நினைப்பது ஒன்று, நடப்பது வேறொன்று?

ஓர் அரசு தன் கொள்கைகளை நன்கு விவாதித்து இறுதி செய்யாவிட்டால், நோக்கம் நல்லதாக இருந்தாலும் பலன் பாதகமாகி மக்களை வாட்டி வதைத்துவிடும். “அரசின் கொள்கைகளையும் திட்டங்களையும் அவற்றின் நோக்கத்தை மட்டுமே பார்த்து மதிப்பிடுவது தவறாகவே முடியும்; அந்தக் கொள்கைகளும் திட்டங்களும் எப்படி அமலாக்கப்படவிருக்கின்றன என்பதும் முக்கியம்” என்று அமெரிக்கப் பொருளாதார அறிஞர் மில்டன் ப்ரீட்மேன் தொலைக்காட்சிக்கு 1975-ல் அளித்த பேட்டியில் தெரிவித்திருந்தார்.

அரசின் கொள்கைகளை முதல் முறையாகக் கேள்விப்படும்போது, ‘இது நன்றாக இருக்கிறதே!’ என்றே பாராட்டத் தோன்றும்; அதை அமல்படுத்தும்போது, யாருக்காக அந்தக் கொள்கை வகுக்கப்பட்டதோ அவர்களே பாதிப்படையுமாறு நேர்ந்துவிடும்.

ப்ரீட்மேனின் இந்தக் கருத்து இன்றைக்குக் கேரளத்தில் செவிலியருக்கு (நர்ஸ்கள்) மாதந்தோறும் குறைந்தபட்ச ஊதியம் ரூ.20,000 என்று நிர்ணயித்து அறிவித்த கேரள மாநில அரசுக்கு மிகவும் பொருந்தும்.

தங்களுடைய ஊதியத்தை உயர்த்தக் கோரியும் தாங்கள் செய்யும் சேவையின் தன்மையைக் கருதி குறைந்தபட்ச ஊதியத்தை ரூ.20,000 ஆக நிர்ணயிக்கக் கோரியும் கேரளத்தின் செவிலியர்கள் காலவரம்பற்ற வேலை நிறுத்தத்தைத் தொடங்கினார்கள். தனியார் மருத்துவமனைகள் செவிலியர்களுக்கு மிகக் குறைவாகத்தான் ஊதியம் தருகின்றன என்று கருதியவர்கள் வேலைநிறுத்தத்தை ஆதரித்தனர். ஆனால், ஊதியத்தை உயர்த்தி, அதைத் தருமாறு கட்டாயப்படுத்துவது எதிர்பார்த்த பலன்களுக்குப் பதிலாக நேரெதிரான விளைவுகளையே ஏற்படுத்திவிடும். அரசின் உத்தரவு என்பதால் அதை மீற முடியாமல் தனியார் மருத்துவமனைகள் ஊதியத்தை உயர்த்தி வழங்கக்கூடும். அதனால் ஏற்படும் நிதிச் சுமையைக் குறைக்க, வேலைக்கு அமர்த்திக்கொள்ளும் செவிலியரின் எண்ணிக்கையைக் கணிசமாகக் குறைத்துவிடும். இது நோயாளிகளுக்கு உரிய சேவைகளைக் கிடைக்காமல் செய்வதுடன், செவிலியருக்குத் தனியார் துறையில் கிடைத்துவந்த வேலைவாய்ப்பையும் பறித்துவிடும். செவிலியர் அல்லாத இதர சுகாதாரப் பணியாளர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தி செவிலியர் செய்யும் வேலைகளில் பலவற்றை அவர்கள் மூலமே நிர்வாகம் இனி வாங்கிக்கொள்ளும். முறையான பயிற்சி பெறாத, செவிலியர் படிப்பு படிக்காத பெண்களை வேலைக்குச் சேர்த்து அவர்களுக்குக் குறைந்த ஊதியத்தைக் கொடுத்து அவர்கள் மூலம் சேவையைத் தொடர நினைக்கும். இது மருத்துவத்துறையின் வளர்ச்சிக்கு நல்லதல்ல.

ஆண்டுதோறும் பயிற்சி முடித்து வேலை கேட்டு விண்ணப்பிக்கும் செவிலியரின் எண்ணிக்கை, அரசு மருத்துவமனைகளில் அவர்களுக்குக் கிடைக்கும் வேலை வாய்ப்புகள், பிற நாடுகளிலும் தனியார் மருத்துவமனைகளிலும் தேவைப்படும் நர்ஸ்களின் எண்ணிக்கை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டுதான் ஊதியம் நிர்ணயிக்கப்படுகிறது. அத்துடன் மருத்துவமனையின் அளவு, தன்மை, செவிலியருக்குத் தரப்படும் வேலையளவு ஆகியவற்றை உத்தேசித்தே ஊதியம் வரையறுக்கப்படுகிறது.

பயிற்சி முடித்த செவிலியர் அதிகம்பேர் வேலைக்கு விண்ணப்பித்தால் அவர்களுடைய குறைந்தபட்ச ஊதியம் குறைகிறது. குறைந்த ஊதியத்தில் செவிலியர்கள் கிடைப்பதால் அதிக அளவில் மருத்துவமனைகள் வேலைக்கு எடுத்துக்கொள்கின்றன. இதை மறுக்கும் விதத்தில், குறைந்தபட்ச ஊதியத்தைத்தான் வழங்க வேண்டும் என்று தொழிற்சங்கங்கள் நிர்ப்பந்தப்படுத்தினால் அந்த சங்கங்கள் சார்பில் மிகச் சிலரையும், குறைந்த சம்பளத்துக்கு வேலை செய்யத் தயார் என்று முன்வரும் சங்கம் சாராதவர்களை அதிக எண்ணிக்கையில் வேலையில் அமர்த்தும். செவிலியரின் நன்மை கருதி கொண்டுவரப்படும் குறைந்தபட்ச ஊதியச் சட்ட அமலே, அவர்களுடைய நலனுக்கு எதிராகத் திரும்பிவிட வாய்ப்பிருக்கிறது என்பதை மறந்துவிடக் கூடாது. இந்தச் சட்டத்தை அமலாக்குவதுடன் செவிலியரின் வேலைவாய்ப்புகளுக்கு உத்தரவாதம் அளிப்பதும் முக்கியம்.

தமிழில்: சாரி

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE