள் பிரச்சாரம் செய்தோம். மக்கள் நம்பிக்கை தெரிவித்தார்கள். எல்லாக் கூட்டங்களிலும் பாஜக கூட்டணியைக் கடுமையாகத் தாக்கிப் பேசினோம். அந்தக் கூட்டணிக்குத் தாவுவது மக்களுக்குச் செய்யும் துரோகம். நாங்கள் தனியாக தேர்தல் அறிக்கை வெளியிட்டோம், பாஜகவும் அப்படியே. இந்த இரண்டும் எப்படி ஒன்றாகும்? அதுதான் என் வருத்தம்.

சித்தாந்த ரீதியாக சரியான முடிவை எடுத்திருந்தாலும் அரசியல்ரீதியாக நீங்கள் முக்கியத்துவம் இழப்பீர்கள் என்று உங்களுடைய நலம் விரும்பிகளே கூறுகிறார்களே?

வாழ்க்கையில் எத்தனையோ போராட்டங்களைப் பார்த்தவன்; கடந்த காலத்தில்கூட இப்படிப் பேசியிருக்கிறார்கள். கொஞ்ச காலம் பொறுத்திருங்கள். முக்கியமான தேசியப் பிரச்சினைகளை நான்தான் முதன்முதலாக எழுப்பியிருக்கிறேன். அப்படிப்பட்ட நான் அடையாளம் இல்லாமல் போய்விடுவேனா? நிலக்கரி ஊழல், காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி ஊழல் போன்றவற்றை நான்தான் முதலில் பேசினேன். சுரேஷ் கல்மாடி சிறைக்குச் செல்ல நேர்ந்தது. ஆசாராம் பாபு விவகாரத்தை முதலில் பேசியது யார்? நாடு முழுக்க சுற்றுப்பயணம் செல்லும் தேசிய அரசியல்வாதி நான்.

2013-ல் பாஜகவுடனான உறவை நிதீஷ் குமார் முறித்தபோது, தேசிய ஜனநாயக கூட்டணியில் நீடிக்க வேண்டும் என்று கூறியவர் நீங்கள்?

அப்போது இரு கட்சிகளும் ஒப்புக்கொண்ட பொதுச் செயல்திட்டம் இருந்தது. அடல் பிஹாரி வாஜ்பாய், அத்வானி தலைவர்களாக இருந்தனர். அயோத்தியில் ராமருக்குக் கோயில், காஷ்மீருக்குத் தனி அந்தஸ்து தரும் அரசியல் சட்டக்கூறு 370 ரத்து, அனைவருக்கும் பொது சிவில் சட்டம் என்ற சர்ச்சைக்குரிய மூன்று கொள்கைகளை பாஜக அப்போது ஒதுக்கிவிட்டது. அப்போது பொதுச் செயல்திட்டத்தை உருவாக்கியது ஜார்ஜ் பெர்னாண்டஸ், ராமகிருஷ்ண ஹெக்டே, நிதீஷ் குமார், வாஜ்பாய், அத்வானி ஆகியோர்.

2013-ல் கூட்டணியிலிருந்து வெளியேறாமல் இருந்திருந்தால் நாட்டுக்கு இந்த நெருக்கடி வந்திருக்காது; அப்படியே ஒருவேளை மோடி வந்திருந்தாலும் நாங்கள் கூட்டணியிலிருந்து வெளியேறியிருப்போம். அது பாஜகவுக்கு எதிராகப் பெரிய இயக்கத்தை உருவாக்கியிருக்கும்.

வாஜ்பாய் அரசியல் மத்திய அமைச்சராக இருந்தீர்கள்; வாஜ்பாய்-அத்வானி பாஜகவுக்கும் மோடி-அமித்ஷா பாஜகவுக்கும் வேறுபாடுகள் என்ன?

சித்தாந்தத்தில் மாற்றமில்லை என்றாலும் அப்போது தேசிய செயல்திட்டம் இருந்தது. பாஜகவுடன் பல முறை கூட்டாகச் செயல்பட்டிருக்கிறோம். வாஜ்பாயுடன் இருந்த போது சர்ச்சைக்குரிய விஷயங்கள் அவர்களுடைய செயல்திட்டத்தில் இல்லை. இப்போது மீண்டும் இடம் பெற்றுவிட்டன.

உடைவது, இணைவது மறுபடியும் உடைவது என்பதுதானே சோஷலிஸ்டுகளின் வரலாறு?

அப்படிப் பலமுறை உடைந்ததால் நாட்டுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதை ஒப்புக்கொள்கிறேன். வெள்ளையனே வெளியேறு இயக்கம் தொடங்கி, நெருக்கடி நிலை அமல் காலம் வரை சோஷலிஸ்டுகள் மக்களுக்காக மட்டுமே போராடிவருகிறார்கள்.

மண்டல் இயக்கம் இப்போதும் பொருத்தமானதுதானா?

அனைத்து மக்களுக்கும் சமூக, பொருளாதார நீதி வழங்கப்பட்டால்தான் இந்தியாவில் நீதி நிலைநாட்டப்படும். சாதி அமைப்பு முறையால்தான் சமூகத்தில் ஏற்றத்தாழ்வுகள் ஏற்பட்டுள்ளன. சமூகத்தில் காணப்படும் ஏற்றத்தாழ்வுகள்தான் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளாகி நம்முடைய சமூகத்தின் அனைத்துத் துயரங்களுக்கும் காரணங்களாகத் திகழ்கின்றன.

இந்தியாவில் நடந்த போராட்டத்திலேயே பெரியது சமூக ஏற்றத்தாழ்வுக்கு எதிரானதுதான், அது இன்றளவும் தொடர்கிறது. சாதி அமைப்பு முறை ஒழிக்கப்படாதவரை இந்தப் போராட்டம் ஓயாது. சாதிகளில் தங்களுக்கு நம்பிக்கை இல்லை என்று கூறினாலும் எதையும் சாதி அடிப்படையில்தான் எல்லோரும் சிந்திக்கின்றனர்.

-சுருக்கமாகத் தமிழில்: சாரி,

©: ‘தி இந்து’ (ஆங்கிலம்)

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

13 hours ago

கருத்துப் பேழை

13 hours ago

கருத்துப் பேழை

13 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்