ஜெ
யப்பிரகாஷ் நாராயண் தனது சமாதியில் இப்போது ஆழ்ந்த கவலையில் மூழ்கியிருப்பார், “பிஹாருக்கும் என்னுடைய சோஷலிச சித்தாந்தத்துக்கும் என்ன ஆயிற்று?” என்று! நெருக்கடிநிலை அமலுக்குப் பிறகு ‘சோஷலிஸம்’ என்ற வார்த்தை பிஹாரைச் சேர்ந்த இருவருடன் ஒட்டிக்கொண்டது. ஒருவர், லாலு பிரசாத். மற்றொருவர், நிதீஷ் குமார். இவ்விருவருக்கும் நடுவில் ‘சோஷலிஸம்’ என்ற சமத்துவக் கொள்கை, வாக்குகளை அள்ளும் உத்தியாக மாறிச் சிறப்பிழந்தது
பிஹார் அரசியலின் பாட்டுடைத் தலைவர்களாகிவிட்டனர் லாலுவும் நிதீஷ் குமாரும். அடிக்கடி இருவரும் சேர்ந்தே தோல்வியைச் சந்தித்தாலும், விலகுவதன் மூலமே துடிப்பான உறவைத் தக்க வைத்துக்கொள்கின்றனர். சோஷலிஸம், மக்கள் ஈர்ப்பு என்ற அம்சங்கள் பொதுவாக இருப்பதைப் போல இருவருமே அதிகாரமுள்ள பதவியை நேசிப்பவர்கள். இதுதான் இருவரையுமே துடிப்பாக வைத்திருக்கிறது. அதிகாரமில்லாத பதவி என்பது ஆண்மையற்ற தாம்பத்யம் போன்றது. இருவர் செயல்பாட்டிலும் வேறுபாடுகள் உண்டு.
இருவருக்கும் என்ன வேறுபாடு?
இருவருமே நாற்காலிப் பிரியர்கள்தான். லாலு அதை வெளிப்படையான கொண்டாட்டங்களுக்காக விரும்புவார். நிதீஷ் மனதில் சில திட்டங்களைத் தீட்டிக்கொண்டு அதற்கேற்ப காய் நகர்த்தி, அதிகாரத்தைக் கைப்பற்றுவார். லாலு அரசியலுக்கும் குற்றவாளிகளுக்கும் நேரடித் தொடர்பு உண்டோ என்று சந்தேகப்படும் அளவுக்கு, சாது யாதவ் அல்லது அவர் போன்ற அடாவடி ஆட்களுக்கு உதவிகளைச் செய்வார்.
அவர் மீது எப்போதுமே ஊழல் கறையுண்டு என்றாலும், சிலருக்கு அவர் மீது ஏன் ஈர்ப்பு என்றால், மதச்சார்பின்மையில் அவருக்கிருக்கும் உறுதிப்பாடுதான். முலாயம், லாலு இருவரும் தேசிய அரசியலில் தனி இடம் பிடிப்பதற்கு அவர்களுடைய மதச்சார்பற்ற நிலைப்பாடே காரணம்.
நிதீஷுக்கு எப்போதும் பதவி தேவை, சுயமோகித்தலில் ஆழ்ந்திருப்பார், பதவியைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டுமே என்ற அச்சத்திலேயே இருப்பார். அதனால், அவருடைய ஒவ்வொரு நடவடிக்கையும் வியூகப்படியே நடக்கும் - ஊழலை எதிர்ப்பதுகூட. எப்போதும் பதவியையே நினைத்துக்கொண்டு, அதைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டுமே என்பதில் அக்கறையுள்ள நரேந்திர மோடியைப் போல இன்னொருவர் என்றால், அது நிதீஷ்தான். நிதீஷுக்குத் தேசியத் தலைவராக வேண்டும் என்றும் ஆசை.
நிதீஷை உலுக்கிய உளவியல்
ஆனால், வாக்குகளைக் கவர்வதில் லாலுதான் கெட்டிக்காரர். லாலு பிரசாத், நரேந்திர மோடி ஆகியோருக்குப் பின்னால் தனக்கு இரண்டாவது இடம்தான் என்பதில் நிதீஷுக்கு வருத்தம் உண்டு. மோடியும் லாலுவும் மக்கள் தலைவர்கள். நிதீஷின் ஆட்சிக் கனவு மோடிக்கு இணையானதில்லை; மக்கள் செல்வாக்கில் லாலுவைவிடக் குறைவு. உளவியல்ரீதியாக இவையெல்லாம் அவரை உலுக்கியிருக்க வேண்டும். தக்க நேரம் பார்த்துக் களம் மாறுவதில் நிதீஷ் கெட்டிக்காரர். நிதீஷின் செயல், தேசத்தின் கன்னத்தில் அறைந்ததைப் போல என்று லாலு வர்ணித்தது தவறு. நிதீஷ் தேச விரோதி அல்ல, அவர் சுய விசுவாசி; தன்னையே விசுவாசிப்பதுதான் இன்றைய அரசியலில் மிகப் பெரிய தேச பக்தி!
நிதீஷின் அரசியல் வாழ்க்கை திருப்பங்களும் திருகல்களும் நிரம்பியது. ‘ஜேபிய’ சோஷலிஸ்டாக அறிமுகமான நிதீஷ், 1980-களில் லாலுவுடன் பொருந்த முடியாத இரட்டையர்களில் ஒருவராக இருந்தார். பத்தாண்டுகளுக்குப் பிறகு பாஜகவுடன் சேர்ந்தார். வாஜ்பாய் அரசில் கேபினட் அமைச்சரானார். பாஜக ஆதரவுடன் 2005-ல் பிஹார் முதலமைச்சரானார். எட்டு ஆண்டுகள் ஆட்சிக்குப் பிறகு 2013-ல் பாஜகவுடனான கூட்டணியை முறித்துக்கொண்டு வெளியே வந்தார். 2017-ல் ‘மகா கூட்டணி’ கனவுகளைக் கலைத்துக்கொண்டு ‘கர்-வாப்ஸி’ செய்து மீண்டும் பாஜகவின் மடியில் குடியேறிவிட்டார்.
என்ன எதிர்க்கட்சிகள்?
இரு தரப்புக்கும் இடையிலான வாய்ச் சண்டையில், எதிர்க்கட்சி ஒற்றுமை உடைந்து நொறுங்கிவிட்டது அம்பலமாகிவிட்டது. எதிர்க்கட்சிகளின் (பிரதமர்) வேட்பாளராகும் வாய்ப்பு இனி நிதீஷுக்குக் கிட்டாது. போஜ்புரியில் வெளியாகும் ‘பி’ கிரேடு சினிமா கதையைப் போலவே காட்சிகள் அரங்கேறின. அதிலாவது கொஞ்சம் பாட்டு, நகைச்சுவைக் காட்சிகள் என்று சுவாரசியம் இருக்கும். நிதீஷின் உடல்மொழியைப் பார்க்கும்போது பதவியைப் பிடிக்க அவர் காட்டிய அவசரமும், சந்தர்ப்பவாதமும் மோசமாக அம்பலமானது. அனைவருடைய பார்வையும் அவர் மீது திரும்பின. புதிய வேடம் தரிக்க அவரும் தயார். அதிகாரத்திலிருந்தோ, வரலாற்றிலிருந்தோ ஒதுக்கப்படுவதை அவர் விரும்புவதில்லை. மனசாட்சி, விசுவாசம், நாட்டுப்பற்று என்ற வார்த்தைகள் எல்லாம் அரசியலில் பலிகடாக்கள்தான்.
நரேந்திர மோடி-அமித் ஷா காலத்தில் தன்னால் நடுத்தரமான சாணக்கியராகத்தான் இருக்க முடியும் என்பதை நிதீஷ் உணர்ந்துவிட்டார். எதிர்க்கட்சிகளுக்காக ஒரு ‘அளகாபுரி’ பட்டினத்தை இனி தன்னால் உருவாக்க முடியாது என்பதை உணர்ந்துவிட்டார். எதிர்க்கட்சிகளை இப்போது யாரும் சீந்துவதில்லை. தேசிய அரசியலுக்கு எதிர்க்கட்சி வரிசை சரிப்படாது என்பதைப் புரிந்துகொண்டார். ஏதாவது நடந்த பிறகு அதைக் கண்டிப்பது அல்லது விமர்சிப்பது மட்டும் எதிர்க்கட்சிகள் வெற்றி பெறப் போதாது என்றும் ஒப்புக்கொண்டுவிட்டார். எதிர்க்கட்சிகளுக்கு தொலைநோக்குப் பார்வையும் இல்லை, வலுவான செயல்திட்டமும் இல்லை, வியூகம் வகுக்கும் அறிகுறிகள்கூடத் தென்படவில்லை. ஒரு கட்டத்தில், ‘இனி எதுவும் உருப்படாது’ என்ற மனநிலைக்கு நிதீஷ் வந்துவிட்டதாகவே தோன்றுகிறது. விரக்தியில் அவர் எடுத்த முடிவுதான் அணி மாறியது.
நிதீஷின் ‘தேச பக்தி’
மோடி என்ற பெருந்தேர் ஓடும் வழியெல்லாம் எதிர்க்கட்சிகள் சுக்குநூறாவதைக் காண்கிறோம். நிதீஷின் வருகை பாஜகவில் உற்சாகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இது தேவை என்றும் பாராட்டப்பட்டது. பிஹார் சட்டப் பேரவைக்கு உடனே தேர்தல்கள் வரப்போவதில்லை. புதிய வாய்ப்புகள் ஏற்படும்வரை பாஜக -நிதீஷ் கூட்டணி தொடரும். நிதீஷ் குமாரின் சகாப்தம் இனி மக்களை எதிர்க்கட்சிகள் கைவிட்ட கதையாகத்தான் பார்க்கப்படும்.
எதிர்க்கட்சி வரிசையைப் பார்க்கும்போது நம்பிக்கையின்மை அப்பட்டமாகத் தெரிகிறது. திமுக, அதிமுக இரண்டும் காலாவதியாகிவிட்டன. மு.க.ஸ்டாலின் அனுபவமற்ற உள்ளூர் அரசியல்வாதியைப் போலத் தெரிகிறார். சீதாராம் யெச்சூரி, அவர் தாங்கிப் பிடிக்கும் சித்தாந்தத்தைப் போலவே களைத்துப் போயிருக்கிறார். மம்தா பானர்ஜிக்கு தேசத்தைப் பற்றிக் கவலைப்பட நேரமில்லாத அளவுக்கு மாநிலம் குறித்தும் கோர்க்காலாந்து குறித்தும் கவலைகள் சேர்ந்துவிட்டன. எது நிகழ்ந்தாலும் காங்கிரஸ் கட்சி சார்பில் தெரிவிக்கப்படும் ஒற்றை வரிக் கருத்துகள் சில சமயம் புத்திசாலித்தனமாகவும், சில சமயம் பிதற்றலா கவும் இருக்கின்றன. காங்கிரஸ் கட்சி கரைந்துகொண்டே வருவது பிற எதிர்க்கட்சிகளுக்குப் புரிந்துவிட்டது. பிஹாரும் தமிழ்நாடும் எப்படி தாங்களாகவே, ‘மடியில் விழுந்த மாங்கனிகளாகிவிட்டன’ என்று பாஜக உள்ளூரக் களிப்படைந்திருக்கிறது. பாஜக தொடர்ந்து இப்படியே செயல்பட்டால் போதும். நிதீஷுக்கு வேறு வழியே இல்லை. நாற்காலியில் அவர் நீடிக்க வேண்டுமென்றால், நாற்காலிக்கு அவர் காட்டும் விசுவாசத்தைப் புரிந்துகொண்ட கட்சியின் ஆதரவால்தான் முடியும்.
இரண்டாவது உலகப் போர் சமயத்தில் பிரபலமான ஒரு ஆங்கிலச் சொல், இன்றைய பிஹார் நிலைக்கு நன்றாகப் பொருந்துகிறது - ‘ஸ்நாஃபு’ (SNAFU). ‘எல்லாம் கெட்டுவிட்டது - நிலைமை மாமூலாக இருக்கிறது’ என்பது அதன் நீட்சி. பதவிப் பித்து, ஆடம்பரம், அதிகார ஆசைக்கு பிஹார் அடகு வைக்கப்பட்டுவிட்டது. மோடி தனக்கான வாய்ப்பாக இதை மாற்றிக்கொண்டார். கூடவே, இதையே தேச பக்தி என்றும் பாராட்டிவிட்டார். பாஜகவின் பவனியைத் தடுக்க முடியாமல் எதிர்க்கட்சிகள் மீண்டும் சில முறை ஒரு வாரத்தில் மரித்துள்ளன. எதிர்க்கட்சிகள் கரைந்து, களைத்து விழுவதால் பாஜகவின் பெரும்பான்மையினவாதம் மேலும் மேலும் யதேச்சாதிகாரமாகி வருகிறது. மகா கூட்டணி ஜே.பி.யின் கனவுகளை நாசமாக்கிவிட்டது. ‘இசை நாற்காலி’தான் இனி தேர்தல் அரசியலின் முக்கியச் சடங்காகிறது!
- ஷிவ் விஸ்வநாதன், பேராசிரியர்.
சுருக்கமாகத் தமிழில்: சாரி,
©: ‘தி இந்து’ ஆங்கிலம்
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
23 hours ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
3 days ago