புதிதாக நடைமுறைக்கு வந்திருக்கும் ஜி.எஸ்.டி வரிவிதிப்பு முறைக்கு அத்தியாவசியம், அவசியம், ஆடம்பரம் ஆகியவையே அடிப்படை என்று கூறப்படுகிறது. அந்தக் கருத்தில் உண்மை இருக்கிறது என்றால், புதிய வரிவிதிப்பு முறையின் பலன்கள் ஏழைகளைச் சென்றடைய வேண்டும். ஆனால், இந்தியாவின் பாரம்பரிய மருத்துவ முறைகளான ஆயுர்வேதம், சித்தா போன்றவற்றையும் ஹோமியோபதியையும் ஜி.எஸ்.டி அணுகியுள்ள விதம் அதிர்ச்சியளிக்கிறது. இதுவரையில் வரிவரம்புக்குள் கொண்டுவரப்படாத சித்த மருந்துகளுக்குத் தற்போது 12% வரி விதிக்கப்பட்டுள்ளது. 1997 முதல் வரிவிலக்கில் இருந்த சித்த மருத்துவத்துக்கு 12% வரி என்பது பெரும் பின்னடைவைத் தரும். இது இந்திய பாரம்பரிய மருத்துவம் குறித்தும் அதன் பயனாளிகள் குறித்தும் மத்திய அரசு கொண்டுள்ள தவறான புரிதலையே காட்டுவதாக உள்ளது.
2017 இந்திய மருத்துவக் கொள்கையில் மிக முக்கியமான அம்சங்களில் ஒன்று, ஆயுஷ் துறையை முக்கியமான, மற்றும் முதன்மையான சிகிச்சைகளுக்குப் பயன்படுத்துவது. ‘மெடிக்கல் ப்ளூரலிசம்’ எனப்படும் அனைத்து வகையான மருத்துவ முறைகளையும் ஒருங்கிணைத்து விரைவான, தரமான, எளிய கட்டணத்திலான சிகிச்சை அளிப்பது இந்திய மருத்துவக் கொள்கையின் நோக்கங்களில் ஒன்று. இந்தக் கொள்கைகள் நடைமுறை சாத்தியமற்றுப் போகும் வகையில் ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு ஆயுஷ், அதிலும் குறிப்பாக சித்த மருத்துவத்தை நசுக்குகிறது.
கூடுதல் சுமையான புதிய வரி
நகரமயமாக்கலின் விளைவாக சித்த - ஆயுர்வேத மருந்துகள் தயாரிக்கப் பயன்படுத்தும் மூலப் பொருட்களுக்குத் தட்டுப்பாடு நிலவுகிறது. கிட்டத்தட்ட கடந்த 20 வருடங்களில் 300% விலை உயர்வில் மிக முக்கிய மூலப்பொருட்களின் விலை உயர்ந்திருக்கின்றது, மூலப்பொருட்களின் விலை உயர்வால் ஏற்கெனவே தயாரிப்புச் செலவு அதிகரித்துவரும் நிலையில், கூடுதல் சுமையாக வந்து சேர்ந்திருக்கிறது ஜி.எஸ்.டி.
இந்திய ஆயுர்வேதத் துறையில் சுமார் 9,000 மருந்தகங்கள் இயங்குகின்றன. இதில் சுமார் 90% மருந்தகங் கள் சிறு மற்றும் குறு நிறுவனங்களே. மிகக் குறைந்த முதலீட்டைக் கொண்ட நிறுவனங்கள். இந்த 90% மருந்தகங்களை 0% வரி கட்டமைப்பிலிருந்தும், 5% வரிக் கட்டமைப்பிலிருந்தும் 12% வரி செலுத்தத் தள்ளுவது அவர்களைத் திக்குமுக்காடச் செய்கிறது. ஆயுர்வேதத்தில் நிறுவனங்கள் தயாரிக்கும் மொத்த மருந்துகளில் 90% பாரம்பரியமான மருந்துகள். 10% மட்டுமே தனித்துவமான உரிமையுடைய மருந்துகள். இந்தப் பாரம்பரிய மருந்துகளில்தான் நிலவேம்புக் குடிநீர் முதலான அத்தியாவசியமான அனைத்து சித்த மருந்துகளும் அடங்கும். குறிப்பாக, அரசாங்கத்தில் அரசு ஆரம்ப சுகாதார மையங்களில் கிடைக்கும் சித்த மருந்துகளும் அடங்கும்.
தமிழ்நாட்டில் சுமார் 1,000 சித்த மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் உள்ளன. தமிழகத்தில் உள்ள சித்த மருந்து உற்பத்தியாளர்களில் 95% பேர் சிறு உற்பத்தியாளர்களே. எனவே, சித்த மருந்துகளுக்கு மதிப்புக் கூட்டப்பட்ட வரியிலிருந்து முழு விலக்கு அளித்திருந்தது தமிழக அரசு. 12% ஜி.எஸ்.டி என்பது மிகப்பெரிய கடினமான சூழலை அவர்களுக்கு உருவாக்கி உள்ளது. சித்த மருந்துகளின் மொத்த விற்பனை அதிகபட்சம் ஒரு வருடத்துக்குச் சுமார் 150 கோடி ரூபாய் மட்டுமே. இதில் கூடுதல் வரி என்றால் நிறுவனத்தார் லாபம் ஈட்டுவது மிகவும் கடினம்.
வெளிநாட்டு மருந்துகளுக்கு வரவேற்பா?
சமீப காலங்களில் மக்களை மிகவும் அச்சுறுத்திவரும் தொற்றுநோய்களான சிக்குன் குனியா, டெங்கு உள்ளிட்ட நோய்களைக் குணமாக்க சித்த மருந்துகள் முக்கியப் பங்காற்றுகின்றன. அம்மா மகப்பேறு சஞ்சீவித் தொகுப்பு, டெங்கு, சிக்குன் குனியா போன்ற நோய்களுக்கான சித்த மருந்துகள் ஆகியவற்றை அரசு கொள்முதல் செய்து இலவசமாக மக்களுக்கு வழங்கிவருகிறது. கூடுதல் வரியினால் சித்த மருந்துகள் கொள்முதல் செய்ய ஒதுக்கப்படும் நிதியை அரசு குறைப்பதற்கும் வாய்ப்புள்ளது.
சித்த மருந்துகளுக்கு 12% ஜி.எஸ்.டி. வரிவிதிப்பது, வெளிநாட்டு மருந்து நிறுவனங்களுக்குக் கதவுகள் திறந்துவிட்டதுபோல் ஆகிவிடும். உதாரணமாக, காய்ச்சலுக்கான பாராசிட்டமால் மாத்திரை ஒன்றின் விலை சுமார் 50 பைசா என்று வைத்துக்கொள்வோம். ஆனால், ஜி.எஸ்.டி. வரிகளை உள்ளடக்கிய ஒரு பாக்கெட் நிலவேம்பின் விலை சுமார் 170 ரூபாயாக உள்ளது. இன்றைக்கும், சிக்குன் குனியா, டெங்கு உள்ளிட்ட அனைத்து வகைக் காய்ச்சல்களுக்கும் மக்களின் முதல் தேர்வாக நிலவேம்புக் குடிநீர்தான் உள்ளது. இந்நிலையில், இந்த விலை ஏற்றத்தாழ்வு சாமானியர்களை ஆங்கில மருத்துவம் நோக்கி நகரச் செய்யும். இதனால், இன்னும் கூடுதலாக வெளிநாட்டு மருந்து நிறுவனங்கள் இந்தியாவுக்குப் படையெடுக்கும். ‘மேக் இன் இந்தியா’ திட்டத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் மத்திய அரசு, வணிகரீதியான ஆதரவைப் பாரம்பரிய மருத்துவத்துக்கு வழங்குவதுதானே முறையாக இருக்கும்?
ஆறாவது உலக ஆயுர்வேத அமைப்பில் பிரதமர் மோடி, இயற்கை மருத்துவம், ஆயுர்வேதம், சித்தா, ஹோமியோபதி உள்ளிட்ட மருத்துவ முறைகளின் முக்கியத்துவம் குறித்துப் பேசினார். நல்ல சுகாதாரமும் வாழ்வாதாரமும் மக்களுக்குக் கிடைக்க உதவும் வகையில் அனைவரும் வாங்கக்கூடிய மலிவான விலையில், பாதுகாப்பான மருத்துவத்தை அளிப்பதே அரசின் எண்ணம் என்று முழக்கமிட்டார். ஆனால், நடைமுறை நிலைமையோ முற்றிலும் வேறாக இருக்கிறது.
மற்ற நாடுகளைப் பின்பற்றலாமே…
பெரும்பாலான நாடுகளில் பாரம்பரிய மருந்துகளுக்கு மிகக் குறைந்த வரியே விதிக்கப்படுகிறது. ஆஸ்திரேலியாவில் பாரம்பரிய மருந்துகளுக்கு ஜி.எஸ்.டி. வரி கிடையாது. மலேசியாவில் ஆரம்பத்தில் 10% ஜி.எஸ்.டி. வரியாக இருந்து பின்பு 6% ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் இந்திய ஆயுஷ் மருந்துகளுக்கு 2% சந்தை வாய்ப்பு உள்ளது. சர்வதேச அளவில் மூன்றில் ஒரு பங்கு சந்தை சீனாவிடம் உள்ளது. சீனாவுடன் போட்டியிட தகுந்த விலை நிர்ணயம் இந்திய மருந்துகளுக்கு மிகமிக அவசியம். தொற்றும் தன்மை இல்லாத வாழ்க்கைமுறை நோய்களான சர்க்கரை நோய், மாரடைப்பு, ரத்தக் கொதிப்பு, புற்றுநோய், மூட்டுவலிகள் முதலான பல அத்தனை நாள்பட்ட நோய்களுக்கும், ஒருங்கிணைந்த கூட்டுச் சிகிச்சை பரவலாகிவரும் சூழல் இது.
நவீன மருந்துகளுடனோ, தனி சித்த மருந்துகள் கொண்டோ, மதிப்புக்கூட்டப்பட்ட மூலிகை உணவு, மூலிகை சத்துக்கள் என ஒருங்கிணைந்து அணுகுவதே இந்த நோய்களைக் கட்டுக்குள் வைப்பதிலும், அவர்கள் வாழ்க்கைமுறையை வலுப்படுத்துவதிலும் பயனளிக்கும். இச்சூழலில், அத்தனை பாரம்பரிய மருந்துகளுக்கும் அதிகபட்ச அளவில் வரி விதித்திருப்பது ஆங்கில மருந்துச் சந்தையின் லாபத்துக்கே வழிவகுக்கும். அரசு, ஆயுஷ் துறையை அத்தியா வசியம் என்று கருதவில்லை என்பதைத்தான் இந்த வரிவிதிப்பு எடுத்துச்சொல்கிறது.
-கு. சிவராமன், சித்த மருத்துவர், ‘ஆறாம் திணை’ உள்ளிட்ட பல நூல்களின் ஆசிரியர்.
தொடர்புக்கு: herbsiddha@gmail.com
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
7 hours ago
கருத்துப் பேழை
7 hours ago
கருத்துப் பேழை
8 hours ago
கருத்துப் பேழை
10 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago