செ
ன்னையைப் போல் இயற்கை வளங்கள் நிறைந்த நகரங்கள் மிகக் குறைவு. பல ஏரிகள், இரண்டு நதிகள், கடற்கரை, கடற்கரையோரக் காடுகள், இரண்டு முகத்துவாரங்கள், பல்லாவரம், பரங்கிமலை என்று மலைகளெல்லாம் இருந்த நகரம் சென்னை. அந்த இடங்களிலெல்லாம் எண்ணற்ற உயிரினங்கள் இருந்தன. நகரம் வளர ஆரம்பித்தவுடன் அழிவும் தொடங்கிவிட்டது.
குறிப்பாக, கடந்த 100 ஆண்டுகளில் தொழில்வளர்ச்சி, மோட்டார் வாகனங்கள், தொழிற்சாலைகள் வரவு, கூவம் நதியிலும் அடையாற்றிலும் கழிவுப் பொருட்கள் கலந்து அவை சாக்கடைகளாக மாறிய அவலம் என்று பல்வேறு விஷயங்கள் இதற்குக் காரணமாக அமைந்தன. மலைகளிலிருந்து பாறைகள் வெட்டியெடுக்கப்பட்டது இன்னொரு காரணம். பல்லாவரம் மலையில் பாதியளவு கரைக்கப்பட்டிருப்பதை நாம் பார்க்க முடியும்.
எத்தனை எத்தனை உயிரினங்கள்!
கடற்கரையோரம் இருந்த புதர்க் காடுகள் அழிக்கப்பட்டன. பல ஏரிகள் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கின்றன. ‘ஏரிப் பகுதி’ என்று பெயரளவில் மட்டும்தான் அவை இருக்கின்றன. அவை அழிக்கப்பட்டு வீடுகள், கட்டிடங்கள் கட்டப்பட்டிருக்கின்றன. ஒரு நகரத்தைச் சரியாகத் திட்ட மிடாததால், போக்குவரத்தைத் திட்டமிடாததால் ஏற்பட்ட விளைவுகள் இவை. விரைவான போக்குவரத்துக்கு வழிவகை செய்திருக்கலாம். அது நடந்திருந்தால் நகருக்கு வெளியே வீடுகள் கட்டிக்கொண்டு, அரை மணி நேரத்தில் நகருக்குள் வர முடிந்திருக்கும். அப்படி நடக்கவில்லை. நகருக்குள்ளேயே கட்டிடங்கள் கட்டி, கழிவுநீரை ஆற்றில் விட்டு நாசம் செய்துவிட்டார்கள். இதனால், அழிந்துபோன, துரத்தப்பட்ட விலங்கினங்கள், பறவைகள் எத்தனை எத்தனை!
அடையாறு முகத்துவாரம் சிறந்த பறவைகள் சரணாலய மாக இருந்தது. குளிர்காலத்தில் ஆயிரக்கணக்கில் வலசை வரும் பறவைகளை அங்கு பார்க்க முடியும். பூநாரையைக்கூட இங்கே நான் பார்த்திருக்கிறேன். ஆனால், அந்த இடத்தில் அடுக்கு மாளிகைகள் கட்டப்பட்டதால், பறவைகள் சரணாலயமாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படாமலேயே அழிந்துபட்டது. அதேபோல், நகருக்குள் இருந்த கீரிப்பிள்ளை, ‘எறும்புத்தின்னி’ என்று குறிப்பிடப்படும் அலங்கு, அணில், உடும்பு எல்லாம் அழிந்துவிட்டன. ஓணான், தவளை, அரணை போன்ற சிற்றுயிர்களை இழந்திருக்கிறோம். என்றாலும், நகரத்துக்குள் தனியார் வசம் உள்ள சில இடங்கள் காட்டுயிர் வாழிடங்களாக இருக்கின்றன. தியாசபிக்கல் சொசைட்டி, ஐஐடி வளாகம், தாம்பரம் கிறிஸ்தவக் கல்லூரி போன்ற இடங்களைச் சொல்லலாம். இங்கு, கட்டிடங்கள் அதிகரித்துவிடாமல், இருக்கும் தாவரங்களையும் விலங்குகளையும் பாதுகாக்க வேண்டும்.
குப்பைகளும் தெருநாய்களும்
கடந்த 20 ஆண்டுகளாக நகரம் மோசமாக மாசடைந்திருக்கிறது. சென்னை மாசடைந்திருப்பதற்கான குறியீடுகளை நம்மால் பார்க்க முடியும். டெங்கு, சிக்குன் குனியா, மஞ்சள் காமாலை எல்லாமே நகரம் மாசடைந்ததன் குறியீடுகள்தான். இந்தப் பிரச்சினைகளை பத்துப் பதினைந்து நாட்களில் ஒழித்துவிட முடியாது. நகரைச் சுத்தம் செய்வதில் நீண்டகாலம் உழைக்க வேண்டியிருக்கும். அந்த அளவுக்கு நகரமெங்கும் எங்கு பார்த்தாலும் குப்பைகளைப் பார்க்க முடிகிறது.
இன்னொரு குறியீடு தெரு நாய்கள். குப்பைகளில் கிடக்கும் கழிவுப் பொருட்களை உண்டு வளர்பவை இவை. நகருக்குள் டன் டன்னாக மலம் கழிக்கின்றன தெருநாய்கள். அதிலிருந்து மக்களுக்கு நோய்கள் பரவுகின்றன. இதைத் தாண்டி ‘வெறிநோய்’ எனப்படும் ‘ரேபி’ஸையும் பரப்புகின்றன. வெறிநோய் வந்துவிட்டால் அதற்கு மருந்தே இல்லை. மேலும், நகருக்குள் இருக்கும் உயிரினங்களை அழித்ததிலும் தெரு நாய்களுக்கு முக்கியப் பங்கு உண்டு. குறிப்பாக, கிண்டி தேசியப் பூங்காவில் இருந்த வெளிமான்களின், புள்ளிமான்களின் குட்டிகளையும் இவை கொன்று தின்றன. கடந்த 40 ஆண்டுகளாக இதைப் பார்த்துவருகிறோம். அப்படியென்றால், எத்தனை மான்களை நாம் இழந்திருப்போம். சென்னைக் கடற்கரைகளில் பல்லாயிரக் கணக்கான ஆண்டு காலமாக, அரியவகை உயிரினமான ‘பங்குனி ஆமைகள்’ என்று அறியப்படும் கடல் ஆமைகள் முட்டையிட்டுக்கொண்டிருக்கின்றன. தெருநாய்கள், அந்த முட்டைகளைத் தின்றுவிடுகின்றன.
இருப்பவை இவை!
இவற்றையெல்லாம் தாண்டி சென்னையில் சில நல்ல விஷயங்களும் இருக்கின்றன. 1969-ல் தொடங்கப்பட்ட ‘பாம்புப் பண்ணை’ சில உயிரினங்களைக் காப்பாற்றுவதில் இந்தியாவிலேயே ஒரு முக்கிய நிறுவனமாகச் செயல்பட்டுவருகிறது. முதலைகள், பாம்புகள் உள்ளிட்ட உயிரினங்கள் இங்கு பாதுகாக்கப்படுகின்றன. அதேபோல், 1978-ல் தொடங்கப்பட்ட ‘சென்னை இயற்கை வரலாற்றுக் கழகம்’ எனும் நிறுவனம், இயற்கை வளங்களைப் பாதுகாப்பது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் முக்கியப் பங்காற்றிவருகிறது. தொல்காப்பியப் பூங்காவையும் சொல்ல வேண்டும். வண்ணத்துப் பூச்சிகள் பார்ப்பதற்குச் சிறந்த இடம் அது. இயற்கை பற்றிய பிரக்ஞையை மாணவர்களிடம் ஏற்படுத்துவதில் அதற்கும் முக்கிய இடம் உண்டு.
நீர்ப்பறவைகளைப் பார்க்க பள்ளிக்கரணை ஏரி சிறந்த இடம். அதைக் ‘காப்பிட’மாக அறிவித்திருப்பது வரவேற்கத் தக்கது. சென்னையை அடுத்த நன்மங்கலம் எனும் காப்புக்காடு பறவைகள், சிற்றுயிர்களைப் பார்ப்பதற்குச் சிறந்த இடம். பல்லாவரம் மலையில் மறுபடியும் காடு உருவாகியிருப்பதைக் காண முடிகிறது. இது மகிழ்ச்சிக்குரிய விஷயம். செம்பரம்பாக்கம் ஏரியும் காட்டு வாத்து போன்ற வலசை வரும் பறவைகளைப் பார்க்கச் சிறந்த இடம்.
குழந்தைகளும் சுற்றுச்சூழலும்
குழந்தைகளுக்குச் சுற்றுச்சூழல் குறித்து விழிப்புணர்வு ஊட்ட, பள்ளிகளில் சுற்றுச்சூழல் தொடர்பான பாடங்கள் அறிமுகப்படுத்தப்பட வேண்டும். சென்னையில் எத்தனை வகை மரங்கள் இருக்கின்றன என்று அவர்கள் தெரிந்துகொள்ள வேண்டும். ஒரு மரம் எப்படிப் பல சிற்றுயிர்களின் வாழிடமாக இருக்கிறது என்பதை அவர்கள் அறிய வேண்டும். கடற்கரையில் கிடக்கும் கிளிஞ்சல்களைக் காட்டி, கடல்வாழ் உயிரினங்களைப் பற்றிக் குழந்தைகளுக்குச் சொல்லித்தர வேண்டும்.
சென்னை நகருக்குள் கிண்டி தேசியப் பூங்கா இருக்கிறது. இது கடற்கரையில் பரந்து விரிந்திருந்த காடுகளின் எஞ்சிய சிறு பகுதி. இந்தக் காடு நம் பாரம்பரியச் சொத்து. இங்கு வெளிமான், புள்ளிமான், நரி, முள்ளம்பன்றி, அலங்கு என்று பல்வேறு உயிரினங்கள் இருக்கின்றன. அதை தேசியப் பூங்காவாக அறிவித்தவர் மறைந்த பிரதமர் இந்திரா காந்தி. மத்திய அரசின் அனுமதி இல்லாமல் இங்கு ஒன்றும் செய்ய முடியாது. இங்கெல்லாம் நம் குழந்தைகளை அழைத்துச்சென்று காட்ட வேண்டும்! ஏனெனில், இழந்த பசுமையை மீட்டெடுத்து சென்னைக் குப் புத்துயிர் கொடுக்கும் கடமை அவர்களிடமும் இருக்கிறது.
- தியடோர் பாஸ்கரன், சுற்றுச்சூழல் ஆர்வலர்,
‘சோலை எனும் வாழிடம்’, ‘கல் மேல் நடந்த காலம்’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்.
தொடர்புக்கு: theodorebaskaran@gmail.com
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
16 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago