தமிழகத்தில் உயர்கல்வி: சரிவை நோக்கிய பயணம்!

By அ.கா.பெருமாள்

மிழகத்தில் இப்போது அனைவரும் உயர் கல்வியைப் பெற்றுவிட்டது மாதிரியான ஒரு மாயத்தோற்றம் உள்ளது. படித்தவர்களும்கூட அதை நம்புகிறார்கள். ஆனால், உயிர் கல்வி படிப்பவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. ஆண்டுதோறும் உயர்கல்வி படிக்க விரும்பியும் வாய்ப்பு கிடைக்காதவர்களின் எண்ணிக்கைதான் அதிகம். தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு அரசு கொடுக்கும் மானியம்கூட 15 % மட்டும்தான்.

அறிவியல், கலை குறித்த பிஹெச்.டி., ஆய்வின் தரமும் குறைந்துகொண்டே வருகிறது. சர்வதேச அளவில் - ஏன் இந்திய அளவில் தொழில்நுட்பம், பொருளாதாரம் குறித்து ஆய்வுசெய்தவர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் 1995-க்குப் பின் மிக மிகக் குறைந்துவிட்டது என்கிறார் கல்வியாளர் குழந்தைசாமி. அதோடு 7-ம் ஐந்தாம் திட்டத்துக்குப் பின் தமிழக உயர்கல்விக்குச் செலவழிக்கப்பட்ட தொகை 8 % குறைக்கப்பட்டது. இதுபோன்ற வேறு சில புள்ளிவிவரங்களின் அடிப்படையில் உயர்கல்வியின் நிலை சரிந்துவருகிறது என கல்வியாளர்களான குழந்தைசாமி, வசந்தி தேவி, அனந்த கிருஷ்ணன் போன்றோர் தொடர்ந்து பேசியுள்ளனர். ஆனால் அவை காற்றில் கரைந்த பேரோசையாகவே உள்ளன.

கல்வி வியாபாரம்

கல்வி வியாபாரமாகிவிட்டது. கல்வி நிலையங்களில் நன்கொடை வாங்குவது குற்றமாகக் கருதப்படும் என்ற சட்டம் 1992-ல் வந்தது. அதுபோல 14 வயதுக்குட்பட்ட எல்லோருக்கும் அடிப்படைக் கல்வி கொடுக்க வேண்டும் என்ற அரசியல் சாசனத்திருத்தம் 2002-ல் கொண்டுவரப்பட்டது. இவை எதுவும் செயல்படவில்லை என்பது நிதர்சனம்.

பல்கலைக் கழகம், கல்லூரிகளில் ஆசிரியர்களையும், ஆசிரியர் அல்லாத பணியாளர்களையும் நியமிக்க அனுமதி கொடுப்பதிலிருந்து துணைவேந்தர் நியமனம் வரை அரசியல்வாதிகளின் தலையீடு வெளிப்படையாக உள்ளது. பாடநூல் குழுவின் தலைவராக கல்விசார் விஷயங்களில் கொஞ்சமும் தொடர்பில்லாத அரசியல்வாதியை நியமிப்பது இன்றும் தொடர்கிறது. புதிய சுயநிதிக்கல்லூரி தொடங்க அனுமதி அளித்தல், பல்கலைக்கழக அரசு கல்லூரிகளை ஆரம்பித்தல் என எல்லா நிலைகளிலும் அரசியல் பிரவேசம் உள்ளது.

அறிக்கைகள் பல

இந்தியா சுதந்திரம் பெற்ற அடுத்த ஆண்டே உயர் கல்வி பற்றிய அறிக்கை தயாரிக்க டாக்டர் ராதாகிருஷ்ணன் தலைமையில் ஒரு குழு கூடியது. 1966-ல் டாக்டர் கோத்தாரி குழு ஒரு அறிக்கை தயாரித்தது. 1993-ல் உலகளாவிய நிலையில் கல்வி குறித்த அறிக்கை தயாரிக்க முயன்றபோது இந்தியாவின் சார்பாக சரண்சிங் அதில் இருந்தார். 1997-ல் டெல்லியில் வா.செ.குழந்தைசாமி தலைமை யில் ஒரு குழு கூடியது. முரளி மனோகர் ஜோஷி இதைத் தொடங்கிவைத்தார். அவர் மானுடத்தைக் காப்பாற்றும் வல்லமை உள்ள கல்வி இப்போது அவசியம்; உலகமயமாதல் கொள்கை உருவான பிறகு மாற வேண்டிய சூழல் உருவாகிவிட்டது என்றார்.

2000 -ல் பிர்லா அம்பானி குழுவின் அறிக்கை வந்தது. இக்குழுவில் 32 பேர்கள் இருந்தனர். இதில் பெற்றோர், ஆசிரியர்கள் யாரும் பங்கு வகிக்கவில்லை. இந்த அறிக்கை ஆசிரியர்களைக் குற்றம் சாட்டியது; மாணவர்களைப் பழித்தது. இது சுயநிதிக் கல்லூரிகளைப் பாராட்டியது. இவ்வறிக்கை மாணவர்களை வியாபாரப் பொருளாக மாற்ற ஆலோசனை கூறியது. இக்குழு கல்வித் துறையில் அந்நிய முதலீட்டுக்கு இடம்கொடுக்கக் கேட்டுக்கொண்டது. இப்படியாக வந்த அறிக்கைகள் பல. சில அறிக்கைகள் நடைமுறைச் சிக்கல் அறியாமல் தந்தக் கோபுரத்திலிருந்து பார்த்தன. சிலவற்றை அரசியல்வாதிகள் புறக்கணித்தனர்.

இணைப்புக் கல்லூரி

தமிழகக் கல்வியாளர்களில் பலரும் பல்கலைக்கழகங்களின் கீழ் இருந்த இணைப்புக் கல்லூரிகள் இருப்பதை ஒப்புக்கொள்ளவில்லை. பல்கலைக்கழகங்கள் தன் கீழ் உள்ள கல்லூரிகளுக்குத் தேர்வு நடத்துவது, பாடத்திட்டங்களை உருவாக்குவது என்னும் நிர்வாக விஷயங்களையே அதிகம் கவனிக்கின்றன.

அதனால் அறிவு சார்ந்த ஆய்வு இரண்டாம் பட்சமாய் விடுகிறது. உயர்கல்வியின் துறைகள் எல்லாவற்றிலும் ஒருங்கிணைப்பு இல்லை என்பதைத் தொடர்ந்து சொல்லி வருகின்றனர்.

பல்கலைக்கழகங்களுக்கும் கல்லூரிகளுக்கும் ஆய்வுத்திட்ட உதவிக்கும் வேறு உதவிகளுக்கும் பல்கலைக்கழக மான்ய நிதியும் பராமரிப்புக்கு மாநில அரசு உதவியும் கிடைக்கின்றன. இந்தியாவில் உள்ள பல்கலைக்கழகங்களில் வாரணாசி இந்து பல்கலைக்கழகம், அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகம், தில்லி பல்கலைக்கழகம், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம், ஹைதராபாத் பல்கலைக்கழகம், பாண்டிச்சேரி பல்கலைக்கழகம், விசுவபாரதி பல்கலைக்கழகம் ஆகிய மத்திய பல்கலைக்-கழகங்களுக்கு அதிகம் நிதி ஒதுக்கப்படுகிறது. தமிழகத்தின் மொத்த உயர்கல்விக்கு ஒதுக்கப்படும் பல்கலைக்கழக மான்யத்தொகையும் பனாரஸ் இந்துப் பல்கலைக்கழகத்துக்கும் ஒதுக்கப்படும் தொகையும் ஓரளவு ஒன்றாக இருக்கிறது என்பது ஒரு தகவல்.

உயர்கல்வியின் தரம்

அரசு கொடுக்கும் நிதி பற்றாக்குறை காரணமாக சுயநிதிக்கல்லூரிகளுக்கு அனுமதி கொடுக்கப்பட்டது. கல்லூரிகளில் படிப்பதற்கு இடமில்லாததால், மாணவர்கள், அல்லாதவர் கல்லூரிக்கு போகாமலே படிக்க அஞ்சல்வழி கல்வித்துறை உருவாக்கப்பட்டது. சுயநிதிக்கல்லூரிகள் பல வந்தாலும் தமிழகத்தின் உயர்கல்வி படிப்பவரின் எண்ணிக்கை 9 விழுக்காடுதான். சுயநிதிக் கல்லூரிகளுக்கு அரசின் உதவியில்லாததால் இவற்றைக் கண்காணிக்கும் பொறுப்பை அரசு தட்டிக்கழித்து வருகிறது. அதனால் இந்தக் கல்லூரிகள் பல பணம்பிடுங்கும் கூடங்களாகிவிட்டன. இந்தியாவில் 1962 லேயே அஞ்சல் வழிக்கல்வி வழி இளங்கலை பட்டப்படிப்பு ஆரம்பித்துவிட்டது என்றாலும் தமிழகத்தில் மிகவும் தாமதமாகத்தான் ஆரம்பிக்கப்பட்டது. பெரும்பாலும் இவை பட்டங்கொடுக்கும் தொழிற்சாலைகளாகவே உள்ளன.

இந்திய உயர்கல்வியின் தரத்தில் தமிழகம் பின்தங்கியுள்ளது என்ற குற்றச்சாட்டு உள்ளது. இந்தியக் குடிமைப் பணி படிப்பில் தமிழகம் 1954-ல் 24 விழுக்காடு இருந்தது என்றும் ஆனால் இப்போது அதன் அளவு குறைந்துவருகிறது என்று கார்த்திகேயன் அறிக்கை கூறுகிறது. இதற்கெல்லாம் காரணமென்ன? தமிழக உயர்கல்வியின் பாடத்திட்டக் கோளாறு, முறையாக இவை பரிசீலிக்கப்படாமை, கற்பிப்பதில் தரவேற்றுமை, நல்ல நூல் நிலையம், உயர்தர ஆய்வு மையம் தரமான ஆசிரியர்கள் இல்லாமை எனச் சில காரணங்களைக் கல்வியாளர்கள் கூறுகின்றனர். இன்றும் மெகாலே கல்வித் திட்டத்தை குறை கூறுவதே ஒருவித தப்பித்துக்கொள்ளும் முயற்சியாகத்தான் இருக்கிறது.

பல்கலைக்கழகங்களில் மட்டுமல்ல ஆய்வுமையங்கள் இருக்கும் கல்லூரி அளவிலும் தரக்கட்டுப்பாடு நடக்கவில்லை என்பதை கல்வியாளர்கள் தொடர்ந்து சொல்லிவருகின்றனர். இன்றைய அறிவியலும் தொழில்நுட்பமும் வேறு நாற்றங்காலில் இருந்து நடப்பட்ட பயிர் என்று குழந்தைசாமியின் கருத்து இன்றும் பரிசீலனை செய்யப்படவில்லை. ஆசிரியர்கள், சங்கங்களில் காட்டும் தீவிரத்தையும் சிரத்தையையும் போதிப்பதிலும் ஆராய்ச்சியிலும் காட்டுகிறார்களா?

அ.கா. பெருமாள், நாட்டுப்புறவியலாளர்,

‘சடங்கில் கரைந்த கலைகள்', ‘சிவாலய ஓட்டம்’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்.

தொடர்புக்கு: perumalfolk@yahoo.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

10 hours ago

கருத்துப் பேழை

10 hours ago

கருத்துப் பேழை

9 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்