நீர் ஆதாரங்களின்மீது கொடூரத் தாக்குதல் நடத்தப்படுகிறதா?

By செல்வ புவியரசன்

மீத்தேன் ஆய்வுப் பணிகளுக்காக டெல்டா மாவட்டங்களில் கிராமங்கள்தோறும் ஆழ்துளையிட்டு அதில் வெடிபொருட்களைச் செலுத்தி வெடிக்கச்செய்து சோதனைகள் நடத்தப்பட்டன. அவ்வாறு சோதிக்கப்பட்ட இடங்களின் அருகில் இருந்த ஆழ்துளைக் கிணறுகளே அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளன.

கடந்த ஆண்டைத் தொடர்ந்து இந்த ஆண்டிலும் கடுமையான வறட்சி நிலவுவதன் காரணமாக, காவிரி டெல்டா மாவட்டங்களில் நீர்மட்டம் வழக்கத்தைக் காட்டிலும் அதிகமாகவே தாழ்ந்துவிட்டது. இந்த ஆண்டு நிலத்தடி நீர்மட்டம் 150 அடிக்கும் கீழே இறங்கியபோது விவசாயிகள் தங்களது ஆழ்குழாய்க் கிணறுகளில் நீர்மூழ்கி மோட்டார்களையும் வழக்கம்போல இறக்கிவைக்க முயற்சித்தார்கள். அப்போதுதான் ஆழ்குழாய்க் கிணறுகள் தொடர்ந்து பயன்படுத்த முடியாத அளவுக்குச் சேதமடைந்திருப்பது தெரியவந்திருக்கிறது.160 - 170 அடிகளில் குழாய்கள் சேதமடைந்து உருகி ஒட்டிக்கொண்டிருக்கின்றன, அல்லது உடைந்து நொறுங்கியிருக்கின்றன. அந்தக் கிணற்றை அப்படியே கைவிட்டுவிட்டு வேறொரு கிணறு தோண்டினால்தான் பாசனத்துக்கு வழிசெய்ய முடியும். விவசாயம் கிடக்கட்டும், குடிநீருக்கே தடுமாறுகிற நிலை தற்போது உருவாகியிருக்கிறது. இதற்கு வறட்சியோ, நீர்மட்டம் குறைந்ததோ காரணமல்ல, சில ஆண்டுகளுக்கு முன்பு மேற்கொள்ளப்பட்ட மீத்தேன் ஆய்வுப் பணிகள்தான் என்று சந்தேகிக்கிறார்கள் விவசாயிகள்.

காவிரிப்படுகையில் இதுவரை 10 எண்ணெய் மற்றும் எரிவாயு இருக்கும் பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளன. முதல்கட்டமாக, நில அதிர்வின் அடிப்படையில் மீத்தேன் கண்டறியும் பணிகள் நடைபெற்றன. அதையடுத்து 2,000 - 4,000 மீட்டர் ஆழத்தில் ஆழ்துளைக் கிணறுகள் தோண்டப்பட்டுள்ளன. ஓஎன்ஜிசி நிறுவனம் 5 பகுதிகளில் எண்ணெய் மற்றும் எரிவாயு இருப்பதைக் கண்டறிந்தது. ஹார்டி, ஜேஓஜிபிஎல் மற்றும் ஆர்ஐஎல் ஆகிய நிறுவனங்கள் 5 பகுதிகளில் எண்ணெய் மற்றும் எரிவாயு இருப்பதைக் கண்டறிந்துள்ளது. முதல்கட்ட ஆய்வுநிலையில், நிலவியல் கணக்கெடுப்பு அமைப்பு அமைப்பின் நெறிமுறைகளின்படி அதிகபட்சம் 20 மீட்டர் அளவுவரையில் மட்டுமே ஆழ்துளை வெடிப்புச் சோதனை களை நடத்த வேண்டும். மேலும், ஆழ்துளைக் கிணறுகளைச் சுற்றி 100 மீட்டர் சுற்றளவில் இத்தகைய வெடிப்புச் சோதனைகளை நடத்தக் கூடாது. இந்த நெறிமுறைகள் பின்பற்றப்பட்டனவா என்று சந்தேகம் எழுகிறது.

மீத்தேன் ஆய்வுப் பணிகளுக்காக டெல்டா மாவட்டங்களில் கிராமங்கள்தோறும் ஆழ்துளையிட்டு அதில் வெடிபொருட்களைச் செலுத்தி வெடிக்கச்செய்து சோதிக்கப்பட்டது. வெடிப்பின்போது ஏற்பட்ட நில அதிர்வைக் கொண்டு மீத்தேன் இருப்பதற்கான சாத்தியங்கள் கணக்கிடப்பட்டன. அவ்வாறு சோதிக்கப்பட்ட இடங்களின் அருகில் இருந்த ஆழ்துளைக் கிணறுகளே அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளன. சோதனை நடத்தப்பட்ட இடத்தின் அருகில் இருந்த கிணறுகள் அதிக அளவிலும் சற்றுத் தள்ளியிருந்தவை மிதமாகவும் பாதிக்கப்பட்டுள்ளன. முக்கியமாக, மீத்தேன் ஆய்வுப் பணிகளுக்கு முன்பு தோண்டப்பட்ட ஆழ்துளைக் கிணறுகள்தான் பாதிக்கப்பட்டுள்ளன. ஆனால், அதன் பிறகு தோண்டப்பட்ட கிணறுகளுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை. பட்டுக்கோட்டைக்கு அருகிலுள்ள காசாங்காடு கிராமத்தில் ஆய்வுப் பணிகள் நடந்த ஒரு பகுதியில் மட்டும் கிணறுகள் பாதிக்கப்பட்டுள்ளன. ஆய்வுகள் நடக்காத கிராமத்தின் மறு பகுதியில் எந்தக் கிணறுகளும் பாதிக்கப்படவில்லை.

மீத்தேன் ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்ட திருவாரூர், நீடாமங்கலம், தஞ்சாவூர், ஒரத்தநாடு, மன்னார்குடி, பட்டுக்கோட்டை பகுதிகளில் ஒவ்வொரு ஊரிலும் ஆழ்துளைக் கிணறுகள் பாதிக்கப்பட்டுள்ளன. பட்டுக்கோட்டைக்கு அருகிலுள்ள சஞ்சாய நகரில் 83 கிணறுகள் பாதிக்கப்பட்டுள்ளன. ஏனாதியில் - 28, கருப்பூரில் - 27, எட்டுப்புளிக்காட்டில் - 26, சூரப்பள்ளத்தில் - 20, சோழகன்குடிக்காடு - 19, பாளமுத்தி - 12, திட்டக்குடி - 11, ஆம்பலாப்பட்டு தெற்கு -10, தெற்குக் கோட்டை - 3 கிணறுகள் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. பாதிக்கப்பட்ட ஒட்டுமொத்தக் கிணறுகளின் எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கலாம். மீத்தேன் ஆய்வு நடந்த அனைத்து ஊர்களிலும் உள்ள பாதிக்கப்பட்ட கிணறுகளின் எண்ணிக்கை நிச்சயமாக சில ஆயிரங்களைத் தாண்டும்.

முறையான பதிவுகள் இல்லை

தரம் குறைந்த குழாய்களைப் பயன்படுத்தியதால் அல்லது அளவுக்கதிகமாக நிலத்தடி நீரை உறிஞ்சியதால் இப்படி ஆழ்துளைக் கிணறுகள் பாதிக்கப் பட வாய்ப்பிருக்கிறது என்றும் சந்தேகிக்கலாம். ஆனால், ஒவ்வொரு ஊரிலும் ஒரே அளவு மட்டத்தில் இத்தகைய பாதிப்புகள் ஏற்பட்டிருக்கின்றன. மேலும், எல்லா இடங்களிலும் தரம்குறைந்த குழாய்களே பயன்படுத்தப்பட்டிருக்கின்றன என்றும் சொல்ல முடியாது. எனவே, வேறு காரணங்களுக்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு. மீத்தேன் ஆய்வுப் பணிகளே பாதிப்புகளுக்கு முக்கிய காரணமாக இருக்க வேண்டும். இது குறித்து விவசாயிகள் குறைதீர்ப்பு நாளன்று மாவட்ட ஆட்சியரிடம் முறையிடவும், தீர்வு கிடைக்காதபட்சத்தில் பசுமைத் தீர்ப்பாயத்தை அணுகவும் சில கிராமங்களில் விவசாயிகள் ஆலோசித்துவருகின்றனர்.

நீர்வளத் துறை நிபுணர் மிகிர் ஷா சுட்டிக்காட்டுவதுபோல நமது வருமானத் துறை அலுவலகங்களில், ஒவ்வொரு ஊரிலும் எத்தனை ஆழ்துளைக் கிணறுகள் தோண்டப் பட்டுள்ளன, எவ்வளவு ஆழம்வரை தோண்டப்பட்டுள்ளன என்பது பற்றியெல்லாம் எந்தத் தகவல்களும் சேகரிக்கப் படுவதில்லை. ஊரிலுள்ள கிணறுகளின் எண்ணிக்கை எவ்வளவு என்ற விவரமே அரசிடம் இல்லாதபோது, அவற்றில் பாதிக்கப்பட்ட கிணறுகள் எத்தனை, அதற்கான காரணங்கள் என்னென்ன என்பது பற்றியெல் லாம் உடனடியாகத் தகவல்களை எதிர்பார்க்க முடியாது. அரசு இப்போதாவது விழித்துக் கொண்டு நிலவியல் ஆய்வாளர்கள், ஐஐடி போன்ற உயர் கல்வி நிறுவனங்களின் ஆராய்ச்சித் துறை பேராசிரி யர்கள் உள்ளடங்கிய நிபுணர் குழுவைக் கொண்டு நடந்திருப்பது என்ன என்று கண்டறிய வேண்டும். மீத்தேன் ஆய்வுப் பணிகளால் கிணறுகள் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு கொடுக்க வேண்டும்.

காட்டிக்கொடுத்தது வறட்சி

வறட்சியின் காரணமாக டெல்டா பகுதியில் விவசாயம் பாதிக்கப்பட்டிருக்கிறது. அதைக் காட்டிலும் முக்கியமாக பின்விளைவுகளைப் பற்றி மக்களுக்கு முன்கூட்டியே சொல்லாமல் நடத்தப்பட்ட மீத்தேன் ஆய்வுப் பணிகளின் காரணமாக, குடிநீர் ஆதாரங்கள் முழுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கின்றன. ஒருவேளை, இந்த ஆண்டு வறட்சி ஏற்படாமல் இருந்திருந்தால், ஆழ்துளைக் கிணறுகள் பாதிக்கப்பட்டிருப்பதே தெரியவந்தி ருக்காது. ஆய்வுப் பணிகளின் காரணமாகவே இந்த அளவுக்கு ஆழ்துளைக் கிணறுகள் பாதிக்கப் படுகின்றன என்றால், மீத்தேன் அகழ்ந் தெடுப்புப் பணியால் மேலும் நிலவளமும் நீர்வளமும் பாதிக்கப்படத் தானே செய்யும் என்ற விவசாயிகளின் அச்சத்தில் நியாயமிருக்கிறது. எது எப்படியிருந்தாலும், டெல்டா பகுதிகளின் உடனடித் தேவை பாசன நீரல்ல, குடிநீர்.

விவசாயிகள் பெரும்பாலும் கடன் வாங்கித்தான் ஆழ்துளைக் கிணறுகள் தோண்டுகிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் விவசாயத்தில் கிடைக்கும் வருமானம், இடு பொருள் செலவுகளையே ஈடுசெய்வதில்லை. கிணறுகள் பெரும்பாலும் நிலத்தோடு இணைந்த நீண்ட கால முதலீடு களாகத்தான் கருதப்படுகின்றன.

நீர்ப்பாசனத்துக்கு வாய்ப்பில்லை என்றால், நிச்சயம் நிலத்தைப் பயன்படுத்த முடியாது என்ற நிலையில், காவிரி டெல்டா விவசாயிகள் மீண்டும் ஒரு ஆழ் துளைக் கிணறு தோண்டும் கட்டாயத்துக்கு ஆளாகியிருக் கிறார்கள். ‘அரசு பின்விளைவுகளைப் பற்றி யோசிக்காமல் செய்த தவறுக்கு விவசாயிகள்தான் தண்டனையை அனுபவிக்க வேண்டுமா?’ என்றும் விவசாயிகள் கேள்வி எழுப்புகிறார்கள். இந்தக் கேள்வியை அரசு உதாசீனப் படுத்திவிடக் கூடாது!

- செல்வ புவியரசன்
தொடர்புக்கு: puviyarasan.s@thehindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

8 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்