அமெரிக்க சூரிய கிரகணமும் இந்திய வானியலாளர்களின் சாதனையும்!

By த.வி.வெங்கடேஸ்வரன்

டந்த 21-ம் தேதி, இந்தியாவில் இரவாக இருந்த நேரத்தில், அமெரிக்காவில் நிகழ்ந்த முழு சூரிய கிரகணம் உலகினரின் ஆர்வத்தை ஈர்த்தது அல்லவா! அந்தக் கிரகணத்தின்போது ‘சூரிய மேலடுக்கு’ (கரோனா) எந்த வடிவில் இருக்கும் என்பதை, முன்னதாக கொல்கத்தாவிலுள்ள ‘இந்திய அறிவியல் தொழில்நுட்ப நிறுவன’த்தில் (ஐ.ஐ.எஸ்.ஈ.ஆர்.) பணிபுரியும் அறிவியலாளர் திபெயந்து நந்தி தலைமையிலான ஒரு ஆய்வுக் குழு கணித்திருந்தது.

“ஒருசில விஷயங்கள் தவிர, எங்களின் கணிப்பு சரியாகவே வந்துள்ளது. அமெரிக்க ஆய்வாளர்கள் கணித்திராத சில விஷயங்களைக்கூட நாங்கள் கணித் திருந்தோம். அதுவும் சரியாக வந்துள்ளது’’ என்கிறார் நந்தி மகிழ்ச்சி பொங்க. “அன்று இரவு நாங்கள் யாரும் ஒரு நிமிடம்கூடத் தூங்கவில்லை. தோல்வியடைந்தால் துவண்டுவிட வேண்டாம்; தோல்வியைப் படிப்பினையாகக் கொண்டு முன்னேறுவோம் என்று கிரகணத்துக்கு முன்பு நான் எனது ஆய்வாள-மாணவர்களுக்குக் கூறி யிருந்தேன். நாஸா தொலைக்காட்சியில் கிரகணத்தின் நேரலை ஒளிபரப்பை வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தோம். முழு கிரகணத்தின்போது மட்டுமே தென்படும் சூரிய மேலடுக்கின் தெளிவான புகைப்படம் கிடைத்தது. அதனோடு ஒப்பிட்டுப் பார்த்தபோது, நாங்கள் செய்திருந்த கணிப்புகளில் பல விஷயங்களும் பொருந்திப் போனதைப் பார்த்த பின்புதான் எங்களுக்குத் தூக்கமே வந்தது’’ என்கிறார் நந்தி.

சூரிய மேலடுக்கு

பூமிக்கு வளிமண்டலம் இருப்பதைப் போல சூரியனைச் சுற்றியிருக்கும் வளிமண்டலம்தான் ‘சூரிய மேலடுக்கு’. பகல் நேரத்தில் சூரிய ஒளியின் பிரகாசத் தால் விண்மீன்கள் நம் கண்களுக்குத் தெரிவதில்லை. அதுபோல, சாதாரண நாட்களில் இந்த ‘சூரிய மேலடுக்கை’ நம்மால் பார்க்க முடியாது. முழு சூரிய கிரகணத்தின்போது நிலா, சூரியனின் முகத்தை முற்றிலுமாக மறைத்திருக்கும் ஒருசில நொடிகள் மட்டுமே ‘சூரிய மேலடுக்கு’ தென்படும். எனவேதான், உலகில் எந்த மூலையில் தென்பட்டாலும் முழு சூரிய கிரகணத்தைக் காண்பதற்காக வானியலாளர்கள் ஓடோடிச் செல்கிறார்கள்.”

“இன்றுள்ள வடிவில் ‘சூரிய மேலடுக்கு’ நாளை இருக்காது. சூரிய காந்தப்புலத்தின் தன்மைக்கு ஏற்ப நாளுக்கு நாள் அதன் வடிவம் மாறும். காந்தத் துண்டின் மேல் காகிதத்தை வைத்து, அதில் இரும்புத் துகள்களைத் தூவினால் கண்ணுக்குப் புலப்படாத காந்தப்புலக் கோடுகள் தென்படும் என்ற பரிசோதனையை நடுநிலைப் பள்ளியில் செய்துபார்த்திருப்போம். அதுபோல, சூரியனின் காந்தப்புலமும் கண்ணுக்குப் புலப்படாததுதான். அந்த காந்தப்புலம்தான் ‘சூரிய மேலடுக்’கின் வடிவத்தைத் தீர்மானம் செய்கிறது.”

“சூரிய மேலடுக்கு என்பது மின்னேற்றம் நிரம்பிய அயனிப் பொருள்கள் செறிந்திருக்கும் பகுதி. சூரியனின் காந்தப்புலத்துக்கு ஏற்றவாறு இந்த அயனிப் பொருள் கள் வடிவம் பெறும். எனவே, சூரிய மேலடுக்கின் வடிவத்தை ஆராய்வதன் மூலம் சூரியனின் காந்தப்புலத்தைக் குறித்து அனுமானம் செய்யலாம். முன்கூட்டியே சூரிய காந்தப்புலத்தைக் கணிக்க முடியும் என்றால், சூரிய காந்தப் புயல்கள் குறித்தும் அறிவு பெறலாம்.

சூரியனின் இயக்கமும் நாளுக்கு நாள் வேறுபடும். அவ்வப்போது சூரிய காந்தப்புலம் தீவிரமடையும். அடுப்பில், பால் பொங்குவதுபோலத் திடீரெனத் தீவிரமடைந்த காந்தப்புலம் புயலாக மாறும்.”

காந்தப் புயல்கள்

“சூரியனின் எல்லாத் திசைகளிலும் மின்னேற்றம் கொண்ட துகள்களை நொடிக்கு 700-1,000 கி.மீ. வேகத்தில் செலுத்தும். வலுவான சூரிய காந்தப் புயல் கள் தாக்கினால் பூமியின் காந்தப்புலம் சிதைவுற்று மின்துண்டிப்பு, மின்னணுக் கருவிகள் பாதிப்பு, விண்வெளியில் விண்கலங்கள் பாதிப்பு எனப் பல சவால்கள் எழுகின்றன. 1989-ல் பூமியைத் தாக்கிய காந்தப்புயல் காரணமாக, கனடாவில் பெருமளவு மின்துண்டிப்பு ஏற்பட்டது. செயற்கைக் கோள்கள் பாதிப்பு அடைந்தன. ஜிபிஎஸ் போன்ற கருவிகளின் துணையோடுதான் விமானம் முதலியவை இன்று இயக்கப்படுகின்றன. எனவே, பூமியில் ஏற்படும் புயல்களை மட்டுமல்ல, சூரிய காந்தப் புயல்களையும் முன்கூட்டி அறிவது இன்றைய தேவை. எனவேதான் உலகம் முழுவதும் உள்ள ஆய்வாளர்கள் சூரியனின் காந்தப்புல வடிவத் தைக் கணிக்க முடியுமா என்று ஆய்வுசெய்து வருகிறார்கள்.”

“சூரியனின் மேற்புறத்திலிருந்து சூரிய காந்தப்புலக் கோடுகள் வெளிப்படும் பகுதிகளே சூரியப் புள்ளிகள் எனப்படும் கரும்புள்ளிகள். எவ்வளவு சூரியப் புள்ளிகள் இன்று உள்ளன என்பது மட்டுமே சூரியனின் காந்தப் புல வடிவத்தைத் தீர்மானிப்பதில்லை. கடந்த கால காந்தப்புல வரலாறும் அதைத் தீர்மானிக்கிறது என்று நாங்கள் கருதினோம். கடந்த நூறு வருடங்களில் சூரியனில் ஏற்பட்ட கரும்புள்ளிகள் குறித்த தரவுகளைச் சேகரித்து, அதன் அடிப்படையில் முழு சூரிய கிரகணம் ஏற்படும் ஆகஸ்ட் 21 அன்று காந்தப்புல வடிவம் எப்படி இருக்கும் என்பதையும், இதன் தொடர்ச்சியாக ‘சூரிய மேலடுக்கு’ எந்த வடிவில் இருக்கும் என்பதையும் கணினி மாதிரிச் செயல்பாட்டின் (சிமுலேஷன்) உதவியுடன் கணித்தோம். எங்களின் ஆய்வு மாதிரி பெருமளவு சரியாக அமைத்திருப்பதை சூரிய கிரகணம் உறுதிப் படுத்தியது. சிற்சில போதாமைகள் இருக்கின்றன. இனி, அதையும் சரிசெய்துவிடுவோம்” என்கிறார் நந்தி.

மேலும் செம்மையாக்கப்படும்!

முழு சூரிய கிரகணங்களின்போது சரிபார்த்து உறுதிசெய்துகொண்டால், இந்த ஆய்வின்மீது நமக்கு நம்பிக்கை கூடும். சூரிய கிரகணம் இல்லாத நேரத்தி லும் ‘சூரிய மேலடுக்கு’ எப்படி இருக்கும், சூரியனின் காந்தப்புலம் எப்படி இருக்கும் என்றெல்லாம் நம்மால் கணிக்க முடியும். அடுத்தடுத்த சூரிய கிரகணங்களில் சோதனை செய்துபார்த்து, நடைமுறைப் பயன்பாட்டுக்கு உகந்த கணித மாதிரியை ஆய்வாளர்கள் உருவாக்குவார்கள்.

‘‘குறைந்த ஆற்றல் கொண்ட கணினிகளைக் கொண்டே ஆய்வாளர்கள் இந்தச் சாதனையைச் செய்திருப்பது பெரும் வியப்பு’’ என்று பெருமிதத்துடன் கூறுகிறார் புணே வானியல் ஆய்வுநிறுவனத்தின் தலைவரான சோமக் ராய்சவுத்ரி. இன்னும் சில ஆண்டுகளுக்குள் சூரியனை ஆராய்வதற்கு ஆதித்யா எனும் விண்கலத்தை இஸ்ரோ விண்ணில் செலுத்தவுள்ளது. அதில் செயற்கையான கிரகணச் சூழலை ஏற்படுத்தி ‘சூரிய மேலடுக்’கைக் காணும் கருவியை வடிவமைத்து அனுப்பவுள்ளனர். ‘‘நந்தியும் அவரது சக ஆய்வாளர்களும் மேற்கொண்ட ஆய்வு, இந்தக் கருவியின் பயன்பாட்டை மேம்படுத்தும்’’ என்கிறார், இந்தக் கருவி வடிவமைப்பில் ஈடுபட்டுவரும் வானியலாளர் திபங்கர் பானர்ஜி. ‘‘எதிர்காலத்தில் இந்தியாவின் விண்கலங்கள், விமான சேவை, ஜிபிஎஸ், மின்சேவை முதலியவற்றை சூரிய மின்காந்தப் புயல்களிலிருந்து காப்பாற்ற இந்த ஆய்வு வழிகோலும்’’ என்று நம்பிக்கை தெரிவிக்கிறார், இந்திய வானியல் ஆய்வாளர்கள் சங்க நிர்வாகி நிருஜ்மோகன்.

- த.வி.வெங்கடேஸ்வரன்,

மத்திய அரசின் ‘அறிவியல் தொழில் நுட்பத் துறை’யில் பணியாற்றும் முதுநிலை விஞ்ஞானி, தொடர்புக்கு: tvv123@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

17 hours ago

கருத்துப் பேழை

18 hours ago

கருத்துப் பேழை

18 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்