காஷ்மீரின் ஆக்கபூர்வ நடவடிக்கைகள் கவனம் பெறுவதில்லை!- மெஹ்பூபா முஃப்தி பேட்டி

By சுகாசினி ஹைதர்

அமர்நாத் யாத்திரை சென்றவர்கள் பயங்கரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தை காஷ்மீரின் அனைத்துத் தரப்பினரும் வன்மையாகக் கண்டித்துள்ளனர். காஷ்மீரியத் மக்களின் மனிதாபிமான உணர்வு மங்காமல் இருப்பதையே இது காட்டுகிறது. பிரிவினைவாதிகள் உட்பட அனைத்துத் தரப்பினருடனும் பேச இதுவே உற்ற தருணம்” என்கிறார் ஜம்மு-காஷ்மீர் மாநில முதலமைச்சரும் மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவருமான மெஹ்பூபா முஃப்தி. ‘தி இந்து’ ஆங்கில நாளிதழுக்கு அவர் அளித்த பேட்டி:

அமர்நாத் யாத்ரீகர்கள் தாக்கப்படக்கூடும் என்று உளவுத் துறை எச்சரித்திருந்தது; பாதுகாப்புக் குறைபாட்டுக்கு யார் பொறுப்பு?

இதில் குறைபாடு இருந்ததாக நினைக்கவில்லை. பயங்கரவாதிகள் யாத்ரீகர்களை முதல்முறையாகத் தாக்கவில்லை. இவர்கள் எளிதான இலக்கு என்பதாலும், வகுப்புக் கலவரத்தை ஜம்மு - காஷ்மீரில் மட்டுமல்ல நாடு முழுவதிலும் தூண்டிவிட முடியும் என்ற எதிர்பார்ப்பிலும் தாக்கியிருக்கின்றனர். இதற்கு காஷ்மீர் மக்கள், பிரிவினைகோருபவர்கள், வியாபாரிகள், இளைஞர்கள் என்று அனைத்துத் தரப்பினரும் வேதனை தெரிவித்துள்ளனர். காஷ்மீரியத் என்ற மதம் கடந்த மனித நேயத்தை மற்றெல்லா விஷயங்களையும்விட உயர்வாகக் கருதுகின்றனர் என்பதை இந்தக் கண்டனங்கள் உணர்த்துகின்றன.

ஸ்ரீநகரில் போலீஸ் அதிகாரி அடித்துக் கொல்லப்பட்டபோதும், அவரைக் கொன்றவரின் உடல் ஐஎஸ் அமைப்பின் கொடியால் போர்த்தப்பட்டபோதும் காஷ்மீரியத் எங்கே சென்றது? கிரிக்கெட் ஆதரவாளர்கள் இந்திய தேசிய கீதத்துக்குப் பதிலாக பாகிஸ்தானிய தேசிய கீதத்தைப் பாடும் வீடியோ காட்சிகளும் வெளிவந்தனவே?

சமூக ஊடகங்களிலும் தொலைக்காட்சிகளிலும் பயங்கரமான எதிர் விளைவுகள்தான் வெளிப்படுகின்றன. சமூக ஊடகங்களில் தீவிர சித்தாந்தவாதம் எடுத்துரைக்கப்படுகிறது. தொலைக்காட்சிகளிலோ தினந்தோறும் காஷ்மீரிகளுக்கு எதிராகவே விவாதங்கள் நடத்தப்படுகின்றன. ஆக்கபூர்வமான சம்பவங்கள் நடந்தாலும் அவை பொதுவெளியில் பேசப்படுவதே இல்லை.

ஊடகங்கள் மீது முன்னரும் நீங்கள் குற்றஞ்சாட்டினீர்கள்; ஆனால் நிச்சயம் ஏதோ நடக்கிறது அல்லவா?

தொலைக்காட்சி ஊடகங்கள் வலிமைவாய்ந்தவை, அவை காட்டும் காட்சிகள் ஆழப் பதிகின்றன. காஷ்மீரில் ஆக்கபூர்வமான செயல்களும் உண்டு. ஆனால், தொலைக்காட்சிகளில் பத்து அல்லது பன்னிரண்டு இளைஞர்கள் முகங்களை மூடிக்கொண்டு கற்களை வீசுவதை மட்டுமே தொடர்ந்து காட்டுகின்றனர். தொலைக் காட்சிகளின் கவனம் நம்மீதே என்று கல்வீசும் இளைஞர்களும் உற்சாகம் அடைகின்றனர். தொலைக்காட்சி விவாதங்களில் இந்தியாவையும் பாகிஸ்தானையும் மோதவிடுகின்றனர். காஷ்மீரிகள் மோசமானவர்கள் என்று சித்தரிக்கின்றனர். இதனால், காஷ்மீரிகள் தாங்கள் ஒதுக்கப்படுவதாக நினைக்கின்றனர்.

காஷ்மீர் விவகாரத்தில் இப்படி ஆவேசம் பொங்க விவாதிப்பதாலும் காஷ்மீர் இளைஞர்களைக் குற்றவாளியாகச் சித்தரிப்பதாலும் நாட்டுக்கு நன்மை எதையும் செய்யவில்லை என்று தொலைக்காட்சிகளுக்குக் கூற வேண்டும். காஷ்மீரிகளின் கன்னம் ஏன் சிவந்து காணப்படுகிறது, அவர்கள் எங்கிருந்து வந்தார்கள் என்று ஒரு நிகழ்ச்சியின்போது யாரோ கேட்டார்கள். இதைவிட மோசமாக நிகழ்ச்சிகளை நடத்த முடியாது.

2016-ல் மாதக்கணக்காக வன்செயல்களும் கல்வீச்சு சம்பவங்களும் நிகழ்ந்தன. அப்போது இவ்வளவு வெளிப்படையாக வந்து நீங்கள் பேசவில்லை. அமர்நாத் யாத்ரீகர்கள் தாக்கப்பட்ட அன்று மாலையே அவர்களைச் சென்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினீர்கள், அவர்களுடனேயே தங்கினீர்கள். இதுவரை விலகியிருந்ததால் மக்களிடமிருந்து அந்நியப்படுகிறோம் என்று உணர்ந்ததாலா?

இதுவுமே தவறான கண்ணோட்டம். அமர்நாத், குப்வாரா, படகாம் ஆகிய இடங்களுக்குச் சென்று குடும்பத்தினர் தங்கியிருந்த எல்லா இடத்துக்கும் சென்றேன்; நீங்கள் ஏன் வெளியே போகவில்லை என்று 2010-ல் இருந்த அரசைப் பார்த்து யாரும் கேட்டதில்லை. நான் இன்னும் அதிகம் வெளியே வர வேண்டும் என்பதை ஒப்புக்கொள்கிறேன்.

பி.டி.பி.-பாஜக கூட்டணியால், தாங்கள் அரசியல்ரீதியாக ஒதுக்கப்படுகிறோம் என்ற எண்ணம் காஷ்மீரப் பள்ளத்தாக்கு மக்களிடம் நிலவுகிறது என்கிறார்கள். இந்தக் கூட்டணியால் உங்களுக்கு ஆதரவு குறைந்துவிட்டது என்று நினைக்கிறீர்களா?

மிகப் பெரிய லட்சியம் இருந்ததால், என்னுடைய தந்தை தன்னுடைய தலைமை, நம்பகத்தன்மை, கட்சி என்று அனைத்தையுமே பணயம் வைத்துத்தான் களத்தில் இறங்கினார். பல்லாண்டுகளாக அழுந்திக் கிடந்த குழப்பத்திலிருந்து காஷ்மீரம் மீண்டு வளம் பெற வேண்டும் என்பதே அவருடைய லட்சியம். பெருவாரியான மக்களுடைய ஆதரவைப் பெற்றுள்ள மோடி, வாஜ்பாயைப் போல 2002-ல் ஏற்பட்ட சுமூகத் தன்மையை ஏற்படுத்துவார் என்று என் தந்தை நினைத்தார். மோடியும் எல்லா முயற்சிகளையும் எடுத்தார். லாகூருக்குக் கூடச் சென்றார். ஆனால், பதிலுக்கு அதே முயற்சிகள் எதிர்ப்பக்கத்திலிருந்து மேற்கொள்ளப்படவில்லை. நானும் அதே போல முயற்சி செய்தாக வேண்டும்.

ஜிஎஸ்டியை நம்பிக்கைக் கீற்று என்றீர்கள். மாநிலத்திடம் ஒப்படைக்கப்பட வேண்டிய மின்திட்டங்கள், ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம், காஷ்மீர் பண்டிட்டுகள் திரும்புதல், மேற்கு பாகிஸ்தான் அகதிகள் மறுவாழ்வு இதெல்லாம் என்னவாயிற்று?

நாங்கள் ஆட்சிக்கு வந்த மூன்று மாதங்களுக்கெல்லாம் புர்ஹான் வானி கொல்லப்பட்டார். அதையடுத்து, இங்கே எல்லாமே களேபரமாகிவிட்டது. பண்டிட்டுகள் திரும்புவதற்கான இடம் எது என்பதைக்கூடத் தேர்வுசெய்ய முடியவில்லை. மின்உற்பத்தித் திட்டங்களை ஒப்படைக்கக் கோரினோம். டெல்லியில் உள்ளவர்களை இணங்க வைக்கச் சிறிது காலம் பிடிக்கும்.

பண்டிட்டுகளைக் குடியமர்த்தும் திட்டம் எப்போது முடியும்?

மிக விரைவில் நடக்கும். அடுத்த 2 அல்லது 3 மாதங்களில் இடைக்காலத் தங்குமிடங்களை ஒப்படைத்துவிடுவோம். ஏற்கெனவே, வாழ்ந்த இடத்திலேயே வாழ பண்டிட்டுகள் விருப்பம் தெரிவித்துள்ளனர். எல்லா மதங்களைச் சேர்ந்தவர்களும் வாழும் புதிய குடியிருப்புகளைக் கட்டித் தருவோம். இப்போதைக்கு 3 குடும்பங்கள் ஒரே அடுக்ககத்தில் குடியிருக்கின்றன.

ஃபரூக் தர் என்பவரை ராணுவ ஜீப்பின் முன்னால் உட்கார வைத்து ஓட்டிச் சென்றதற்காக மேஜர் கோகோயைப் பாராட்டியது மத்திய அரசு. நீங்களோ தர்ருக்கு நஷ்ட ஈடு வழங்கப்படும் என்று அறிவித்தீர்கள். இந்த விவகாரத்தை மத்திய அரசிடம் விவாதித்தீர்களா?

மாநில அரசு அல்ல, மாநில மனித உரிமைகள் ஆணையம்தான் நஷ்டஈட்டைப் பரிந்துரைத்தது. நம்முடைய ராணுவம் கட்டுப்பாடுகளுக்குப் பெயர்போனது. இந்தப் புகைப்படம் உலக அளவில் அதற்குக் கெட்ட பெயரை ஏற்படுத்தியது. இதைவிட வேறு வழியில்லை என்று சிலர் வாதிடலாம். அது ஏற்கத்தக்க வாதம் அல்ல. நாங்கள் இந்தப் பிரச்சினை குறித்துப் பேசினோம். இப்போதைய கவனம் சமரசம் காண்பதில்தான். காஷ்மீரின் பழைய பெருமையை மீண்டும் மீட்டெடுக்க வேண்டும். இந்தக் கூட்டணி பலன் தரும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

இந்த வேறுபாடுகளைக் கருத்தில் கொண்டு ஜம்மு, லடாக் பகுதிகளைத் தனியாகப் பிரித்துவிட வேண்டும் என்று பாஜகவிலேயே சிலர் யோசனை தெரிவித்தார்கள். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

அதனால் எந்தப் பிரச்சினையும் தீராது. இந்தியாவின் ஒருமைப்பாட்டை வலியுறுத்தும்போது காஷ்மீரின் ஒருமைப்பாடும் முக்கியம்தான்.

இந்தக் கூட்டணி முழு பதவிக் காலமும் ஆட்சியில் இருக்குமா? மத்தியிலும் மாநிலத்திலும் உள்ள பாஜக தலைவர்கள் சிலர் உங்களைப் பதவியிலிருந்து நீக்க கோரிக்கை விடுத்தனரே?

இந்தக் கூட்டணியை முறித்துக்கொள்ள எந்தக் காரணமும் இல்லை. ஒப்புக்கொண்ட செயல்திட்டத்தை அமல்படுத்தத் தவறினால்தான் அந்தக் கேள்வியே எழும். அப்படி நடந்தால் கூட்டணி மட்டுமல்ல, காஷ்மீரும் தோற்றுவிடும், இந்தியாவும் தோற்றுவிடும். நல்ல சிந்தனையைச் சிறையில் அடைக்க முடியாது, அழித்துவிட முடியாது. அதைவிடச் சிறந்த சிந்தனையை வேண்டுமானால் பெறலாம் என்பார் என் தந்தை. ஜம்மு-காஷ்மீர் பற்றி இதுநாள் வரை நமக்கிருந்த சிந்தனைப் போக்கை நாம் உடைக்க வேண்டும். ஒரு காலத்தில் தொழில், வர்த்தகம், கல்வி, கலாச்சாரம் ஆகியவற்றில் காஷ்மீர் மையமாக இருந்தது. அந்தத் தொடர்பை இழந்துவிட்டோம். நம்முடைய பாரம்பரிய வர்த்தகப் பாதைகளை மீட்டாக வேண்டும். சீனா - பாகிஸ்தான் பொருளாதாரப் பாதை அதில் ஒன்றாக இருக்க முடியும்.

பாகிஸ்தான் அல்லது ஹுரியத்தின் செயல்திட்டத்தில் இருந்தாலும் சமரசத் தீர்மானமும் பேச்சுவார்த்தையும் எப்படி சாத்தியம்?

2015 டிசம்பரில் லாகூருக்குச் சென்று பிரதமர் மோடி ஒரு முயற்சி மேற்கொண்டார். பாகிஸ்தான் அதற்குப் பதிலாக எதுவும் செய்யவில்லை. 2016-ல் உள்துறை, நிதித் துறை அமைச்சர்கள் ஸ்ரீநகருக்கு வந்தனர். பேச முயற்சி செய்தனர். நானும் நம்பிக்கையை இழக்கவில்லை. வேறு என்ன வழி இருக்கிறது? போர் செய்தாலும் என்ன மாறிவிடப் போகிறது? அரசின் ஏதோ ஒரு பகுதி அவர்களைத் தொடர்புகொள்ளும் என்று நம்புகிறேன்.

மாநில நிர்வாகம் எப்படி இருக்கிறது? வேலையில்லாதவர் எண்ணிக்கை 7 லட்சத்தைத் தாண்டிவிட்டது. மருத்துவமனைகள், பொதுப் பணித்துறை எல்லாம் மோசமாக இருக்கிறதே?

தனியார் முதலீடு இல்லாததால் வேலையில்லாத் திண்டாட்டம் நிலவுகிறது. எனவே, இளைஞர்கள் அரசு வேலைவாய்ப்பை மட்டுமே நம்பியுள்ளனர். அரசு வேலைவாய்ப்பும் இனி அதிகரிக்கப்பட முடியாத நிலையை எட்டிவிட்டது. நிலைமை மேம்பட்டால் இளைஞர்களுக்கு வாய்ப்புகள் அதிகரிக்கும். மருத்துவமனைகள் நன்றாகவே செயல்படுகின்றன. மருத்துவ ஊழியர்கள் இரவு பகலாக வேலை செய்கின்றனர். காயம்பட்ட யாத்ரீகர்களே பாராட்டினர்.

கட்டுப்பாட்டு எல்லைக்கோட்டுக்கு அப்பால் வர்த்தகத்தை மேம்படுத்துவது, முன்னாள் பயங்கரவாதிகளுக்கு மறுவாழ்வு ஆகியவை குறித்து கருத்து என்ன?

மத்திய அரசிடம் பேசியிருக்கிறேன். எல்லைக்கு அப்பாலிருந்து வரும் லாரிகளைச் சோதிக்கப் பெரிய ஸ்கேனர்களை நிறுவும் வேலையைச் செய்யாதது எங்களுடைய தவறு. வங்கி, தகவல்தொடர்பு சேவைகளை நாங்கள் அனுமதிக்கவில்லை. மேலும் பல இடங்களில் வர்த்தகத்தை அனுமதிக்குமாறு உள்துறை அமைச்சரைக் கேட்டுள்ளேன். வர்த்தகத்துக்கு மட்டுமல்ல சுற்றுலா, புனித யாத்திரைக்காகவும். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள நீலம் நதிக்கரையோரம் சாரதாபீடம் செல்ல காஷ்மீர் பண்டிட்டுகளை அனுமதிக்க வேண்டும். காஷ்மீரை முற்றுகையிலிருந்து மீட்க பாகிஸ்தானுடன் நல்லுறவு அவசியம்.

இந்திய மாநிலங்களில் நடக்கும் வகுப்புக் கலவரங்களால் எந்த அளவுக்குக் கவலை அடைகிறீர்கள்? காஷ்மீர் மாணவர்கள் பிற மாநிலங்களில் தாக்கப்படும்போது?

இந்த இடத்தில்தான் பாஜக-பிடிபி கூட்டணி பலன் தந்திருக்கிறது. அமர்நாத் யாத்ரீகர்கள் தாக்கப்பட்டவுடனேயே காஷ்மீரிகள் தாங்களாக முன்வந்து அதைக் கண்டித்ததை மனதார வரவேற்ற உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட்ட அறிக்கை, பிற மாநிலங்களுக்கு ஒரு செய்தியைச் சொன்னது. காஷ்மீர் மாணவர்கள் எந்த மாநிலத்தில் படித்தாலும் அவர்களைப் பாதுகாக்க வேண்டும் என்று பிரதமர் மோடியும் அறிவுறுத்தியிருக்கிறார்.

பாஜக பின்னணியில் இருப்பதாகக் கூறப்படும் வகுப்புக் கலவரங்கள் ஜம்மு-காஷ்மீரில் விளைவுகளை ஏற்படுத்துகின்றனவா? பாஜக-பிடிபி கூட்டணியின் சித்தாந்தங்கள் மோதுகின்றனவா?

இந்தியாவில் நடக்கும் மதக் கலவரங்கள் காஷ்மீரில் விளைவுகளை ஏற்படுத்துகின்றன. அதன் எதிரொலிகளும் தென்படுகின்றன. இந்தியாவின் பிற மாநிலங்களுக்கும் காஷ்மீரிகளுக்கும் இடையில் பாலமாகச் செயல்பட என் தந்தை விரும்பினார். தேர்தல் முடிவுகளோ ஜம்முவில் பாஜகவுக்கும் காஷ்மீரில் எங்களுக்கும் ஆதரவைத் தந்தன. இது காலம் நமக்கு அளித்துள்ள வாய்ப்பு என்று என் தந்தை கருதினார். ஆரம்பகால உரசல்களுக்குப் பிறகு இரு கட்சிகளாலும் ஒற்றுமையாகச் செயல்பட முடிந்தால் அது அபூர்வமான மாற்றங்களை நிச்சயம் ஏற்படுத்தும்.

சுருக்கமாகத் தமிழில்: சாரி ©: ‘தி இந்து’ ஆங்கிலம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

10 hours ago

கருத்துப் பேழை

10 hours ago

கருத்துப் பேழை

10 hours ago

கருத்துப் பேழை

13 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்