கோரக்பூர் பி.ஆர்.டி. மருத்துவமனையில் 70-க்கும் மேற்பட்ட குழந்தைகள் இறந்துள்ள நிலையில், அந்த மருத்துவமனையில் நடந்துள்ள முறைகேடுகள் குறித்துத் தங்களுக்கு எதுவுமே தெரியாது என்று உத்தர பிரதேச மாநில அமைச்சர்கள் கூறியுள்ளனர். ஆனால், கிடைக்கும் ஆவணங்கள், அவர்களுக்குத் தெரியும் என்பதையே உறுதிப்படுத்துகின்றன.
மருத்துவக் கல்விக்கான அமைச்சர் அசுதோஷ் தாண்டனிடம், ஆக்சிஜன் சிலிண்டர்கள் பற்றாக்குறை குறித்தும், லட்சக்கணக்கான ரூபாய் வழங்கப்படாத தால் அந்நிறுவனம் சிலிண்டர் வழங்க மறுப் பது குறித்தும், நிறுவனத்தின் பில்களை ஏற்றுப் பரிந்துரைக்க கமிஷன் கேட்கப் படுவது குறித்தும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது
ஆகஸ்ட் 11-ல் குழந்தைகள் மரணம் பற்றிய செய்தி வெளியாவதற்கு முன்னால், மாலை 4.30 மணிக்கு முதன்மை மருத்துவக் கண்காணிப்பாளர் ரமாசங்கர் சுக்லா, மருத்துவமனை முதல்வர் ஆர்.கே. மிஸ்ராவிடம் ‘திரவ ஆக்சிஜன் கையிருப்பு வேகமாகத் தீர்ந்துகொண்டிருக்கிறது, அந்நிறுவனம் சிலிண்டர் அனுப்ப மறுக்கிறது’ என்று கடிதம் வாயிலாகத் தெரிவித்திருக்கிறார். சிலிண்டர்களை வழங்குமாறு விரைந்து நடவடிக்கை எடுங்கள், அப்போதுதான் கவலைக் கிடமான நிலையிலிருக்கும் குழந்தைகளின் உயிரைக் காப்பாற்ற முடியும் என்று வலியுறுத்தியிருக்கிறார்.
குறைந்துவரும் ஆக்சிஜன் அளவை அதிகரிக்க மாற்று வழிகளை உடனே யோசிக்குமாறும், கோரக்பூர் மாவட்ட ஆட்சியர், கோட்ட ஆணையர் ஆகியோரின் உதவிகளை நாடுமாறும்கூட அந்தக் கடிதத்தில் கேட்டுக்கொண்டிருக்கிறார்.
ஆகஸ்ட் 9-ல், அதாவது ஒரே நாளில் 23 குழந்தைகள் இறந்ததற்கு முதல் நாளில் - மருத்துவமனைக்கு ஆக்சிஜன் வழங்க ஒப்பந்தம் பெற்றிருந்த ‘புஷ்பா சேல்ஸ் பிரைவேட் லிமிடெட்’ என்ற நிறுவனத்தின் இயக்குநர் மனீஷ் பண்டாரி, அமைச்சர் தாண்டனுக்கு எழுதிய கடிதத்தில் நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்குமாறு கோரியிருக்கிறார். அவரே தான் எழுதிய கடிதங்களின் நகல்களை வெளியிட்டுள்ளார்.
கடந்த பிப்ரவரி முதலே பல நினைவூட்டல் கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன. ஏப்ரல் 6-ல் எழுதிய நினைவூட்டல் கடிதம் முதலமைச் சர் யோகி ஆதித்யநாத், சுகாதார அமைச்சர் சித்தார்த்தநாத் சிங் ஆகியோருக்கும்கூட அனுப்பப்பட்டிருக்கிறது.
முதன்மை மருத்துவ மேற்பார்வையாளர் அனுப்பிய குறிப்பில் ‘மருத்துவ ஆக்சிஜன் வெகு விரைவில் முற்றாகத் தீர்ந்துவிடும், அதை உடனே நிரப்பியாக வேண்டும், ஆக்சிஜன் வழங்கும் நிறுவனம் இனி சிலிண்டர்களை அனுப்பாது’ என்று தெரிவித்திருக்கிறார்.
ஆக்சிஜன் சிலிண்டர்களை வாங்கிய வகையில் நிலுவைத் தொகை ரூ. 68 லட்சமாகிவிட்டது, பல முறை மின்னஞ்சல் மூலமும் தொலைபேசி வாயிலாகவும், வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பித் தெரிவித்த பிறகும் மருத்துவமனையோ அரசுத் துறைகளோ தனக்குப் பதிலே தரவில்லை என்று தாண்டனுக்கு எழுதிய கடிதத்தில் பண்டாரி குறிப்பிட்டிருக்கிறார். தடையில்லாமல் சிலிண்டர்கள் கிடைக்க நிலுவையை வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டிருக்கிறார். ஜூலை 10-ல் உத்தர பிரதேச சட்ட மேலவை உறுப்பினர் சி.பி. சந்த் (சமாஜ்வாதி) இது தொடர்பாகக் கேள்வி கேட்டிருந்தார். பி.ஆர்.டி. மருத்துவமனையில் முறைகேடுகளும் ஊழலும் நடப்பதாகப் புகார்கள் வருகின்றனவே என்று சந்த் கேட்டிருந்தார். உங்களுடைய கேள்விகளுக்குப் பதிலைப் பெற்றுத் தெரிவிக்கிறேன் என்று தாண்டன் அவருக்குப் பதில் அளித்திருக்கிறார்.
முறைகேடுகள், தவறான பயன்பாடுகள் பற்றிய 10 சம்பவங்களைக் குறிப்பிட்டுச் சட்ட மேலவை முதன்மைச் செயலாளருக்கு மே 22-ல் சந்த் கடிதம் எழுதியிருக்கிறார். ஆனால், அதில் ஆக்சிஜன் பற்றாக்குறை குறித்து அவர் ஏதும் கூறியிருக்கவில்லை.
அறுவைச் சிகிச்சைக்கான கருவிகள் வாங்க ஒதுக்கிய பணம் படுக்கை விரிப்புகள் வாங்கப் பயன்படுத்தப்பட்டதாகவும், அதிகமாகத் தரகுத் தொகை கேட்கப்பட்டதால் இப்படிப் பணம் வேறு பயன்பாட்டுக்குத் திருப்பிவிடப்பட்டதாகவும் சி.பி. சந்த் தனது கடிதத்தில் குற்றம்சாட்டியிருக்கிறார்.
இந்தக் கடிதத்தை அமைச்சர் தாண்டனுக்கு துணைச் செயலாளர் தேவேந்திர குமார் குப்தா மே 31-ல் அனுப்பியிருக்கிறார். இந்தக் கடிதத்துக்கு ஒரு மாதத்துக்குள் பதில் தருமாறு கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறார். அவரும் ஜூலை 10-ல் பதில் அளித்திருக்கிறார். ஆனால், புகார் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பற்றிய தகவல்கள் அதில் இல்லை.
தமிழில் : சாரி
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
16 hours ago
கருத்துப் பேழை
16 hours ago
கருத்துப் பேழை
17 hours ago
கருத்துப் பேழை
19 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago