“லத்தீன் அமெரிக்காவின் யதார்த்தம் நீங்கள் கற்பனையில்கூடத் தரிசிக்க முடியாத குரூரங்களையும் விநோதங்களையும் கொண்டது. அந்த யதார்த்தங்களை விவரிக்க மரபுரீதியான உத்திகள்கூட இல்லையென்பதுதான் எங்கள் தனிமையின் சாரம்.” காப்ரியல் கார்சியா மார்க்வெஸின் நோபல் பரிசு ஏற்புரைக்குப் பின் வரும் இந்த வரிகளுக்குள் பொதிந்து கிடப்பது ஐந்து நூற்றாண்டுகளின் சோகமும் கோபமும். 'தனிமையின் நூறு ஆண்டுகள்' அந்த வரலாற்றின் ஒரு செதுக்கல்தான். அந்த வரலாற்றுச் சோகம் 1492-ம் ஆண்டில் கொலம்பஸ் என்ற ஸ்பானிய மாலுமியின் வருகையில் துவங்கியது.
பூர்வகுடிகளை அழித்த வரலாறு
ஸ்பானிய மன்னரின் ஆசி பெற்று, தங்கம் இருக்கும் இந்தியாவைத் தேடிப் புறப்பட்ட கொலம்பஸ், இந்தியா என்று நம்பி இறங்கியது, இப்போது கரீபியத் தீவுகள் என்றறியப்படும் நிலப் பகுதியில்தான். அங்கு வாழ்ந்த அரவாக் பூர்வ குடியினர் கொலம்பஸை எப்படி வரவேற்றனர்? “அரவாக்குகள் எங்களை நோக்கி உணவு, தண்ணீர் ஏந்தி ஓடிவந்தனர். கிளிகளையும் பஞ்சுப் பந்துகளையும் ஈட்டிகளையும் பரிசாகக் கொடுத்தார்கள். அவர்களின் கைகளில் ஆயுதங்கள் இல்லை. ஆயுதங்கள் என்றால் என்னவென்றே அவர்களுக்குத் தெரியவில்லை. அவர்களிடம் ஒரு வாளியைக் கொடுத்தேன். விவரமறியாத அவர்கள் அதன் கூரான ஒரு பகுதியைப் பிடித்ததால் காயமடைந்தனர். கட்டுமஸ்தான உடலமைப்பைக் கொண்ட அவர்கள் நல்ல வேலைக்காரர்களாக இருப்பார்கள் என்று நினைத்துக்கொண்டேன்.”
இப்படிக் குறிப்பெழுதிய கொலம்பஸ் அவர்களுக்கு ஓர் ஆணையிட்டார். 14 வயதுக்கு மேற்பட்ட ஒவ்வொரு அரவாக்கும் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை குறிப்பிட்ட அளவு தங்கம் கொண்டுவர வேண்டும். கொண்டுவருபவர்கள் கழுத்தில் தாமிரச் செப்புகள் மாட்டப்பட்டன. தாமிரச் செப்பு இல்லாதவர்களின் கைகள் வெட்டப்பட்டன. ஆயுதம் என்றால் என்னவென்று அறியாத அப்பாவிகளால் ஸ்பானியக் கொள்ளையரின் குதிரைகளையும் வாள்களையும் எதிர்த்து நிற்க முடியவில்லை. கசாவா எனும் விஷக் கிழங்குகளைத் தின்று கூட்டம் கூட்டமாகத் தற்கொலை செய்துகொண்டனர். பச்சிளங்குழந்தைகள் ஸ்பானியர் கைகளில் சிக்கிவிடக் கூடாது என்று பயந்து, அந்தக் குழந்தைகளை அவர்களே கொன்றுவிட்டனர். இரண்டே ஆண்டுகளில் இரண்டு லட்சத்துக்கும் அதிகமான அரவாக்குகள் கொல்லப்பட்டனர்; அல்லது தற்கொலை செய்துகொண்டனர். 1650-ம் ஆண்டு வெளிவந்த ஓர் அறிக்கை இப்போது ஹைட்டி என்றழைக்கப்படும் தீவில் அரவாக் இனமே அழிந்துவிட்டது என்று கூறுகிறது. கொலம்பஸுக்குப் பின் தென் அமெரிக்காவில் வந்திறங்கிய ஐரோப்பியர்கள் ஆஸ்டெக், இன்கா, ஹாட்டரர்ஸ், பெக்வெட் பூர்வகுடி இனங்களைக் கொன்றழித்தனர். இங்கிலாந்திலிருந்து சென்றவர்கள் ஆக்கிரமித்த வட அமெரிக்காவுக்கு ‘ஆங்கில அமெரிக்கா' என்றும் லத்தீன் மொழியை வேராகக் கொண்ட ஸ்பானிய, போர்த்துக்கீசிய மொழி பேசுபவர்கள் ஆக்கிரமித்த தென்பகுதி ‘லத்தீன் அமெரிக்கா' என்றும் பெயர்பெற்றது இப்படித்தான்.
ஸ்பெயின்: உலகின் முதல் வல்லரசு
ஐரோப்பிய முதலாளித்துவத்தின் மூலதனப் பசிக்கு அமெரிக்க பூர்வகுடியினரின் ரத்தம்தான் முதல் படையல்! 1,000-த்துக்கும் மேற்பட்ட தானிய வகைகளைப் பயிர் செய்யவும், மச்சு பிச்சு என்ற அற்புதக் கட்டிடக் கலையின் சின்னத்தை உருவாக்கவும் திறன்பெற்ற பூர்வகுடிகளின் கலாச்சாரத்தின் கல்லறையின் மீதுதான் ஐரோப்பிய நாகரிகம் எழுப்பப்பட்டது.
தென் அமெரிக்காவில் கொலம்பஸ் புதிய உலகத்தைக் கண்டுபிடித்தவுடன் அதன்மீது ஸ்பெயினும் போர்ச்சுகலும் உரிமை கொண்டாடின; அன்றைய போப்பாண்டவர் ஸ்பெயின் தேசத்தைச் சேர்ந்தவர். போர்த்துகீசிய நாட்டுக்கு ஆதரவாக அளிக்கப்பட்டிருந்த போப் ஆணைகள் ரத்துசெய்யப்பட்டு, தென் அமெரிக்காவைச் சூறையாடும் முழு உரிமை ஸ்பெயினுக்கு வழங்கப்பட்டது.
“கிறிஸ்டோபர் கொலம்பஸ் தெய்வீக அருளுடன் மிகவும் சிரமப்பட்டு ஒரு பெருங்கடலைக் கடந்து சில தீவுகளையும் சில பிரதான நிலப் பகுதிகளையும் கண்டுபிடித்துள்ளார். அந்தப் பகுதியில் வசிக்கும் மக்கள் அமைதியாக வாழ்ந்துவருகிறார்கள். அவர்கள் உடை அணிவதில்லையென்றும், மாமிசம் சாப்பிடுவதில்லை என்றும் கூறப்படுகிறது. அம்மக்கள் சொர்க்கத்தில் இருக்கும் ஒரு கடவுளின் மேல் நம்பிக்கை கொண்டவர்கள். கத்தோலிக்க மதத்தைத் தழுவி, நல்லொழுக்க நெறிகளில் பயிற்சி பெறத் தயாராக உள்ளனர். இத் தீவுகளில் தங்கம், நறுமணப் பொருள்கள் மற்றும் பல அரிய பொக்கிஷங்கள் நிறைந்துள்ளன. ஸ்பெயின் நாட்டு அரசக் குடியரான நீங்கள் உங்கள் மூதாதையரைப் போலவே அப்பிரதேசங்களையும் அங்கு வாழும் மக்களையும் உங்கள் அதிகாரத்தின் கீழ் கொண்டுவந்து அவர்களுக்கு கத்தோலிக்க நம்பிக்கை ஏற்படுத்த வேண்டுமென விரும்புகிறீர்கள்.” இப்படிக் கூறிய போப்பின் ஆணை ஆர்க்டிக் கடலிலிருந்து அண்டார்டிக் கடல் வரை ஓர் எல்லைக் கோட்டினை வரைந்து, அதற்கு உட்பட்ட பகுதிகள் ஸ்பெயின் நாட்டுக்குச் சொந்தம் என்று வரையறுத்தது.
கடவுளின் ஆசியுடன் பூர்வகுடி அமெரிக்கர்களிடமிருந்து திருடிய நிலப் பரப்புகளிலிருந்து கொள்ளையடிக்கப்பட்ட தங்கமும் வெள்ளியும்தான் ஸ்பெயினை 15, 16-ம் நூற்றாண்டுகளில் உலகின் முதல் வல்லரசாக மாற்றின. ஸ்பெயினுக்கு எதிராக லத்தீன் அமெரிக்க நாடுகளில் ஏற்பட்ட பல புரட்சிகளுக்கு எதிராக நடந்த பல மக்கள் எழுச்சிகளுக்குத் தலைமை தாங்கியவர்தான் சிமோன் பொலிவர்.
அமெரிக்க வல்லரசு
இதே காலகட்டத்தில் வட அமெரிக்கப் பகுதியில் பூர்வகுடி இந்தியரின் அழிவின் மீது உருவாக்கப்பட்ட புகையிலைத் தோட்டங்களில் பணிபுரிய லட்சக் கணக்கான ஆப்பிரிக்கர்களை அடிமைகளாக இறக்குமதி செய்து, பொருளாதார வளர்ச்சியடைந்தது அமெரிக்கா.
லத்தீன் அமெரிக்காவில் ஐரோப்பிய சக்திகளின் ஆதிக்கத்தைத் தடுத்து நிறுத்துவதற்காக 1830-களில் மன்ரோ கொள்கையை அமெரிக்கா வெளியிட்டது. இந்த வல்லரசுப் போட்டியில் இறுதியாக 1898-ல் நடந்த போரில் அமெரிக்கா ஸ்பெயினை வெற்றிகொண்டது.
லத்தீன் அமெரிக்காவைத் தன் ஆதிக்கத்துக்குள் கொண்டுவந்த அமெரிக்கா, பாடிஸ்டா என்ற சர்வாதிகாரியின் ஆட்சியிலிருந்த கியூபாவில் தலையிடும் உரிமையை சட்டமாக்கியது; தன்னிடம் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்தத் தவறியதால், டொமினிகன் குடியரசின் வங்கிகள், நிதிநிறுவனங்களைக் கந்துவட்டிக்காரர்கள் போலக் கைப்பற்றியது; மெக்சிகோ நாட்டில் வேலைநிறுத்தம் செய்த தொழிலாளர்களை அடக்க, தன் ராணுவத்தை அனுப்பி, அந்நாட்டுச் சர்வாதிகாரி போர்ஃபிரியோ டையஸுக்கு ஆதரவாக ‘ஜனநாயகத்தை'க் காப்பாற்றியது; ஹோண்டுரோஸ் நாட்டுக்குள் நான்கு முறை ராணுவத்தை அனுப்பியது; பனாமா நாட்டிலிருந்து நிலப் பகுதியை அபகரித்து பனாமா கால்வாயை வெட்டி, கப்பல் போக்குவரத்தை அதிகரித்துத் தன் வர்த்தகத்தை வளப்படுத்தியது. அமெரிக்கத் தொழிலதிபர்களின் நலன்களைப் பாதுகாக்க அமெரிக்கா செய்த அட்டூழியங்களின் இந்தப் பட்டியல் அட்லாண்டிக் பெருங்கடலின் கரையை விட நீளமானது.
சர்வாதிகாரிகளின் ‘ஜனநாயகத்தை'ப் பாதுகாக்கவும், அமெரிக்கத் தொழிலதிபர்களின் சுரங்கங்கள், பழத் தோட்டங்களை நாட்டுடைமையாக்க நினைத்த சோஷலிஸ அரசாங்கங்களின் ‘கொடுங்கோன்மையை' ஒடுக்கவும் அமெரிக்கா எடுத்த முயற்சிகள், ஐரோப்பிய காலனி யாதிக்கங்கள் முன்பு செய்த அட்டூழியங்கள் ஏற்படுத்திய வடுக்களை மீண்டும் காயங்களாக்கின.
போரில் இழந்த வலது காலுக்கு ஒரு பிரம்மாண்டமான இறுதி நிகழ்ச்சி நடத்திய மெக்சிகோவின் சர்வாதிகாரி, ஈக்வடார் நாட்டின் சர்வாதிகாரி இறந்த பிறகு ஜனாதிபதியின் இருக்கையில் ராணுவ உடையுடனும் பதக்கங்களுடனும் அமர்த்தப்பட்ட அவருடைய பிணம், முப்பதாயிரம் விவசாயிகளைப் படுகொலை செய்த பக்தி நிறைந்த எல் சால்வடார் நாட்டு அதிபர், சிலி நாட்டின் சோஷலிச அதிபரைக் கொன்று பினோசெட் என்ற சர்வாதிகார பொம்மையை அமெரிக்கா ஆட்சியில் அமர்த்திய பிறகு, சிலி நாட்டிலிருந்து ஓடிப்போன, காணாமல் போன பத்து லட்சம் மக்கள் - இப்படி தன் நோபல் ஏற்புரையில் மார்க்வெஸ் பட்டியலிடும் விநோதங்களும் குரூரங்களும் எந்தக் கற்பனைப் படைப்பையும் விஞ்சும் யதார்த்தங்கள். இவை அவரின் மாய யதார்த்த எழுத்துக்களில் கனவுகளாகவும், நம்புதற்கரிய புனைவுகளாகவும் வெளிப் படுகின்றன. லத்தீன் அமெரிக்காவின் தனிமை நூறு ஆண்டுகளில் அல்ல, ஐநூறு ஆண்டுகளில் உருவானது.
ஆர். விஜயசங்கர், சமூக-அரசியல் விமர்சகர், ஃபிரண்ட்லைன் இதழின் ஆசிரியர்,
தொடர்புக்கு: vijay62@gmail.com
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
20 hours ago
கருத்துப் பேழை
20 hours ago
கருத்துப் பேழை
20 hours ago
கருத்துப் பேழை
23 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
13 days ago
கருத்துப் பேழை
15 days ago