பக்கத்து நாடுகளின் ஆதரவை இழக்கிறோமா?

By சுகாசினி ஹைதர்

டோ

க்லாம் பகுதியில் இந்தியா, சீனா இடையே ராணுவரீதியாக ஏற்பட்ட முறைப்புகள் மூன்று மாதங்களுக்குப் பிறகு முடிவுக்கு வந்துவிட்டது. பூடான் மட்டுமல்ல பிற அண்டை நாடுகளும் இந்த மோதல் எப்படி முடியும் என்றும் பதைபதைப்புடன் காத்திருந்தன. இந்தியாவுக்கோ சீனாவுக்கோ ஆதரவு தெரிவிக்காமல் நடுநிலை வகித்தன. பூடானுக்கு ஆதரவாக இந்தியா களமிறங்கிய செயலை முன்னுதாரணமாகக் கொண்டு நாங்களும் செயல்படுவோம் என்று சீன ராணுவ அதிகாரியொருவர், சீனம் சென்றிருந்த இந்தியப் பத்திரிகையாளர் குழுவிடம் கூறியிருந்தது நினைவுகூரத்தக்கது. உத்தராகண்ட் மாநிலத்தில் பிதோராகட் என்ற இடத்துக்கு அருகில் ‘காலாபானி’ என்றொரு பகுதி அழைக்கப்படுகிறது. அது இந்தியா- நேபாளம் மற்றும் சீனத்தின் எல்லைகள் சந்திக்கும் இடம் என்று கருதப்படுகிறது; காஷ்மீரத்தின் ஒரு பகுதியும் அப்படியே, இந்தியா-பாகிஸ்தான்-சீனா ஆகியவற்றின் எல்லைகள் சந்திக்கும் இடம் என்று சீனா கருதுகிறது. இவ்விரண்டிலும் சீனாவும் தலையிடும் என்றார் அவர்.

இந்தக் காரணத்தால்தான் இந்தப் பிராந்தியத்தில் உள்ள நாடுகள் டோக்லாம் பூசலில் தங்களுடைய நிலை என்ன என்று கூறாமல் மவுனம் காத்தன. இந்த எல்லைத் தகராறில் நேபாளம் எந்தப் பக்கமும் சேராது என்று நேபாளத்தின் துணைப் பிரதமர் கிருஷ்ண பகதூர் மகாரா கூறினார். 'எல்லை தொடர்பான ஒப்பந்தத்தை மீறியது சீனா' என்று பூடானின் வெளியுறவுத் துறை அமைச்சகம் தனது நிலையை வலியுறுத்தியது, ஆனால் இந்தியா குறித்து ஏதும் குறிப்பிடவில்லை.

நமக்குப் பக்கத்தில் இருக்கும் நாடுகளே சம தொலைவில் விலகியிருக்க வேண்டும் என்று முடிவு செய்வது ஏன் என்று இந்தியத் தலைமை சிந்திக்க வேண்டும். பூடானைத் தவிர மற்ற பக்கத்து நாடுகள் மெல்ல மெல்ல இந்த முடிவை நோக்கி நகர்ந்துள்ளன. மாலத்தீவு நாடு 2012-ல் மாலி நகர விமான நிலைய ஒப்பந்தப் பணியிலிருந்து இந்தியாவின் ஜிஎம்ஆர் குழுமத்தை விலக்கியதன் மூலம் நம்மிடமிருந்து விலகியது. இப்போது அந்நாட்டின் முக்கியமான அடித்தளக் கட்டமைப்பு ஒப்படைப்புப் பணிகளைச் சீன நிறுவனங்கள்தான் பெற்றுள்ளன. புதிய தீவை உருவாக்கி அதை, தலைநகர் மாலியுடன் இணைக்கும் திட்டமும், இன்னொரு தீவைச் சுற்றுலாத் தலமாக 50 ஆண்டுகளுக்குப் பராமரிக்கும் குத்தகையும் சீனாவுக்குக் கிடைத்திருக்கிறது.

நேபாளத்தின் அப்போதைய பிரதமர் கே.பி. சர்மா ஒலி 2015-16-ல் அடித்தளக் கட்டமைப்புத் தொடர்பாக இடைக்கால வர்த்தக உடன்பாட்டை சீனத்துடன் செய்துகொண்டார் என்ற தகவல்கள் வெளியானபோது இந்திய வெளியுறவுத்துறை மூத்த அதிகாரிகள் அதை ‘ஏமாற்று வேலை’ என்றே கேலி செய்தனர். இப்போது நேபாளத்துக்கு சீனா லாசா-காத்மாண்டு சாலையை இணைக்கும் வகையில் புதிய ரயில் பாதையைப் போட்டு வருகிறது.

இலங்கையில் ஹம்பனதோட்டத் துறைமுகக் கட்டுமானத் திட்டத்தைச் செய்துதர முடியாது என்று இந்தியா நிராகரித்த பிறகே 2007-ல் அது சீனாவுக்குத் தரப்பட்டது. அந்தத் துறைமுகத்தின் 80% இப்போது சீனாவுக்குச் சொந்தம். ஹம்பனதோட்டவிலிருந்து கொழும்பு வரையிலான எல்லா அடித்தளக் கட்டமைப்புப் பணி ஒப்பந்தங்களையும் சீனா கைப்பற்றிவிட்டது. சீன அதிபர் ஜி ஜின்பிங் கடந்த அக்டோபரில் வங்கதேசம் சென்றதுகூடப் பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்தத்தான்.

‘சார்க்’கின் அவசியம்

பாகிஸ்தானை இந்தப் பட்டியலில் சேர்க்காவிட்டாலும், நமக்குப் பக்கத்தில் இருக்கும் நாடுகள் எப்படி ‘சீனாவின் ஒரே பிரதேசம்-ஒரே சாலை’ திட்டத்தில் இணைந்துள்ளன, இன்னும் சில ஆண்டுகளில் அவற்றிடம் சீனாவின் ஆதிக்கம் எப்படி அதிகரிக்கப் போகிறது என்பதையே இவை காட்டுகின்றன. இந்த திட்டங்களில் சீன முதலீடு பாயத் தொடங்கிவிட்டால், வியூகரீதியில் சீனாவை உதறிவிட இந்நாடுகளால் முடியவே முடியாது.

இந்த முடிவுக்கு பூடானும் போய்விடக் கூடாது என்று இந்தியா விரும்பினால் இன்னும் என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பதும் முக்கியம். ‘தெற்காசிய பிராந்திய ஒத்துழைப்பு மாநாட்டின்’ (சார்க்) முக்கியச் செயல்பாட்டாளர் என்ற பொறுப்பை இந்தியா மீண்டும் தீவிரமாக ஏற்க வேண்டும். ஓராண்டுக்கு முன்னால் பாகிஸ்தானுடன் பிரச்சினை ஏற்பட்டதால் இந்தியா இந்த அமைப்பில் தன்னுடைய பொறுப்புகளைக் குறைத்துக் கொண்டது. இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் உறவில் பதற்றம் இருந்தாலும் முப்பதாண்டுகளாக ‘சார்க்’ உயிர் பிழைத்துள்ளது.

உரி ராணுவ முகாம் மீது நடந்த தீவிரவாதிகளின் தாக்குதலை அடுத்து, பாகிஸ்தானில் நடைபெறவிருந்த ‘சார்க்’ உச்சி மாநாட்டில் பங்கேற்கவிருந்ததை இந்தியா ரத்துசெய்ததைப் புரிந்துகொள்ள முடிகிறது. ஓராண்டு கழித்தும் 'சார்க்' அமைப்பை வலுப்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாதது துரதிர்ஷ்டவசமானது. இது தெற்காசியக் கட்டமைப்பை மேலும் பலவீனப்படுத்திவிடும். இதனால் சீனா அந்த நாடுகளிடையே நுழைவது மேலும் எளிதாகிவிடும். சீனா பலமுறை கோரிக்கை விடுத்தும் அதனைச் சேர்த்துக்கொள்ளாத ஒரே அமைப்பு ‘சார்க்’தான் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். மாற்று அமைப்புகள் பலவற்றை ஊக்குவிக்க நரேந்திர மோடி அரசு முயற்சிகளை மேற்கொண்டாலும் ‘சார்க்’ அமைப்புக்கு அருகில்கூட மற்றவற்றால் வர முடியாது.

பலவீனமான வியூகம்

பக்கத்து நாடுகளின் அரசியலில் மூக்கை நுழைப்பதால் சீனாவை ராஜதந்திரரீதியில் தோல்வியுறச் செய்ய முடியாது என்பதையும் இந்தியா ஒப்புக்கொள்ள வேண்டும். உதாரணத்துக்கு, ராஜபக்ச ஆட்சியின்போது சீனாவுடனான ஒப்பந்தங்களால் இலங்கைக்குக் கடும் கடன் நெருக்கடி ஏற்பட்டது. அப்படியிருந்தும் சிறிசேன தலைமையிலான புதிய அரசு சீனாவுடனான அரசின் உறவில் எந்த மாற்றத்தையும் செய்துவிடவில்லை. மாலத்தீவு அதிபரான முகம்மத் நஷீத் பதவியிலிருந்து நீக்கப்பட்டபோது காங்கிரஸ் கூட்டணி அரசு அதே போன்ற தவறைச் செய்தது. அடுத்து அங்கு ஆட்சிக்கு வந்த அரசுகள் சீனாவிடமிருந்து சிறிதும் விலகவில்லை.

நேபாளத்தில் பிரதமர் ஒலியின் போக்கு தொடர்பாக இந்தியா கவலை தெரிவித்தது. 2016-ல் புஷ்ப கமல் தஹால் பிரசண்டா அப்பதவிக்கு வர இந்தியா உதவிகள் செய்தும் அவர் அடித்தளக் கட்டமைப்புப் பணிகளுக்கு சீனாவின் உதவிகளையே நாடினார்.

பூடானில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள பொதுத் தேர்தலின்போது இந்தியா எந்தப் பக்கமும் சேரக்கூடாது. அது தேர்தலில் ‘இந்தியா எதிர் சீனா’ என்று புதிய வடிவம் கொண்டுவிடும்.

மாற்றம் தேவை

பக்கத்து நாடுகளுடன் உறவை வலுப்படுத்துவது என்பது முதலீடு செய்வதும் தேவையில்லாமல் சலுகைகள் காட்டுவதும் அல்ல என்பதை இந்தியா புரிந்துகொள்ள வேண்டும். இரு நாடுகளுக்கும் பலன் தரக்கூடிய பரஸ்பர நலன்களைப் பாதுகாப்பது, மரியாதை தருவது என்பதாகும். இந்த விஷயத்தில் சீனாவை மிஞ்ச இந்தியாவால் முடியும். இந்தியாவின் பக்கத்து நாடுகள் புவிஎல்லையையும் தாண்டி வேறு வகையிலும் இந்தியாவுடன் தொடர்பு கொண்டுள்ளன.

வரலாறு, மொழி, பண்பாடு, சமையல் என்று அந்தத் தொடர்புகள் பலவகைப்படும். பாகிஸ்தானைத் தவிர வேறு எந்த நாடும் இந்தியாவைத் தனக்குப் போட்டியாளராகப் பார்ப்பதில்லை. சீனாவுடனான செயல்களில் அதன் விரோதத்தை அதே அளவுக்கு அதனிடம் திருப்பிக்காட்டலாம்; தெற்காசியாவில் அப்படியே மாற்றிச் செய்ய வேண்டும். தெற்காசியப் பகுதியில் பக்கத்தில் உள்ள நாடுகளிடம் இந்தியா பகைமை பாராட்டவே கூடாது, அவற்றின் நன்மையில் அக்கறை உள்ள நாடாகவே தொடர்ந்து நடந்துகொள்ள வேண்டும். அதாவது ‘அ-சீனமாக’ இருக்க வேண்டும்.

தமிழில்: சாரி,

தி இந்து ஆங்கிலம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

10 hours ago

கருத்துப் பேழை

10 hours ago

கருத்துப் பேழை

10 hours ago

கருத்துப் பேழை

13 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்