வெள்ளையனே வெளியேறு: இந்தியாவை உலுக்கிய போராட்டம்!

By பி.ஏ.கிருஷ்ணன்

கா

ங்கிரஸ் கட்சியின் எதிர்காலம் 1937-ல் மிகவும் பிரகாசமாக இருக்கும் என்று தோன்றியது. மாநிலங்களில் நடந்த தேர்தல்களில் (வாக்குரிமை 10% மக்களுக்கு மட்டும் இருந்தது) காங்கிரஸ் எட்டு மாநிலங்களில் வெற்றி பெற்றது. முஸ்லிம் லீக்குக்கு ஒரு மாநிலத்தில்கூட வெற்றி கிடைக்கவில்லை. இரண்டே ஆண்டுகளில் நிலைமை தலைகீழாக மாறிவிட்டது.

1939, செப்டம்பர் முதல் தேதியன்று ஜெர்மனி போலந்து நாட்டைத் தாக்கியது. செப்டம்பர் மூன்றில் பிரிட்டன் ஜெர்மனிமீது போர் செய்யப் போவதாக அறிவித்தது. அறிவித்த சில மணி நேரங்களிலேயே இந்திய வைஸ்ராய் இந்தியாவும் ஜெர்மனியோடு போர்நிலையில் இருப்பதாக அறிவித்தார். யாரையும் கலந்து பேசாமல் தானே எடுத்த முடிவு அது. இந்த சர்வாதிகாரப் போக்கு இந்திய மக்களின் விருப்பத்தை ஒரு பொருட்டாகவே அவர் மதிக்கவில்லை என்பதைத் தெளிவாக உலகத்துக்கு அறிவித்தது. காங்கிரஸ் கட்சி பாசிஸத்துக்கும் நாசிஸத்துக்கும் எதிரான நிலைப்பாட்டைத்தான் எடுத்திருந்தது. ஆனால், நேரு கூறியதுபோல ‘இந்திய மக்கள் போரில் அடிமைகளாகக் கலந்துகொள்ள மாட்டார்கள்’ என்ற நிலைப்பாட்டிலும் தெளிவாக இருந்தது.

வைஸ்ராயின் பிடிவாதம்

போர் முடிந்த பிறகு இந்தியா விடுதலை பெறும் என்ற அறிவிப்பு அரசுத் தரப்பிலிருந்து வரும் என்று காங்கிரஸ் கட்சி எதிர்பார்த்தது. ஆனால், வைஸ்ராயோ இங்கிலாந்து அரசோ அது போன்ற எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. மாறாக, கமிட்டிகள் அமைத்து அதில் இந்தியர்கள் பங்கு பெறலாம் என்று வைஸ்ராய் சொன்னார். இந்த அவமதிப்புக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் விதமாக காங்கிரஸ் மாநிலங்களில் ஆட்சிப் பொறுப்பிலிருந்து விலக முடிவு செய்தது. ஆனால், உடனடியாக ஏகாதிபத்தியத்தை எதிர்த்து எந்தப் போராட்டத்தையும் காங்கிரஸ் நடத்தவில்லை. போர்க்காலத்தில் இங்கிலாந்துக்கு இடையூறு செய்ய கட்சி விரும்பவில்லை.

பாகிஸ்தான் தீர்மானம்

இந்தக் காலகட்டத்தில்தான் முஸ்லிம் லீக் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக இருக்கும் மாநிலங்கள் தனித்தியங்கும் மாநிலங்களாக அறிவிக்கப்பட வேண்டும் என்ற தீர்மானத்தைக் கொண்டுவந்தது. ஜின்னா முஸ்லிம்கள் தனிநாட்டைச் சேர்ந்தவர்கள். அவர்களுக்கும் இந்துக்களுக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது என்று அறிவித்தார். இந்தியாவைத் துண்டாட 1940-ல் அவர் போட்ட விதை பெரிய நச்சு மரமாக ஏழே ஆண்டுகளில் வளர்ந்துவிட்டது. இந்தியா ஒரே நாடாக இருக்க வேண்டும், மதச்சார்பில்லாத நாடாக இருக்க வேண்டும், மக்கள் அனைவரும் ஓட்டுரிமை பெற்று மக்களாட்சி நடைபெறும் நாடாக இருக்க வேண்டும் என்று காங்கிரஸ் பல ஆண்டுகளாகச் சொல்லிக்கொண்டிருந்தது. ஆனால், ஜின்னாவின் பிரிவினைவாதத்துக்கு பிரிட்டானிய ஏகாதிபத்தியத்தின் மறைமுக ஆதரவு இருந்தது. எனவே, எந்தப் போராட்டத்தைக் காங்கிரஸ் நடத்தினாலும் அதற்கு நேர் எதிர்நிலையை ஜின்னா எடுக்கத் தயங்கவில்லை. அதனால், ஏகாதிபத்தியத்துக்கு எதிராக மிகக் கவனமாக இயங்க வேண்டிய கட்டாயம் காங்கிரஸ் கட்சிக்கு இருந்தது. 1940-ல் காந்தி தனிநபர் சத்தியாகிரகத்தை நடத்தினாலும், ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் பெரிய அளவில் மக்களைத் திரட்டத் தயங்கினார்.

அமெரிக்காவும் இந்திய விடுதலையும்

7, டிசம்பர் 1941-ல் பெர்ல் துறைமுகத்தை ஜப்பான் தாக்கி அமெரிக்காவை இரண்டாம் உலகப் போருக்குள் இழுத்தது. 1942-ன் முதல் மாதங்களில் அமெரிக்க, பிரிட்டானிய ராணுவங்கள் ஜப்பானுக்கு எதிராகத் தாக்குப்பிடிக்க முடியாமல் படுதோல்விகளைச் சந்தித்தன. மலேயா, பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா, பர்மா போன்ற நாடுகள் ஒன்றன் பின் ஒன்றாக ஜப்பான் கைவசம் வந்தன. இந்தியா கைக்கெட்டும் தூரத்தில் இருந்தது. அன்றைய அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த ரூஸ்வெல்ட் இந்திய மக்களுக்கு அதிக அதிகாரம் கொடுக்கும் அவசியத்தை வலியுறுத்தி சர்ச்சிலுக்கு எழுதினார். சர்ச்சில் வேறு வழியின்றி தனது மந்திரிகளில் ஒருவரான கிரிப்ஸை இந்தியாவுக்குத் தலைவர்களுடன் பேச அனுப்பினார்.

கிரிப்ஸ் வருகை

கிரிப்ஸ் தொழிற்கட்சியைச் சேர்ந்தவர். இந்தியத் தலைவர்கள் பலரின், குறிப்பாக நேருவின், நண்பர். எனவே, அவருடைய வருகை பெரிய எதிர்பார்ப்பை அளித்தது. கிரிப்ஸின் அறிக்கையில் முக்கியமானவை இவை: 1. இந்தியா போர் முடிந்ததும் டொமினியன் நிலையைப் பெறும் (அதாவது கனடா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து போன்று பிரிட்டிஷ் மன்னரைத் தலைவராக ஏற்றுக்கொண்ட நாடாக மாறும்). 2. போர் முடிந்ததும் இந்திய அரசியல் சட்டத்தை அமைப்பதற்கு ஒரு குழு ஒன்று அமைக்கப்படும். 3. மாநிலங்களுக்கும் இந்திய மன்னர்களுக்கும் பிரிந்து போகும் உரிமை அளிக்கப்படும்.

காங்கிரஸ், கிரிப்ஸின் அறிக்கையை முற்றிலும் நிராகரித்தது. நாட்டைத் துண்டாடும் எந்த ஒரு பரிந்துரையையும் அது ஏற்கத் தயாராக இல்லை. மேலும், இந்திய மக்களைக் கலந்தாலோசிக்காமல் எடுக்கும் எந்த முடிவையும் அது ஏற்கத் தயாராக இல்லை. முஸ்லிம் லீக் கட்சியும் பாகிஸ்தான் உருவாக்கப்படும் என்று வெளிப்படையாக கிரிப்ஸ் சொல்லவில்லை என்ற காரணத்தினால் அறிக்கையை எதிர்த்தது. பல சுற்று பேச்சுவார்த்தைகள் நடந்தும் கிரிப்ஸின் முயற்சி தோல்வி அடைந்தது. அதற்கு முக்கியமான காரணம், இந்தியாவில் உடனடியாக தேசிய அரசை நிறுவ இங்கிலாந்து மறுத்ததால்தான். வைஸ்ராய்க்கு இருந்த அதிகாரங்களைக் குறைக்க சர்ச்சில் தயாராக இல்லை. அவருக்குக் கீழ் பொம்மைகள் போலப் பணியாற்ற தேசியத் தலைவர்கள் தயாராக இல்லை. ரூஸ்வெல்ட்டின் தூதர் தனது தலைவருக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டதுபோல நேருவும் கிரிப்ஸும் ஐந்து நிமிடங்களில் பேசித் தீர்த்திருக்கக் கூடிய பிரச்சினையான இது, லண்டன் விரும்பாததால் தீர்க்க முடியாத பிரச்சினையாக உருவெடுத்தது.

வெள்ளையனே வெளியேறு!

கிரிப்ஸின் தோல்வி காந்தியின் நிலைப்பாட்டை முழுமையாக மாற்றியது. வெள்ளையர்களை வெளியேறச் செய்ய வேண்டுமென்றால், மக்கள் போராட்டத்தைத் தவிர வேறு வழியில்லை என்ற முடிவுக்கு அவர் வந்தார். 14, ஜூலை 1942-ல் காங்கிரஸ் செயற்குழு ‘வெள்ளையனே வெளியேறு’ தீர்மானத்தை நிறைவேற்றியது. இந்தியாவின் விடுதலை இந்தியாவின் பாதுகாப்புக்கு மட்டும் அவசியம் அல்ல, உலகத்தின் பாதுகாப்புக்கே அவசியம். நாசிசம், பாசிசம், ராணுவச் சர்வாதிகாரம், ஏகாதிபத்தியம் போன்ற மக்களுக்கு எதிரான சக்திகளை வலுவோடு எதிர்கொள்ள வேண்டுமானால், இந்திய விடுதலை மிகவும் அவசியம் என்பதில் காங்கிரஸ் தெளிவாக இருந்தது.

செயற்குழுவின் தீர்மானம் 8, ஆகஸ்டு 1942-ல் பாம்பேயில் பொதுக்குழுவின் முழு ஆதரவைப் பெற்றது. வெள்ளையர்களை வெளியேற்ற மக்கள் போராட்டத்தை வன்முறையின்றி நடத்தப் பொதுக்குழு முடிவெடுத்தது. காந்தி சொன்னார்: “இந்தத் தருணத்திலிருந்து நீங்கள் விடுதலை பெற்றவர்கள். விடுதலை பெற்றவர்கள் எப்படிச் செயல்படுவார்களோ, அப்படியே செயல்படுங்கள். நாடு முழு விடுதலை அடையும் வரை நாம் அமைதி அடையக் கூடாது. செய்வோம் அல்லது மடிவோம். இந்தியாவின் விடுதலையை நனவாக ஆக்குவோம். அல்லது அந்த முயற்சியில் மடிவோம்.”

அடக்குமுறை

11, ஆகஸ்ட் 1942-க்குள் எல்லா தேசியத் தலைவர்களும் கைதுசெய்யப்பட்டனர். நேரு போன்ற தலைவர்கள் இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வரும்வரை சிறையிலிருந்து விடுவிக்கப்படவில்லை. நாடு முழுவதும் மக்கள் பெரிய தலைவர்களின்றி இயங்கினார்கள். முதலில் நகரங்களில் தொடங்கிய போராட்டம், வட இந்திய கிராமங்களில் பரவத் தொடங்கியது. கிழக்கு 08CHVCM_EDIT2-_GANDHI_SMRITIright

உத்தர பிரதேசம், பிஹார் போன்ற பகுதிகளில் பல கிராமங்கள் விடுதலை பெற்றதாக அறிவித்தன. ஜெயப்பிரகாஷ் நாராயண், அருணா ஆசப் அலி, சுசேதா கிருபளானி போன்ற தலைவர்கள் முன்னின்று போராட்டத்தை நடத்தினார்கள். ஆனால், ஆங்கிலேயர்கள் கொடிய அடக்குமுறையைக் கையாண்டார்கள். விமானங்களிலிருந்து போராட்ட வீரர்கள்மீது குண்டுமாரி பொழிவது முதல் துப்பாக்கிச் சூடுவரை எல்லாக் கொடுமைகளும் அவிழ்த்துவிடப்பட்டன. குறைந்தது பத்தாயிரம் பேராவது உயிரிழந்திருப்பார்கள் என்று நேரு சொன்னார். கிட்டத்தட்ட ஒரு லட்சம் பேர் சிறையில் அடைக்கப்பட்டனர்.

தமிழகத்தில் ராஜாஜி அந்த இயக்கத்தை ஆதரிக்கவில்லை என்றாலும், காங்கிரஸ் கட்சி போராட்டத்தில் தீவிரமாக இயங்கியது. காமராஜர் போலீஸ் கையில் அவ்வளவு எளிதாக விழ விரும்பவில்லை. ஊர் ஊராகச் சென்ற அவருக்கு உதவியவர்களில் ராணிப்பேட்டையைச் சேர்ந்த கல்யாணராமையர் ஒருவர். மற்றொருவர் அதே ஊரைச் சேர்ந்த ஜனாப் முகம்மது சுலைமான். கடைசியில், காமராஜர் விருதுநகருக்கு அருகே இருந்த கிராமம் ஒன்றில் கைதானார்.

சாதித்தது என்ன?

இயக்கம் ஒடுக்கப்பட்டாலும், இந்தியா முழுவதும் மக்கள் வெள்ளையர் ஆட்சிக்கு எதிராக இருக்கிறார்கள் என்ற முழுச் சுரணை இந்த இயக்கத்துக்குப் பிறகுதான் அரசுக்கு வந்தது. 1857-க்குப் பிறகு நடந்த மிகப் பெரிய போராட்டம் என்று வைஸ்ராய் சொன்னார். போர் முடிந்ததும் மூட்டையைக் கட்டிக்கொண்டு வெளியே செல்ல வேண்டியதைத் தவிர வேறு வழியே இல்லை என்று அவர்களுக்கு விளங்க வைத்ததும் இந்தப் போராட்டமே. 75 ஆண்டுகளுக்கு பின்பு நமக்கு விடுதலை வாங்கித் தந்தவர்களை நன்றியோடு நினைக்கும்போது அவர்கள் இந்தியா ஜனநாயக நாடாக, மதச்சார்பற்ற நாடாக என்றும் இருக்கும் என்ற கனவோடு இயங்கினார்கள் என்பதை நாம் மறக்கக் கூடாது.

* 1,00,000 ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கம் தொடங்கிய ஓரிரு நாட்களில் இந்தியா முழுவதும் கைதுசெய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை. போலீஸாரின் துப்பாக்கிச் சூட்டில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர்.

* 21 நாட்கள் சிறையில் காந்தி உண்ணாவிரதம் இருந்தார்.

* 1,030 நாட்கள். ‘வெள்ளையனே வெளியேறு’ போராட்டத்தின்போது ஜவாஹர்லால் நேரு சிறையில் இருந்த நாட்கள். 1942 ஆகஸ்ட் 9 முதல் 1945 ஜூன் 15 வரை அஹமதாபாத் கோட்டைச் சிறை, பரேலி மத்திய சிறை என்று வெவ்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டிருந்தார் நேரு. அவரது ஒன்பதாவது சிறைவாசம் இது.

* 637நாட்கள், போராட்டத்தின்போது காந்தி அனுபவித்த சிறைவாசம். போராட்டம் தொடங்கிய மறுநாளில் - அதாவது, 1942 ஆகஸ்ட் 9 அன்று காந்தியும் ஒட்டுமொத்த காங்கிரஸ் செயல் குழுவினரும் கைதுசெய்யப்பட்டனர். புணேயின் ஆகா கான் அரண்மனையில் காந்தி இரண்டு ஆண்டுகள் சிறைவைக்கப்பட்டிருந்தார். காந்தி சிறையில் இருந்தபோது, அவரது உதவியாளர் மகாதேவ் தேசாய் மாரடைப்பால் காலமானார். 18 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்த காந்தியின் மனைவி கஸ்தூர் பா 1944 பிப்ரவரி 22-ல் மறைந்தார்!

* 57பட்டாலியன் ராணுவத்தினர், போராட்டத்தை ஒடுக்கக் களமிறக்கப்பட்டனர்.

* நான் கற்பனை செய்துவைத்திருக்கும் ஜனநாயகத்தில், அதாவது அகிம்சை வழியில் நிறுவப்படும் அந்த ஜனநாயகத்தில், எல்லோருக்கும் சம அளவிலான சுதந்திரம் இருக்கும். எல்லோருமே அவரவர் எஜமானராக இருப்பார்கள். அதுபோன்றதொரு ஜனநாயகத்துக்கான போராட்டத்தில் கலந்துகொள்ளத்தான் இன்று உங்களுக்கு அழைப்பு விடுக்கிறேன். இதை நீங்கள் உணர்ந்துகொண்டீர்கள் என்றால், இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையிலான வேறுபாடுகளை மறந்துவிட்டு, சுதந்திரத்துக்கான பொதுவான போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் இந்தியர்களாக மட்டுமே நீங்கள் உங்களை எண்ணிக்கொள்வீர்கள்.
- காந்தி, 08.08.1942-ல் ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தைத் தொடங்கியபோது…

- பி.ஏ.கிருஷ்ணன், ‘புலிநகக் கொன்றை’, ‘இந்தியாவும் உலகமும்’ முதலான நூல்களின் ஆசிரியர்,தொடர்புக்கு: tigerclaw@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

20 hours ago

கருத்துப் பேழை

20 hours ago

கருத்துப் பேழை

20 hours ago

கருத்துப் பேழை

17 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

மேலும்