மருத்துவச் சேவையிலும்குறுக்கிடுகிறதா மத்திய அரசு?

By அ.வெண்ணிலா

த்திய அரசு, ‘இந்தியன் மெடிக்கல் சர்வீஸ்’ என்னும் இந்திய சுகாதார ஆட்சிப் பணியைத் தொடங்குவது தொடர்பாக மாநில அரசுகளின் கருத்தைக் கேட்டுள்ளது. மருத்துவக் கல்வியில் அகில இந்திய நுழைவுத் தேர்வாக நீட் அறிமுகப்படுத்தப்பட்டதுபோல், இந்திய சுகாதாரப் பணிக்கென தனி ஆட்சிப் பணி உருவாக்கப்பட்டால், எல்லா மாநிலங்களில் உள்ள மருத்துவமனைகளும், மருத்துவர்களும் மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடுவார்கள். கல்வி மாநிலங்களின் பட்டியலில் இருந்து எவ்வாறு மெல்ல பறிபோய்க் கொண்டிருக்கிறதோ, அதுபோலவே சுகாதாரத் துறையும் மெல்ல பறிபோகும். மருந்து வாங்குவதில் தொடங்கி விநியோகம் செய்வது வரை மாநிலங்கள் தங்களது உரிமையை இழக்கும்.

சுகாதாரம் தற்போது மத்திய மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் இருக்கிறது, இந்திய சுகாதார ஆட்சிப்பணி வந்தால், முழுக்க முழுக்க மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் மருத்துவம் சென்றுவிடும். மாநில அரசுகள் தங்களின் அரசு மருத்துவமனைகளின் நிர்வாகத்தை மெல்ல இழக்கத் தொடங்கும். நிர்வாகப் பணிகளில் பிற மாநிலத்தவரும், பிற மொழி பேசு பவர்களும் வந்தால்கூட எப்படியும் சமாளித்துக் கொள்ளலாம். மருத்துவத் துறையில் எவ்வாறு சமாளிக்க முடியும்? நோயாளிகளிடம் பேசுவதற்கு ஐ.எம்.எஸ். தேர்வு மூலம் பணிபுரிய வருபவர்கள் திணற வேண்டியிருக்கும். நோயாளிகளும் மருத்துவர்களிடம் பேச இயலாது. அப்பொழுது தமிழகம் மீண்டும் இந்தித் திணிப்புக்கு கட்டாயப்படுத்தப்படலாம். ஏற்கனவே மருத்துவப் படிப்பு மிகுந்த சிக்கல் நிரம்பியதாக இருக்கிறது. மருத்துவர்களின் தேர்வு, நிர்வாகம் உள்ளிட்ட நிர்வாக விஷயங்கள் மத்திய அரசின் நெருக்கடிகளைச் சந்திக்க நேரும். மாநில உரிமைகள் முழுமையாகப் பறிபோகும்.

நீட் உள்ளிட்ட தேர்வுகளுக்குப் பின்னால் பன்னாட்டு நிறுவனங்களின் வழிகாட்டுதல் இருக்குமோ என்ற அச்சத்தினை சமூகவியலாளர்கள் வெளிப்படுத்திக்கொண்டிருக்கிற இந்த நேரத்தில், மத்திய அரசு ஐ.எம்.எஸ். பற்றிய பழைய கதையை தூசித் தட்டிக் கொண்டிருப்பது அந்த அச்சத்தை அதிகப்படுத்தச் செய்கிறது.

தொடரும் முயற்சிகள்

கடந்த முப்பது ஆண்டுகளாக இந்திய நீதிப் பணித் துறை என்று ஒரு ஆட்சிப் பணியை உருவாக்கி இந்தியாவில் நீதிபதிகள் அனைவரையும் இந்தப் பணி மூலமே இணைக்க வேண்டும் என்ற கோரிக்கை இருந்துவருகிறது. இது அரசின் பல்வேறு தளங்களில் விவாதிக்கப்பட்டிருக்கிறது. மாநில உரிமைகள் பறிபோகும் என்ற அடிப்படையில் அவ்வப்பொழுது விவாதம் எழுந்தாலும், பின்பு அந்த முயற்சி நிராகரிக்கப்பட்டிருக்கிறது. சமீபத்தில் தமிழக சட்டமன்றத்தில்கூட, எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், நீதிபதிகள் நியமனத்தில் அகில இந்திய பொதுத் தேர்வு முறையை தமிழகம் ஏற்றுக் கொள்ளக் கூடாது என்று வலியுறுத்திப் பேசியிருக்கிறார். பல மாநிலங்களில் இதற்கான எதிர்ப்பு வலுவாக இருப்பதால் இம்முயற்சி கிடப்பில் கிடக்கிறது.

கடந்த இருபது ஆண்டுகளுக்கு முன்பு இந்தியப் பொறியியல் ஆட்சிப் பணி உருவாக்கப்பட்டது. இந்தியாவில் அதிக மாணவர்கள் எழுதும் தேர்வு இது. ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் தேர்வில்கூட போட்டியிடும் ஆயிரத்தில் ஒருவர்தான் தேர்வாகிறார். இந்தியப் பொறியியல் ஆட்சிப் பணியில் போட்டியிடும் 2,000 பேரில் ஒருவர்தான் தேர்வாகிறார். இந்தியப் பொறியியல் ஆட்சிப் பணித் தேர்வில் வெற்றிபெறுபவர்கள் பல கனரகத் தொழிற்சாலைகள், துறைமுகங்கள், துப்பாக்கித் தொழிற்சாலைகள், ரயில்வே துறைகளில் பணியமர்த்தப்படுகிறார்கள். இந்திய அரசின் செல்லப் பிள்ளைகள் என்று கருதும் அளவிற்கு மிக அதிகமாக பத்மஸ்ரீ, பத்ம பூஷண் விருது பெற்ற அரசு அதிகாரிகள் இவர்கள்தான். தற்போது அதே பாணியில் ஐ.எம்.எஸ்ஸை உருவாக்க மத்திய அரசு முயற்சிக்கிறது.

காலாவதியாகப் போகும் ஆட்சிப் பணிகள், செயல்படாமல் இருக்கும் ஆட்சிப் பணிகள் ஆகியவற்றைச் சரிசெய்ய முன்வராத மத்திய அரசு, திடீரென இந்திய சுகாதார ஆட்சிப் பணியை உருவாக்குவதற்கான கருத்துகளைக் கேட்கத் தொடங்கி இருப்பது அச்சம் தருகிறது.

இந்தியா சுதந்திரம் அடைந்த போது ஐ.சி.எஸ். (‘இந்தியன் சிவில் சர்வீஸ்’), ஐ.பி. (‘இம்பீரியல் போலீஸ்’) உயர் பதவிகள் தேவையா என பெரும் விவாதம் எழுந்தது. அப்பொழுது, ‘இந்தியன் சிவில் சர்வீஸ்’ தனது நூறாவது ஆண்டு விழாவை நெருங்கிக் கொண்டிருந்தது. ‘இம்பீரியல் போலீஸ்’ தனது எழுபத்தைந்து ஆண்டுகளை இந்தியாவில் முடித்திருந்தது. “ஐ.சி.எஸ். பணியில் இந்தியாவும் இல்லை, சிவிலும் இல்லை, சர்வீசும் இல்லை, ஐ.பி.யை உருவாக்கிய பிரிட்டனிலேயே இது போன்ற ஓர் அமைப்பு இல்லாதபோது இந்தியாவில் குறிப்பாக நாம் அவர்களிடமிருந்து சுதந்திரம் பெற்ற பின் அவர்கள் உருவாக்கிய அமைப்பு நமக்குத் தேவையில்லை” என்ற வாதம் வலுப்பெறத் தொடங்கியது.

உரிமைகள் என்னாகும்?

ஐ.சி.எஸ், ஐ.பி., அதிகாரிகள் காங்கிரஸ் தலைவர்கள் நினைத்ததைவிட வேகமாக முடிவெடுத்தார்கள். புதிய அரசியலமைப்பு முறையை ஏற்றுக்கொள்ளாத சில ஐ.சி.எஸ் அதிகாரிகள் விருப்ப ஓய்வு பெற்றார்கள். சிலர் தங்களது பதவியைத் துறந்தார்கள். புதிய நடைமுறைக்கு, புதிய தலைமைக்குக் கட்டுப்பட்டவர்கள், ஐ.சி.எஸ், ஐ.பி., பணியைத் தொடர்ந்தார்கள். அதிகாரிகளின் மனமாற்றத்தை எதிர்பார்த்த சர்தார் வல்லபாய் பட்டேல் ‘ஐ.சி.எஸ்’ என்பதை ‘இந்தியன் அட்மினிஸ்ட்ரேடிவ் சர்வீஸ்’ என்றும், ‘ஐ.பி.’ என்பதை இந்தியன் போலீஸ் சர்வீஸ் என்றும் மாற்றம் செய்தார்.

இந்தியன் சிவில் சர்வீஸ் அதிகாரிகளாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நம்மவர்களின்மூலம் தான், ஆங்கிலேயர்கள் ஆட்சி செய்தார்கள். நம்மவர்களைக் கொண்டே நம்மை அடக்கினார்கள். இன்று மத்திய அரசும் அதைத்தான் செய்துகொண்டிருக்கிறது. ஆட்சிப்பணிகள், காவல் பணிகளைத் தொடர்ந்து மருத்துவச் சேவைப் பணிகளிலும் தனது அதிகாரத்தை நிறுவ முயற்சிக்கிறது. மாநிலங்கள் விழிப்பாக இல்லையென்றால், மாநில உரிமைகள் என்று சொல்லிக்கொள்வதற்கு கடைசியில் ஒன்றுமே மிஞ்சியிருக்காது!

-அ.வெண்ணிலா, கவிஞர், ஆசிரியர்

தொடர்புக்கு: vandhainila@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

17 hours ago

கருத்துப் பேழை

17 hours ago

கருத்துப் பேழை

16 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்