ஸ்ரீ நகரில் ஒருநாள் எங்கள் காரோட்டி பர்வேஸ், வரச் சொன்ன நேரத்தில் வரவில்லை. எங்களுக்குக் கவலையாக இருந்ததால் தொலைபேசியில் தொடர்புகொண்டோம். நடந்ததை வந்து சொல்கிறேன் என்றார். 11 மணியளவில் வந்த அவர் “இப்போதுதான் போலீஸுக்கு 3,000 ரூபாய் கொடுத்துவிட்டு வருகிறேன்” என்றார்.
“என் மாமாவின் டாடா சுமோ வாகனம் நேற்று இரவு காணாமல் போய்விட்டது. இரவு முழுவதும் தேடியும் கிடைக்காததால் போலீஸில் புகார் கொடுத்தோம். நான் ஓட்டலுக்கு வரும் வழியில் வண்டி சாலை ஓரத்தில் நிறுத்தப்பட்டிருப்பதைப் பார்த்தேன். உடனே போலீஸுக்கு ஃபோன் செய்தேன். அவர்கள் நீயே காரைத் திறந்து ஓட்டிக்கொண்டு வா என்று சொன்னார்கள். நான், ‘என்னால் முடியாது. வண்டியைப் போராளிகள் கடத்திச்சென்று பயன்படுத்தியிருக்கலாம். உள்ளே ஆயுதங்களோ வெடிகுண்டுகளோ இருக்கலாம். நீங்கள்தான் வரவேண்டும்’ என்று சொன்னேன்” என்றார்.
போலீஸ் வந்ததும் வண்டியைத் திறக்கச் சொல்லி, அதில் ஆயுதங்களோ வெடிகுண்டுகளோ இல்லை என்பதை உறுதி செய்த பிறகே வண்டியைத் திரும்பப் பெற்றுக்கொண்டிருக்கிறார். வண்டியை நிச்சயம் போராளிகள் பயன்படுத்திவிட்டு வேலை முடிந்ததும் ஓரத்தில் நிறுத்திவிட்டுச் சென்றிருப்பார்கள் என்று பர்வேஸ் சொன்னார்.
முந்தைய நாள்தான் ஸ்ரீநகரில் மத்திய ரிசர்வ் போலீஸ்மீது தாக்குதல் நடத்திவிட்டுப் பள்ளிக்கூடம் ஒன்றில் பதுங்கியிருந்த இரண்டு பாகிஸ்தானி ஊடுருவிகள் கொல்லப்பட்டிருந்தார்கள். அவர்களுக்கு உதவி செய்வதற்காக வண்டி எடுத்துச் செல்லப்பட்டிருக்கலாமோ என்று கேட்டேன். “இல்லை. யாரும் கொல்லப்படவில்லை. போன வருடம் கொல்லப்பட்ட இரண்டு பாகிஸ்தானிகள் படங்களைத்தான் இப்போது காட்டுகிறார்கள்” என்றார்! மாற்று உண்மை!
ஊழலில் ஊறிய மாநிலம்
போலீஸுக்குப் பணம் கொடுப்பது என்பது இந்தியா முழுவதும் நடக்கிறது. ஆனால், இங்கு அது வேறு பரிணாமம் எடுக்கிறது. ஒவ்வொரு சாதாரண சம்பவமும் பூதாகாரமாக உருவெடுக்கும் சாத்தியம் இருக்கிறது. “எங்கள் வண்டி போராளிகளுடன் பிடிபட்டிருந்தால், நான் என் வாழ்நாள் முழுவதும் சிறையிலிருந்து வெளிவந்திருக்க முடியாது. அல்லது என் வீட்டை விற்று போலீஸுக்குப் பணம் கொடுக்க வேண்டியதாக இருந்திருக்கும்” என்று பர்வேஸ் சொன்னார். “ஒருவேளை இவரே வண்டியைப் போராளி களிடம் கொடுத்துவிட்டு நாடகம் ஆடுகிறாரோ?” என்று நினைத்தேன். உண்மைக்கு நேரெதிரே நின்று பொய் ஒவ்வொரு தருணத்திலும் சவால் விட்டுக்கொண்டிருக்கும் மாநிலம் இது. ஆனால், ஊழல் நடக்கிறது என்ற உண்மைக்கு மட்டும் பொய்யால் சவால் விட முடியாது என்று தோன்றுகிறது. நமது வட்டச் செயலாளர்களைப் போல இங்கும் அரசியல்வாதிகள் பெரிய பங்களாக்களில் இருக்கிறார்கள்.
ஆட்கள் புடை சூழ பவனிவருகிறார்கள். “காஷ்மீர் ஏழை மாநிலமல்ல. இங்கு எல்லோருக்கும் தண்ணீர் இருக்கிறது. வீடு இருக்கிறது. உணவு இருக்கிறது. ஆனால் கூடவே அரசியல்வாதிகளும் அரசு ஊழியர்களும் இருக்கிறார்கள். அதுதான் பிரச்சினை” என்று ஒருவர் சொன்னார். மத்திய அரசு மானியங்களாக மட்டும் காஷ்மீருக்குக் கடந்த 16 வருடங்களில் ரூ. 1 லட்சம் கோடிக்கு மேலாகப் பணம் கிடைத்திருக்கிறது. இந்தியாவின் மக்கள்தொகையில் 1 சதவீதம் இருக்கும் மாநிலத்துக்கு மத்திய அரசு மாநிலங்களுக்கு அளிக்கும் மானியத்தில் 10% சதவீதம் செல்கிறது.
அங்கு வாழும் ஒவ்வொருவருக்கும் சுமார் ஒரு லட்சம் ரூபாய் மானியம் கொடுக்கப்பட்டிருக்கிறது என்று சொல்லலாம். உத்தர பிரதேசத்தின் மக்கள்தொகையைக் கணக்கில் எடுத்துக்கொண்டால் அங்கு வாழும் மக்களுக்கு இதே காலகட்டத்தில் ஒவ்வொருவருக்கும் கிடைத்திருக்கும் மானியம் ரூ. 4,300 மட்டுமே. “மத்திய அரசு அளித்த மானியத்தில் 50 சதவீதமாவது மக்களுக்குச் செலவிட்டிருந்தால் இளைஞர்கள் ஏன் ஆயுதம் எடுக்கப் போகிறார்கள்?” என்று ஜே&கே வங்கியில் உயர் பதவியில் இருக்கும் ஒருவர் சொன்னார். “மின்சாரத்தை எடுத்துக்கொண்டால் 50 சதவீதத்துக்கும் மேல் திருடப்படுகிறது. சில வருடங்களுக்கு முன்னால் திருட்டு 70% இருந்தது. இதுவும் குத்துமதிப்புதான். எந்தப் புள்ளிவிவரமும் அரசு வலை தளத்தில் கிடைக்காது. நீங்கள் வேண்டுமானால் அரசு மின்துறையின் வலைதளத்துக்குச் சென்று பாருங்கள்” என்றார். டெல்லி திரும்பியதும் அதை உடனடியாகச் செய்தேன். புள்ளிவிவரங்கள் பக்கம் காலியாக இருந்தது!
இயற்கையின் அழிவு
உலகின் மிக அழகான இடங்கள் காஷ்மீரில் இருக்கின்றன என்பது உண்மையென்றால் உலகின் மிக அழகான இடங்களில் அதிகக் குப்பைகள் இருப்பதும் காஷ்மீரில்தான் என்றுதான் சொல்ல வேண்டும். எவ்வளவு உயரத்துக்குச் சென்றாலும் பாலிதீன் குப்பைக் குவியல்களை நம்மால் பார்க்க முடியும். ஸ்ரீநகரின் நடுநாயகமான தல் ஏரியில் மனிதக் கழிவுகள் தினமும் கொட்டப்படுகின்றன. ஏரியின் அளவு நூறு வருடங்களாகக் குறையவில்லை என்று அரசு சொல்கிறது. சொல்வது முழுப் பொய் என்று காஷ்மீர உயர் நீதிமன்றம் சொல்கிறது. ஏரிக்குள் வீடுகளும் கடைகளும் அதிகரித்துவிட்டன என்று காஷ்மீர் மக்கள் சொல்கிறார்கள். மக்களும் ஒத்துழைக்கவில்லை என்பதுதான் கசப்பான உண்மை. நாற்றம், குப்பைகளைப் பற்றி அவர்கள் கண்டுகொள்வதாகவே தெரியவில்லை.
வேலைகள் எங்கே?
இந்த ஏப்ரல் மாதம் காஷ்மீரில் ராணுவ ஆளெடுப்பு நடந்தது. 900 காலி இடங்களுக்கு சுமார் 19,000 பேர் விண்ணப்பம் செய்திருந்தனர். பயங்கரவாதிகளின் தாக்குதல் களுக்கு உள்ளாகும் சாத்தியக்கூறுகள் இருக்கும் என்பது அவர்களுக்குத் தெரிந்திருந்தாலும் வேறு வழி அவர்களுக்கு இல்லை. இந்தியாவிலேயே வேலையில்லாத இளைஞர்கள் அதிகம் இருக்கும் மாநிலம் இதுதான். 19 வயதிலிருந்து 29 வயது வரையில் உள்ள இளைஞர்களில் சுமார் 25% பேர் வேலையில்லாமல் இருக்கிறார்கள். இந்தியாவின் மற்றைய மாநிலங்களைவிட கிட்டத்தட்ட இரு மடங்கு அதிகம். ஸ்ரீநகரின் புகழ்பெற்ற கிருஷ்ணா டாபாவின் முன்னால் சந்தித்த ஒருவர் எதிரே நின்றுகொண்டிருந்த ஆட்டோவைக் காட்டிச் சொன்னார். “எனது மகன். முனைவர் பட்டம் பெற்றவன். ஆட்டோ ஓட்டுவதைத் தவிர வேறு வழியில்லை” என்றார். வேலைவாய்ப்புகள் அதிகரித்தால் பயங்கரவாதம் குறையும் சாத்தியம் அதிகம் ஆகும். ஆனால், அரசு வேலைகள் அதிகரிக்க வாய்ப்பே இல்லை என்று சொல்லலாம். ஏற்கெனவே சுமார் 5 லட்சம் மாநில அரசு ஊழியர்கள் இருக்கிறார்கள். ஒரு குடும்பத்துக்கு ஐந்து பேர் என்று எடுத்துக்கொண்டால் மக்கள்தொகையில் 20% அரசைச் சார்ந்து இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் 12% சதவீதம். எனவே, வேலைகளைத் தனியார் துறையில்தான் உருவாக்க வேண்டும்.
அதிக வேலைகளை உருவாக்கக் கூடியது சுற்றுலாத் துறை மட்டுமே. ஆனால், இந்த வருடம் காஷ்மீரின் ஓட்டல்கள், சுற்றுலாத்தலங்கள், வழிபாட்டுத்தலங்கள் காலியாக இருக்கின்றன. குதிரை வைத்திருப்பவர்களும், கைவினைப் பொருட்களை விற்பவர்களும் என்ன செய்வது என்று அறியாமல் திகைக்கிறார்கள். காரணம் பயங்கரவாதம் என்பது அவர்களுக்குத் தெரிந்திருக்கிறது. இருந்தாலும் தங்கள் இளைஞர்களை அவர்கள் விட்டுக்கொடுக்க விரும்பவில்லை.
“எங்கள் காற்றையும் நீரையும் நிலத்தையும் வானத்தையும் முடிந்த அளவு அனுபவியுங்கள். ஆனால், நீங்கள் திரும்பச் செல்லும்போது எங்களுக்குக் கொஞ்சம் அறிவைக் கடன் கொடுங்கள்” என்று ஒருவர் சொன்னார். காஷ்மீரில் நடப்பவையெல்லாம் சாதாரண அறிவுக்கு அப்பாற்பட்டவை என்பது மக்களுக்குத் தெரிந்திருக் கிறது.
-பி.ஏ. கிருஷ்ணன்,
‘புலிநகக் கொன்றை’, ‘இந்தியாவும் உலகமும்’ முதலான நூல்களின் ஆசிரியர். தொடர்புக்கு: tigerclaw@gmail.com
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
20 hours ago
கருத்துப் பேழை
20 hours ago
கருத்துப் பேழை
20 hours ago
கருத்துப் பேழை
17 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago