செய்தித்தாள்களில் முதல் பக்கம் - ஒரு முழுப் பக்கம் அந்த விளம்பரம். தொலைக்காட்சிகளில் அந்த விளம்பரம். சமூக வலைதளங்களில் அந்த விளம்பரம். சாலைகளில் பெரிய பெரிய பதாகைகளில் அந்த விளம்பரம். எல்லா விளம்பரங்களிலும் ஒரு ஊடகவியலாளரின் முகம் ஆக்கிரமித்திருக்கிறது. முகம் என்றால், முகம் மட்டும் – சில விளம்பரங்களில் அது அரை முகம். அந்த முகம் மக்களை உற்றுப்பார்க்கிறது. அகங்காரத்துடன், இறுமாப்புடன். பக்கத்தில் ஒரு வாசகம் - ‘தேசம் இன்னும் தெரிந்துகொள்ள விரும்புகிறது!’ கீழே கையெழுத்துபோலக் கொட்டை எழுத்தில் அந்தப் புதிய தொலைக்காட்சியின் பெயர் - ‘ரிபப்ளிக்’ (குடியரசு).
நொடிக்குக் கோடி விளம்பரங்கள் கொட்டும் யுகத்தில், மாதம் கடந்து அந்த விளம்பரம் திரும்பத் திரும்ப மண்டையைக் குடைவதற்கான நியாயம் இருக்கிறது. எழுபதாண்டு சுதந்திர இந்தியா இன்று வந்தடைந்திருக்கும் ஒரு புள்ளியைத் தீர்க்கமாகச் சுட்டுகிறது அந்த விளம்பரம். ஒரு மனிதன் தேசமாகும் காலத்தில் நாம் இருப்பதை அது பகிரங்கமாக நமக்குச் சொல்கிறது. மேலும், அந்தப் பெயர் – ‘குடியரசு’ - எவ்வளவு சூட்சுமமானது! ஒரு மனிதன் தன்னையே தேசமாகக் கட்டமைக்கும் காலத்தில், ஒரு மனிதனின் எண்ணமே ஒரு குடியரசின் எண்ணமாகவும் பிரகடனப்படுத்தப்பட்டுவிடுகிறது.
அரை நூற்றாண்டுக்கு முன் தங்களுடைய சர்வாதிகார ஆட்சியை அலங்காரமான வார்த்தைகளால் அழைத்த ராணுவ அதிபர்கள் – தன்னுடைய அரசை ‘அடிப்படை ஜனநாயகம்’ என்றழைத்த அயூப்கான், ‘நெறிப்படுத்தப்பட்ட ஜனநாயகம்’ என்றழைத்த சுகர்னோ, ‘புதிய ஜனநாயகம்’ என்றழைத்த ட்ரூயிலோ - ஞாபகத்துக்கு வருகிறார்கள். நாம் ஒன்றை நினைவூட்டிக்கொள்ள வேண்டும், மோடியின் காலத்தில் அர்ணாப் கோஸ்வாமிகள் உருவாகவில்லை; மாறாக, அர்ணாப் கோஸ்வாமிகளே மோடியின் காலத்தை உருவாக்கியிருக்கிறார்கள். துல்லியமாகச் சொல்வது என்றால், நாம் வாழ்ந்துகொண்டிருக்கும் காலத்தின் வெளிப்பாடு அல்லது விளைவுகளில் ஒன்றே மோடி.
இப்படி, ஒரு மனிதன் குடியரசாகும் காலத்தில்தான் நாம் இந்த தேசத்தின், மக்களின் உண்மையான குடியரசுக் கனவைப் பற்றியும் அதன் இன்றைய நிலையையும் பேச வேண்டிய அவசியம் உண்டாகிறது. நாம் மாபெரும் இந்த இந்திய நாட்டை ஆளும் அமைப்பை ஜனநாயகம் என்று மட்டும் குறிப்பிடவில்லை; குடியரசு என்றும் குறிப்பிடுகிறோம். அதாவது, ஜனநாயகக் குடியரசு. ஆனால், நம்முடைய அரசு எப்படியான ஆட்சியை நமக்குத் தருகிறது? ஜனநாயக ஆட்சியையா, குடியரசு ஆட்சியையா? நாம் எதை விரும்புகிறோம்? ஜனநாயக பாணி ஆட்சியையா, குடியரசு பாணி ஆட்சியையா? கல்லூரிகளில் பேசச் செல்லும்போது மாணவர்கள் மத்தியில் இந்தக் கேள்விகளைக் கேட்பது உண்டு. அப்போதெல்லாம் மாணவர்களிடமிருந்து வரும் பதில் கேள்வி: ‘ஜனநாயகத்துக்கும் குடியரசுக்கும் என்ன வித்தியாசம்?’
என் அனுபவத்தில் இதுவரை இந்தக் கேள்விக்கான பதில் அளித்த ஒரு மாணவரைச் சந்தித்ததில்லை. அதிர்ச்சி அடைய ஏதும் இல்லை. ஏனென்றால், அது தனியார் கல்வி நிறுவனமோ, அரசுக் கல்வி நிறுவனமோ; கல்வியின் உள்ளடக்கமான பாடத்திட்டத்தை அரசு தன் கைகளில் வைத்திருக்கிறது. இப்படியான விஷயங்கள் மாணவர்களுக்குத் தெரிந்துவிடக் கூடாது என்று அரசே எண்ணும்போது, பாடத்திட்டம் அரசியல் நீக்கப்பட்டதாகத் தயாரிக்கப்படும்போது மாணவர்களை எப்படி நாம் நொந்துகொள்ள முடியும்?
ஆனால், ஜனநாயகத்தைப் பற்றியும் குடியரசைப் பற்றியும் ஆசிரியர்கள் பேச முடியும். “இந்தியா என்பது வெறும் ஜனநாயகம் மட்டும் அல்ல; அது ஒரு குடியரசும் ஆகும். ஜனநாயகமும் குடியரசும் ஒன்றல்ல. தனி நபருக்கும் அரசுக்குமான தொடர்பில், இவை இரண்டுக்கும் வெவ்வேறு பங்குகள் இருக்கின்றன. ஜனநாயகம் என்பது அடிப்படையில் பெரும்பான்மையின் கைகளில் ஆட்சியை ஒப்படைத்துவிடுகிறது. ‘தலைக்கு ஒரு ஓட்டு’ என்பது ஒரு உயரிய நியாயமாக மேலோட்டத்தில் இருந்தாலும், ‘சிறுத்தைகள், ஓநாய்களுக்கும் ஒரு ஓட்டு; ஆடுகள், மாடுகளுக்கும் ஒரு ஓட்டு’ என்பது அடிப்படையிலேயே வலியவர்கள் கை ஓங்கும் அபாயத்தையும் இயல்பாகவே கொண்டிருக்கிறது. புலிகள் ஒன்றுசேர்ந்து அவற்றின் பெரும்பான்மையில் ஒரு ஆட்சி அமையும்போது மான்களின் கதி என்னவாகும்? இந்த இடம்தான் ஜனநாயகத்தின் மிகவும் சிக்கலான, பலவீனமான பகுதி. இந்தப் பிரச்சினையைக் கையாளும் தீர்வாகவே குடியரசு உருவெடுக்கிறது. அது புலியோ, ஓநாயோ எந்தத் தரப்பு ஆட்சியிலும் வந்தாலும் மான்கள், மாடுகளின் சுதந்திரமும் உரிமைகளும் பாதிக்கப்படாமல் இருப்பதைச் சட்டபூர்வமாக உறுதிசெய்கிறது. அதாவது, குடியரசின் உச்சபட்ச பண்பு அது சட்டபூர்வமாக உறுதிசெய்யும் குடிமக்களின் தனிநபர் சுதந்திரத்தில் நிலைகொண்டிருக்கிறது” என்று மாணவர்களிடத்தில் ஆசிரியர்கள் விளக்க முடியும்.
ஆசிரியர்கள் இப்படி வளர்த்தெடுத்தால் நிச்சயம் அந்த மாணவர்கள் இப்படி ஒரு கேள்விகளை எழுப்புவார்கள்: “அப்படி என்றால், ஒரு ஜனநாயகக் குடியரசான இந்திய அரசு ஏன் தன் குடிமக்களை வெறும் ஜனநாயக அரசுபோலவே நடத்துகிறது? அதாவது, சிறுபான்மையின மக்களின், ஒடுக்கப்பட்ட மக்களின், விளிம்புநிலை மக்களின், எளிய மக்களின், தனிமனிதர்களின் மிக அடிப்படையான உரிமைகளைக்கூட இந்திய அரசால் ஏன் உறுதிப்படுத்த முடியவில்லை? ஒரு தனி மனிதர் இதைச் சாப்பிடக் கூடாது என்று எப்படி இன்னொருவரால் சொல்ல முடிகிறது? ஒரு தனி மனுஷி இப்படியான உடையை உடுத்தக் கூடாது என்றோ இன்னாரைத் திருமணம் செய்துகொள்ளக் கூடாது என்றோ எப்படி இன்னொருவரால் வலியுறுத்த முடிகிறது? எல்லோர்க்கும் நியாயமான ஒரு குடியரசு எப்படி இதையெல்லாம் வேடிக்கை பார்க்க முடியும்?”
இந்திய அரசு அடிப்படையிலேயே தனிமனித உரிமைகளைப் பிரதானமாகப் போற்றுவதாகக் கட்டமைக்கப்படவில்லை; மாறாக, பெரும்பான்மையை, பெரும்பான்மையால் உருவாக்கப்பட்ட அமைப்பை, அரசைத் தூக்கிப் பிடிப்பதாகவே கட்டமைக்கப்பட்டிருக்கிறது. காலனிய அரசின் கட்டமைப்பைச் சுவீகரித்துக்கொண்டதன் விளைவு காலனிய அரசின் கலாச்சாரமே சுதந்திர இந்தியாவின் கலாச்சாரமாகவும் அதிகார வர்க்கத்தால் வளர்த்தெடுக்கப்பட்டிருக்கிறது.
அரசமைப்பிலோ, ஆட்சி நிர்வாகத்திலோ ஒரு குறையைச் சுட்டிக்காட்டினால் எழுத்தாளர்கள் மீது ஆட்சியாளர்களுக்கு ஏன் அவ்வளவு ஆத்திரம் வருகிறது? தங்களுடைய நியாயமான கோரிக்கைகள் பொருட்படுத்தப்படாமல் போகும்போது போராட்டத்தில் ஈடுபடும் மக்களை ஏன் அதிகார வர்க்கம் அவ்வளவு வன்மத்தோடு பார்க்கிறது? போராட்டத்தில் ஈடுபடும் மக்களைக் காவல் படையினர் ஏன் அவ்வளவு மூர்க்கமாக அணுகுகிறார்கள்? இந்தப் பிரச்சினையின் மையம் ஆட்சியாளர்களிடத்தில் இல்லை; ஒரு சுதந்திர ஜனநாயகக் குடியரசு என்ற நிலைக்கேற்ப நம்முடைய ஆட்சியமைப்பு இல்லை - நம்முடைய நிர்வாக, காவல், ராணுவ அமைப்புகள் கட்டமைக்கப்படவில்லை அல்லது சீர்திருத்தப்படவில்லை என்பதில் இருக்கிறது.
அம்பேத்கர் கூறியதை இங்கு நாம் நினைவுகூரலாம், “ஒரு அரசியலமைப்பின் நோக்கம், அரசுக்கான உறுப்புகளை உருவாக்குவது மட்டுமல்ல; அதிகாரத்தைக் கட்டுப்படுத்துவதும் ஆகும். ஏனென்றால் உறுப்புகளின் அதிகாரமானது கட்டுப்படுத்தப்படவில்லை என்றால், அதுவே முழுமையான கொடுங்கோன்மை மற்றும் முழுமையான ஒடுக்குமுறைக்கு வழிவகுத்துவிடும்!”
துரதிர்ஷ்டவசமாக அப்படி நடக்கவில்லை. காந்திய சிந்தனைக்கு மாறாக நேரு, படேலில் தொடங்கி அம்பேத்கர் வரை எல்லோருமே மையப்படுத்தப்பட்ட அரசமைப்பைத் தாங்கிப் பிடிப்பவர்களாகவே நின்றார்கள். இந்தியாவின் அரசியலமைப்பை அறிமுகப்படுத்துகையில் அம்பேத்கர் பேசிய வார்த்தைகளையே குறிப்பிடலாம். தன்னுடைய உரையில், “நமது சமூக, பொருளாதார இலக்குகளை அடைவதற்கு அரசியலமைப்பின் நெறிமுறைகளை விடாப்பிடியாக நாம் பின்பற்ற வேண்டும் என்பதே என்னைப் பொறுத்தவரை முதல் விஷயம். ரத்தம் சிந்தவைக்கும் புரட்சிகளை நாம் கைவிட வேண்டும் என்பது இதன் அர்த்தம். சட்டமறுப்பு, ஒத்துழையாமை, சத்தியாகிரகம் ஆகியவற்றை நாம் கைவிட வேண்டும் என்பது இதன் அர்த்தம். பொருளாதார, சமூக இலக்குகளை அடைவதற்கு அரசியலமைப்புரீதியிலான வழிமுறைகள் ஏதும் இல்லாத காலத்தில் அரசியலமைப்புக்குப் புறம்பான வழிமுறைகளைப் பின்பற்றுவதில் பெருமளவு நியாயம் இருந்தது. ஆனால், அரசியலமைப்பு நெறிமுறைகள் இருக்கும்போது இதுபோன்ற அரசியலமைப்புக்கு அப்பாற்பட்ட வழிமுறைகளை எந்த விதத்திலும் நியாயப்படுத்திவிட முடியாது. இவையெல்லாம் அராஜகத்தின் இலக்கணமன்றி வேறல்ல. இவற்றை எவ்வளவு சீக்கிரம் கைவிடுகிறோமோ அவ்வளவுக்கு நல்லது!” என்றார் அம்பேத்கர்! யோசித்துப் பார்த்தால், காந்திய போராட்டங்களால் சுதந்திரம் அடைந்த இந்நாடு தனக்கான அரசியலமைப்பை உருவாக்குகையில், சத்தியாகிரகப் போராட்டங்களைச் சட்ட விரோதமாக்கி, எளிய மக்களின் கடைசி ஆயுதத்தையும் அவர்களிடமிருந்து பறித்து, அதை அராஜகம் என்ற நிலையை நோக்கியும் தள்ளியது எவ்வளவு வினோதமானதும் கொடூரமானதுமாகும்!
சுதந்திர இந்தியாவின் எழுபதாண்டு வரலாற்றைப் பார்த்தால், அரசாங்கம் மட்டும் அல்ல; அரசியல் இயக்கங்கள், மக்கள் இயக்கங்கள், ஊடகங்கள், அறிவுஜீவிகள் என்று எல்லாத் தரப்புகளுமே படிப்படியாக அலையலையாகப் பெரும்பான்மைவாதப் பார்வையை வரித்துக்கொண்ட கொடுமையே இங்கு பெரிய அளவில் நடந்திருக்கிறது. பெரும்பான்மைவாத அபாயத்தை உள்ளடக்கியதே ஜனநாயகம் எனும் பிரக்ஞையற்று, ஜனநாயகம் எனும் சொல்லைக் கடந்த எழுபதாண்டுகளில் அளவுக்கு அதிகமாகவே த் தூக்கிப் பிடித்துவிட்டதால், இன்று அது நம்முடைய பொதுச் சமூகத்தில் விமர்சனத்துக்கு அப்பாற்பட்ட ஒரு புனிதச் சொல்லாகவே மாறிவிட்டது. விளைவாகவே, ‘இந்த விஷயத்தில் நான் பெரும்பான்மை முடிவை ஆதரிக்கிறேன்’ என்று சொல்லும்போது, ஒருவர் அந்த முடிவு தொடர்பில் எடுத்துக்கொள்ள வேண்டிய பொறுப்பு ‘இந்த விஷயத்தில் நான் ஜனநாயக முடிவை ஆதரிக்கிறேன்’ என்று சொல்லும்போது தேவையில்லாது போகிறது.
ஜனநாயகவாதத்தில் கடந்த எழுபதாண்டுகளில் நாம் எந்த அளவுக்கு உறைந்துபோய்விட்டோம் என்பதற்கான உதாரணமாக ஒவ்வொரு தேர்தல் முடிவுகளின்போதும் பத்திரிகைகள் எழுதும் தலையங்கங்களைச் சொல்லலாம். எவ்வளவு அராஜகங்களை, ஊழல்களைச் செய்திருந்தாலும் பெரும்பான்மை மக்களால் ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டார் என்றால், அதை விமர்சிப்பது நம் பழக்கத்தில் இல்லையே! மாறாக, ‘மக்கள் முடிவு, ஜனநாயகத்தின் தீர்ப்பு’ என்று பெரும்பான்மைவாதத்தை நியாயப்படுத்துவதைத்தானே மரபாகக் கொண்டிருக்கிறோம்! நாட்டின் பன்மைத்துவத்துக்கு எதிரான பெரும் தாக்குதல் மோடியின் அரசாட்சியில் நடக்கிறது என்று சொல்லும் நாம் இன்னொரு உண்மைக்கும் முகம் கொடுக்க வேண்டும். இந்தத் தாக்குதலை, உரிமைப் பறிப்பை, அதிகாரச் சூறையாடலைப் புதுப் புதுச் சட்டங்களின் மூலம் மோடி செய்யவில்லை; எல்லாவற்றையும் ஏற்கெனவே இருக்கும் சட்டக் கட்டமைப்பின் பின்னணியிலிருந்தே அவரால் மேற்கொள்ள முடிகிறது. அப்படியென்றால், ஏற்கெனவே கட்டமைப்பு ஏராளமான சேதங்களோடு இருக்கிறது என்றுதானே அர்த்தம்?
1950-ல் குடியரசாக இந்தியா அறிவிக்கப்பட்டபோதே அது முழுமையான குடியரசுத்தன்மையை, சமப் பிரதிநிதித்துவத்தன்மையைக் கொண்டிருக்கவில்லை; அன்றிருந்த எவ்வளவோ குடியரசு உரிமைகளை இடைப்பட்ட 70 ஆண்டுகளில் நாம் இழந்துவிட்டோம்; மேலும் மேலும் இழக்கிறோம் என்றால், நாம் வளர்ந்திருக்கிறோமா, தேய்ந்திருக்கிறோமா? ஆகப் பெரும்பாலான இந்தியர்களுக்கு, தனிப்பட்ட மனிதர்களின் - மக்களின் சுதந்திரம் ஒரு பொருட்டே அல்ல. விளைவாக, நம்முடைய தேர்தல் அரசியலிலும் அதற்குப் பெரிய இடம் இல்லை. ஜனநாயகத்தின் வெளிப்பாடுகளில் ஒன்றுதான் தேர்தல். இந்தியாவிலோ, தேர்தல் வழியாக மட்டும்தான் ஜனநாயகம் வெளிப்படுகிறது. அதாவது, தேர்தலில் தொடங்கி தேர்தலோடு ஜனநாயகம் முடிந்துபோய்விடுகிறது. தேர்தலில் தொடங்கி தேர்தலோடு ஜனநாயகம் முடிந்துபோகும் ஒரு இடத்தில்தான் ஒரு மனிதன் தேசமாகும் புள்ளி தோன்றுகிறது. ஒரு மனிதனின் முகம் குடியரசின் முகமாகப் பிரகடனப்படுத்தப்படும் புள்ளியும் அதனுள்ளிருந்து வெளிப்படுகிறது.
(உணர்வோம்…)
- சமஸ், தொடர்புக்கு: samas@thehindutamil.co.in
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
1 hour ago
கருத்துப் பேழை
23 hours ago
கருத்துப் பேழை
23 hours ago
கருத்துப் பேழை
23 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
21 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
4 days ago