ஜெ
யலலிதா தன்னுடைய மரணம் குறித்தும் மரணத்துக்குப் பிந்தைய தன்னுடைய கட்சியின் எதிர்காலம் குறித்தும் ஏதேனும் யோசித்திருந்தாரா என்று நமக்குத் தெரியாது. பதவி அதிகார வெறியில் அவருடைய வாரிசுரிமைக்குப் போட்டா போட்டி நடத்திக்கொண்டிருப்பவர்கள் எவரும் நாளது தேதி வரை ஜெயலலிதாவின் உயில் என்று எதையும் நம்மிடம் காட்டவில்லை. அதேசமயம், கடைசிக் காலத்தில் நல்ல உடல்நிலையுடனும் தீர்க்கமான மனநிலையுடனும் அவர் எழுதிய / ஆற்றிய உரைகளை ஜெயலலிதாவின் அரசியல் மரண சாசனமாகக் கருத முடியும்.
பொருளாதாரச் சுதந்திரமே
உண்மையான சுதந்திரம்
இரு நிகழ்ச்சிகளை இங்கு குறிப்பிடலாம்.
முதலாவது, 2016, செப்டம்பர் 22 அன்று மருத்துவ மனையில் அனுமதிக்கப்படுவதற்கு ஒரு மாதம் முன்பு – ஆகஸ்ட் 15 அன்று அவர் ஆற்றிய சுதந்திர தின உரை.
நாடு முழுக்க ஒரே வரி என்ற பெயரில், மாநிலங்களின் வரிவிதிப்பு அதிகாரத்துக்கு முற்றுப்புள்ளி வைத்து, மாநிலங்களின் பொருளாதார இறையாண்மையை நொறுக்கும் ‘பொதுச் சரக்கு மற்றும் சேவை வரி’யைக் கொண்டுவரும் முனைப்பில் மோடி அரசு இருந்தபோது, அதைக் கடுமை யாக எதிர்த்த ஜெயலலிதா, தன்னுடைய உரையின் மையப் பொருளாகப் பொருளாதாரச் சுதந்திரத்தை உள்ளடக்கினார். சுதந்திரப் போராட்டத்தில் தமிழகத்தின் நெடிய பங்களிப்பைப் பட்டியலிட்ட அவர், முத்தாய்ப்பாகக் கூறினார், “சுதந்திரம் என்பது பேச்சுச் சுதந்திரம், எழுத்துச் சுதந்திரம், கருத்துச் சுதந்திரம், நம்மை நாமே ஆட்சி செய்துகொள்ளும் சுதந்திரம் என்பதோடு நின்று விடுவதல்ல. உண்மையான சுதந்திரம் பொருளாதாரச் சுதந்திரத்தில் இருக்கிறது!”
இரண்டாவது, அதற்கும் ஒரு மாதம் முன்பு - 2016 ஜூலை 16 அன்று - டெல்லியில் நடைபெற்ற மாநிலங்கள் இடை மன்றக் கூட்டத்தில் அவர் வாசிக்க அனுப்பியிருந்த உரை.
மாநிலங்களின் உரிமைகள் மீதான மத்திய அரசின் தாக்குதல்களை இந்த உரையில் பட்டியலிட்ட ஜெயலலிதா, ‘மருத்துவப் பொது நுழைவுத் தேர்வு ஒரு சமூக அநீதி’ என்று சாடியதோடு, ‘மாநிலங்களின் பட்டியலுக்குள் கல்வி மீண்டும் கொண்டுவரப்பட வேண்டிய நேரம் இது’ என்றும் குறிப்பிட்டார். மேலும், மத்திய – மாநில உறவுகள் எப்படி இருக்க வேண்டும் என்ற நீதிபதி எம்.எம்.பூஞ்சி குழுவின் பரிந்துரைகளை முன்வைத்து ஜெயலலிதா குறிப்பிட்டிருந்த பல கருத்துகள் மாநிலங்கள் உரிமை சார்ந்த திராவிடக் கட்சிகளின் பிடிமானத்தின் நீட்சி என்பதோடு, மாநிலங்கள் உரிமையில் அவருக்கு இருந்த அக்கறையையும் துல்லியமாகப் பிரதிபலிக்கின்றன.
மாநிலங்கள் உரிமையைப் பறிக்கும்
மத்திய அரசு!
அந்த உரையில் ஜெயலலிதா குறிப்பிடுகிறார்: “அரசியல் - பொருளாதாரம் வளர வளர மத்திய-மாநில அரசுகளின் உறவும் அதற்கேற்ப வளர வேண்டும். நாடு சுதந்திரம் அடைந்தபோது நிலவிய சூழலுக்கேற்ப மத்திய அரசிடம் சட்டம், நிதி நிர்வாகம், அரசு நிர்வாகம் தொடர்பான அதிகாரங்கள் அதிகமாகத் தரப்பட்டன. சுதந்திரம் அடைந்த பிறகு சட்டமியற்றுதல், நிதி நிர்வாகம் போன்றவற்றில் மேலும் பல அதிகாரங்களைக் கையகப்படுத்தவே மத்திய அரசு முயன்றுவருகிறது… மாநிலங்களின் அரசியல், நிர்வாக, பொருளாதாரப் பங்களிப்பு அதிகரித்துவருகின்றபோதிலும் மத்திய-மாநில அரசுகளின் உறவு அதற்கேற்ற வேகத்தில் வளரவில்லை. அதிகாரங்களை மத்தியில் குவிக்கும் முயற்சிகளே அதிகரித்துவந்துள்ளன.
மாநிலங்களின் அதிகாரப் பட்டியலில் இருந்த அதிகாரங்கள் பொதுப் பட்டியலுக்கு மாற்றப்பட்டன, மாநிலப் பட்டியலில் இருந்தவை தொடர்பாக மத்திய அரசால் சட்டமியற்றப்பட்டு எல்லா மாநிலங்களும் ஒரே மாதிரியான சட்டத்தைப் பின்பற்ற அறிவுறுத்தப்பட்டன; மாநிலங்களின் வரி வருவாய் மூலங்கள் மத்திய அரசால் கைப்பற்றப்பட்டன; மாநிலங்களின் நிர்வாக அதிகார விஷயங்களில் கூட – பொது அமைதியை நிலைநாட்டுவது போன்றவை – மத்திய அரசு ஆக்கிரமிப்பது இன்னமும் விலக்கப்பட வில்லை.
கூட்டுறவுக் கூட்டாட்சி
வெற்றுக் கோஷமாகக் கூடாது!
தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் ‘கூட்டுறவுக் கூட்டாட்சி’ முழக்கத்தை வரவேற்கிறோம். தேச வளர்ச்சியில் மாநிலங்கள் சம பங்காளிகளாக ஏற்கப்பட வேண்டும். மாநில அரசுகள் வலுவாக இருந்தால்தான் மத்திய அரசு வலுவாக இருக்க முடியும். மாநிலங்களுக்குப் போதிய அதிகாரம் வழங்கப்படாவிட்டால், இது வெற்றுக் கோஷமாகவே இருக்கும். மாநிலங்களின் வேறுபட்ட பொருளாதாரச் சூழ்நிலைகளைக் கருத்தில்கொள்ளாமல் ஒரே மாதிரியான நிர்வாக நடைமுறைகளைத் திணிக்க இந்தக் கூட்டுறவுக் கூட்டாட்சி கோஷம் பயன்படுத்தப்படக் கூடாது.
மாநிலங்கள் இடை மன்றம் வெறும் சம்பிரதாயச் சந்திப்புக்கான இடமாக இருக்கக் கூடாது. மத்திய அரசுக்கும் மாநிலங்களுக்கும் பரஸ்பரம் பலன் தரக் கூடியவை குறித்து விவாதிக்கும் களமாக இருக்க வேண்டும்.
கல்வியை மாநிலப் பட்டியலுக்கு
மாற்றுங்கள்!
பூஞ்சி குழுவின் பரிந்துரைகளில், ‘பொதுப்பட்டியலில் உள்ளவற்றைச் சட்டமியற்றுவதில் கட்டுப்பாடு தேவை’ என்ற பரிந்துரை வரவேற்கப்பட வேண்டியது. ‘பொதுப்பட்டியலில் உள்ளவை மீது சட்டம் இயற்றுவதாக இருந்தால், மாநிலங்களுடன் ஆலோசனை கலக்க வேண்டும்’ என்ற பரிந்துரையும் அப்படியே.
கல்வியை மாநிலப் பட்டியலுக்கே மாற்றுவதற்கு இதுவே உரிய தருணம். சுற்றுச்சூழல், சூழலியல், பருவநிலை மாற்றம் உள்ளிட்டவை மத்தியப் பட்டியலுக்கு மாற்றப் படுவது பிற்போக்குத்தனமானது. வனம், வனவுயிரினங்கள் 42-வது திருத்தம் மூலம் பொதுப் பட்டியலுக்கு மாற்றப் பட்டது. அதைப் போல சுற்றுச்சூழல், சூழலியல், பருவநிலை மாறுதல் போன்றவையும் பொதுப் பட்டியலில்தான் இடம்பெற வேண்டும், மத்தியப் பட்டியலில் அல்ல!
‘மாநிலங்கள் நிறைவேற்றும் மசோதா மீது குடியரசுத் தலைவர் ஆறு மாதங்களுக்குள் முடிவெடுக்க வேண்டும்’ என்ற காலவரம்பு விதிக்கப்பட வேண்டும் என்ற யோசனை யும் வரவேற்கப்பட வேண்டியது. ‘அந்நிய நாடுகளுடன் உடன்பாடுகள், ஒப்பந்தங்கள் செய்துகொள்ளும்போது மாநிலங்களின் நலன்கள் காக்கப்பட வேண்டும்’ என்ற பரிந்துரையும் சரியானது. ‘இருதரப்பு முதலீட்டுப் பாதுகாப்பு, இருதரப்பு முதலீட்டு உடன்பாடுகள் போன்றவற்றால் நிதியிழப்பு ஏற்பட்டால், அதை மாநிலங்களும் ஏற்க வேண்டும்’ என்ற வகையில் 2016-17 பட்ஜெட்டில் மத்திய அரசு கூறி யிருப்பது சரியல்ல. இந்த உடன்பாடுகளை யார், எதற்காகச் செய்துகொள்கிறார்கள் என்பதெல்லாம் தெரியாத நிலை யில் இழப்புகளை மாநிலங்களின் தலையில் சுமத்துவது கூடாது.
‘அந்நியர்களின் தாக்குதல், உள்நாட்டுக் கலவரங்கள் போன்ற தருணங்களில் மாநிலங்களை மத்திய அரசு காக்க வேண்டும்’ என்ற பூஞ்சி குழுவின் பரிந்துரையும் முக்கியத்துவம் வாய்ந்தது. பாக் விரிகுடாவில் இந்திய மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் தொடர்ந்து தாக்கப்படும் பின்னணியில் இந்தப் பரிந்துரை முக்கியத்துவம் பெறுகிறது.
மாநில அரசுகளைக் கலைப்பது தொடர்பாக எஸ்.ஆர்.பொம்மை வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி சில பாதுகாப்பு ஏற்பாடுகளை அரசியல் சட்டத்தின் 356-வது பிரிவில் திருத்தமாகச் சேர்க்க வேண்டும் என்ற பூஞ்சி குழுவின் பரிந்துரை முக்கியத்துவம் வாய்ந்தது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளைப் பாதுகாப்பதும் ஆளுநர்களின் அரசியல் சாகசங்களையும் தடுத்து நிறுத்துவது மிகமிக முக்கியம். இது தொடர்பாக மாநிலங்களுக்கு மத்திய அரசு தேவைப்பட்ட உறுதிமொழிகளை அளிக்க வேண்டும்.
மாநிலங்களுக்கான நிதியை
அதிகரியுங்கள்!
‘அரசியல் சட்டத்தின் 263-வது பிரிவின் கீழ், மாநிலங்கள் இடை மன்றம் வலுப்படுத்தப்பட்டு, பொது நீரோட்டத்தில் கலக்கச் செய்யப்பட வேண்டும்’ என்ற பரிந்துரையும் முக்கியமானது. ‘மாநிலங்களுக்கு இடையிலான சச்சரவுகளை விசாரித்து தகுந்த ஆலோசனைகளை இம்மன்றம் வழங்க வேண்டும்’ என்பதும் வரவேற்கப்பட வேண்டியது. வலுவான தகுந்த மன்றம் இல்லாததால் பக்கத்து மாநிலங்களுடனான பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண முடியாமல் தமிழகம் தவிக்கிறது. மாநிலங்களுக்கு இடையிலான பிரச்சினைகளையும் மத்திய அரசுடனான பிரச்சினைகளையும் விசாரித்து, தீர்வுகாண நம்பிக்கைக்குரிய, சக்தி வாய்ந்த அமைப்பாக மாநிலங்கள் இடை மன்றம் உருவாவதை தமிழகம் வரவேற்கிறது.
நீதித் துறை நிர்வாகச் செலவுகளை இப்போது மாநிலங்களே அதிகம் சுமக்கின்றன. பூஞ்சி குழுப் பரிந்துரைப்படி, இதில் பெரும் பகுதியை மத்திய அரசு ஏற்க வேண்டும். மாநிலங்களுக்கான நிதி ஒதுக்கீட்டை அதிகப்படுத்த வேண்டும், மத்தியச் சட்டங்களை அமல்படுத்த ஆகும் செலவையும் மாநிலங்களுக்குத் தர வேண்டும். செஸ், சர்-சார்ஜ் என்ற பெயரில் கூடுதல் தீர்வைகளை விதிப்பதை மத்திய அரசு கைவிட வேண்டும். செஸ், சர்-சார்ஜ் என்ற கூடுதல் தீர்வைகள் மூலம் கிடைக்கும் நிதியை மாநிலங் களுடன் மத்திய அரசு பகிர்ந்துகொள்ளத் தேவையில்லை என்பது சட்டம். எனவே, மத்திய அரசு தன்னுடைய செலவு களுக்குக் கூடுதலாக நிதி திரட்டும் அதே வேளையில், மாநிலங்களுக்கு நிதி கிடைக்காமல் தடுக்கிறது. இப்போதைய மத்திய அரசு கடந்த இரண்டு ஆண்டுகளில் இத்தவறைச் சகட்டுமேனிக்குச் செய்திருக்கிறது.
நீட் தேர்வு எனும்
சமூக அநீதி!
அந்தந்த மாநிலத்துக்குள் பொதுச் சரக்கு மற்றும் சேவை வரியை அந்தந்த மாநிலமே வசூலித்துக்கொள்ள அனுமதிக்க வேண்டும். மாநிலங்களுக்கு இடையிலான பரிமாற்றங்கள் மீது மட்டும் மத்திய அரசு வரி வசூலித்துக்கொள்ள வேண்டும். இதை மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும். ஒருவேளை பொதுச் சரக்கு - சேவை வரி விதிக்கப்பட்டாலும் மாநிலங்களின் வரி வருவாய் குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். குறையும் வருவாயை மத்திய அரசு 100% ஈடுகட்ட வேண்டும். பெட்ரோலியம், மது, புகையிலைப் பொருட்களை மாநிலங்களின் வரி விதிப்புக்கு ஒதுக்க வேண்டும். இந்த வரி விதிப்பு தொடர்பான குழு மாநில நிதியமைச்சர்களைக் கொண்டு உருவாக்கப்பட்டு, அது அதிகாரமளிக்கப்பட்ட அமைப்பாகச் செயல்பட வேண்டும்.
மருத்துவப் பொது நுழைவுத் தேர்வு (நீட்) அறிமுகம் மாநிலங்களின் உரிமைகள் மீதான நேரடியான தலையீடாகும். இது தமிழ்நாட்டு மாணவர்களுக்கு இழைக்கப்படும் அநீதி. தமிழ்நாட்டில் நியாயமான, வெளிப்படையான மாணவர் சேர்க்கை நடைமுறை பின்பற்றப்படுகிறது. பொது நுழைவுத் தேர்வுகளில், கிராமப்புற மாணவர்களும் ஏழை மாணவர்களும் சிறப்புப் பயிற்சி வகுப்புகளுக்குச் செல்ல முடியாததால் அதிக மதிப்பெண்களை வாங்க முடியாமல், தங்களுக்குரிய இடங்களை இழப்பார்கள். இது மிகப் பெரிய சமூக அநீதியாக உருவெடுக்கும். தமிழகம் போலவே நியாயமான, வெளிப்படையான மாணவர் சேர்க்கை முறை உள்ள மாநிலங்களை அதே முறையில் தொடர்ந்து மாணவர்களைச் சேர்த்துக்கொள்ள அனுமதிக்க வேண்டும். நீட் தேர்வு முறையைத் திணிக்கக் கூடாது!”
பெரும் துரோகம்!
இப்படி மத்திய – மாநில உறவு தொடர்பான விவாதத்தின், உரிமைப் பிரச்சினையின் மையப்புள்ளியில் கல்வியையும் மருத்துவப் பொது நுழைவுத் தேர்வையும் ஜெயலலிதா கொண்டுவந்து நிறுத்தியதற்கான காரணம் உண்டு. ஏனென்றால், திராவிட இயக்கத்தின், இரு திராவிடக் கட்சிகளின் மைய ஆதாரக் கொள்கையான சமூக நீதிக் கொள்கையோடும் மாநிலங்கள் உரிமையோடும் பிணைக்கப்பட்ட விவகாரம் இது. நூறாண்டுகளுக்கு முன், மருத்துவப் படிப்புக்கான தகுதிகளில் ஒன்றாக ‘சம்ஸ்கிருதம் படித்திருக்க வேண்டும்’ என்றிருந்த சூழலை அன்றைய நீதிக்கட்சி முடிவுக்குக் கொண்டுவந்ததோடு இன்றைய மருத்துவப் பொது நுழைவுத் தேர்வுத் திணிப்பை ஒப்பிட்டால், இந்த விவகாரம் திராவிட இயக்க வரலாற்றிலும் தமிழகத்தின் வரலாற்றிலும் எவ்வளவு பெரிய பின்னடைவு என்பதை உணர முடியும்
ஜெயலலிதாவின் மரணத்துக்குப் பின், அதிகார வெறியில் தங்களுடைய பதவிக்காக அடுத்தடுத்து மாநிலங்களின் உரிமைகளைப் பணயம் வைத்து சூதாடிவந்தவர்களின் கையாலாகாத்தனத்தின் உச்சமே இன்றைக்கு, ‘மருத்துவப் பொது நுழைவுத் தேர்வு’ விவகாரத்தில் தமிழகத்துக்குக் கிடைத்திருக்கும் அரசியல் தோல்வி. ஜெயலலிதாவின் வார்த்தைகளின்படியே தமிழக மாணவர்களுக்கு இழைக்கப்பட்டிருக்கும் அநீதி. மிகப் பெரிய சமூக அநீதிக்கு இன்றைய ஆட்சியாளர்கள் துணை போயிருக்கிறார்கள். இதோடு முடியப்போவதில்லை; இவர்கள் தங்கள் அதிகார சுகத்துக்காக எதையும் இழக்கத் தயங்க மாட்டார்கள் என்பதையே நடக்கும் காட்சிகள் பகிரங்கப்படுத்துகின்றன.
மக்களோடு சேர்ந்து தமிழகத்தின் எல்லா எதிர்க்கட்சிகளும் ஒருமித்த குரலில் அரசுக்குத் துணை நின்ற விவகாரம் இது. மாநிலத்தில் உள்ள பலம் மட்டும் இன்றி, மக்களவையிலும் 37 உறுப்பினர்களுடன் நாட்டின் மூன்றாவது பெரிய கட்சியாக அமர்ந்திருக்கிறது அதிமுக. இவ்வளவு பலமான சூழலிலிருந்தும் மாநிலத்தின் உரிமையைப் பாதுகாக்க முடியாதவர்களுக்கு, டெல்லியிடம் பேரம் பேசத் தெரியாதவர்களுக்கு, திராவிட இயக்கத்தின் மைய ஆதாரக் கொள்கையையே பறிகொடுத்து நிற்பவர்களுக்குப் பதவி எதற்கு? பழனிசாமி – பன்னீர்செல்வம், பதவி விலகுங்கள்! மக்களைச் சந்தியுங்கள். ஒரு அரசியல்வாதிக்கான உண்மையான அதிகாரம் மேலிருந்து வழங்கப்படுவது அல்ல; கீழிருந்து அளிக்கப்படுவது என்பதை உணர்த்த தமிழக மக்கள் காத்திருக்கிறார்கள்!
- சமஸ்,
தொடர்புக்கு: samas@thehindutamil.co.in
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
7 hours ago
கருத்துப் பேழை
7 hours ago
கருத்துப் பேழை
8 hours ago
கருத்துப் பேழை
8 hours ago
கருத்துப் பேழை
5 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago