“பதினைஞ்சு வருஷமாதான் எங்க ஊர்ல பெண் சிசுக்கொலை இல்லை. அதுக்கு முன்னாடி அவ்வளவு மோசமா இருந்துச்சு. பொம்பளைப் பிள்ளைங்க பொறந்து வளர்ந்தாத்தானே பிரச்சினை. இனிமே பொம்பளைப் புள்ளைங்களே வேண்டாம். எங்களுக்கு வேற வழி தெரியலை. இதோ, என் புருஷன் ரெண்டு பொம்பளைப் புள்ளைங்களைக் கொடுத்துட்டு, குடிக்கு அடிமையாகி எங்கேயோ போயிட்டான். நாங்க படுற கஷ்டத்தை, இனிமே பொறக்கப்போற பெண் குழந்தைங்க பட வேண்டாம்” - ஜெயமங்கலம் கிராமத்தில் வயலில் வேலை பார்த்துக்கொண்டிருந்த பாவாயியின் ஆவேச மான வார்த்தைகள் இவை. அப்படியெல்லாம் பேசக் கூடாது; பெண் குழந்தைகளை வெறுக்கக் கூடாது என்று அந்தப் பெண்ணிடம் சத்தியம் வாங்கிக்கொண்டு அனுப்பியிருக்கிறார் மதுவுக்கு எதிராக நடைபயணம் செய்யும் ஆனந்தி அம்மாள்.
கோபிசெட்டிப்பாளையத்தில் மதுவுக்கு எதிராக குமரி அனந்தன் தலைமையில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்திக்
கொண்டிருந்தார்கள், காந்திய அறக்கட்டளை அமைப்பினர். அவர்கள் சிறு கையேடு ஒன்றையும் மக்களிடம் விநியோகித்தனர். ‘மெல்லத் தமிழன் இனி’ தொடர்தான் அது. அதுவரை வெளியான அத்தியாயங்களைத் தொகுத்து ‘நன்றி - தி இந்து’ என்று குறிப்பிட்டு அச்சிட்டிருந்தார்கள். அமைப்பின் பொருளா
ளரான கே.பி. செந்தில்குமார், “எங்கள் ஊரில் மது குடிக்காத நபர்களின் வீடுகளைத் தேடித்தான் கண்டுபிடிக்க வேண்டும். மதுப் பழக்கத்தால் பெரும் விவசாயிகளெல்லாம் ஓட்டாண்டி களாகிவிட்டனர். இதுபோன்ற நேரத்தில்தான் இந்தத் தொடர் வெளியாகியிருக்கிறது. அனைத்துத் தரப்பு மக்களும் இதைப் படிக்க வேண்டும் என்பதற்காக இரண்டாயிரம் பிரதிகள் அச்சிட்டு விநியோகித்தோம்” என்றார்.
தொடர் தொடங்கிய காந்தி பிறந்தநாள் முதல் தமிழகம் முழுவதும் ஊர் ஊராகச் சென்று, பள்ளிக் குழந்தைகளிடம் மதுவின் கொடுமைகளைப் பற்றி பாடம் எடுத்துவருகிறது மதுவுக்கு எதிரான மக்கள் இயக்கம். வடுகப்பட்டியில் ஷீலா என்கிற பெண், “எங்களுக்கு இலவசமெல்லாம் ஒண்ணும் வேண்டாம். பிராந்திக் கடைகளை மூடச் சொல்லுங்க. அதுபோதும்” என்று நொடித்துக்கொள்கிறார். சில்வார்பட்டியில் 80 வயதான மூதாட்டி மூக்கம்மா, “டாஸ்மாக் கடைகளை மூடினா கள்ளச்சாராயம் வரும்னு அமைச்சர் சொல்றாரு. 108 ஆம்புலன்ஸ் நெம்பரு மாதிரி கள்ளச்சாராயத்துக்குத் தகவல் கொடுக்க ஒரு நெம்பரத் தாங்க. எவன் சாராயம் காய்ச்சுறான்னு பார்ப்போம்” என்று ஆச்சர்யப்படுத்துகிறார்.
மதுவிலக்கைக் கொண்டுவருபவர்களுக்கே ஓட்டு…
“தொடரைப் படித்த பின்பு ஏதாவது செய்ய வேண்டும் என்று உத்வேகம் வந்தது. எங்கள் ஊரில் 600 குழந்தைகளைத் திரட்டி மதுவுக்கு எதிரான ஊர்வலம் நடத்தினோம்” என்று திண்டுக்கல் மாவட்டம், இரண்டெல்லைப்பாறையைச் சேர்ந்த பங்குத் தந்தை அன்சல் ஆண்டனி கடிதம் அனுப்பியிருக்கிறார். கடந்த ஒரு மாதமாக மதுரை அலங்காநல்லூர் அருகே தேத்தாம்பட்டியில் ஊருக்குள் குடித்துவிட்டு வருவோரை இளைஞர்கள் ஒன்றிணைந்து கண்டித்து அனுப்புகிறார்கள். சென்னையில் ‘வெஜ் கவுன்சில் ஆஃப் நுங்கம்பாக்கம்’ அமைப்பினர் மதுவுக்கு எதிராகப் பிரச்சாரம் செய்துவருகின்றனர். சென்னை சட்டப் பல்கலைக்கழக ஊழியர் ஒருவர், தினமும் இந்தத் தொடரின் ஒவ்வோர் அத்தியாயத்தையும் மாணவர்களுக்குப் பிரதிகள் எடுத்து விநியோகிக்கிறார். கும்பகோணம் மேலக்காவிரியில் ஜோதிமலை இறைப்பணிக்கூடம் அமைப்பினர், இந்தத் தொடரின் கருத்துக்களை மக்களிடம் பிரச்சாரமாக எடுத்துச் செல்கிறார்கள்.
மேட்டூரைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞர் ஜேம்ஸ் துரைசாமி என்பவர், தினமும் வெளியாகும் ‘மெல்லத் தமிழன் இனி...!’ தொடரை ஆயிரம் பிரதிகள் எடுத்து மக்களிடம் விநியோகிக்கிறார். திண்டுக்கல் பித்தளைப்பட்டியில் தனியார் மில்லில் வேலை பார்க்கும் 63 பெண்மணிகள், ‘மதுவிலக்கு கொண்டுவருவோம் என்று சொல்லும் கட்சிக்கு மட்டுமே வரும் தேர்தலில் ஓட்டுப் போடுவோம்’ என்று உறுதிமொழி எழுதிக்கொடுத்துள்ளார்கள். பாதிக்கப்பட்ட பெண்களுக்கான ‘அல் - அனான்’ மற்றும் குழந்தைகளுக்கான ‘அல்லட்டீன்’ அமைப்புகளின் தொடர்பு எண்களைத் தொடரில் வெளியிட்டதைத் தொடர்ந்து, அங்கு தினசரி ஏராளமான பெண்களும் குழந்தைகளும் தொடர்புகொண்டு பயன்பெறுகிறார்கள்.
‘மெல்லத் தமிழன் இனி..!’ தொடர் தொடங்கிய 25 அத்தியாயங் களுக்குள் நமக்குத் தெரிந்த ஆக்கபூர்வமான விளைவுகளின் சிறு தொகுப்பு இது. இங்கே குறிப்பிடப்பட்டதில் எதுவும் பெரும் அமைப்புகளோ அரசியல் இயக்கங்களோ இல்லை. அனைவருமே சாமானிய மக்கள். மக்களே இயக்கங்களாக உருவெடுக்கிறார்கள். மது இல்லாத சமூகம் உருவாக வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள். என்ன செய்யப்போகிறது அரசு?
(தெளிவோம்)
டி.எல். சஞ்சீவிகுமார், தொடர்புக்கு: sanjeevikumar.tl@thehindutamil.co.in
படம்: ஆர். ரவிச்சந்திரன்
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
17 hours ago
கருத்துப் பேழை
18 hours ago
கருத்துப் பேழை
16 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago