செ
ன்ற மூன்று நாட்களாகத் தொடர் சங்கிலித் தொழில்நுட்பத்தின் ஆழங்களுக்குள் செல்ல ஆரம்பித்தோம். இன்று பிட்காயினைத் தாண்டிய முன்னேற்றங்களை விரிவாகப் பார்க்கலாம்.
பிட்காயினின் அநாயாச வெற்றி, தொடர் சங்கிலித் தொழில்நுட்பத்தின் பலத்தை உறுதிசெய்தது என்றாலும், பிட்காயினில் இருக்கும் சில குறைபாடுகள் வெளியில் தெரிய ஆரம்பித்தன. தொடர் சங்கிலிக் கட்டமைப்பின்படி நடக்கும் பரிவர்த்தனைகள், அனைத்து பிளாக்குகளிலும் எழுதப்பட வேண்டும். ஆனால், இதற்குத் தேவைப்படும் நேரம் பல தருணங்களில் அதிகமாகி மொத்த பிட்காயின் வலைப்பின்னலே தொய்ந்துபோனது போன்ற எண்ணம் ஏற்படத் தொடங்கியது. இதைத் தொடர்ந்து, பிளாக்காயின் சார்ந்த அடுத்தகட்டத் தொழில்நுட்பங்கள் வர ஆரம்பித்துள்ளன. இதில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியவை - எத்தூரியம், லைட்காயின் மற்றும் சில.
வட கொரியாவுக்கான அமெரிக்கத் தூதராகத் தன்னை சுயமாக நியமித்துக் கொண்டிருக்கும் ஓய்வுபெற்ற பிரபல கூடைப்பந்தாட்டக்காரர் டென்னிஸ் ரோட்மென் சில மாதங்களுக்கு முன்னால் வடகொரிய அதிபரை சந்திக்கச் சென்றபோது அணிந்திருந்த டீ-ஷர்ட்டில் ‘பாட்காயின்’ என்று எழுதப்பட்டிருந்தது மீடியாக்களில் வெளியானது. கஞ்சா விற்பனை வலைதளங்களில் மட்டுமே பயன்படுத்தப்படும் தொடர் சங்கிலி சார்ந்த ‘கிரிப்டோ கரன்சி’ இது.
பிட்காயினுக்கு அடுத்து பரபரப்பாகப் பேசப்பட்டுவருவது எத்தூரியம். இதுவும் தொடர் சங்கிலி சார்ந்த தொழில்நுட்பம் என்றாலும், இதன் கட்டமைப்பு பிட்காயின் உள்ளிட்ட மற்ற தொடர் சங்கிலிகளைவிட அற்புதமானது .
அடிப்படை இதுதான் - எத்தூரியம் என்பது பல வலைப்பின்னல்களின் தொகுப்பு. இந்த வலைப்பின்னலில் இணைய நீங்கள் ஒப்பந்தம் ஒன்றைத் தயாரித்து உங்களை இணைத்துக்கொள்ள வேண்டியதுதான். ஒரு ஒப்பந்தத்தை முதலில் தயாரிக்கும்போது அதில் எவ்வளவு மதிப்பு இருக்கிறது, அது எப்படி வழங்கப்பட வேண்டும் என்பதை தெளிவாக வரையறை செய்துகொள்ள வேண்டும். இந்த மதிப்பை ‘டோக்கன்’ என்ற அலகுகளில் கொடுக்க வேண்டும். இந்த டோக்கன் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.
உதாரணத்துக்கு, விமானப் பயணம் செய்பவர்களுக்கு விமான சேவை நிறுவனங் கள் அவர்கள் பயணம் செய்த தூரம், எந்த விதமான இருக்கையில் பயணம் செய்தார் கள் போன்ற பல காரணிகளின் அடிப்படை யில் மைல்கள் எனப்படும் மதிப்புப் புள்ளி களை வழங்குகிறார்கள். இந்தப் புள்ளிகளைத் தோராயமாக டோக்கன் என வைத்துக்கொள்ளுங்கள். விமான நிறுவனங்கள், தங்கள் வாடிக்கையாளர்கள் தங்களின் சேவையை மீண்டும் மீண்டும் பயன்படுத்த உதவும் வகையில், உற்சாகப்படுத்துவதற்காகப் பயன்படுத்துவது இந்த மதிப்புப் புள்ளித் திட்டங்கள்.
இந்தப் புள்ளிகளை விமானப் பயணம் மட்டுமல்லாமல், ரயில் பயணத்துக்கும் பயன்படுத்த முடிந்தால் எப்படி இருக்கும்? விமான சேவை என்பதற் குள் கட்டுப்படாமல், இந்த டோக்கன் பல இடங்களில் பயன்படுத்த முடிவதால், இதன் மதிப்பு அதிகரிக்கும். இந்த டோக்கன்களை வாங்கிக்கொண்டு உள்ளூர் நாணய முறையில் பணமாக மாற்றிக்கொள்ளும் வசதியும் வந்துவிட்டதென்றால், இந்த டோக்கன் சார்ந்தே ஒரு பொருளாதாரம் உருவாகும் அல்லவா ?
இது ஏதோ பல ஆண்டுகளில் நடக்கப் போவதாகச் சொல்லும் தொழில்நுட்ப ஆரூடம் அல்ல. எத்தூரியத்தின் டோக்கன் அமைப்பை அடிப்படையாகக் கொண்டு சென்ற வாரத்தில் நாம் முதல் பகுதியில் அறிமுகப்படுத்திய ஐ.சி.ஓ. (ICO) வைபவங் கள் நடக்க ஆரம்பித்திருக்கின்றன. உதாரணத்துக்கு, பேங்கோர் என்ற நிறுவனம் சில மாதங்களுக்கு முன்னால் நடத்திய ஐ.சி.ஓ. நிகழ்வு சில மணி நேரங்களில் 15 கோடி டாலர்களை அவர்களுக்கு முதலீடாக மாற்றித் தந்திருக்கிறது.
இடைத்தகவல்: எத்தூரியம் நெட்வொர்க்கில் புழங்கப்படும் கிரிப்டோ கரன்சிக்கு ஈதர் என்று பெயர். 2015-ல் எத்தூரியம் வெளியிடப்பட்டபோது ஈதர் இந்த டோக்கன் முறைப்படி விநியோகிக்கப்பட்டது. டோக்கன்களை எப்படித் தயாரிப்பது, விநியோகிப்பது என்பதை அடிக் கோடிடும் தரவுகோலுக்கு ‘ஈ.ஆர்.சி.20’ (ERC20) எனப் பெயரிட்டிருக்கிறார்கள். இதைப் பின்பற்றும் டோக்கன்களைத் தொடர் சங்கிலி சந்தைகளில் வாங்கவும் விற்கவும் செய்யலாம்.
நம்மூரில் இட்லிக் கடைக்காரர்கள் இணைந்து ‘இட்லி டோக்கன்’ என்றும், நடிகர்களின் ரசிகர் மன்றங்கள் ‘முதல் ஷோவுக் கான டோக்கன்’ என்றும் பல குட்டிப் பொருளாதாரங்களை உருவாக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை.
தொடர் சங்கிலி போன்ற புதிய தொழில்நுட்பம் ஒன்றைப் பற்றி எழுதும்போது முக்கியமான அடிப்படைகளையும், நடக்கும் நிகழ்வுகளையும் முழுமையாகப் பகிர்ந்துகொள்ள இந்தச் செய்தித்தாளின் அனைத் துப் பக்கங்களையும் பல வாரங்களுக்கு ஆக்கிரமிக்க வேண்டும். இது சாத்தியம் இல்லை என்பதால், நீங்களாகவே கூகுளில் தேடி, அறிந்துகொள்ளும் வகையில் கீழ்க்கண்ட பதங்களைக் கொடுக்கிறேன்: BlockChain, Bitcoin, Ethereum, Ether, Smart Contract, ERC20, ICO, Litecoin..
இந்தத் தொடரின் இறுதிப் பகுதி திங்கள் அன்று நிறைவுபெறுகிறது. எத்தூரியம் நெட்வொர்க்கின் ‘கிரிப்டோ கரன்சி’யான ஈதரை இந்தத் தொடரின் வாசகர்கள் சிலருக்கு அனுப்பத் திட்டமிட்டிருக்கிறேன். இதில் கலந்துகொள்ள - +1 313 251 3770 என்ற எண்ணுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியை வாட்ஸப் தகவலாக அனுப்புங்கள்.
- அண்டன் பிரகாஷ், எழுத்தாளர்,
தகவல் தொழில்நுட்ப வல்லுநர்,
தொடர்புக்கு: anton.prakash@gmail.com
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
13 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago